ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் மறுபிறவி என்பார்கள். காரணம் குழந்தையை கருவில் சுமக்கும் போது பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கின்றனர். இதனை எதிர்கொள்ள ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் அவசியம்.
கர்ப்ப காலத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம் என்று ஆரம்பித்தார் உணவு ஆலாசகர் அம்பிகா சேகர். "முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது". எனவே மாதுளம் பழசாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து அரை மணிநேரம் கழித்து உணவு சாப்பிட்டால் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
நான்கு முதல் ஆறு மாதம் வரையிலான காலத்தில் குழந்தையின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக உருவாகும். தவிர கர்ப்பகாலத்தில் இருக்கும் குழந்தைகள் ஓட்டுண்ணிகள். அவை தனக்கு தேவையான ஆகாரத்தை அம்மாவின் உடலில் இருந்தே உறிந்துக் கொள்ளும் என்பதால் தேவைக்கு அதிகமான போஷாக்கு உணவுகளை அதிகமாக சாப்பிடவேண்டும்.. குழந்தையின் வளர்ச்சிக்கு கால்சியம், இரும்பு மற்றும் இதர புரத சத்துகள் மிகவும் அவசியம்.
பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், போன்றவற்றில் அதிக கால்சியம் சத்துகள் அடங்கியுள்ளது. தினமும் குறைந்த பட்சம் மூன்று டம்ளர் பால் குடிப்பது அவசியம். கீரை வகை, பேரீட்சை, கேழ்வரகு, ஆகியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து கிடைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. எனவே தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடலாம். தவிர எல்லா வகையான காய் மற்றும் பழங்களையும் சாப்பிடவேண்டும். புரதசத்துக்கு பாதாம், பிஸ்தா, அக்ரூட், வேர்க்கடலை, மீன், முட்டை, சாப்பிடலாம். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
ஆனால் கர்ப்ப காலத்தில் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். சராசரி எடையில் இருந்து பத்து முதல் பன்னிரெண்டு கிலோ அதிகரிக்க வேண்டுமே தவிர அதற்கு மேல் எடை கூடக்கூடாது. கடைசி மூன்று மாதங்களில் குழந்தை முழு வளர்ச்சி அடைகிறது. இந்த சமயத்தில் தாயின் உடலில் அதிக நீர்ச்சத்து சேரும். அதனால் கை மற்றும் காலில் வீக்கம் ஏற்படும். எனவே உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.
படுக்கும் போது காலை உயர்த்தி வைத்து படுக்கலாம். இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவை சாப்பிடவேண்டும். ரசம் சாதம், பால் சாதம் சாப்பிடலாம். பிறகு படுக்கும் முன் ஒரு தம்ளர் பால் அல்லது பழம் சாப்பிட்டு விட்டு படுக்கலாம். பொதுவாக கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது இயல்பு என்பதால் தினமும் ஒரு பழம் மற்றும் நார்சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும் என்றார் அம்பிகா சேகர். இப்படி உணவுகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது. கூடவே உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என்றும் ஆரம்பித்தார் உடற்பயிற்சி நிபுணர் ராக்கி.
கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் அதனால் மூட்டு, முதுகு, கணுக்காலில் வலி ஏற்படும். அதை தடுக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். அப்போது தான் இடுப்பு எலும்பு மற்றும் உடல் தசைகள் வலுவடையும். இப்போது கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் வருவது சகஜமாகிவிட்டது. அவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உட்காரும் போது சேரில் அமராமல் தரையில் உட்கார வேண்டும்.
காலை நீட்டி தரையில் அமர்வதால் இடுப்புக்கு பயிற்சி மற்றும் கால்வீக்கம் ஏற்படாது. கீழே அமர்ந்து எழும்போது தொடை மற்றும் கணுக்காலில் உள்ள தசைகள் வலுவடையும். இரண்டு கால் பாதங்களும் ஒன்றாக சேரும்படி தரையில் ஐந்து நிமிடங்கள் அமர வேண்டும். இது தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவடையச்செய்யும். இறுதியாக ஒன்று எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ராக்கி.
0 comments: