.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 13 September 2013

காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் வெளியானது!



சென்ற வாரம், பெர்லின் நகரில், சாம்சங் நிறுவனம், தன் முதல் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தை அடுத்து, இத்தகைய கடிகாரத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது நிறுவனமாக, சாம்சங் பெயர் பெற்றுள்ளது. உடலில் சாதனத்தை அணிந்து கொண்டு, அதன் வழியே கம்ப்யூட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப் பாங்கு, டிஜிட்டல் உலகில் வலம் வருபவர்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மக்கள் பலரும் இத்தகைய சாதனங்களை எதிர்பார்ப்பதால், இதுநல்ல விற்பனையை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். மேலும், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம் இதற்கு முழுமையாகக் கை கொடுக்கிறது.


சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச், இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே செயல்படும். இணையாக்கப்பட்ட ஸ்மார்ட் போனுடன், புளுடூத் வழி தொடர்பு கொண்டு இது இயங்கும்.
இந்த கடிகாரத்தில் வைத்து இயக்கவென, எந்த செல்லுலர் தொடர்பும் இருக்காது. இணையாக்கப்பட்ட போன், இரண்டு மீட்டர் தொலைவிற்குள்ளாக இருக்கவேண்டும். தற்போதைக்கு, இந்த ஸ்மார்ட் வாட்ச், சாம்சங் நோட் 3 சாதனத்துடன் இணைவிக்கப்பட்டே இயங்கும். பழைய சாம்சங் போன் அல்லது, மற்ற நிறுவனங்களுடன் இது இயங்காது என்றே தெரிகிறது.




ஸ்மார்ட் வாட்ச் முன்புறம், சதுர வடிவில் 1.6 அங்குல அகலத்தில் AMOLED டச் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பட்டன் மூலையில் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், ஹோம் ஸ்கிரீன் கிடைக்கிறது. இதனை ஸ்வைப் செய்து, பல அப்ளிகேஷன்களைப் பெறலாம். இதன் தொடக்க தோற்றம் ஒரு கடிகாரத்தினுடையதாகத்தான் இருக்கும். பயன்படுத்துபவர், இதனை ஸ்வைப் செய்து, பல பயனுள்ள அப்ளிகேஷன்களைப் பெறலாம்.



 மெசேஜ் மற்றும் அழைப்பு குறித்த அறிவிப்பு இதில் கிடைக்கும். வரும் அழைப்புகளுக்கு, மணிக்கட்டில் உள்ள கடிகாரத்தில் உள்ள, பட்டனை அழுத்திப் பேசலாம். அல்லது அணைத்து ஒதுக்கலாம். இந்தக் கடிகாரத்தில் ஒரு ஸ்பீக்கர் மற்றும் மைக் தரப்பட்டுள்ளது. போனுக்கு வந்திருக்கும் அழைப்புகள் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களை இதில் பார்க்கலாம். ஆனால், ஜிமெயில், ட்விட்டர் போன்றவற்றிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள், அறிவிப்புகளாகத்தான் காட்டப்படும். இவை குறித்து கூடுதல் தகவல்கள் அறிய, பயனாளர் போனைத்தான் பார்க்க வேண்டியதிருக்கும்.

இதில் டயலர் வசதி தரப்பட்டுள்ளது. எனவே,இதிலிருந்து அழைப்புகளை ஏற்படுத்தி பேசலாம். போனின் துணையுடன் இதனை ஒரு போனாகவும் பயன்படுத்தலாம். இதில் 1.9 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா ஒன்று இயங்குகிறது. இது கடிகாரத்தில் இல்லாமல், தனியே அதனைக் கைகளில் கட்டும் பட்டையில் உள்ளது. இந்த கேமரா, இதனை அணிந்திருப்பவரைப் பார்க்காது. வாய்ஸ் மெமோ ரெகார்டர், மியூசிக் பிளேயர், அழைப்புகளின் பட்டியல், போன் புக் மற்றும் பிற அப்ளிகேஷன்களுக்கான ஐகான்களைத் தரும் பக்கத்திற்கான ஐகான் என திரையில் காட்சி கிடைக்கிறது.



செப்டம்பர் 25 லிருந்து, இந்த காலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் 140 நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அக்டோபர் தொடக்கத்தில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும். மொபைல் போன் விற்பனை செய்பவர்கள் மூலம் இது விற்பனை செய்யப் படும்.இதன் விலை 300 டாலர் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



புளுடூத் 4 மட்டுமே இயங்கும் என்பதால், புதியதாக வந்துள்ள காலக்ஸி நோட் 3 மட்டுமே, தற்போதைக்கு இதனுடன் இணையாகச் செயல்பட முடியும். இந்த 5.7 அங்குல பேப்ளட் வாங்குவதற்கும் செலவு செய்திட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வளவு செலவு செய்து இதனைப் பயன்படுத்த வேண்டுமா என்பது இன்றைய கேள்வியாக இருந்தாலும், இது போன்ற ஒன்று வேண்டும் என்பது இன்றைய நிலையில் ஒரு தேவையாகத் தரப்படவில்லை.



எனவே, புதியதாக அறிமுகப்படுத்தப்படும் இதனை மக்கள் விரும்புவார்கள் என சாம்சங் எதிர்பார்க்கிறது. எப்படி, கம்ப்யூட்டரில் பார்த்துப் பழகிய மின்னஞ்சல்களை, ஸ்மார்ட் போனில் பார்த்துப் பயன்படுத்த நாம் மாறிக் கொண்டோமோ, அதே போல, மொபைல் போனில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, இனி ஸ்மார்ட் வாட்சில் பார்க்கும் பழக்கம் வந்து விடும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top