.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 13 November 2013

க்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்!

‘க்ரிஷ் 3... தீபாவளிக்கு வெளியான ஒரே பாலிவுட் படம். தமிழகத்திலும் கணிசமான திரையரங்கு களில் வெளியாகியிருக்கிறது. பொதுவாக ஷாருக்கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களின் படங்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றாலும் மூன்று முன்னணி நாயகர்களின் தமிழ்ப் படங்கள் வெளியாகும் நேரத்தில் ஒரு இந்திப் படத்துக்கு இத்தனை திரையரங்குகள் கிடைத்திருப்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. படம் வெளியான ஏழாவது நாளில் (நவ.7) இந்தியாவில் மட்டும் 200 கோடியை வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்டது.

                             

இதற்கு முன் இந்தியாவில் மட்டும் 200 கோடி வசூல் செய்த பாலிவுட் படங்கள் இரண்டுதான். ஒன்று ஷாருக் கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மற்றொன்று ஆமிர் கானின் ‘3 இடியட்ஸ்’. ஆனால் ‘க்ரிஷ் 3’ இவ்விரு படங்களைவிட மிகக் குறைந்த நாட்களில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறது.

முதல் இரண்டு பாகங்களைப் பார்க்காமல் ‘க்ரிஷ் 3’ பார்த்தால் புரியுமா என்று அச்சப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு இந்தி தெரியுமென்றால் போதும். ‘க்ரிஷ் 3’ தொடங்கும் முன் க்ரிஷ்ஷின் முன்கதை ஒரு காட்சித் தொகுப்பாக விரிய, ’இதுவரை’ என்ன என்பதை அமிதாப் பச்சன் சொல்லிவிடுகிறார். (இந்தி புரியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது விக்கிபீடியா).

ரோஹித் மெஹ்ரா (ஹ்ரிதிக் ரோஷன்) தான் கண்டுபிடித்த கருவியில் சூரிய ஒளியைக் கடத்தி அதன் மூலம் இறந்துவிட்ட உயிரினங்களை உயிர்த்தெழச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவரது மகன் க்ருஷ்ணா (ஹ்ரித்திக் ரோஷன்) அடிக்கடி க்ரிஷ்ஷாக மாறி ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றச் சென்றுவிடுவதால் அவனுக்கு நிலையான வேலை இல்லை, க்ருஷ்ணாவின் காதல் மனைவி ப்ரியா (ப்ரியங்கா சோப்ரா) ஆஜ் தக் சேனலில் செய்தி வாசிப்பாளர்.

மறுபுறம் கால் (விவேக் ஓபராய்) தன் அறிவியல் திறனை அமானுஷ்ய சக்திகளையும் அழிவு நோக்கத்துடன் பயன்படுத்துகிறான். தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்த கயாவும் (கங்கனா ரணவத்) அவனுக்குத் துணையாக இருக்கிறாள். மனிதர்களைத் தாக்கும் விஷக்கிருமியை மும்பையில் பரப்புகிறான் கால். இதன் மூலம் அவனுக்குப் பல கோடி லாபம் கிடைக்கும். இந்தக் கிருமியால் மும்பையில் நூற்றுக்கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். கால் பரப்பும் விஷக் கிருமி தன் குடும்பத்தை மட்டும் தாக்காததைக் கண்டு அதற்கான முறிமருந்து க்ருஷ்ணாவின் ரத்தத்தில் இருப்பதை அறிந்துகொள்கிறார் ரோஹித். தன்னிடம் கிடைக்கும் முறிமருந்தை வைத்து மும்பை நகரைக் காப்பாற்றுகிறான் க்ரிஷ்.

ப்ரியாவைக் கடத்தி காலிடம் ஒப்படைத்துவிட்டு அவளது இடத்தில் கயா வருகிறாள். அதுவரை மனிதத்தன்மை, அன்பு ஆகியவற்றை அறிந்திராதவள் க்ருஷ்ணாவிடம் காதல்வயப் படுகிறாள். தன் விஷக்கிருமியை முறியடித்த ரோஹித்தையும் கடத்துகிறான் கால். ஆனால் க்ரிஷ் கயாவின் உதவியோடு கால் இருக்கும் இடத்தை அடைகிறான் (க்ரிஷ்ஷாகத்தான்). தன் மனைவியை மீட்பவன் தந்தையை மீட்பதற்குள் கால் அவனைக் கொன்றுவிட்டு மும்பை சென்றுவிடுகிறான்.

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சியை ரோஹித் மேற்கொள்கிறார். ஆனால் க்ருஷ்ணாவுக்கு உயிர்கொடுத்து அவர் இறந்துவிடுகிறார். மும்பைக்குப் பறந்து சென்று நெடிய சண்டை போட்டு காலை அழித்து மும்பையை மீண்டும் காப்பாற்றுகிறான் க்ரிஷ் என்கிற க்ருஷ்ணா

எவ்வளவுதான் காதில் பூக்கடையையே கவிழ்த்தாலும் தீமையை நன்மை வெல்லும் கதைக்கு இந்தியர்களிடம் எப்போதுமே மவுசு உண்டு. க்ரிஷ் 3-ன் வெற்றி மூலம் அது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஃபாண்டஸி வகைப் படங்களில் தர்க்க ரீதியாக எதையும் அலச வேண்டியதில்லைதான். ஆனால் தர்க்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களையும் ஈர்க்கும் வகையில் மிகையதார்த்தக் காட்சிகளை உருவாக்க முடியும். என்ன அதற்குக் கொஞ்சம் மெனக்கெடல் தேவை. க்ரிஷ் 3க்கு இருக்கும் மற்ற சாதகங்களை வைத்து இதுபோன்ற மெனக்கெடல்கள் தேவையில்லை என்று படக் குழுவினர் முடிவெடுத்துவிட்டார்களோ?

சரி, இவற்றையெல்லாம் மறந்துவிட்டு இதை ஒரு சூப்பர் ஹீரோ படமாக மட்டும் ரசிக்கலாம் என்றால் அதுவும் ஓரளவுக்குத்தான் முடிகிறது. சூப்பர் ஹீரோ ஒரு சாதாரண மனிதராகவும் இருப்பதால் சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளுக்கும் தீனி போட நினைத்திருக்கிறார்கள். மனைவி கர்ப்பம் தரித்த சந்தோஷத்தில் ஆடிப்பாடுவது, பேரன் பிறக்கப்போவதை அறிந்த தாத்தா ஆனந்தக் கண்ணீர் வடிப்பது, க்ரிஷ் யாரென்றே தெரியாத மக்கள் அவனுக்கு சிலை வைத்து ஆடிப்பாடுவது, குடியைக் கெடுக்க வந்த பெண் காதல் வயப்படுவது, பாலைவனம் ஒன்றில் அரைகுறை ஆடையுடன் ஆடும் பாடல் என 1970களிலிருந்து பார்த்துப் பார்த்துச் சலித்த பாலிவுட் க்ளீஷேக்கள் திரையை நிறைக்கின்றன.

தொப்பையுடன் கண்ணாடி போட்டுக்கொண்டு வரும் அப்பாவி அப்பா ரோஹித் பாத்திரத்தில்தான் ஹ்ரித்திக் ரோஷனுக்கு நடிக்க வாய்ப்பு இருக்கிறது. நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு ஆணழகனாகத் தோன்றும் க்ருஷ்ணாவாகவும் க்ரிஷ் உடையிலும் ஹ்ரித்திக்கின் அழகை ரசிக்க முடிகிறது. நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

வில்லனிடம் சிக்கிக்கொண்டு நாயகனால் காப்பாற்றப்பட ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்காக ப்ரியங்கா சோப்ரா இந்தப் படத்தில் இருக்கிறார். கங்கனா ரணவத் நடிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். விவேக் ஓபராய் கொடிய வில்லனாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவரது முகத்தை என்னவெல்லாமோ செய்திருக்கிறார்கள். படத்தில் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரது அசலான குழந்தை முகம் நினைவில் வந்து உறுத்துகிறது. சலீம் சுலைமானின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றது.


உலகத் தரமான படமாக்கல், தொழிநுட்பம், கவலையை மறந்து ரசிக்க வைக்கும் சாகசக் காட்சிகள், இவையெல்லாம் தரும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மட்டும்தான் எதிர்பார்க்க வேண்டும் என்றால் க்ரிஷ் 3-ன் இமாலய வசூலை தாராளமாகக் கொண்டாடலாம். பெருமை கொள்ளலாம்.

ஆனால் இந்தக் கதைக்களம், பட்ஜெட், தொழில்நுட்ப சாத்தியங்கள், கலைஞர்களின் திறமை மற்றும் உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு இன்னும் பன்மடங்கு சிறப்பாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதற்கான ஒரு சிறு முயற்சிகூட லாபத்தை பாதிக்கும் என்ற சிந்தனையே க்ரிஷ் 3 குழுவினரிடம் மேலோங்கி இருந்திருப்பதாகத் தெரிகிறது. அதுவே இந்தப் படத்தின் வெற்றியை உறுத்தலுடன் கடந்துசெல்ல வைக்கிறது..

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top