.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 31 December 2013

தீய பழக்கங்களில் இருந்து விடுபட .....?



மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.


ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.


இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.


தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை


என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.


மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.


ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.


நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு. ஆனால் ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.


’நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால் அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக்கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.


நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ’இனி மேல் கோபப்பட மாட்டேன்’, ’இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால் மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.


எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.


சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.


முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.


பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள்.


அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.


அடுத்ததாக அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.


இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன்
அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள்.


இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம். (மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.)


எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்.

கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!



உறவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.


அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது.


தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது உறவுகள் நீடிக்கவும், உறவுகள் பெருகவும் மென்மையான சின்னச்சின்ன பேச்சுக்கள் அவசியமாகின்றன.


நல்ல முறையில் படித்து, நாகரீகமாக உடை அணிந்து செல்வோர்கூட புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் கூச்சப் படுவது உண்டு. கவுரவக் குறைச்சலாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு கொடுப்பதும், பேசி ஞானத்தை, நட்பை வளர்த்துக் கொள்வதும் நிச்சயமாக ஒரு கலைதான்.


பணிச்சூழலோ, பொது இடமோ கனிவுடன் பேசுபவர்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். இதற்கு முதலில் கூச்சத்தை விட்டொழிக்க வேண்டும். புதிய மனிதர்களை சந்திப்பதாக இருந்தால், நான் இங்கு உங்களை அடிக்கடி பார்க்கிறேனே, என் பெயர்... என்று அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கலாம். உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன், இன்று என்ன சிறப்பு? என்று ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் பேசத்தொடங்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், பயண நேரம் எவ்வளவு? என்று பேச்சுக் கொடுக்கலாம்.


குழுவாக இருக்கும்போது கூச்சப்பட்டு எதுவுமே பேசாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை கேட்கலாம். அது மற்றவர்கள் உங்களை கவனிக்க வைக்கும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுபோல உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தாலும், `ஒன்றுமில்லை' என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொள்ளாதீர்கள்.


புதியவர்களுடன் பழக ஆரம்பிக்கும்போது நம்பிக்கை இல்லா தன்மையுடன், அல்லது வேண்டா வெறுப்பாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சிடுசிடுப்பாகவும், சில விஷயங்களில் பிடிவாதமும் காட்டுவது உங்களைப் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி விடக்கூடும். அது பின்னால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மென்மையாகப் பேசுங்கள். நான் சொல்வது உண்மை என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டு இருக்காதீர்கள்.


உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளாமலும், நீண்ட லெக்சரும் கொடுக்காமல் சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள். அதாவது ஒருவர் உங்களிடம் `உங்கள் பொழுதுபோக்கு என்ன?' என்று கேட்டால், `நான் புத்தகங்கள் படிப்பேன்' என்று முடித்து விடாதீர்கள். `நான் புத்தகங்களை விரும்பி படிப்பேன். நாவல்கள், கவிதைகள், தலைவர்களின் சுயவரலாறுகளை எனக்கு மிகவும் பிடிக்கும்` என்று சொல்லுங்கள்.


அப்படி இருந்தால் தான் அவர் நீங்கள் தாகூரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா, பாரதியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? என்பதுபோல தொடரவும், அவரும் உங்களைப் போன்ற விருப்பம் உடையவராக இருந்தால் உங்களுக்கிடையே நெருங்கிய நட்பு மலரவும் உறுதுணையாக இருக்கும்.


நிகோலஸ் போத்மேன் என்பவர் தன் நூலில், மக்களில் 90 சதவீதத்தினர் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதையும், எப்போது என்ன செய்வார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள்' என்கிறார். எனவே ஒருவரது உடல் அசைவுகளும், செய்கைகளும் பேச்சுத் திறமைக்கு மிக முக்கியமானது. நீங்கள் கருத்துச் செறிவுடன் பேசும்போது அங்க அசைவிலும் கவனம் செலுத்துங்கள்.


ஒருவருடன் பேசும்போது அவருக்கு பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். நேருக்கு நேராக இருந்து கண்களைப் பார்த்தபடி பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பேச்சின் பிரதிபலனை உணர முடியும்.


பேச்சினை எப்போது நிறுத்த வேண்டும் என்பதுவும் பேச்சுத்திறமையில் குறிப்பிடத்தக்க விஷயம். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் கேட்பவருக்கு சலிப்பு வந்துவிடும். கேட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் பேச்சை விரும்புகிறாரா என்பதை சில விஷயங்களை வைத்து கணித்து விடலாம். `ஓ அப்படியா, நன்றாக இருக்கிறது? தொடர்ந்து சொல்லுங்கள்' என்றால் அவர் விருப்பத்துடன் கேட்கிறார் என்று பொருள். சரி..., அப்படியா..., சரி வேற... என்று கூறினால் அவருக்கு உங்கள் பேச்சில் விருப்பமில்லை என்று அர்த்தம்.


அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பதும், கை, மூக்கு, தலையை சொரிந்து கொண்டு இருந்தாலும், நடக்கும்போது கால்களை தரையில் உரசியபடி நடந்து வந்தாலும் உங்கள் பேச்சில் நாட்டமில்லை என்று பொருள்.


எனவே கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

தனுஷிற்குக் குரல் கொடுக்கவிருக்கும் அமிதாப்...!!




ராஜ்னா படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகி, அறிமுகப்படத்திலேயே வசூலையும், ரசிகர்களையும் கோடிகளில் அள்ளிய தனுஷ் தனது இரண்டாவது ஹிந்திப் படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


சீனி கும் மற்றும் பா ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்தியாவின் நம்பிக்கை இயக்குனராகப் போற்றப்படும் இயக்குனர் பால்கி இயக்கத்தில் தனுஷ் மற்றும் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.


இப்படத்தில் தனுஷ் வாய் பேச முடியாத, அதே சமயம் சினிமாவில் பிரபல ஹீரோவாக ஆசைப்படும் ஒரு இளைஞனாக நடிக்கவிருப்பதாகவும், தனுஷிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குரல் கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தனது ஹிந்தி அறிமுகப் படமான ராஜ்னா சாதனையை முறியடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம்!




மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில்  மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியில் சேர  விரும்பும்  மெக்கானிக்கல், கெமிக்கல்  என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளில் சேர தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு ஊதியம் கிடைக்கும்.

நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிப்பதற்கு உதவும் தேர்வு கேட் (GATE). அண்மைக் காலமாக இந்த கேட் தேர்வின் மூலமாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களுக்கும் தகுதியுடைய மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் (BPCL) மேனேஜ்மெண்ட் ட்ரெயினி பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் முதல் தடவையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டுப் படிப்புகள் அல்லது அதற்கு மேல் காலவரையறை உள்ள படிப்புகளைப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியாது. என்ஜினீயரிங் படிப்புகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி  பிரிவினர் (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்  50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதில், அனைத்து செமஸ்டர்களின் சராசரி மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும். சிஜிபிஏ, ஓஜிபிஏ, டிஜிபிஏ போன்ற கிரேடுகளில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு நிகரான மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

பொதுப் பிரிவு மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் முதல் தேதி நிலவரப்படி, 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30. மாற்றுத் திறனாளிகளுக்கு (40 சதவீத உடற்குறைபாடு) வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும். இதேபோல, முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு.

கேட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியுடைய மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரிகள், குழு விவாதத்திற்கும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். அதையடுத்து, மேனேஜ்மெண்ட் டிரெயினி நிலையில் வேலையில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை இருக்கும். இந்தப் பணியில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தொடக்க நிலையிலேயே ஊதியம் மற்றும் இதர சலுகைகளைச் சேர்த்து ஆண்டுக்கு ரூ.10.5 லட்சம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஓராண்டு புரபேஷனரி காலம். அதன்பிறகு எக்ஸிகியூட்டிவ் ஆக நியமிக்கப்படுவர். 

இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் வருகிற பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் கேட் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வுக்கான அறிவிப்பு குறித்த விவரங்கள் ஏற்கெனவே, ‘புதிய தலைமுறை கல்வி’ யில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு உரிய தகவல்களை முன்னதாகவே வைத்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசுப் பணிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிகளில் இருந்தால் அவர்கள் தங்களது துறையிடமிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். கேட் தேர்வு பதிவு எண்ணுடன் பாரத் பெட்ரோலிய நிறுவன இணையதளத்தில் தற்போது விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31.01.2014.



ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.....??




பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம்
.

பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.


தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.


இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.


ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.


இந்தக் கீரையில் வைட்டமின் A B C சத்துகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, இரும்புச் சத்து அடங்கியது. இது தாதுவைக் கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வறட்சியை அகற்றும். உள் சூட்டைப் போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன. பச்சையம் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.


பசலைக் கீரை ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.


இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறைத் தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.


ஒரு கப் பசலைக் கீரையில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லி கிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.


இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலைக் கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top