.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 12 November 2013

புரோகிராம்களை முறையாக மூடிட புதிய மென்பொருள்!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.



சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், ""அனைத்து புரோகிராம்களையும் மூடிவிடவும்'' என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.


இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம்.


இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது.


"x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் "கொல்லப் (kill) படுகின்றன”.


இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும். ஆனால் அது முறையாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. இந்த End it All புரோகிராமினை



என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.

உயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்!

இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை. புயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது. இதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்ற 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவை, பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, தன் சேவைகள் , ஜிமெயில், யு ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில், கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.

ஆனால், பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. இக்காலத்தில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் கூகுள் ப்ளஸ் பக்கம் தங்களை இணைத்துக் கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், ட்விட்டர் தளத்தினை கூகுள் ப்ளஸ் மிஞ்சிவிட்டது.

இருப்பினும் ட்விட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் இணைந்த எண்ணிக்கை, பேஸ்புக் எண்ணிக்கையை எட்ட இயலவில்லை. ட்விட்டரிடம் 23 கோடி பயனாளர்கள் உள்ளனர். கூகுள் ப்ளஸ், தன்னிடம் 30 கோடி பதிவாளர்களைக் கொண்டுள்ளது.

பேஸ்புக்  பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது.
கூகுள் ப்ளஸ் தளத்தின் அதீத வளர்ச்சி, சென்ற மே மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. மே மாதம் இதன் வாடிக்கையாளர்கள் 20 கோடியாக இருந்தனர். (பார்க்க: usatoday.com) கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம், பேஸ்புக் தளத்தினை

வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல. கூகுள் நிறுவனம் இயக்கும் தளங்கள் வழியாக, அதன் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவே கூகுள் திட்டமிடுகிறது. மிக எளிய சேவைகளை வழங்குவதிலிருந்து, மக்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பதிவு செய்திடும் தளங்களாக, கூகுள் தன் தளங்களை அமைக்க விரும்புகிறது. இதற்காகக் கீழ்க்காணும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

* புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் தேடுதலை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவுதல்.

* சமூக இணைய தளங்களில் அப்லோட் செய்யப்படும் படங்களை மேம்படுத்தி பதித்து வைத்திட வசதி செய்து கொடுத்தல். பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் படங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்தல்.

* வீடியோ பயன்பாட்டிலும் புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன. அண்மையில், கூகுள் Auto Awesome Movie என்னும் டூலை வழங்கி உள்ளது. இதன் மூலம் கூகுள் ப்ளஸ் தளத்திற்கு அப்லோட் செய்யப்பட்ட வீடியோ கிளிப் பைல்களைக் கொண்டு, ஒருவர் தன் கற்பனைத் திறனுக்கேற்ப வீடியோ படங்களைத் தயாரிக்க முடியும்.

மேலே கூறப்பட்ட தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே, கூகுள் நிறுவனத்தின் பங்குகள் விலை வேகமாக உயர்ந்து 1000 டாலர் என்ற இலக்கை எட்டியது, மக்கள் இந்நிறுவனத்தின் திட்டங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை!

கூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும். ஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும். 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட வசதிகளை இங்கு பார்க்கலாம்.

1. கூகுள் ரீடர் (Google Reader RSS reader): சென்ற ஜூலை மாதம் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்துப் பலர் தங்கள் ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த சேவை, சென்ற 2005 ஆம் ஆண்டுமுதல், கூகுள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வந்தது. இதனைப் பயன்படுத்தியவர்கள், பெரிய அளவில் இல்லை என்றாலும், அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இருப்பினும், இதனை மிக விரும்பிய சிலர், இணையத்தில் இது தொடர வேண்டும் என மனுவெல்லாம் கொடுத்துப் பார்த்தனர். சிலர், கூகுள் நிறுவனம் தன் கூகுள் ப்ளஸ் மீது அதீத பாசம் கொண்டு, இதனை சாகடிக்கிறது என்றெல்லாம் வசனம் அமைத்து குழு அமைத்து வசை பாடினார்கள். ஆனால், கூகுள் தனக்கெனக் கொண்டிருந்த அளவு கோலின் அடிப்படையில் இந்த சேவையினை நிறுத்தியது. இந்த வசதிக்கு இணையான இன்னொரு வசதியை கூகுள் அல்லது வேறு யாரும் தரவில்லை.

2. ஐகூகுள் (iGoogle): இந்த தனி நபர் ஹோம் பேஜ் தரும் இணைய தளம், 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நவம்பர் 1 முதல் நிறுத்தப்பட்டது. இது கைவிடப்படும் செய்தி, ஜூலை 2012 லேயே அறிவிக்கப்பட்டது. குரோம் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்ற சிஸ்டங்களில் இயங்கும் புதிய வகை அப்ளிகேஷன்கள் வந்த பின்னர், ஐகூகுள் டூலினை காலம் கடந்த பழைய பெருங்காய டப்பா என்று கூகுள் கருதியது. எனவே இதனை மூடப் போகிறோம் என்று முன்பாகவே அறிவித்தது. 16 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் டேட்டாவினை, நகர்த்திக் கொள்ள போதுமான காலம் தரப்பட்டது.

3. லேட்டிட்யூட் (Latitude): ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் கூகுள் மேப் அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படும் டூலாக இது வெளியானது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கிய சாதனங்களிலும் இது கிடைத்தது. மேப்பில் ஓர் இடத்தை அடையாளம் காண, அதன் அட்சரேகை (Latitude) கொடுத்துப் பார்க்கும் வசதியினை இந்த டூல் தந்தது. ஆனால், இந்த வசதி பின்னர் வந்த புதிய மேப் களிலிருந்து எடுக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த டூல் வழங்கப்பட்ட ஆண்டு 2009. இப்போது இயங்கப்படும் இடத்தை மையமாகக் கொண்டு மேப் பயன்படுத்தும் வசதியை கூகுள் தன் கூகுள் ப்ளஸ் இல் தந்து வருகிறது.

4. சொந்த ஆய்வுக்கு 20 சதவீத நேரம் (Google 20% Time): கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரியும் விதம் பற்றிக் கூறுகையில், அவர்கள் தங்கள் சொந்த ஆய்வுப் பணியினை, வாரத்தில் 20 சதவீத நேரம் ஒதுக்கி மேற்கொள்ளலாம் என்ற சுதந்திரம் தரப்படுவதனைப் பெருமையாகக் கூறுவார்கள். கூகுள் இதனை நிறுத்திவிட்டது. பலர் இதனை மிக மோசமான நடவடிக்கை என்றும், இதனால், சுதந்திரமான ஆய்வு கூகுள் நிறுவனத்தில் அற்றுப் போய்விடும் என்றும் கூக்குரலிட்டனர். ஆனால், தன் ஊழியர் மற்றும் பணிக் கலாச்சாரக் கட்டமைப்பில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் இதுவும் ஒன்று என கூகுள் இந்த நிறுத்தத்தினை மேற்கொண்டது.

5. பில்டிங் மேக்கர் (BUILDING MAKER): கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் ஆகிய அப்ளிகேஷன் புரோகிராம்களில், முப்பரிமாண மாடல்களை உருவாக்க இந்த டூல் பயன்படுத்தப்பட்டது. இதனை சென்ற ஜூன் 1 முதல் விலக்கிக் கொண்டது கூகுள். இருப்பினும் ஏற்கனவே, இதனைக் கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கியவர்கள், இதன் கிடங்கிலிருந்து அவற்றைப் பெற்று, பயன்படுத்திப் பார்க்கலாம். தற்போது கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் அப்ளிகேஷன்களில், இதே முப்பரிமாண படங்களை உருவாக்க, டூல்கள் தரப்பட்டுள்ளன.

6. க்ளவ்ட் கனெக்ட் (CLOUD CONNECT): இது ஒரு ப்ளக் இன் புரோகிராமாக, கூகுளால் தரப்பட்டது. கூகுள் ட்ரைவில், நாம் உருவாக்கும் பைல்கள் தாமாக சேவ் செய்யப்பட இந்த டூல் பயன்பட்டது. பின்னர், கூகுள் ட்ரைவினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இந்த வசதியினை மேற்கொள்ளும் வகையில், கூகுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் இதே வசதி தரப்பட்டது. ஆனால், இந்த வசதி சென்ற ஏப்ரல் 30 முதல் நிறுத்தப்பட்டது.

7. பிளாக்பெரிக்கான கூகுள் வாய்ஸ் (GOOGLE VOICE APP FOR BLACKBERRY): ஏற்கனவே பிளாக் பெரி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் அளித்த இந்த டூலை, கூகுள் வாபஸ் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கான தன் சப்போர்ட்டினை தரப்போவதில்லை என கூகுள் அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்திய பிளாக்பெரி வாடிக்கையாளர்களை, கூகுள், எச்.டி.எம்.எல். 5 பயன்படுத்துமாறு கூறிவிட்டது.

8. கூகுள் சிங்க் (GOOGLE SYNC (Consumer version): இதனைப் பயன்படுத்தி, கூகுள் மெயில், கூகுள் காலண்டர் மற்றும் காண்டாக்ட்ஸ் தொடர்புகளை, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆக்டிவ் சிங்க் ப்ரோடோகால் மூலம் பயன்படுத்தும் வகையில், கூகுள் வடிவமைத்துத் தந்தது. ஆனால், பின்னர் கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்பமான CardDAV வந்த பின்னர், கூகுள் சிங்க் நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியும். மேலும் வர்த்தக ரீதியான இதன் தனி டூல் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், இந்த டூலைப் பொறுத்தவரை, கூகுள் இதனை அதன் சமாதிக்கு அருகே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலே கூறப்பட்ட வசதிகளுடன், மேலும் சில சிறிய அளவிலான டூல்கள், வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அவற்றில் சில வசதிகள், சில நாட்டு வாடிக்கையாளர்களுடன் மட்டுமே தொடர்புள்ளவை என்பதால், இங்கு பட்டியல் இடப்படவில்லை.

தனுஷ் (நடிகர்) - வாழ்க்கை வரலாறு!

 Actor-Dhanush

ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர் தனுஷ். பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய அவர், தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், ஒரு பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்து, இன்று ஹிந்தித் திரையுலகிலும் ‘ரஞ்சனா’ திரைப்படம் மூலமாகத் தனது வெற்றிக்கொடியை நட்டுள்ளார். தனது இளம் வயதில் திரையுலகில் நுழைந்த இவர், ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும், ‘3’, ‘எதிர் நீச்சல்’, போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.


2011 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ வென்ற அவர், 2012ல் நடித்து வெளியான ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதையும்’ வென்றுள்ளார். ‘3’ படத்தில் அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் தனுஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஜூலை 28, 1984

பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா

பணி: நடிகர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்


பிறப்பு


நடிகர் தனுஷ், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னையில், இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக ஜூலை மாதம் 28 ஆம் தேதி, 1984 ஆம் ஆண்டில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

அவர், தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள ஆழ்வார்த் திருநகரில் இருக்கும் செயின்ட் ஜான்’ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். தனது 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்த அவரை, அவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் அவர்கள், திரையுலகில் நுழையுமாறு வற்புறுத்தியதால், அவர் தனது படிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பினார்.

திரையுலகப் பிரவேசம்

தனது அண்ணனின் விருப்பத்தை ஏற்ற அவர், 2௦௦2 ஆம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படம் மூலமாக இருவரும் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தனர். அவரது தந்தையான கஸ்தூரிராஜா அவர்கள் இயக்கிய அப்படத்தின் திரைக்கதையை செல்வராகவன் எழுதி, அவர் கதாநாயகனாக நடித்தார். அவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியான அப்படம், அமோக வெற்றிப் பெற்றதால், அடுத்த ஆண்டே அவர்கள் இருவரும் மீண்டும் ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தில் கைகோர்த்தனர். இப்படத்தை செல்வராகவன் அவர்கள் எழுதி, இயக்கினார். இப்படம் அபார வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்காகப் பரிந்துரையும் செய்யப்பட்டார்.

திரையுலக வாழ்க்கை

தனது ‘காதல் கொண்டேன்’ படம் மூலமாக சிறந்த நடிகரென்ற பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் அவரது அற்புத நடிப்பைக் கண்ட இயக்குனர் வாசு அவர்கள், அவரது அடுத்தப் படமான ‘திருடா திருடி’ (2௦௦3) திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவர் தொடர்ந்து, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ (2௦௦4), ‘சுள்ளான்’ (2௦௦4), ‘ட்ரீம்ஸ்’ (2௦௦4), ‘தேவதையைக் கண்டேன்’ (2௦௦5), ‘அது ஒரு கனாக்காலம்’ (2௦௦5), ‘புதுப்பேட்டை’ (2006), ‘திருவிளையாடல் ஆரம்பம்’ (2006), ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ (2007), ‘பொல்லாதவன்’ (2007), ‘யாரடி நீ மோகினி’ (2008), ‘படிக்காதவன்’ (2009), ‘குட்டி’ (2010), ‘உத்தமபுத்திரன்’ (2010), ‘ஆடுகளம்’ (2011), ‘சீடன்’ (2011), ‘மாப்பிள்ளை’ (2011), ‘வேங்கை’ (2011),       ‘மயக்கம் என்ன’ (2011), ‘3’ (2012) போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் தனுஷ்      

2013, அவர் ஆனந்த் எல். ராய் அவர்கள் இயக்கிய பாலிவுட் திரைப்படமான ‘ரஞ்சனா’ என்ற படத்தில் நடிகை சோனம் கபூருடன் இணைந்து நடித்தார். வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூல் சாதனைப் படைத்து, அமோக வெற்றிபெற்ற அப்படத்தை, ‘பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்’ என்று அறிவித்துள்ளது. மேலும், அவரை ஹிந்தித் திரையுலகிலும் ஒரு அற்புத நடிகரென்ற முத்திரையைப் பதிக்கச் செய்தது.

பிற சாதனைகள்

நடிகராகப் பெரிதும் சாதித்த அவர், தான் நடித்த ஒரு சில படங்களில் பாடல்கள் பாடி வந்தார். அவர் பாடிய அனைத்து பாடல்களும் பிரபலமாகி, மக்களிடையே வரவேற்பையும் பெற்றுத் தந்தது எனலாம். அவ்வாறு பாடியதே, அவரை சுயமாகப் பாடல்கள் எழுதவும் தூண்டியது. அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் அவர், ‘பிறைத் தேடும் இரவிலே’, ‘ஓட ஓட’ மற்றும் ‘காதல் என் காதல்’ போன்ற பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய அனைத்துப் பாடல்களுமே வெற்றிப் பெற, அவர் அவரது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியப் படமான ‘3’ (2012) படத்தில், அனைத்து பாடல்களையும் எழுதினார். அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் ‘எதிர் நீச்சல்’ (2013) படத்தில் ‘நிஜமெல்லாம்’, ‘பூமி என்னை சுத்துதே’ மற்றும் ‘மரியான்’ (2013) படத்தில் ‘கடல் ராசா நான்’ போன்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.

நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட அவர், ‘3’ (2012) மற்றும் ‘எதிர் நீச்சல்’ (2013) போன்ற படங்களைத் தயாரித்து, ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்றும் தன்னை நிரூபித்துள்ளார்.

இல்லற வாழ்க்கை

அவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, 2004 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.

விருதுகள்

•2008 – ‘யாரடி நீ மோகினி’ படத்திற்காக ‘ஆண்டின் சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது’ வழங்கப்பட்டது.

•2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது’ வென்றார்.

•2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ மற்றும் ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ பெற்றார்.

•2011 – ‘மயக்கம் என்ன’ படத்தின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை’, ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்ற பாடலுக்காகப் பெற்றார்.

•2012 – ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருது’ வென்றார்.

•2012 – அவர் எழுதிப் பாடிய பாடலான ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் ‘சி.என்.என் 2011ன் டாப் பாடலாகத்’ தேர்வு செய்யப்பட்டது.

300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

 

இரண்டாம் உலகம்’ திரைப்படம் 300 திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

ஆர்யா, அனுஷ்காவை வைத்து செல்வராகவன் இயக்கியிருக்கும் மெகா பட்ஜெட் படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் தமிழகம் முழுவதும் 22ம் தேதி 300 திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதற்காக திரையரங்குகளை புக் செய்யும் பணியில் பிவிபி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இப்போதைக்கு தீபாவளி படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. எப்படியும் 22ம் தேதிக்கு முன்பாக ‘ஆரம்பம்’, ‘பாண்டிய நாடு’ படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்துவிடுவார்கள் என்பதால் ‘இரண்டாம் உலகம’ படத்துக்கு முக்கியமான திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படாது.

மேலும் இரண்டாம் உலகம் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் அதேநாளில்தான் ஆந்திராவிலும் ரிலீஸாகிறது.  தெலுங்கில் இப்படம் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் த்ரில்லான அனுபவமாக படம் இருக்க வேண்டும் என்று திரைக்கதையில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் செல்வராகவன்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top