ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலும், விற்பனைச் சந்தையிலும், இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப வசதிகளுக்கு நம் நாட்டவர் எப்போதும் தீராப் பசியோடுதான் இருப்பார்கள் என்பதனை, வெளிநாட்டு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனாலேயே, மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து முடிவெடுக்கையில், இந்தியர்களின் எண்ணங்களுக்கு அதிக மதிப்பு கொடுத்து வருகின்றனர்.
ஆனால், தற்போது ஒரு சின்ன பிரச்னை இதில் எழுந்துள்ளது. இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள், பட்ஜெட் விலையில், மிகவும் குறைவான விலையில், போன்களைத் தயாரித்து வழங்கத் தொடங்கி உள்ளனர். இதனால், பல பன்னாட்டு நிறுவனங்களும், தங்கள் போன்களை குறைந்த விலையிட்டு விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். குறைந்த விலையிட்டு விற்பனை செய்வதற்காகவே, போன்களின் வடிவமப்பையும், இந்தியாவில் விற்பனை செய்வதற்கென மாற்றி வருகின்றனர்.
உயர்ரக போன்களின் கதி?
இத்தகைய சூழ்நிலையில், ஆப்பிள் போன்ற உயர் ரக போன்களைத் தயாரித்து, உயர்ந்த விலையிட்டு விற்பனை செய்திடும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் நிலை என்ன? இதன் போனின் சராசரி குறைந்த விலை ரூ.40,000 ஆக உள்ளது. இது உயர்நிலையில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரின், ஒரு மாத கால ஊதியமாக உள்ளது. இதனாலேயே, ஆப்பிள் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் 5 எஸ் மற்றும் ஐபோன் 5 சி ஆகியவை உயர் மத்திய வகுப்பினர் மட்டும் செல்வந்தருக்குக் கூட கிடைக்காத நிலையை உருவாக்கியுள்ளன.
சாம்சங் மற்றும் எல்.ஜி. போன்ற நிறுவனங்கள், இந்த வகையில் அதே வசதிகள் கொண்ட போன்களை வடிவமைத்து விற்பனை செய்தாலும், அவை அனைவரும் வாங்கும் நிலையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த மத்திய தர வகுப்பினர் வாங்கும் நிலையில் எந்த போனும் கொண்டிருக்கவில்லை. முன்பு வெளியான பழைய போன்களைத்தான் விலை குறைத்து விற்பனை செய்கிறது.
ஐபோன் 5 சி - இந்தியாவிற்கு இல்லை?
ஆப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய இரண்டு போன்களில், ஐபோன் 5 சி, பட்ஜெட் விலை போன் எனத் தெரிவிக்கப்பட்டது. ஐபோன் 5 எஸ் போனுடன் ஒப்பிடுகையில், இதன் விலை குறைவாக இருக்கலாம். ஆனால், ஐபோன் 5 சி இந்தியாவிற்கான பட்ஜெட் விலை போனாக இருக்க வாய்ப்பில்லை.
ஏனென்றால், வெளிநாடுகளில், மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்தில் இல்லாத ஐபோன் 5 சி போன் ஒன்றின் விலை 549 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணி மாற்றத்தின் படி பார்த்தால், இதன் இந்திய விலை ரூ. 35 ஆயிரமாக இருக்க வாய்ப்புண்டு. மேலும், ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5 எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், ஐபோன் 5 சியின் பிளாஸ்டிக் கவர் சற்றாக இதன் தரத்தினைக் குறைக்கிறது. எனவே, மக்கள் இதே வசதிகளைத் தரும், பிற நிறுவனங்களின் குறைந்த விலை போன்களை நாடிச் செல்லும் வாய்ப்புண்டு.
எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 5 சி, இந்தியாவில் அதிகம் விற்பனை ஆக வேண்டும் எனில், அதன் விலை ரூ.15,000 முதல் ரூ.25,000க்குள் இருக்க வேண்டும். பழைய மாடல் ஐபோன்4, 8 ஜிபி திறன் கொண்டதாக இருந்தால், ரூ.22,000 எனத் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. எனவே, புதிய போனின் விலை இந்த அளவைக் காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதே நல்லது.
0 comments: