நுகர் பொருள்கள் வாங்குவதற்கு வட்டியில்லாத, அதாவது 0% வட்டிக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும், டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
பொதுவாக நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க இதுபோன்ற சலுகை திட்டங்களை அறிவிப்பதுண்டு.
குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு இலவச தவணை முறையில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என நிறுவனங்கள் அறிவிக்கின்றன. இதை பெரும்பாலோர் தேர்வு செய்வதுண்டு. 0 சதவிகித வட்டி என்று ஆசை காட்டி வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் சுரண்டுவதால், இதற்கும் ரிசர்வ் வங்கி புதன்கிழமை தடை விதித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு முந்தைய விழாக்கால விற்பனை பெருமளவு பாதிக்கப்படும் என்று வர்த்தகர்கள் அஞ்சுகின்றனர்.
மேலும், டெபிட் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு எவ்வித கட்டணத்தையும் நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளன.
அதேசமயம் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைப்பது போன்ற சலுகைகளை எந்த பொருள் வாங்குவதற்கும் காட்டக் கூடாது என்றும், பொருளின் விலை அதைத் தேர்ந்தெடுப்போருக்கு தெளிவாக விளக்கப்படவேண்டும், இதில் எவ்வித ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
வட்டியில்லா கடன் என்பது இனி எந்தப் பொருளுக்கும் அளிக்கக் கூடாது. பொருள்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் ஒரே சீரானதாக இருக்கவேண்டும் என்றும், பரிசீலனைக் கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்று வங்கிகளை ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
0 comments: