.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 13 September 2013

‘மத்தாப்பூ’ ஜாலியான காகித பூ ! – திரை விமர்சனம்



சினிமாவில் வாய்ப்புக்கான வாசல் திறக்கும்போது அதில் பயணப்படும் சிலர் வழியில் கிடைக்கும் சின்ன சின்ன ஆசையான ‘காட்டாற்று வெள்ளத்தில்’ அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகிறவர்கள் பட்டியலில் சிக்கி எப்படியோ மீண்டு ‘மத்தாப்பூ’ ஆக வந்திருப்பவர் இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜ்.

இந்த இரண்டாவது இன்னிங்ஸ் இயக்குனர் நாகராஜூக்கு கை கொடுக்குமா….
‘மத்தாப்பூ’ படத்தின் பெயரில் ஒரு புன்னகையை வைத்திருக்கிற இயக்குனர் பட கிளைமாக்ஸ்வரை ஹீரோயின் முகத்தில் சிரிப்பையே காட்டாமல் வைத்திருக்கிறார்… அந்த ‘உம்’ முகத்திற்கு ரொம்ப பொருந்துகிறார் காயத்திரி.
புதுமுகம் ஜெயன்… புதுமுகம் என சொல்ல முடியாதபடி நக்கல் நையாண்டியிலும், அதிரடி ஆக்ஷனிலும், காதல் தோல்வி சோகத்திலும் விதவிதமான வித்தியாச முகபாவனைகளை ரொம்ப அனாயசமாக காட்டி சினிமாவில் தனக்கென ஒரு இடம் இருப்பதை உறுதி படுத்திக் கொள்கிறார்…
ஹீரோவின் அம்மா ரேணுகா, சித்தி சித்தாரா, சித்தப்பா இளவரசு, ஹீரோயின் அம்மா கீதா என மூத்த கலைஞர்கள் ஜாலியாக வந்து போகிறார்கள்…
எல்லாம் சரி… ‘மத்தாப்பூ’ கதை என்னப்பா… என்கிறீர்களா…

sep 13 - mathapoo_ cinema

 


ஹீரோயின் காயத்திரி அறந்த வாலு டைப்… கல்லூரியில் கலாட்டா பேர்வழி… ஒரு பையனுடன் நட்பு ஏற்படுகிறது… அந்த நட்பை நம்பி ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு போகும்போது அங்கே வேறு விதமான சிக்கலில் மாட்டி போலீஸ் நிலையம் செல்லும் நிலைக்கு ஆளாகிறார்… வீட்டிற்கு வரும் காயத்திரியை ‘ஆம்பள வேணும்னு சொல்லியிருந்தா நாங்களே கல்யாணம் பண்ணி வைச்சிருப்போமேன்னு’ அம்மா கீதா சொல்ல.,..

அந்த தினத்தில் இருந்து அம்மா என அழைப்பதை தவிர்கிறார் காயத்திரி… ஒரே வீட்டில் இருந்தாலும் அம்மாவும், பொண்ணும் பேசிக் கொள்வதில்லை… அதேநேரம்… ஹீரோயின் காயத்திரி தனது பழைய வால் தனங்களை மூட்டை கட்டி பரணில் தூக்கிப்போட்டு விட்டு சிரிப்பை தொலைத்து விட்டு முகத்தை உர்ரென வைத்துக் கொள்கிறார்…

ஆண்களை கண்டாலே பிடிக்காமல்போகிறது…

நம்ம ஹீரோ அநியாயத்துக்கு எங்க தப்புன்னாலும் வந்து தட்டிக்கேட்கிறார்… திருச்சியில் அப்படி ஒரு சம்பவத்தை தட்டிக் கேட்கப்போக போலீஸ் பஞ்சாயத்தாகி சென்னையில் இருக்கும் சித்தி சித்தாரா வீட்டுக்கு வந்து சேருகிறார்…

வந்த இடத்தில் ஒரு காபி ஷாப்பில் பர்சை தொலைத்துவிட்டு நிற்கும் ஹீரோவைத்தேடி காணாமல் போன பர்சை எடுத்துக் கொண்டு வருகிறார் ஹீரோயின் காயத்திரி…

முதல் சந்திப்பிலேயே ஹீரோயின் மீது ஹீரோவுக்கு ஒரு ‘இது’ பிறக்கிறது…
ஆனால்… அதை சொல்வதற்குள் ஹீரோயின் மறைந்து போகிறார்….
அவர் எங்கே போனார்… யார்… பேரென்ன என்பது தெரியாமல் ஹீரோ குழப்பத்தில் இருக்க… ஒரு நாள் வீட்டு காலில் பெல் அடிக்கிறது. கதவை ஹீரோ திறக்க… வாசலில் அந்த பர்ஸ் கொடுத்த ஹீரோயின்…

ஹீரோயினை மடக்க பல ஐடியாக்களை போடும் ஹீரோவுக்கு எதுவும் பலன் அளிக்கவில்லை… ஒரு கட்டத்தில் ஹீரோயின் ஏன் எப்போதுமே ‘உர்ர்ர்’ ஆக இருக்கிறார் என்பதை சித்தி சித்தாரா மூலம் ஹீரோ தெரிந்து கொள்கிறார்…
ஹீரோயினை சிரிக்க வைக்க பல முயற்சிகள் எடுத்தும்… அதிரடி ஆக்ஷனில் சண்டை போட்டும்… நேரடியாக காதலை சொல்லியும் ஹீரோயின் மசிவதாக இல்லை… காதலையும் மறுத்து விடுகிறார்…

கடைசியில் ஹீரோ ஜெயன்… ஹீரோயின் காயத்திரி சேர்ந்தார்களா… என்பதுதான் கிளைமாக்ஸ்….

இப்போது வரும் வழக்கமான கதையில் இருந்துகொஞ்சம் வருஷங்கள் பின்னால் போய் பார்த்தால் இந்த கதை புதுசாக தெரியும்… ஹீரோவை தேடி ஹீரோயின் அவர் வீட்டுக்கு வரும்போதே கதையை முடித்திருந்தால் சபாஷ் போட்டிருப்பார்கள்… அதன்பிறகு கதையை இழுழுழுழுழுத்து முடித்திருக்க வேண்டியதில்லை…

பாடல்களில் 10 வருஷத்து பழைய சாயல்… பின்னணி இசையில் சபேஷ்முரளியின் அதிரடிகள் பல இடங்களில் சபாஷ் முரளி போட வைக்கிறது…

இப்போது வரும் படங்களை பார்க்கும்போது ‘தினந்தோறும்’ நாகராஜ் சொல்லியிருக்கிற ‘மத்தாப்பூ’ கதையின் பின்பாதியில் கொஞ்சம் கத்திரியை மட்டும் போட்டால் கண்டிப்பாக ரசிக்க வைக்கும்…

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top