தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[5]. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.
தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.
* தூத்துக்குடி முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு.123ல் தாலாமி என்ற கிரேக்க பயணி எழுதிய நூலில் சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
* கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
* தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ('Tuticorin') என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
முத்துநகர் என்னும் பெருமையை பெற்ற தூத்துக்குடியில் முத்து எடுப்பது சிறப்பாக கருதப்படுகிறது. தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்றும் ஓரு பெயர் உண்டு.உலகத்தரம் வாய்ந்த துறைமுகம் ஓன்றும் இங்கு அமைந்துள்ளது.உப்பு உற்பத்தி,மீன்பிடி தொழில்,இரசாயனம்,அனல்மின் உற்பத்தி ஆகியவற்றில் முன்னிலை பெற்று திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டம்.
துறைமுகம்
மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.
1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. 1இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்குமதி வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
0 comments: