.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 31 December 2013

கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!



உறவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.


அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது.


தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது உறவுகள் நீடிக்கவும், உறவுகள் பெருகவும் மென்மையான சின்னச்சின்ன பேச்சுக்கள் அவசியமாகின்றன.


நல்ல முறையில் படித்து, நாகரீகமாக உடை அணிந்து செல்வோர்கூட புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் கூச்சப் படுவது உண்டு. கவுரவக் குறைச்சலாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு கொடுப்பதும், பேசி ஞானத்தை, நட்பை வளர்த்துக் கொள்வதும் நிச்சயமாக ஒரு கலைதான்.


பணிச்சூழலோ, பொது இடமோ கனிவுடன் பேசுபவர்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். இதற்கு முதலில் கூச்சத்தை விட்டொழிக்க வேண்டும். புதிய மனிதர்களை சந்திப்பதாக இருந்தால், நான் இங்கு உங்களை அடிக்கடி பார்க்கிறேனே, என் பெயர்... என்று அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கலாம். உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன், இன்று என்ன சிறப்பு? என்று ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் பேசத்தொடங்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், பயண நேரம் எவ்வளவு? என்று பேச்சுக் கொடுக்கலாம்.


குழுவாக இருக்கும்போது கூச்சப்பட்டு எதுவுமே பேசாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை கேட்கலாம். அது மற்றவர்கள் உங்களை கவனிக்க வைக்கும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுபோல உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தாலும், `ஒன்றுமில்லை' என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொள்ளாதீர்கள்.


புதியவர்களுடன் பழக ஆரம்பிக்கும்போது நம்பிக்கை இல்லா தன்மையுடன், அல்லது வேண்டா வெறுப்பாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சிடுசிடுப்பாகவும், சில விஷயங்களில் பிடிவாதமும் காட்டுவது உங்களைப் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி விடக்கூடும். அது பின்னால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மென்மையாகப் பேசுங்கள். நான் சொல்வது உண்மை என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டு இருக்காதீர்கள்.


உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளாமலும், நீண்ட லெக்சரும் கொடுக்காமல் சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள். அதாவது ஒருவர் உங்களிடம் `உங்கள் பொழுதுபோக்கு என்ன?' என்று கேட்டால், `நான் புத்தகங்கள் படிப்பேன்' என்று முடித்து விடாதீர்கள். `நான் புத்தகங்களை விரும்பி படிப்பேன். நாவல்கள், கவிதைகள், தலைவர்களின் சுயவரலாறுகளை எனக்கு மிகவும் பிடிக்கும்` என்று சொல்லுங்கள்.


அப்படி இருந்தால் தான் அவர் நீங்கள் தாகூரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா, பாரதியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? என்பதுபோல தொடரவும், அவரும் உங்களைப் போன்ற விருப்பம் உடையவராக இருந்தால் உங்களுக்கிடையே நெருங்கிய நட்பு மலரவும் உறுதுணையாக இருக்கும்.


நிகோலஸ் போத்மேன் என்பவர் தன் நூலில், மக்களில் 90 சதவீதத்தினர் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதையும், எப்போது என்ன செய்வார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள்' என்கிறார். எனவே ஒருவரது உடல் அசைவுகளும், செய்கைகளும் பேச்சுத் திறமைக்கு மிக முக்கியமானது. நீங்கள் கருத்துச் செறிவுடன் பேசும்போது அங்க அசைவிலும் கவனம் செலுத்துங்கள்.


ஒருவருடன் பேசும்போது அவருக்கு பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். நேருக்கு நேராக இருந்து கண்களைப் பார்த்தபடி பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பேச்சின் பிரதிபலனை உணர முடியும்.


பேச்சினை எப்போது நிறுத்த வேண்டும் என்பதுவும் பேச்சுத்திறமையில் குறிப்பிடத்தக்க விஷயம். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் கேட்பவருக்கு சலிப்பு வந்துவிடும். கேட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் பேச்சை விரும்புகிறாரா என்பதை சில விஷயங்களை வைத்து கணித்து விடலாம். `ஓ அப்படியா, நன்றாக இருக்கிறது? தொடர்ந்து சொல்லுங்கள்' என்றால் அவர் விருப்பத்துடன் கேட்கிறார் என்று பொருள். சரி..., அப்படியா..., சரி வேற... என்று கூறினால் அவருக்கு உங்கள் பேச்சில் விருப்பமில்லை என்று அர்த்தம்.


அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பதும், கை, மூக்கு, தலையை சொரிந்து கொண்டு இருந்தாலும், நடக்கும்போது கால்களை தரையில் உரசியபடி நடந்து வந்தாலும் உங்கள் பேச்சில் நாட்டமில்லை என்று பொருள்.


எனவே கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top