.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 14 September 2013

முதல் உதவி – ஆபத்து நேரத்தில் உயிர் காக்கும் முதல் சிகிச்சை முறைகள்!


பன்னெடும் காலமாக மனிதன் என்னென்னவோ ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான். எதை எதையோ கண்டு பிடிக்கிறான். ஆனால் அடுத்த நொடியில் என்ன நடக்கக் கூடுமென்பதை அறிந்தவன் யாருமில்லை! நமது வாழ்வில் பற்பல நல்ல சம்பவங்களும் நடக்கின்றன, பற்பல விபத்துகளையும் சந்திக்க நேரிடுகிறது. அப்படி ஏதாவது ஒரு நெருக்கடி நிலை நேரிட்டால் தம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் எப்படிக்காப்பது என்பது தெரிந்திருப்பது நலமல்லவா? எனவே பொதுவாக நேரக்கூடிய விபத்துகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் ஆலோசனைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.


விபத்துகளின் பொழுது உங்களை நீங்களே சில மணி நேரம் காப்பற்றிக்கொள்ள முடியும். பிறருக்கும் அவசர காலங்களில் உதவவும் முடியும். அதற்குத் தனிப்பட எந்தக் கருவிகளும் தேவையில்லை. தேவையானதெல்லாம் நிதானமும் சமயோசித புத்தியும்தான். ஆபத்தின் பொழுது பீதியடையாமல் இருப்பது மிக முக்கியம். அது கடினம்தான் என்றாலும், பயமும் பதட்டமும் நம்மைச் செயல்பட விடாமல் தடுத்துவிடும். ‘ ஒரு விபத்தில் சிக்கிக்கொண்ட பின் அதில் தப்பித்தவர்களுக்கும் தப்பிக்காமல் இறந்தவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவெனில் தப்பிப்பவர்கள் தமது பயத்தை வெற்றிகொண்டு, நான் என்ன செய்யவேண்டும் என்று யோசித்து இறுதிவரை போராடுவதுதான்’ என்கிறார் முதலுதவிகள் குறித்து வகுப்புகள் நடத்தும் ஒரு பிரபல நிபுணர்.

Medical assistance concept

அலுவலத்திலும் சரி, வீட்டிலும் சரி, அல்லது எங்காவது வெளியூருக்குச் செல்வதானாலும் சரி, கீழ்க்கண்ட பொருட்களைக் கொண்ட ஒரு முதலுதவிப் பெட்டியை தயாராக வைத்திருப்பது அவசியம். அவை – ஒரு பட்டை ஆஸ்பிரின் மாத்திரை, ஒரு பட்டை பாரசிடமால் மாத்திரைகள், ஒரு பட்டை ப்ரூபின் மாத்திரைகள், பாண்டேஜ் துணி, காயங்களுக்குப் போடக்கூடிய மருந்து, பாண்ட் எய்ட், வலி அல்லது வீக்கத்திற்குப் பயன்படுத்தும் மாத்திரை ORS பாக்கெட் (உப்பு சர்க்கரைக் கலவை) ஆகியவை. எக்காரணம் கொண்டும் இப்பெட்டியைப் பூட்டவேண்டாம். பின் அவசரத்தின்பொழுது இதற்கு சாவியைத் தேடி அலையவேண்டி வந்துவிடும். அதே நேரம் இந்தப் பெட்டி சிறுகுழந்தைகளின் கைக்கு எட்டாதவாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.


நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில தகவல்கள்:

எந்த அவசர நிலையிலும் பதட்டமின்றி இருப்பது முக்கியம். முதலுதவி தேவைப்படுபவருக்கு காற்று கிடைக்கவும், அவர் எளிதில் மூச்சு விடவும் ஏற்பாடு செய்தல் வேண்டும். கழுத்திலோ, முதுகுப்புறமோ அடிபட்டிருப்பின் கூடியமட்டும் அவரைத் தூக்கி இடம் மாற்றுவதைத் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவரிடம் அமைதியாகவும் நிதானமாகவும் பேசி அவரைத் திடப்படுத்தவேண்டும். பாதிக்கப் பட்டவர் மயக்க நிலையில் இருக்கும்பொழுது வாய்மூலம் எதுவும் கொடுக்கக் கூடாது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.


மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி

மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ‘ஹெய்ம்லீக் மேன்யூவர்’ என்னும் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.

மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும்.


இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும்.

அந்நிலையிலேயே, அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்?

குழந்தைகள் காசு, பட்டாணி என்று கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும்.
இப்படிச் சில முறைகள் தட்டினால் தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.


பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக் கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.
பாதிக்கப்பெற்றவருடன் உரையாடுவது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும்.

பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.
மயக்கம் ஏற்படுதல


அறிகுறிகள்

மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.

1. தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
 

2. சோர்வு
 

3. வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
 

4. தோல் வெளுத்துக் காணப்படுதல்.

முதலுதவி

மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது


1. முன்புறமாக சாய வேண்டும்
2. தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.



பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது


1. பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
 

2. இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
 

3. குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.


வலிப்பு

வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது “எபிலப்சி” என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின் சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.


அறிகுறிகள்

1. உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.
 

2. நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
 


3. முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
 

4. சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.


முதலுதவி


1. பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
 

2. நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
 

3. எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
 

4. மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
 

5. மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
 

6. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.

முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

வெப்ப நோய்கள்

வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு

1. வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
 

2. முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
 

3. உடல்சூடு சாதாரணமான நிலைக்கு வந்தவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்ந்திருக்கச் செய்யவும்
 

4. உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 

5. எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
 

6. மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

உயிர் காக்கும் முதலுதவி

CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration – நினைவிழந்தவர் வாயில் முதலுதவியாளர் வாயை வைத்து ஊதும், மற்றும் Chest compressions – நெஞ்சை அமத்தி மூச்செடுக்கச் செய்யும் CPR-Cardio Pulmonary Resuscitation – செயற்கச் சுவாச முதலுதவிச் சிகிச்சை மிக மிக அவசியம்.

ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்

1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது

2. உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது

3. விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது

4. தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது

5. அதிர்ச்சியின் போது ( in a state of shock)

6. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)

இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் ) CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.

ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல் உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)

இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)

நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்

சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion),
மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்

உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.
சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.

இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை
அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது;
( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)
ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.

இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.

CPR என்பது ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation முதலில்-Airway சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.
மூச்சுக்குழல் பாதையை சீர்செய்தல்:நினைவிழந்த நபரை சமனான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும்.

இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாக்கு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)

இரண்டாவதாக-Breathing சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊதி உள்செலுத்த வேண்டும்.

மூன்றாவதாக-Circulation.

ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதன்னிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.


மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.

நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

Chest Compressions எப்படி அளிப்பது:

 விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.

1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.

இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.

வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி

1. காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
 

2. இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 

3. காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
 

4. ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்

1. வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
 

2. இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி

பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும். பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.

தீக்காயங்களுக்கான முதலுதவி

1. ஒரு குழந்தையின் துணியினை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அக்குழந்தையை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.
 

2. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தீக்காயம் பெரியதாக இருந்தால், குழந்தையை குளிர்ந்த நீர் உள்ள குளிக்கும் தொட்டி அல்லது பேசினில் வைக்க வேண்டும். இச்செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்
 

3. தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது நாணையத்தைவிட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ குழந்தையை சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.
 

4. தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த பொருளையும் நீக்கக்கூடாது. குளிர்ந்த நீரைத்தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக்கூடாது.
 

5. குழந்தைக்கு பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்

மின்சாரபாதிப்புக்கான முதலுதவி

1. ஒரு குழந்தை மின்சாரத்தில் அகப்பட்டுக் கொண்டால், அல்லது மின்சாரத்தினால் தீக்காயம் ஏற்பட்டால், குழந்தையை தொடுவதற்கு முன்னர் மின்சாரத்தினை நிறுத்த வேண்டும். குழந்தை சுயநினைவினை இழந்தால், அதனை தகுந்த வெதுவெதுப்பான வெப்ப நிலையில் வைத்து, உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.
 

2. குழந்தைக்கு சுவாசிப்பது கடினமாக தோன்றினாலோ அல்லது சுவாசமின்றி இருந்தாலோ, அக்குழந்தையை சமமான பகுதியில் படுக்கவைத்து, அவள் அல்லது அவனின் தலையை இலேசாக பின்புறமாக சாய்க்க வேண்டும். குழந்தையின் நாசித்துவாரத்தை மூடிக்கொண்டு, வாயின் வழியாக சுவாசக் காற்றை ஊதவேண்டும். குழந்தையின் மார்பு விரியும் வண்ணம், போதுமானளவு சுவாசத்தை ஊத வேண்டும். மூன்று வரை எண்ணி மீண்டும் ஊத வேண்டும். குழந்தை சுவாசிக்க தொடங்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.

sep 14 - health first aid various

 


மூச்சுத்திணறலுக்கான முதலுதவி

பிறந்த குழந்தையோ அல்லது சிறுகுழந்தையோ இருமினால் தடுக்க வேண்டாம். அவள் அல்லது அவன் கிருமி பொருளை வெளியேற்ற விட்டுவிட வேண்டும். அப்பொருள் விரைவாக வெளியில் வராவிட்டால், குழந்தையின் வாயிலிருந்து அப்பொருளை எடுக்க முயற்சிக்கவும்.
அப்பொருள் இன்னமும் குழந்தையின் தொண்டையில் அடைத்துக்கொண்டிருந்தால்,

பிறந்த மற்றும் சிறுகுழந்தைளுக்கு

தலை மற்றும் கழுத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். முகம் தரையை நோக்கிய வண்ணம், கால்கள் இருக்கும் மட்டத்திற்கு சற்றே கீழாக தலை இருக்கும் வகையில் குழந்தையை திருப்பவும். முதுகில், தோள்பட்டைகளுக்கு இடையில், ஐந்து முறை தட்ட வேண்டும். பின்பு, குழந்தையின் முகத்தை மேலே நேராக நிமிர்த்தி, மார்பெலும்பின் மேல் மார்புக்காம்புகளுக்கிடையில் உறுதியாக ஐந்து முறை அழுத்த வேண்டும். வாயில்/தொண்டையில் சிக்கி இருக்கும் பொருள் வெயியில் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிட்டால், உடனடியாக குழந்தையை அருகில் வைத்தியரிடம் எடுத்துச் செல்லவும்.


பெரிய குழந்தைகளுக்கு

உங்கள் புயங்கள் குழந்தையின் இடுப்பைச் சுற்றிய வண்ணமாக குழந்தைக்குப் பின்புறமாக நிற்க வேண்டும். மடக்கிய கைமுட்டியை குழந்தையின் உடலில் தொப்புள் மற்றும் மார்புக் கூட்டிற்கு இடையில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுகையின் முட்டியை முதல் வைத்த கைமுட்டியின் மேல் வைத்து உள்வெளியாக ஐந்து முறை குழந்தையின் வயிற்றில் அழுத்த வேண்டும். தொண்டையில் அடைபட்ட பொருள் வெயியேறும் வரை இதை திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். அப்பொருளை உங்களால் வெயியே எடுக்க முடியாவிடில், உடனடியாக குழதையை அருகிலுள்ள சுகாதாரப் பணியாளரிடம் எடுத்துச் செல்லவும்.

தண்ணீரில் முழ்கினால்…

ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் பற்றித் தூக்கவேண்டும். அவருக்கு கிட்டச் சென்றால் அவர் உங்களை இறுக கட்டிப் பிடித்து தப்பிக்க முயல்வார். அதனால் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது இருவருமாக் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்ற செல்பவர் அவரின் முன் பக்கமாகச் செல்லாது பிபக்கமாகவே சென்று தலைமயிரில் பிடித்து இழுக்க வேண்டும். அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும். வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும். தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top