.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 6 January 2014

இந்தியாவில் இனி இரண்டு 'Time Zone': வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி "மணி நேரம்"!



அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் "மணி நேரம்" நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது.

இதன்மூலம் டெல்லி, சென்னையில் காலை 8 மணி என்றால் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 9 மணியாக இருக்கும்.

அட்சரேகைகள்-தீர்க்க ரேகைகள்:


பூமியின் பரப்பில் குறுக்கும், நெடுக்குமாக கற்பனைக் கோடுகள் வரையப்படுகின்றன. பூமியை குறுக்காக பிரிக்கும் கோடுகள் அட்சரேகைகள் (Latitudes) எனப்படுகின்றன. பூமியை நீளவாக்கில் பிரிக்கும் கோடுகள் தீர்க்க ரேகைகள் (Longitudes ) எனப்படுகின்றன.

டெல்லியை விட 1 மணி நேரம்:

இந்த தீர்க்க ரேகைகளை வைத்தே ஒரு இடத்தின் நேரம் தீர்மானிக்கப்படுகிறது. கிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி. ஆனால், இந்தியாவில் இரு தீர்க்க ரேகைகள் செல்கின்றன. இதன்படி வட கிழக்கு மாநிலங்களின் நேரம் டெல்லியை விட 1 மணி நேரம் அதிகமாக இருக்க வேண்டும்.

அர்த்தமில்லாத வாதம் பேசி..

ஆனால், டெல்லி ஆட்சியாளர்கள் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தாங்களாகவே கூறிக் கொண்டு, டெல்லியில் 5 மணி என்றால் அஸ்ஸாமிலும் 5 மணி தான் என்று அர்த்தமில்லாத வாதம் பேசி அதையே வட கிழக்கு மக்களின் தலையிலும் கட்டினர். இதனால், டெல்லியில் சூரிய உதயம் ஆவதற்கு முன்பே அஸ்ஸாமில் சூரிய உதயம் ஆகிவிடுகிறது. அங்கு சூரிய அஸ்தமானம் ஆகி ஒரு மணி நேரத்துக்குப் பின்பே டெல்லியில் சூரிய அஸ்தமானம் நடக்கிறது

அஸ்ஸாம்....

அதாவது அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சூரிய உதயம் என்பது அதிகாலை 4 அல்லது 5 மணிக்கே வந்துவிடும். அதேபோல் மாலைப் பொழுது என்பது 4 அல்லது 5 மணிக்கு முடிந்து இருளாகிவிடும். தற்போது இந்தியாவின் பிறபகுதிகளில் இருப்பதைப் போல அதாவது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பணி நேரம் கடைபிடிக்கப்படுவதால் பொதுவாக பகல் பொழுதில் வேலை நேரம் குறைவாகவும் இரவு சற்று கூடுதல் வேலை நேரமாகவும் இருந்து வருகிறது.

தேயிலைத் தோட்டங்கள்..

ஆனால் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 150 ஆண்டுகாலத்துக்கு முன்னர் பகல் பொழுதை அதிகம் பயன்படுத்தும் வகையிலான மணி நேர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுதான் தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உற்பத்தித் திறன் குறைகிறது...


அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் இந்திய மணி நேர நடைமுறைப்படுத்துவதால் பகல் நேர வேலை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் பணி மற்றும் உற்பத்தித் திறன் குறைகிறது என்பது பொதுவான ஆதங்கம். ஆனாலும் டெல்லியின் 9 மணி முதல் 5 மணி வரையிலான அதே நேரம் தான் வட கிழக்கு மக்களின் அலுவலக, பள்ளி நேரமாக உள்ளது. இதன்மூலம் அந்தப் பகுதி மக்களின் அடிப்படை உரிமையையைக் கூட டெல்லி அதிகார வர்க்கம் மதிக்காமல் இருந்து வந்தது.

தருண் கோகோய்:

இது குறித்து கருத்து தெரிவித்த அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய், அஸ்ஸாமின் தேயிலை தோட்டங்களில் பின்பற்றப்படுகிற நடைமுறைதான் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொருந்தும். அப்போதுதான் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இதனால் தேயிலைத் தோட்டங்களில் பின்பற்றப்படும் நேர முறையையே நாங்களும் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இப்படி நேரம் மாற்றி அமைக்கப்பட்டால் அஸ்ஸாமில் காலை 6 அல்லது 7 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை வேலை நேரம் இருக்கும். ஆக இந்தியாவின் இதர பகுதிகளில் ஒரு நேர முறையும் வடகிழக்கில் ஒரு நேர முறையும் கடைபிடிக்கப்படும்.

மருந்து வியாபாரமா? மரண வியாபாரமா?



போலி மருந்துகளும், காலாவதியான மருந்துகளும், தமிழகத்தில் முழு வீச்சில் பல வருடங்களாக விற்பனை செய்யப்பட்ட கொடுமையான உண்மை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டையே உலுக்கி உள்ளது. சில உயிர்கள் பலியான பிறகே இந்தக் கொடூர மோசடி வெளிவந்துள்ளது. சென்னை கொடுங்கையூரில் காலாவதியான மருந்துகளை அழிக்கும் கிடங்கு உள்ளது. கொடுங்கையூருக்குக் கொண்டு வரப்படும் காலாவதியான மருந்துகளை சில கொடுங்கையர்கள் வழியிலேயே மடக்கி, அவற்றை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று, காலாவதியான தேதிகளை மாற்றி, புதிய தேதிகளை அச்சடித்து மறுபடியும் விற்பனைக்கு அனுப்பி வந்துள்ளனர்.


இப்படி காலாவதியான மருந்துகளை சாப்பிட்டு, இவரை எத்தனை பேர் காலாவதியாகினார்கள் என்பது கணக்கில் இல்லை. இதுவல்லாமல், போலி மருந்துகளும், நூற்றுக்கணக்கான வகைகளில் புழக்கத்தில் விடப்பட்டு பொதுமக்களின் உயிரோடு திருவிளையாடல் நடத்தப்பட்டுள்ளது. 600 வகையான போலி மருந்துகள் மாநில முழுவதுமுள்ள மருந்து கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு கனஜோராக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மருந்து வியாபாரமா? மரண வியாபாரமா?மக்களின் உயிர் அவ்வளவு மட்டமா? அல்லது மாநிலத்தில் இருப்பது கையாலாகாத சட்டமா? ஒன்றும் புரியவில்லை. காலாவதி மருந்துகளை தேதி மாற்றி விற்று, கோடிகோடியாய் குவித்த கும்பலைச் சேர்ந்த பிரதீப் சோர்டியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலாவதி+போலி மருந்து கும்பலின் மூளை என கருதப்படும் மீனா ஹெல்த்கேர் மீனாட்சிசுந்தரம், சஞ்சீவ்குமார், உட்பட 5 பேரை போலீஸ் பிடிக்கவில்லை.


அவர்களே நீதிமன்றத்தில் (பாதுகாப்பாக) சரண் அடைந்துள்ளனர். மீனாட்சி சுந்தரம் மருந்துகளின் பெயரால் மரண வியாபாரம் செய்து 100 கோடிக்கு மேல் குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி என்றால் எவ்வளவு காலம் இந்தக் கொடுமை அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள். காலாவதி+போலிமருந்து வழக்கு, சிபிசிஐடி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் திகிலூட்டும் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.


வசந்தா பார்மா, மீனா ஹெல்த் கேர் நிறுவனங்களின் பெயரில் காலாவதி மருந்து மாத்திரை விற்றதில் கோடிக்கணக்கில் லாபம் கிடைத்ததால் அவற்றை பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளாய் மாற்றி மீனாட்சி சுந்தரம் தம்பதியர் அதன் இயக்குநர்களாக இருந்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது.


தமிழகம் முழுவதும் 42 ஆயிரம் கடைகளுக்கு மேல், காலாவதி+போலி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் வழக்கமாய் மருந்து மாத்திரைகள் வாங்கும் கடையும் இதில் இருக்கலாம். மாநிலமெங்கும் மூட்டை மூட்டையாக காலாவதி+போலி மருந்துகள் கொட்டப்படுவதும், கண்டுபிடிக்கப்படுவதும் பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவைச் சேர்ந்த ராமு என்பவர் டெல்லியில் உள்ள ஒரு கம்பெனியிலிருந்து போலி+காலாவதி மருந்துகளை வாங்கி மீனாட்சி சுந்தரத்துக்கு விற்பனை செய்ததும் அதை மீனாட்சி சுந்தரமும் பல கேடிகளும் சேர்ந்து கோடிகளாய் மாற்றிய கொடுமையும் நடந்துள்ளது.


பல மாநிலத்திலும் இந்த பாதக வலை விரிந்துள்ளது.  கல்வியறிவற்றவர்களும், வறுமைகோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற ஏழை எளியவர்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற நம் நாட்டில் மருத்துவம் வணிகமாகவும், மருத்துவமனைகள் கொள்ளைக் கூடங்களாகவும் மருந்து கடைகள் மரண வியாபார கேந்திரங்களாகவும் மாறி இருப்பதற்கு யார் காரணம்? மக்களிடம் வாக்குகளை வாங்கிக் கொண்டு மக்களின் மீது அக்கறையே இல்லாமல் இருக்கின்ற ஆட்சியாளர்கள் அல்லவா?


கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால், உயிருக்கு உத்தரவாதமில்லை என்று அஞ்சுகிற மக்கள், தனியார் மருத்துவர்களிடம் செல்கின்றனர். கிளினிக்குகள் என்ற பெயரில் இயங்கும் இவை, ‘கிளின்’ செய்வது நோயை அல்ல, நோயாளியின் மணிப்பர்சை. மருத்துவர்களுக்கும், ஆய்வகங்களுக்கும் இ.சி.ஜி. ஸ்கேன் நிறுவனங்களுக்கும், மருந்துக் கடைகளுக்கும் இடையே ஓர் அயோக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளது. கையில் பிளேடு அறுத்துவிட்டது.


 மருந்து போட்டு விடுங்கள் என்று போனால், எக்ஸ்ரே, இ.சி.ஜி, ஸ்கேன், ரத்தசோதனை, சிறுநீர் சோதனை, மலம், சளி சோதனை, சோதனை மேல் சோதனை செய்து, பிறகு 4 பக்கங்களுக்கு 40 வகையான மருந்துகளை புரியாத கையெழுத்தில் எழுதித் தருவார், மருத்துவர். எனவே, பணத்தையும், உயிரையும் பாதுகாக்க விரும்பும் ஏழை மக்கள், நேராக மருந்து கடைகளுக்கே சென்று நோயை சொல்லி மருந்துகளை வாங்குவது பரவலாக நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு, முடித்து பாதி டாக்டர் வேலை செய்யும் நபர்கள் இருக்கும் மருந்துக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதுண்டு.


இப்போது, மருந்துக்கடைகளில் விற்கும் மருந்துகளும் போலியானவை, காலாவதியானவை என்றால், எவ்வளவு கொடுமை. காலாவதி மருந்துகளை விற்ற காலிகள் மீது அரசு எடுத்துள்ள காலங்கடந்த நடவடிக்கை இன்னும் கடுமையாக இருக்க வேண்டும்.


பரபரப்பாக பத்திரிகைகளில் வரும் செய்திகள் பத்து நாளைக்குப் பிறகு பழைய செய்தியாகி, பிறகு மறதியை பிறவிக்குணமாய் கொண்ட மக்கள் மனதிலிருந்து மறைந்து விடுவதுண்டு, கொடிய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து விடுதலையாவதும் உண்டு. போதை மருந்து வைத்திருந்தாலே இஸ்லாமிய நாடுகளில் மரணதண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்பட்டுவிடும். போலி மருந்தை விற்பவர்களுக்கும் இங்கே போதிய பாதுகாப்புண்டு.


இதுமிகவும் அவலமானது, கேவலமானது. மக்களின் உயிரோடு விளையாடும் கொடியவர்கள், தூக்கு மரத்தில் ஏற்றப்படாவிட்டால், சட்டமும், நீதியும், கழுமரத்தில் ஏறிவிடும் என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

அழிவுப் பாதையின் உச்சக்கட்டத்தில்!!!



(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)


மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக - அறிவியல் – அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் - அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் - திரைப்படங்களும் – ஆடல் பாடல் – கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.

ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் – நடிகர்கள் – நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் – வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் – இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை – கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) - வேகமாக கற்றுத் தரமுடியும். காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை - குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் – நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் – மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் – நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் – அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் - வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் – கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் – மது அருந்தாமல் – விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? என்று யாராவது காட்டினால் தெரிந்து கொள்ளலாம். ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் – நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?

திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா – நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சும் மனநிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் – ஒரே ஒரு சணடை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான். எல்லா மொழிக்காரர்களும் ஒருவேளை அரசாணை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்தந்த மொழி வெறி அவரவர்களுக்கு.

அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க – ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் – சின்னத்திரை எனப்படும் T.V.   சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V.   க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் – தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் – குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் – செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப - தேசிய சர்டிபிகேட்,

சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் – பணப் புயலும் போங்கள். நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி – எண்ணை – மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? – சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை. எல்லாம் T.V.  மயம்; இல்லை இல்லை எல்லாம் T.V.   மாயம்.

இந்த மூன்றைத் தவிர அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை – மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். பள்ளி- கல்லூரி காலங்களில் கைக்கடியாரம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியாமலிருந்த மக்களுக்கு விஞ்ஞானம் - கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்ஃபோன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்ஃபூன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு.

பெரிதான் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் கெட்டுவிடும் என்று சொன்னார்கள் – அதையும் தாண்டி புனிதமாக சிறிதே – சிறிதான் இந்த செல்போன்களில் இன்டர்நெட் இணைப்புடன் – F.M. T.V. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அதையே உற்றுநோக்கி - இயக்குவதாலும் – படம் பார்ப்பதாலும் கண் என்ன  ஆகும் என்று மெய்ஞானம் தான் பதில் சொல்லவேண்டும்.

ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டு முதல் தயாரிப்பை ஒருவன் கண்டுப்பிடித்தவுடனேயே அதைப் போன்ற – அதனைவிட பன்மடங்கு வசதிகளுடன் அடுத்தடுத்தவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஒருவர் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவே செல்போன்கள் தயாரிக்கப்ட்டன. ஆனால் இன்று அதன் நிலையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் – பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் – பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் – பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் – காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் – திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாரும் எல்லாமும் பெற அன்பு மட்டுமே போதாது நல்லறிவும் வேண்டும். நல்லறிவும் நம் வீடு தேடி வரும்; வீடு தேடி என்ன நல்ல உள்ளங்களை தேடி நாடி வரும்; அழிவே வீடு தேடி வரும்போது அறிவு வீடு தேடி வராதா என்ன? எனவே உள்ளங்களை சுத்தமாக்கிட நற்போதனை சார்ந்த அறிவை வரவேற்பதை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதவும் கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்



இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘வைபை’ வசதி கிடைத்து விடும்.

அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு
விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.

ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘வைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த‘வைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும்.

 அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘வைபை’அறிமுகம் செய்யப்படுகிறது.

வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது.

மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘வைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.

சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘வைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.

அழகு குறிப்புகள்: குதிகால் செருப்பு வாங்க போறீங்களா..?



குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.

* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.

* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.

* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை:-


குதிகால் செருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:


* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.

* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.

* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.

* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.

* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.

* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.

நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:

* குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.

* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.

* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.

* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.

* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.

* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.

* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.

* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.

* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top