.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 16 November 2013

"இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது!

தலைசிறந்த பொருளாதார நிபுணரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு சிறு சேமிப்புத் திட்ட ஆதரவு விழா, ராஜாஜி ஹாலில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய கலைவாணர், ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.

 "ஓர் ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி, கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஊருக்குப் போகும்போது வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். கேஷியர் தர வேண்டிய பாக்கியைக் கேட்டு ஒரு மளிகைக் கடைக்காரர் வந்தார். உடனே..., அந்த 100 ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார் கேஷியர்.

மளிகைக் கடைக்காரர் அந்த நோட்டை, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குத் தந்தார். மறுநாள் டாக்டர், ஒரு டீ பார்ட்டி வகையில் அந்த ஓட்டலுக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, அதே நோட்டை ஓட்டலுக்குக் கொடுத்து அனுப்பினார்.

அன்று மாலை, ஓட்டலில் தங்கியதற்கான பணத்தைத் தந்துவிட்டு, அதே 100 ரூபாய் நோட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டார் அந்தப் பிரயாணி. அப்போது கேஷியரிடம், 'இது ஒரு செல்லாத நோட்டு. செலவாணி ஆகிறதா என்று பார்ப்பதற்காகவே உங்களிடம் தந்தேன்' என்று சொல்லிக் கொண்டே, அந்த நோட்டைக் கிழித்தெறிந்தார். இதில் யாருக்கு நஷ்டம் என்பதைத் தலைவர் தெரிவிக்கவேண்டும்" என்றார் என்.எஸ்.கே.

 "அதுதான் செல்லாத நோட்டு ஆயிற்றே! எனவே, யாருக்கும் நஷ்டம் இல்லை" என்றார் சண்முகம் செட்டியார்.

 "அப்படியானால் ஓட்டல்காரர், மளிகைக் கடைக்காரர், டாக்டர் இவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் கடன் அடைந்திருக்கிறதே?" என்றார் கலைவாணர்.

அப்பொழுது தலைவர் சொன்னார்.. "இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது! அதன்மேல் வைக்கக்கூடிய மதிப்புதான் நாணயம். உண்மையாகப் பார்க்கப் போனால், நோட்டுக்குக் காகித விலைதான் உண்டு. அதற்கு நாம் 100 ரூபாய் மதிப்புக் கொடுக்கிறோம்" என்று கடினமான அந்த விஷயத்தை இலகுவாக விளக்கினார் செட்டியார்.

இந்தக் கருத்தைப் 'பணம்' என்ற படத்தில் கையாண்டார் கலைவாணர்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top