ஸ்ட்ரெஸ் எனும் சீரியஸ் பிரச்னை!
வேலை, வீடு என இரட்டைச் சுமை சுமக்கும் எல்லாப் பெண்களுமே அஷ்டாவதானிகள்தான். குடும்பத்துக்காக வேலையையோ, வேலைக்காக குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த அவர்களுக்கு, தம்மையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் ஏனோ மறந்து விடுகிறது. ‘முடியலியே...’ எனப் புலம்பிக் கொண்டாவது முடியாத காரியங்களையும் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிற அவர்களுக்குத் தெரிவதில்லை, அது ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தத்தின் ஆரம்பம் என்பது. அதை அப்படியே விட்டால் அடுத்தடுத்து தொடரப் போகிற அவதிகளையும் அறியாத அவர்களை எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.
ஸ்ட்ரெஸ் என்றால் என்ன?
‘ஐயோ.... என்னால சமாளிக்க முடியலையே...’ என்கிற நினைப்புதான் ஆரம்பம். ‘என் குழந்தைங்களுக்கு என்னால சரியான அம் மாவா இருக்க முடியலை. வேலையிடத்துலயும் என்னால சரியான நேரத்துக்கு வேலைகளை முடிக்க முடியலை... நான் என்ன பண் ணப் போறேன்...’ என்கிற புலம்பல்கள் அடிக்கடி வந்தால், சந்தேகமே இல்லை. உங்களுக்கு ஸ்ட்ரெஸ் வந்து விட்டது. படபடப்பு, அழுகை, கோபம், எரிச்சல், தூக்கமின்மை, அதீத பசி போன்றவை ஸ்ட்ரெஸ்சின் அறிகுறிகள்.
யாருக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் வரும்?
வேலையையும் வீட்டையும் கவனிக்கிற ஒவ்வொரு பெண்ணுமே அசாதாரண மனுஷிதான். இரண்டு இடங்களிலும், எல்லா விஷயங் களிலும் 100 சதவிகிதம் பர்ஃபெக்ஷனை எதிர்பார்க்க ஆரம்பிக்கும் போதுதான் ஸ்ட்ரெஸ் வருகிறது. வேலைக்கும் போய்க் கொண்டு, வீட்டையும் பார்ப்பது என்றால், கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருக்கும். ஏதோ சமாளித்தால் போதும் என நினைக்கிற பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் வருவதில்லை.
எப்படிச் சமாளிப்பது?
வேலையிடத்தில்...
வீடு, வேலை என இரண்டுக்கும் 50:50 முக்கியத்துவம் கொடுக்கப் பழகுங்கள். நிதான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வேலையை உங்கள் திறமைக்கான ஒரு வடிகாலாகப் பாருங்கள். படித்திருந்தும், ஒரு ஹவுஸ்ஒயிஃபாக நேரம் போக்கா மலிருக்க, வேலை உங்களுக்கு ஒரு ஆறுதல். எனவே வேலை, வேலை என எந்நேரமும் அதைப் பற்றிய சிந்தனையில் ஓடுவதையும், அதிகமாக சம்பாதிக்க வேண்டும், பிள்ளைகளை மிகச் சிறந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும், ஆடம்பர வாழ்க்கை வாழ வேண் டும் என்கிற அதிகபட்ச ஆசைகள் தேவையில்லை. அந்த ஆசைகளைத் தேடி ஓட ஆரம்பித்தால், நிச்சயம் ஸ்ட்ரெஸ்சை சந்தித்தாக வேண்டும்.
வேலைக்குச் செல்கிற பெண்களுக்கு அதிக பட்ச கால ஒழுக்கம் அவசியம். வீட்டில் இருப்பவர்கள் என்றால் நேரத்தை தன் வசமாக் கிக் கொள்ளலாம். வேலைக்குச் செல்கிற வர்களுக்கு நேர நிர்வாகம் மிக முக்கியம். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அக்கம் பக்கத்து வீட்டாருக்கு எத்தனை மணித்துளிகளை ஒதுக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கோ, ட்விட்டரோ, டி.வியோ, வேலைக்குச் செல்கிறவர்களின் களைப்பை நீக்கிப் புத்துணர்வு கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, உல கத்தை மறக்கும் அளவுக்கு அதிலேயே மூழ்கக்கூடாது.
வேலையிடத்தில் கூடியவரையில் வம்பு பேசுவதோ, அரசியல் பேசுவதோ வேண்டாம். சிலவிதமான அலுவலக அரசியல்கள் உங்கள் ஸ்ட்ரெஸ்சை அதிகரித்து, ஒரு கட்டத்தில், அந்த வேலையிலிருந்தே விலகி ஓடச் செய்து விடும். சக ஊழியர்களின் அந்தரங்க விஷயங் களில் பட்டும், படாமலும் இருப்பதுதான் நல்லது. வேலையிடத்தில் நீங்கள் செலவழிக்கிற ஒவ்வொரு மணித்துளியும் ஆக்கப்பூர்வமாக இருந்துவிட்டால், வேலை நேரம் முடிந்தும் அலுவலை முடிக்க முடியாமல் உண்டாகிற அனாவசிய டென்ஷன் இருக்காது.
வீட்டில்...
வேலைக்குச் செல்கிற பெரும்பாலான பெண்களை, அவர்களது கணவர்களும், கணவர் வீட்டாரும் விரோதியாகவே பார்ப்பது சகஜம். ‘வேலைக்குப் போற திமிரு’, ‘சம்பாதிக்கிற கொழுப்பு’ என்கிற விமர்சனங்கள் சர்வசாதாரணமாக வரும். அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம். கணவர், அவரது பெற்றோர், கணவரது உடன்பிறப்புகள் என உங்களுக்கு நெருங்கிய வட்டத்துடன் நல்ல நட்பை வளர்த் துக் கொள்வதுதான் முதல் தீர்வு. வேலைக்குச் செல்கிற எல்லா பெண்களுக்கும், குழந்தைகளை யார் பொறுப்பில் விடுவது என்கிற கவலை பெரிதாக இருக்கும். பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், பெற்றோருக்கு அடுத்து, உடனடியாக தாத்தா- பாட்டி களின் மனசுதான் பதறும். எனவே அம்மா - அப்பா அல்லது மாமனார் - மாமியாரின் தயவைத் தக்க வைத்துக் கொள்ளும் டெக்னிக்கை கற்று வைத்திருப்பது நலம். சம்பளத்திலிருந்து ஒரு தொகையை அவர்களிடம் கொடுத்து, தேவையானதை வாங்கிக் கொள்ளச் சொல்லலாம். இன்னும் ஒருபடி மேலே போய், மொத்த சம்பளத்தையும்கூட அவர்களிடமே கொடுத்துவிட்டு, தேவைக்கேற்ப அவ்வப்போது பணம் வாங்கிக் கொள்ளலாம். அன்பாலும், பொறுப்பாலும் கட்டிப்போடுகிற இந்த டெக்னிக், உங்களு டைய பலவிதமான மன அழுத்தங்களை காணாமல் போகச் செய்யும்.
வேலை முடிந்து களைப்பாக வருவீர்கள்... அதுவரை குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட களைப்பில், சலிப்பில், விட்டால் போதும் என உங்களிடம் பிள்ளைகளைக் கொடுத்துவிட்டு, வெளியே போவார்கள் பெரியவர்கள். காபி போட்டுக் கொடுக்கக்கூட ஆளிருக் காது. ‘என்ன சம்பாதிச்சு என்ன சுகத்தைக் கண்டோம்.... என்ன வாழ்க்கை’ என அலுப்பு வருவது இயற்கைதான். அதை கோபமாக வார்த்தைகளிலோ, செயல்களிலோ யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். அம்மான்னாலே இப்படித்தான்.... எரிஞ்சு விழுவாங்க’ என்கிற எண்ணம் உங்கள் பிள்ளைகளுக்குப் பதிந்து விடும். நீங்கள் வேலைக்குப் போகத்தானே உங்கள் பிள்ளைகளை அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்... அவர்கள் உதவியின்றி அது உங்களுக்கு சாத்தியமாகுமா என மாற்றி யோசித்துப் பாருங்கள். கோபத்தை ஓரங்கட்டி விட்டு, அவர்களுக்கும் ஒரு கப் காபி கொடுத்து விட்டு, நீங்களும் காலை நீட்டிக் கொண்டு காபி குடியுங்கள். அரக்க, பரக்க அடுத்த வேலைகளைப் பார்க்க ஓடாமல், 10 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள்.
கணவருக்கும், உங்களுக்குமான தாம்பத்ய உறவை சுமுகமாக வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். சின்னச் சின்ன ஸ்பரிசமும், அரவ ணைப்பும் முத்தமும் ஸ்ட்ரெஸ்சை பெரியளவில் விரட்டியடிக்கும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஸ்ட்ரெஸ்சை விரட்டுவதில் உங்கள் பாடி லேங்வேஜுக்கும் இடமுண்டு. முடிந்த போதெல்லாம் உங்கள் குழந்தைகளைக் கட்டியணைத்து, முத்தமிடுங்கள். கணவன் உள்பட யாரிடமும், உதட்டுச் சுழிப்பிலோ, கண் அசைவிலோ கோபத்தையோ, வெறுப்பையோ வெளிப்படுத்தாதீர்கள். நீங்கள் எத் தனை பெரிய பொறுப்பில், பதவியில் இருந்தாலும், வீட்டுக்குள் அன்பான மனைவி யாக, எளிமையான அம்மாவாக உங்கள் ரோலை முழுமையாக அனுபவியுங்கள்.
உங்களையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்...
முடியாத வேலைகளுக்கு ‘நோ’ சொல்லத் தயங்காதீர்கள். டென்ஷன் எல்லை மீறும் போது, ஓய்வெடுக்கத் தயங்காதீர்கள். வேலையிடத்தில் உங்களுக்கு அனுமதிக்கப்படுகிற விடுப்புகளை அவ் வப்போது எடுத்து விடுங்கள். லீவே எடுக்காமல் போய், கிரீடம் சுமப்பதில் மட்டுமே சுகம் காணாதீர்கள். அப்படி நீங்கள் எடுக்கும் லீவு ஒரே ஒரு நாளாக இல்லாமல், 36 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை இருந்தால்தான் உங்களை ரீசார்ஜ் செய்யும்.
ஓய்வு நேரத்தில் உங்களுக்குப் பிடித்தவற்றை மட்டுமே செய்யுங்கள். அது உங்கள் குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதா கவோ, உங்களுக்கு மிகப் பிடித்த இசையைக் கேட்பதாகவோ, பார்லர் சென்று அழகுப் படுத்திக் கொள்வதாகவோ, பழைய தோழி களை சந்திப்பதாகவோ எதுவாகவும் இருக்கலாம். வீட்டிலிருக்கும் பெண்கள் 10 சேலையோ, சல்வாரோ வைத்திருக்கிறார்கள் என் றால், உங்களுக்கு 20 செட்டாவது தேவை.
‘சம்பாதிக்கிற காசெல்லாம் இவ டிரெஸ்சுக்கும், மேக்கப்புக்குமே போகுது’ என யாராவது பேசினாலும், காதில் போட்டுக் கொள்ளா தீர்கள். நல்ல உடையும், ஆபரணங்களும்கூட உங்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையைத் தரும். இவற்றை எல்லாம் கடந்தும், உங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருந்தால், மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் கவுன்சலிங் போகலாம். மூன்றாவது நபரிடம் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டும் போது பெரிய ஆறுதல் கிடைக்கும்.
அதற்கும் அடங்காத ஸ்ட்ரெஸ் என்றால் மனநல மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக் கொள்கிற மருந்துகள், ஸ்ட்ரெஸ் அதிகரிக்கிற போது மட்டும் எடுத்துக்கொள்கிற மருந்துகள் என எத்தனையோ உண்டு. மருந்து, மாத்திரையா என அலற வேண்டாம். மழைக்குக் குடை பிடிப்பது மாதிரி, இதுவும் ஒருவகையான பாதுகாப்புதான்.
0 comments: