கர்நாடக மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமம் ஹம்பி. விஜயநகரப்பேரரசின் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் ஓர் அங்கம். பிரசித்தி பெற்ற சிவாலயமான விரூபாக்ஷா கோவில், ஹம்பியின் இன்னொரு அடையாளம். இன்னும் பல அடையாளச் சின்னங்கள் ஹம்பியில் உண்டு. ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள குரங்குகளின் ராஜ்ஜியமான கிஷ்கிந்தாவுக்கும் ஹம்பிக்கும் தொடர்பு உண்டாம். ஹம்பியில் மக்கள் குடியேற்றம் கி.பி.முதலாம் ஆண்டில் தொடங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. விஜயநகர ஆட்சியில் ஹம்பியில் பெரிய கட்டிடங்கள், பிரம்மாண்டமான விக்ரகங்கள் எழுப்பப்பட்டன. தொலைதூரத்தில் இருந்து பார்த்தாலும் அவற்றைக் காணமுடியும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இப்போது இல்லை.
ஹம்பியின் தெய்வீக அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் விரூபாக்ஷா கோவில் மிகவும் பழமையானது. மூன்று கோபுரங்களைக் கொண்டது. கோவிலை சீரமைத்து மண்டபம் கட்டியவர் கிருஷ்ணதேவராயர். விஜயநகர மன்னர்களின் குலதெய்வம் விரூபாக்ஷர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹம்பியில் உள்ள விட்டல் கோவிலும் கிருஷ்ணதேவராயர் கட்டியதே. கலைநுணுக்கத்துடன் கூடிய சிற்பங்கள் இங்குள்ளன. இதே போல கோதண்டராமர் கோவில், தாமரை கோவில் போன்றவையும் சிறப்பு வாய்ந்தது. ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோ சார்பில் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
எப்போது போகலாம்? எப்படிப் போகலாம்?
ஹம்பியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கர்நாடக அரசு சார்பில் விஜயநகர விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அக்டோபர் - மார்ச் மாதங்கள் வரை சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் ஹம்பி அமைந்துள்ளது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவின் முக்கிய நகரங்களான ஹாசன், மைசூர் போன்ற இடங்களில் இருந்தும் ஹம்பிக்கு நல்ல சாலைவசதி இருக்கிறது. ஹம்பியில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவில் உள்ள ஹோஸ்பேட் வரை ரயில்வசதி உண்டு. பெங்களூருவில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.
|
0 comments: