சென்னை மாநகராட்சி மூலம் அம்மா உணவகம் 200 இடங்களில் தொடங்கப்பட்டு குறைந்த விலை யில் உணவு வழங்கி வரு கிறது. இதில் அந்தந்த பகுதி மகளிர் சுயஉதவி குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதேபோல காய்கறிகள், பழங்கள் பூ விற்பனையிலும் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், பழங்களை நேரிடையாக கொள்முதல் செய்து பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு சென்று விற்கலாம்.
தள்ளுவண்டியில் எப்படி தெருத்தெருவாக பழங்கள், காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறதோ அது போல சிறிய வேன், ஆட்டோ போன்றவற்றில் காய்கறிகள், பழங்களை கொண்டு வந்து முக்கிய வீதிகளில் சந்திப்புகளில் விற்க திட்டமிடப்படுகிறது.
இந்த பணியில் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்களை ஈடுபடுத்தினால் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.
கோயம்பேட்டில் பொது மக்கள் நேரிடையாக சென்று காய்கறிகள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மார்க்கெட்டிற்கு சென்று வாங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு பகுதியிலும் சுயஉதவி குழு பெண்கள் மூலமாக குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய அரசு பரிசீலனை செய்கிறது.
இதனால் பொது மக்கள் அலைந்து திரியாமல் வீட்டிற்கு அருகிலேயே மலிவான விலையில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பெற முடியும்.
கோயம்பேடு மார்க்கெட் அருகில் மெட்ரோ ரெயில் நிலையம், பராமரிப்பு மையம் போன்றவை கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. பொது மக்கள் காய்கறிகள் வாங்க வாகனங்களில் வர முடியாத நிலை உள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் பொது மக்களுக்கும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு பகுதி ஏழை பெண்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதாக அமையும்.
0 comments: