சோழ ராம்ராஜ்ஜியத்தில் புகழ்பெற்று விளங்கிய கடற்கரை பட்டினம்தான் நாகப்பட்டினம். சோழப்பேரரசின் மண்டலங்களில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி மாமன்னன் ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் அக்டோபர் 18, 1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு இந்தப் பட்டினத்துக்கு உண்டு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகபட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.
நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது 'நாவல் பட்டிணம்' -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.
0 comments: