‘‘கற்றதுதமிழ்’’ திரைப்படத்தின் இயக்குநர் ராம், கதையின் நாயகராக நடித்து, இயக்கியும் இருக்கும் திரைப்படம் தான் ‘தங்கமீன்கள்’. காசு கொடுத்தால் தான் கல்வி எனும் இன்றைய நிலையை எள்ளி நகையாடியிருக்கும் இப்படத்தில், தனியார் பள்ளி கல்வி டீச்சர்களுக்கும், மிஸ்களுக்கும், மேடம்களுக்கும் மட்டுமல்ல, தங்களது குழந்தைகளின் தரம், திறம் தெரியாமலே படி, படி என படுத்தி எடுக்கும் பெற்றோர்களுக்கும் சரியான திரைப்ப(பா)டமாக அமைந்திருக்கிறது ‘தங்கமீன்கள்’ என்றால் மிகையல்ல!
கதைப்படி ரோகிணி -‘பூ’ ராமு தம்பதிகளின் வாரிசு ராம். ராமின் செல்லமகள் ‘செல்லம்மா’ எனும் சிறுமி சாதனா! ரிட்டர்யர்டு ஹெட்மாஸ்டர் அப்பாவான ‘பூ’ ராமுவின் பணத்திலும், வீட்டிலும் காலம் தள்ளும் ராம், மகள் கேட்பதை எல்லாம் வாங்கித்தர நினைப்பதுடன் விரும்புவதை எல்லாம் செய்யவும் நினைக்கிறார். மற்ற குழந்தைகளைக் காட்டிலும் சற்றே மந்தமான குழந்தையான செல்லம்மாவை மேலும், மேலும் செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச்சுவராக்கி விடப்போகிறான் மகன் ராம் எனும் பயத்தில் அடிக்கடி ‘பூ’ ராமு, ராமிடம் பேத்திக்காக பேச, அதுவே அப்பா - பிள்ளையிடம் பிரிவை உண்டாக்குகிறது. அதன் விளைவு மொத்த குடும்பத்தில் இருந்தும் ராம் பிரிந்து கேரளா - கொச்சிக்கு வேலைக்கு போகிறார். அப்பாவும், மகளும் பிரிவு தாங்காமல் அடிக்கடி போனில் புலம்பி அழ, தியேட்டரில் நாமும் சேர்ந்து அழுவது மாதிரியான உருக்கமான காட்சிகள் ஒரு பக்கம் உலுக்கி எடுக்கிறது. மற்றொரு பக்கம், இன்றைய காசு கல்வியும், அதன் கண்டிப்பும், தன் மகளின் வாழ்க்கையை பாழ் பண்ணி விடும் என நம்பும் ராம், அவளை, அவள் விரும்பும் எவிட்டா மிஸ் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விட்டு மகள் விரும்பும் கல்வியை தருகிறார். மக்களுக்கு பாடம் நடத்துகிறார்! இதுதான் ‘தங்கமீன்கள்’ படத்தின் ஜொலி ஜொலிக்கும் மொத்த கதையும்.
இதனூடே மகள் விரும்பும் உயர் ஜாதி நாய்க்காக ராம், நாயாய், பேய்யாய் நாக்கு வெளித்தள்ள ஏழுமலை, ஏழுகடல் தாண்டும் சுவாரஸ்ய காட்சிகள், தனியார் பள்ளி டீச்சரின் கண்டிப்பு, அதனால் சக மாணவர்கள் செல்லம்மா சாதனாவை ‘‘டபிள்யூ’’ என பட்டப்பெயர் வைத்து கூப்பிடும் கலாட்டா, ஆஸ்திரேலியா ரிட்டன் ராமின் தங்கை குடும்பத்தின் அலட்டல், இல்வாழ்க்கைக்குப் போன எவிட்டா மிஸ்ஸின் மாற்றம், செல்லம்மாவால் அவருக்கு கிடைக்கும் ஏற்றமும்... என ஏகப்பட்ட சுவாரஸ்யங்களை கலந்து கட்டி தங்கமீன்களை தகதகவென ஜொலிக்கவிட்டிருக்கும் ராமின் துணிச்சலுக்கு ஒரு ‘ராயல் சல்யூட்’ அடித்தே ஆக வேண்டும்!
இயக்குநராக மட்டுமல்லாமல் இக்கதையின் நாயகராகவும் ராம் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்! கடன் கேட்டுபோன இடத்தில் ஐந்தாறு முறை அலையவிட்டு அல்லல்படுத்துவதுடன், அட்வைஸூம் பண்ணும் நண்பனை ராம் எச்சரிக்கும் இடத்தில் ஆகட்டும், டபிள்யூவை சிம்பிளாக குழந்தைக்கு புரியும்படி எழுத கற்றுத்தராது, அதையே அவளது பட்டப்பெயராக காரணமாகும் டீச்சரிடமும், ஸ்கூல் பிரின்ஸ்பாலிடமும் நியாயம் கேட்டு ராம் போராடும் இடத்திலாகட்டும், மனிதர் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதேமாதிரி மகளை பிரிந்து வாடும் இடங்களில் கரையாதோர் நெஞ்சையும் கரைக்கும் இடங்களில் நம்மை உலுக்கி எடுத்து விடுகிறார். ராமுக்கு நிறைய விருதுகள் நிச்சயம்!
சிறுமி செல்லம்மாவாக சாதனா, அப்பாவி மகளாகவும், அப்பாவின் மகளாகவும் அசத்தி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கே குளத்தில் விழுந்து தங்கமீன் ஆகிவிடுவாரோ எனும் திகிலுடனேயே நம்மை படம் பார்க்கும் இவரது பாத்திரம் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் பாத்திரமென்றாலும் ‘பலே’ சொல்ல வைக்கும் பாத்திரம் என்றாலும் மிகையல்ல! அம்மணிக்கும் விருதுகள் நிச்சயம்!
இன்னிக்கு ராத்திரி பூரி சுடுறாங்க எங்க வீட்டுல... அதனால நாளைக்கு வீட்டுல கோவிச்சுகிட்டு செல்லலாமுனு இருக்கேன் எனும் பேபி நித்யஸ்ரீ சஞ்சனாவில் தொடங்கி, ஸ்டெல்லா மிஸ்ஸாக கர்ண கொடூரமாக வரும் லிஸி வாரியார், எவிட்டா மிஸ் பத்மபிரியா, ராமின் மனைவியாக, செல்லம்மாவின் தாய் வடிவாக வரும் ஷெல்லி கிஷோர், ஓய்வுபெற்ற தலைமையாசிரியராக, செல்லம்மாவின் தாத்தாவாக வரும் ‘பூ’ ராம் அவரது மனைவியாக, செல்லம்மாவின் பாட்டியாக வரும் நடிகை ரோகிணி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது ‘தங்கமீன்கள்’ படத்தின் பெரும்பலம்!
யுவன்சங்கர்ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், அர்பிந்து சாராவின் ஓவிய ஒளிப்பதிவும், ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான பாசத்தையும், பணகல்வி தரும் மோசத்தையும் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல இயக்குநர் ராமிற்கு பெரிதும் ஒத்துழைத்திருக்கின்றன! வயசுக்கு வர்றதுன்ன என்னம்மா? உள்ளிட்ட ஒரு சில வசனக்கோளாறுகள், குறைபாடுகள் இருந்தாலும் ‘தங்கமீன்கள்’ ஜொலிக்கும் உணர்வுப்பூர்வமான ‘வைரமீன்கள்’!!
0 comments: