.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 25 December 2013

பழக்க வழக்கங்கள்...!




தலைவாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன?




சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும்.



வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன?



இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள் படையெடுக்கா வண்ணம் தடுக்க.



முதலில் காகத்தைக் காகா என அழைத்து சாப்பாடு வைத்துப் பின்னர் நாம் சாப்பிடுவது ஏன்?




உணவில் நஞ்சு கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய.

டென்ஷன் வேண்டாமே!



ஒரு சராசரி மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. அவன் ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் பயணம் செய்கிறது. அவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளைஅசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்த செயல்களால் அவன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் அவன் முயற்சி என்று எதுவும் இல்லை.

ஆனால் அவன் முயற்சி எடுத்து நடத்தும் சில்லறை வேலைகளால் அவன் களைத்துப் போகிறான். தளர்ச்சி அடைகிறான். டென்ஷனாகிறான். எப்போது தான் இந்த வேலைக்கெல்லாம் ஓய்வோ என்று அங்கலாய்க்கிறான். தான் வேலை செய்வது அடுத்தவருக்குத் தெரியாமல் போனால், அடுத்தவர்கள் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளா விட்டால் கோபப்படுகிறான். 'நான் போனால் தான் என்னருமை தெரியும்' என்று பயமுறுத்திப் பார்க்கிறான்.

இயற்கையாக நடக்கும் வேலைகளுக்கும் மனிதனாகச் செய்கிற வேலைகளுக்கும் இடையே எத்தனை வித்தையாசம் பாருங்கள். இயற்கை பிரமிக்க வைக்கும் அளவு வேலைகளை மனித உடலில் செய்ய வைத்தும் ஏற்படாத களைப்பும், டென்ஷனும் மனிதனாகச் செய்யும் அற்ப வேலைகளால் வந்து விடுகின்றனவே
அது ஏன்? ஆராய்வோமா?

இயற்கை தான் செய்யும் வேலைகளைக் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. அதனால் ஏன் தினம் செய்ய வேண்டும் என்ற கேள்வி அங்கு எழுவதில்லை. மனிதன் துரும்பை நகர்த்தினால் கூட கணக்கு வைத்துக் கொள்கிறான். (மேலே சொன்ன புள்ளி விவரத்தைப் படித்தால் படித்து முடித்தவுடனே 'ஐயோ இந்த அளவு வேலைகள் என் உடல் செய்கிறதா?' என்று எண்ணியே கூட களைத்துப் போகக் கூடும்). அதனால் அந்தக் கணக்கே களைப்புக்கும் டென்ஷனுக்கும் காரணமாகி விடுகிறது.

இயற்கை எதையும் எதனோடும் ஒப்பிடுவதில்லை. உதாரணமாக மூளை 'நான் எழுபது லட்சம் செல்கள் பயன்படுத்துகிறேன். தசைகள் எழுநூற்று ஐம்பது தான் பயன்படுத்துகின்றன' என்று ஒப்பிடுவதில்லை. ஏனிந்த அநியாயம் என்று குமுறுவதில்லை. அதனால் டென்ஷனாவதில்லை.

இயற்கை தன் செயல்களை சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவே நினைக்கிறான். இயல்பாக, மகிழ்ச்சியாகச் செய்யும் எந்த செயலும் அவனுக்கு களைப்பையும் டென்ஷனையும் உண்டாக்குவதில்லை. ஆனால் அப்படிச் செய்யும் செயல்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சுமையாக எண்ணி புலம்பலுடன் செய்யும் செயல்கள் களைப்பையும் டென்ஷனையும் ஏற்படுத்தாமல் இருந்தால் அது தான் அதிசயம்.

இயற்கை எந்த செயலையும் அடுத்தவர் பார்வைக்காகச் செய்வதில்லை. அதனால் அது அடுத்தவர் கருத்துகளை எதிர்பார்த்து இருப்பதில்லை. அதன் செயல்களின் தரம் சிறப்பாகவும், நிலையான தன்மையுடையதாகவும் இருக்கின்றது. மனிதர்கள் பலர் அடுத்தவர் பார்க்க மாட்டார்கள் என்றால் ஒரு நல்ல செயலை செய்யவே முற்படுவதில்லை. செயல்களை செய்வதை விட அடுத்தவர்கள் கவனிக்கிறார்களா, பாராட்டுகிறார்களா, என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் நினைப்பதில் அதிக நேரமும், அதிக கவனமும் மனிதர்கள் செலவிடுவதே டென்ஷனுக்கு அடிப்படைக் காரணமாகி விடுகிறது. விளைவு, குறைவான செயல்கள் நிறையவே டென்ஷன் என்றாகி விடுகிறது.

இயற்கையின் செயல்களில் தேவையான ஒழுங்குமுறை இருக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் செயல்களில் அது இருப்பதில்லை. அவர்களுடைய தவறான மனநிலைகள் அந்த ஒழுங்கின்மைக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.

இயற்கை செய்யத் தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவதில்லை. தேவையுள்ளதை மட்டுமே செய்வதால் அனைத்தையும் அலட்டிக் கொள்ளாமல் இயற்கை செய்து முடிக்கிறது. மனிதன் செய்கின்ற பல செயல்கள் தேவையில்லாததாகவும் அவனுக்குப் பயன் தராதவையாகவும் இருக்கின்றன. அதனால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய அவனுக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை. எனவே மீதியுள்ள குறைவான நேரத்தில் அனைத்தையும் செய்ய முயலும் போது களைப்பும் டென்ஷனும் தோன்றுவது இயல்பேயல்லவா?

இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. செய்ய வேண்டிய செயல்களை அமைதியாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக முழுக் கவனத்தோடு செய்யும் போது நாம் ஒவ்வொரு நாளும் டென்ஷனில்லாமல், தளர்ச்சி இல்லாமல் சிறப்பாக எத்தனையோ செய்து முடிக்க முடியும். முன்பு சொன்ன இயற்கையின் செயல்களுக்கும், மனித செயல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை கவனித்தால் ஒரு பெரிய உண்மை விளங்கும். டென்ஷன் எப்போதுமே செய்கின்ற செயல்களால் இல்லை. செயல்களைப் பற்றிய எண்ணங்களாலேயும் முறைகளாலேயும் தான் ஏற்படுகின்றது.

யாரோ ஒரு அறிஞர் சொன்னது நினைவுக்கு வருகின்றது. "பிரபஞ்சம் நொடியில் பல நட்சத்திரங்களை சத்தமில்லாமல் உருவாக்கி வருகின்றது. ஆனால் கோழி முட்டை இடுவதற்கு முன்பு போடும் சத்தம் ஊரையே தட்டி எழுப்புகிறது".

நாம் கோழியாக இருக்க வேண்டாம். பிரபஞ்சமாக இருந்து அமைதியாக நட்சத்திரங்களை உருவாக்குவோம். மேலே குறிப்பிட்ட இயற்கையின் வழிமுறைகளைப் பின்பற்றி செயல்புரிய கற்றுக் கொண்டால் டென்ஷனே ஏற்படாது. களைத்துப் போகாமல் நாம் செய்ய முடியும் சாதனைகள் கற்பனைக்கும் அடங்காது.

ஈகோ - முழு விளக்கம்!




எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஈகோ என்று சொல்ல முடியும்? ஆனாலும் எல்லோரும் ஈகோ பற்றி அடிக்கடி பேசிக் கொள்கிறோம். அவனை விடகுறைவாக படித்தவனிடம் பேசக்கூட மாட்டான். ரொம்ப ஈகோ பிடித்தவன்.செஞ்சது தப்பு ஆனா மன்னிப்பு கேக்க மாட்டாங்களாம். ரொம்பதான் ஈகோ. மனசுல பேசணும் நு ஆசை இருக்கு மச்சான். ஆனா கண்டுக்காத மாதிரியே போவா.ஈகோ பிடிச்ச பொண்ணுடா அது. இப்படி எத்தனையோ.

எது ஈகோ? மதிக்காமல் இருப்பாதா? மன்னிப்பு கேக்காமல்  இருப்பதா? மரியாதை     குறைவாக நடத்துவதா? ஆசையை ஒளித்து வைப்பதா? அல்லது இன்னும் ஏதோ ஒன்றா?

தவறான ஏதோ ஒன்று ஈகோவாக பார்க்க படுகின்றதா?
இல்லையே. ஈகோவிலும் நல்ல ஈகோ, கேட்ட ஈகோ என்று வகைப் படுத்தலாம். நீங்க இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு நான் நினைச்சு  கூடப் பார்க்கல" என்று அவன் சொன்ன போது  என் ஈகோ செத்துப் போச்சு`என்போம். என் தன்னம்பிக்கை மீது எனக்கு ஒரு ஈகோ உண்டு. அதை நான் மதிக்கிறேன்.  இப்படி நல்ல மாதிரி சொன்னால், அது நல்ல ஈகோவாகிறது.

ஈகோவுக்கு இணையான தமிழ் வார்த்தையை அப்புறம் கண்டு பிடிக்கலாம். ஈகோ பிடித்தவை என்ற பெயர் எடுக்க என்ன காரணமாக  இருக்கிறது.  தடுமாற்றம் இல்லாமல் சொல்ல முடியும் தயக்கம்தான். மன்னிப்பு கேட்பதில், பாராட்டுவதில், அழுவதில், அன்பு பாராட்டுவதில், அனுசரித்து போவதில், அக்கறையை வெளிபடுத்துவதில், இப்படி எல்லா வெளிப்பாடுகளிலும்  காட்டப்படும் தயக்கம்தான் ஈகோவாகிறது.

சின்ன வயதில் நண்பர்களுக்குள் சண்டை வரும். ஐஸ்பாய் விளையாட்டில் காட்டிக் கொடுத்தது, குச்சி ஐஸ் தராதது, கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளாதது , நீ என் எனிமி என்று சொல்லி தள்ளி விட்டது, இப்படி ஏதேதோ காரணங்களுக்காக பேசாமல் இருப்பார்கள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு மற்ற நண்பர்கள் டேய் பழம் விடுடா, சாரி கேளுடா என்று அவர்களை சேர்த்து வைப்பார்கள். அவர்களும் அந்த தருணத்துக்காக காத்து இருந்தது போல்

ஓகே நாம இனிமே பிரெண்ட்ஸ்  என்று சொல்லி பழகுவார்கள்.
இளம் பிராயத்தில் நம் எல்லோருக்கும் மன்னிக்கிற மனோபாவம் சேர்த்துக் கொள்கிற மனப்பக்குவமும் வெளிப்படியாக ஒப்புக் கொள்கிற தயக்கமின்மை இருக்கிறது அல்லவா.அது அந்த வயது சிறப்பம்சம்.

நான் என்பது ஒரு தனி அந்தஸ்து என்று நம்பாதவரை ஈகோ என்ற தலை வலி எல்லாம் இருப்பது இல்லை. அந்த எண்ணம், நான் என்ற உணர்வை என் படைப்பை, என் அறிவை, என் சொல்லை, என் ரசனைகளை, உலகிலேயே சிறந்தது என்று நம்ப வைக்கிறது. அது சரியா   அல்லது தவறா என்று பொதுக் கேள்விக்கு வைக்க தயங்குகின்றோம்.

எந்த  ஒரு விசயத்தையும் அதற்குரிய யாதார்தங்களோடு வெளிப்படுத்துகிற போது அது குறித்த அபிப்ராயங்களை ஏற்றுக் கொள்ள அல்லது புரிந்து கொள்ள மனம் இடம் கொடுக்கிறது.அதுதான் சரியானதும் கூட . அதுவே தயங்கும் போது அந்த விஷயம் குறித்த நான் நினைத்து இருப்பது மட்டுமே சரி என்று நம்ப ஆரம்பிக்கிறோம். அதற்க்கு மாறாக வேறு ஒன்று சொல்லப்பட்டால் நாம்  ஏற்று கொள்வது இல்லை.

உங்கள் உணர்வைத் தவிர வேறு எதுவும் சிறந்தது இல்லை என்ற நினைப்பு மனதுக்குள் பதிவதன் பின்னணியில் ஒளிந்து இருப்பது "தயக்கம்". கேட்பதில் இருக்கும் தயக்கம், நமக்கு  இது தெரியாது என்று வெளிப்படையாக சொலவதில்  இருக்கும் தயக்கம், இப்படி நிறைய.  இந்த தயக்கங்களை மறைக்க ஈகோ நல்ல போர்வையகிவிடுகிறது.

எனவே பிரெண்ட்ஸ் தயங்கி தயங்கி  தயங்கி நின்றால் ஈகொவுக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும்,

இல்லாத ஒன்றுக்குள் ஒளிந்து கொள்வதை தவிர்ப்போம்.

ஈகோவை ஒழிப்போம்

வெளியே   வாருங்கள் தென்றல் சுகமாக வீசுகின்றது.

மனைவியிடம் கணவனுக்கு பிடித்தது..?




அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாய் அருகே வந்து உரசிக்கொண்டு வழிந்துகொண்டு 'திட்டக்கூடாது.. திட்டமாட்டீங்கன்னா ஒண்ணு சொல்றேன்..' என்றபடியே சிரிக்கும் சிரிப்பு.

வீட்டுக்கு வந்த நண்பர்களுடன் வெளியே கெத்தாக கிளம்பும் போது அவர்களுக்குத் தெரியாமல் 'போனா.. தொலைச்சுப்புடுவேன்' என்று மிரட்டும் முகபாவம்.

அரிதான இரவு நேர பால்கனி தருணங்களில் நீண்ட கெஞ்சல்களுக்குப்பிறகு கிடைக்கும் ஒற்றை சிகரெட்டுக்கான அனுமதி.

'மையி வெச்சா எனக்கு நல்லாருக்குமாங்க?' பதிலை எதிர்பாராமல் ஒரு சிறுமியின் ஆசையோடு மெலிதாக மை தீற்றிக்கொள்ளும் கண்கள்.

'எல்லா மண்ணாங்கட்டியும் நினைவிலிருக்குது, இத்தன பூக்கடை கண்ணு முன்னாடி இருந்தும் இந்தப் பூ வாங்குறது மட்டும் எப்படி மறந்துபோகுது
இந்த மரமண்டைக்கு?' என்று அரற்றும் கோபம்.

ஸ்கேல் வைத்து அளந்து மடித்ததைப்போன்ற படுகச்சிதமான உன்
முந்தானை மடிப்புகள்.

கடும் சண்டைக்குப் பின்வரும் இரவு உணவின் போது சுவற்றைப்
பார்த்தவாறே நீ கேட்கும் 'மிளகாப்பொடி போதுமா? சட்னி அரைக்கணுமா?' மிளகாய் வார்த்தைகள்.

பட்டுச்சேலை வாங்கப்போனாலும், பிளாஸ்டிக் குடம் வாங்கப்போனாலும் கடைக்காரர்களை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நீ செய்யும் ஒரே மாதிரியான டார்ச்சர்.

'ஒழுங்கா கம்ப்யூட்டர் கத்துக்கோ' வேலைகள் முடிந்து படுக்கும் நேரங்களில் வலுவாய் பிடித்து உட்கார வைத்து கற்றுத்தரும்போது, 'ப்ளீஸ்ங்க, நாளைக்கு பாக்கலாமே.. ஆவ்வ்வ்..' என்று வெளியாகும் கொட்டாவி.

ஸ்டிக்கர் பொட்டுகளே எப்போதும் உன்னை அழகு செய்து கொண்டிருந்தாலும் எப்போதாவது ஸ்டிக்கருக்குக் கீழே நீ தீற்றிக்கொள்ளும் குங்குமம்.

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் எரிமலைகள்...?




நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் எரிமலைகளுக்கு இருக்கிறது என்னும் ஒரு ஆச்சரிய தகவலை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கணித்ததை விட பூமி குறைந்த அளவே வெப்பமடைந்திருந்ததன் காரணத்தை கண்டறிய முயன்ற விஞ்ஞானிகளுக்கு எரிமலைகள் பூமியை வெப்பமடைதலிலிருந்து காத்திருப்பது தெரியவந்தது.

பூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிப்பது வெப்ப வாயுக்கள் எனப்படும் Green house gases தான். இந்த வாயுக்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கி பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலையை படிப்படியாக அதிகரிக்கின்றன .இந்நிலையில், வெப்ப வாயுக்களால் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாறுதலை கட்டுப்படுத்தும் தன்மை எரிமலைகளிலிருந்து வெளியேறும் சில வாயுக்களுக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

எரிமலைகள் வெடிக்கும்போது வெளியேறும் குழம்பிலிருந்து வெளிப்படும் சல்ஃபர் டையாக்சைடு (Sulphur dioxide) வாயு பூமியிலிருந்து சுமார் 12 முதல் 20 மைல்கள் உயரத்தில் உள்ள வளிமண்டலத்தின் ஸ்ட்ரேடோஸ்ஃபெரிக் ஏரோசால் (stratospheric aerosol layer) அடுக்கிற்கு செல்கிறது. அங்கு ஏற்படும் வேதியியல் மாற்றங்களினால் சஃல்பர் டையாக்சைடு வாயு, சல்ஃப்யூரிக் அமிலம் (Sulphuric acid) மற்றும் நீர் ஆவியாக (water vapour) மாறுகிறது.

வளிமண்டலத்தில் இருக்கும் இந்த சல்ஃப்யூரிக் அமிலமும் நீர் ஆவியும், சூரிய வெப்பத்தை பிரதிபலித்து அதனை விண்வெளிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறது. சூரிய ஒளி வளிமண்டலத்தை அடையும் முன்பே இது நிகழ்ந்துவிடுவதால், வெப்ப வாயுக்களால் பூமி வெப்பமயமாதல் குறைக்கப்படுகின்றது.

எரிமலையின் இந்த செயல்பாடுகளினால் 2000 ஆம் ஆண்டு முதல் பூமி வேப்பமயமடைதல் 25 சதவீதம் குறைத்துள்ளது.

கொலராடோ பல்கலைகழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ள இந்த தகவலை வைத்து வருங்காலத்தில் பூமியின் வெப்பநிலை எப்படி இருக்குமென உறுதியாக சொல்லமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top