இந்த ஆண்டு வருகிற நவம்பர் 2ந் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. ஒரு காலத்தில் தீபாவளி என்றால் புத்தாடை, பலகாரம், பட்டாசுக்கு அடுத்த இடத்தில் இருந்தது சினிமா. தீபாவளி அன்று தன் அபிமான நடிகரின் படம் ரிலீசானால்அதிகாலையிலேயே தியேட்டர் வாசலில் பட்டாசு கொளுத்தி முதல் ஷோவை முண்டியடித்து பார்த்து வியர்வையுடன் தியேட்டருக்குள் நுழைந்து கைதட்டி, விசிலடித்து படம் பார்த்து திரும்பிய காலமெல்லாம் இப்போது இல்லை. தீபாவளிக்கு ரசிகர்கள் சினிமாவை பெரிதாக எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.
கடந்த சில வருடங்களாவே தீபாவளிக்கு பெரிதாக படங்கள் ரிலீசாகவில்லை. ஒரு காலத்தில் தீபாவளிக்கு பத்து படங்கள் 12 படங்கள் வரை ரிலீசாகும். அதில் நான்கைந்தாவது பெரிய ஹீரோக்கள் நடித்த படமாக இருக்கும். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் தீபாவளிக்கு ரிலீசானால் ரசிகனுக்கு அது டபுள் தீபாவளியாக இருக்கும். அதன் பிறகு ரஜினி, கமல் படம் ஒரே தீபாவளிக்கு ரிலீசானால் அது ரசிகர்களுக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜீத், விஜய் படங்கள் வெளியானால் தியேட்டர்கள் கொண்டாட்டமாக இருக்கும். இப்போது அது எல்லாமே மாறிவிட்டது. இப்போது ஒரு சில டாப் நடிகர்களுக்கு மட்டுமே கொண்டாட்டமான ஓப்பனிங் இருக்கிறது. மற்ற நடிகர்கள் நடித்த படங்கள் நன்றாக இருப்பதாக மவுத்டாக் வந்தால் மட்டுமே தியேட்டருக்கு கூட்டம் திரள்கிறது. இப்படி காலம் மாறிவிட்டதால் சினிமா தீபாவளி கொண்டாட்டமும் குறைந்து விட்டது.
இதை எதிரொலிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளிக்கு படங்கள் வெளிவருவது குறைந்து விட்டது. ஒன்றிரண்டு பெரிய படங்களும் சில சிறிய படங்களும் மட்டுமே ரிலீசாகிறது. பெரிய ஹீரோக்களும் தீபாவளிக்கு தங்கள் படம் ரிலீசாக வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதில்லை. இப்படித்தான் கடந்த சில ஆண்டுகள் கடந்தது.
ஆனால் இந்த ஆண்டு அந்த நிலையில் பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இதுவரை 5 படங்கள் வெளிவரப்போவதாக அறிவித்துள்ளார்கள். அஜீத் நயன்தாரா நடித்துள்ள ஆரம்பம், ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இரண்டாம் உலகம், கார்த்தி காஜல் அகர்வால் நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா, சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு, விக்ரம் பிரபு நடித்துள்ள இவன் வேற மாதிரி ஆகியவை அந்த 5 படங்கள்.
இதுதவிர விஸ்வரூபம்-2 தீபாவளி ரிலீஸ் என்று கூறப்படுகிறது. வில்லங்கம் எதுவும் இல்லை என்றால் தீபாவளி ரிலீஸ் உறுதி என்கிறார்கள். ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் ரஜினியின் கோச்சடையானை தீபாவளிக்கு கொண்டு வருகிறோம் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது. அதை நோக்கியே பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டில் ஒரு படம் கட்டாயம் ரிலீசாகும் என்றும், இரண்டுமே ரிலீசானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி இரண்டு படங்களும் ரிலீசானால் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு அட்டகாச தீபாவளியாகத்தான் இருக்கும்.
இதிலும் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. முன்பு ஒரு படம் தமிழ்நாடு முழுவதும் அதிகபட்சம் 150 தியேட்டர்களில் ரிலீசாகும், 200 தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுவதையே பெருமையாக சொல்வார்கள். இப்போது அப்படி இல்லை கியூப், பிஎக்டி, ஹெச்டி போன்ற டிஜிட்டல் டெக்னாலஜி வந்து விட்டதால் சின்ன படங்களே 300 தியேட்டர்களில் ரிலீசாகிறது. அந்த வகையில் பார்த்தால் ரஜினி படம், அஜீத் படம், கமல் படத்துக்கு இருக்கிற தியேட்டர்கள் போதாது பிறகு எப்படி மற்ற படத்தை ரிலீஸ் செய்ய முடியும். அதனால் எப்படிப் பார்த்தாலும் இரண்டு பெரிய படங்கள், மூன்று சிறிய படங்கள் என 5 படங்களுக்குள்தான் ரிலீசாகும் என்கிறார்கள். அதோடு இதுபோன்ற கலெக்ஷனை அள்ளும் காலங்களில் தியேட்டர்காரர்கள் யு சான்றிதழுடன் வரிவிலக்கு பெற்ற படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.
அப்போதுதானே அம்புட்டு காசையும் அவர்களே அள்ள முடியும். இல்லாவிட்டால் 30 பர்சென்டை கவர்மெண்டுக்கு கொடுக்க வேண்டுமே. இத்தனை சிக்கல்களையும் மீறி சினிமா பட்டாசு எப்படி வெடிக்கப்போகிறது என்பது தீபாவளி அன்றைக்குத்தான் தெரியும்.
0 comments: