.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 8 December 2013

ஒத்த பழமொழிகள்!

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.


· முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.


· அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்.


· கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.


· எறும்பூரக் கல்லும் தேயும்.



தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள்.அது ஒரு மரத்திலோ,செடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும்.அதை அந்த குருவி எப்படி கட்டுகிறது? காற்று அடிக்கும்போது கூடு ஆடும்.ஆனால் விழுந்துவிடாது.அவ்வளவு பலமாக


எப்படி அந்த தூக்கணாங் குருவி கட்டுகிறது?


அது ஒவ்வொரு புல்லாக எடுத்துவந்து மிகவும் நுணுக்கமாக கட்டும்.சிறு பிழை ஏற்பட்டால் கூட அந்த கூடு கீழே விழுந்துவிடும்.மீண்டும் மீண்டும் அந்த கூடு கீழே விழுந்தாலும் குருவி தன் முயற்சியை கைவிடுவதில்லை.அதுவும் மீண்டும் மீண்டும் புற்களை எடுத்து வந்து கூடை கட்ட ஆரம்பிக்கும்.இறுதியில் ஒரு உறுதியான கூடு கிடைக்கும்.


தூக்கணாங் குருவி கூடு


அதை விடுங்கள்.ஒரு பாறையில் விழுந்த ஆல மரத்தின் விதை எப்படி பறையையே பிளந்து,செடியாக முளைத்து பின் மரமாகிறது? அதன் முயற்சிதான் அதன் வாழ்க்கைக்கு துவக்கத்தை தருகிறது.


முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்:



முயற்சி என்னும் தாரக மந்திரத்தை நாள்தோறும் உபயோகிப்பவர்களுக்கு வாழ்கையில் எந்த கஷ்டங்களும் இல்லை என்பதை இந்த பழமொழி அறிவுறுத்துகிறது.


முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை:


‘மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.இங்கு 'முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை' என்று இருக்கிறது.அதாவது மனிதன் என்பதே முயற்சியின் மொத்த உருவம் என்பதை இந்த இரண்டு பழமொழிகளையும் ஒப்பிடும்போது தெரிந்துகொள்ளலாம்.


அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்:


ஒரு அம்மியை உடைப்பது என்பது கடினமான வேலை.அதனைக் கூட நாம் சுத்தியலால் அடி மேல் அடி அடித்தால் அது தகரும்,அதாவது உடையும்.அதேபோல் நாமும் பலமுறை முயற்சி செய்தால் ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்கலாம்.


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்:


நம்பிக்கையோடு முயற்சி செய்பவர்களால் கல்லையேக் கரைக்க முடியும் என்னும்போது மனிதனால் முடியாதது வேறு ஏதேனும் உண்டோ?


எறும்பூரக் கல்லும் தேயும்:


எறும்புகள் சாரை சாரையாக ஒரு கல்லின் மீதோ அல்லது சுவற்றின் மீதோ செல்லும்போது அவை சென்ற தடம் தெளிவாக தெரியும்.காரணம் அந்த இடம் தேய்ந்து இருக்கும்.எறும்புகள் மறைமுகமாக நமக்கு முயற்சியின் தத்துவத்தை உணர்த்துகின்றன.சாதாரண எறும்புகளே கல்லையே தேய்க்கும்போது மனிதர்கள் முயன்றால் மலையையே சாய்க்கலாம்.
அதனால் வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவளாமல் வெற்றியை அடையும்வரை முயலுங்கள்.

இறைவன் கொடுத்த வாழ்க்கை...?

இறைவன் கொடுத்த வாழ்க்கையில் இனிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன அது போன்று கசப்பான சம்பவங்களும் நிகழ்கின்றன. கசப்பும் இனிப்பும் கலந்த வாழ்க்கையை மனிதன் அனுபவிக்கிறான். மனிதன் இதிலிருந்து தப்பிக்க இயலாது. கடவுள் மனிதனை படைக்கிறான். இவற்றில் ஒரு சிலரை ஏழையாகவும், வேறு சிலரை பணக்காரனாகவும், ஒரு சிலரை அழகாகவும், மற்றவரை குரூரமாகவும் என்று பல கோணங்களில் படைக்கிறான். இந்த வாழ்க்கை மனிதனின் வேண்டுகோளின்படி அமையவில்லை. முற்பிறவியில் செய்த கர்மாவின் படி மனிதனுக்கு வாழ்க்கை அமைகிறது.


வாழ்க்கை என்பது போராட்டம். மனிதனும் வாழ்க்கையில் சளைக்காமல் போராடுகின்றான். கடைசி மூச்சு வரை மனிதன் போராட்டங்களை எதிர் கொள்கிறான். இந்த போராட்டங்களைக் கண்டு மனிதன் மனம் தளர்ந்து விடவில்லை. மனிதன் மனப்பக்குவத்தோடு போராட்டத்தை சந்திக்கிறான். இவைகளில் சில போராட்டத்திற்கு தீர்வு காண்கிறான்.


வாழ்க்கை என்பது பந்தயம். இந்தப் பந்தயத்தில் ஜெயிக்கலாம், தோல்வியும் அடையலாம். வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி நடக்கின்றன.  மனிதன் செய்யும் வியாபாரத்தில் லாபம் அடையலாம் அல்லது நஷ்டம் ஏற்படலாம். மனிதன் செய்யும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் இருக்கலாம். வாழ்க்கையில் இதுதான் நடக்குமென்று மனிதன் நிர்ணயிக்க முடியாது. வாழ்க்கையில் எந்த சம்பவம் வேண்டுமானாலும் நிகழலாம். ஏதையும் சந்திப்பதற்கு மனிதன் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன. அதனை மனப்பக்குவத்தோடு சமாளிக்க வேண்டும்.


மனிதப் பிறவியோடு முடிவாக மரணமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிறவியொன்று இருந்தால் அதனோடு எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்கிற நிலையும் இருக்கிறது.  மூச்சிருக்கும் வரை மனிதன் வாழ்கையை வாழ்கிறான். இந்த வாழ்க்கையில் முக்கால் பங்கு கசப்பான சம்பவங்களை அனுபவிக்கிறான். வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறான். ஒரு சிலரோடு உறவையும் வளர்த்துக் கொள்கிறான். இவற்றில் ஒரு சில உறவுகள் நல்ல முறையில் அமைகின்றன.


 மற்றவை கண்ணாடி போல் உடைகின்றன. அப்படி உறவுகள் உடையும் போது அல்லது பிரியும் போது மனம் தவிக்கிறது. கஷ்டங்கள் சரமாரியாக சூழ்ந்து கொள்ளும் போது மனம் வேதனைப் படுகிறது. இப்படி வேதனையும் வலியும் ஏற்படும் மனிதனின் வாழ்க்கை போராட்டத்துடனே போகிறது. ஏதிர்பாராத சம்பவங்களால் வாழ்க்கையோடு போராடிப் போராடி, மனம் துவண்டு சலிப்படைந்து போகிறான். மனிதனுக்கு ஓட்டமும் நடையும் நின்று விடும் போது மனிதனை மரணம் தழுவிக் கொள்கிறது.


இந்த உண்மையான வாழ்க்கையை உணர்ந்து வாழுங்கள், உண்மையான வாழ்க்கையிலும் அதிகபட்சம் கசப்பான சம்பவங்களையே அனுபவிக்கிறான். வாழ்க்கையில் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருகின்றன. சந்தோஷமான தருணத்தில் உறவுகள் நம்மோடு சோந்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறது. துக்கமான சமயத்தில் மனிதன் ஒருவனே அனுபவிக்க நேரிடுகிறது. துக்கமான தருணத்தில் மனிதன் மனம் துவளாமல், மிரண்டு போகாமல் வாழ்க்கையை சலிப்பாக்கிக் கொள்ளாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.


 தன்னம்பிக்கையை பெருக்கிக் கொள்ள வேண்டும். மனப்பக்குவத்தோடு பிரச்சனையை சந்திக்க வேண்டும். வாழ்க்கையில் பிடிமானத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயம், பீதி, கெட்ட அதிர்வலைகள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு இறைவன் கொடுத்த வாழ்க்கையை நம்பிக்கையோடும், மனஉறுதியோடும் வாழ முயற்சி செய்ய வேண்டும். மனிதன் இறைவன் அமைத்த வாழ்க்கையை முழுமனதோடு உணர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சிந்தனை துளிகள்....



01. எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.



02. அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?


03. அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.


04. ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.


05. கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.


06. கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.


07. A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.


08. ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.


09. மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.


10. ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.


11. தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள்.


12. காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.


13. உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.


14. சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.


15. கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.


16. நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.


17. சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.


18. உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.


19. கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.


20. வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.


21. உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.


22. நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.


23. நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.


24. எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

சாபமாகும் வரங்கள்!



தீயதை நல்லதாக்கிக் கொள்ளவும், நல்லதைத் தீயதாக்கிக் கொள்ளவும் முடிந்த விசேஷத் தன்மை மனிதனுக்கு மட்டுமே உண்டு. எத்தனையோ பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளையும், குறைபாடுகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு முன்னேறி சரித்திரம் படைத்த சாதனையாளர்களை நாம் கண்டிருக்கிறோம். அதே போல் எத்தனையோ சாதகமான சூழ்நிலைகளையும், அனுகூலமான அம்சங்களையும் அலட்சியப்படுத்தி வீணடித்து பாழாய்ப் போனவர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட மனிதர்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாழாய்ப் போவதைப் பார்க்கிற போது ஏற்படாத பெரும் வருத்தம், ஒரு தலைமுறையில் கணிசமான நபர்கள் சீரழிவதைப் பார்க்க நேர்கிற போது நம்மிடம் ஏற்பட்டுத் தங்கி விடுகிறது.


இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் இணையற்ற அற்புதங்கள் என்று இரண்டைச் சொல்லலாம். ஒன்று இண்டர்நெட் மற்றது செல்போன். இவற்றை வரப்பிரசாதங்கள் என்று கூடச் சொல்லலாம்.
ஒரு காலத்தில் எதைப் பற்றியாவது ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதைப் பற்றித் தெரிந்தவர்கள் என்று நாம் நினைக்கும் நபர்களிடம் போய் கேட்போம். அல்லது நூலகங்களிற்குப் போய் அது சம்பந்தமாய் எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களையும், அது பற்றி பத்திரிக்கைகளில் வந்திருந்தால் அவற்றையும் தேடிப் படிக்க வேண்டிய நிலை இருந்தது.


அப்படிப் பெறும் அறிவும் சமீபத்திய தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. நபர்களிடம் கேட்டும், புத்தகங்களில் படித்தும் நாம் அறியும் எத்தனையோ தகவல்கள் பழையனவாக இருக்கக் கூடும். அதற்குப் பின் எத்தனையோ மாற்றங்கள் சம்பந்தப்பட்ட துறையில் நிகழ்ந்திருக்கக் கூடும். எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு, நாம் கேட்டும் படித்தும் அறிந்து கொள்ளும் விஷயங்களின் உபயோகத்தன்மை காலாவதியாகி விட்டிருக்கவும் கூடும். சில சமயங்களில் சிலவற்றைக் கேட்டறிந்து கொள்ள சரியான ஆட்களும் கிடைக்க மாட்டார்கள், படித்துத் தெரிந்து கொள்ள சரியான புத்தகங்களும் கிடைக்காமல் போய் விடும். அது போன்ற சந்தர்ப்பங்களில் பழைய காலாவதியான அறிவைக் கூட நாம் பெற முடியாமல் போய் விடும்.


இன்று எதையும் அரைகுறையாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் இண்டர்நெட்டில் முறையாகத் தேடினால் போதும். முழுவதுமாக ஒருவர் விரும்பியதை அறிந்து கொள்ள முடியும். நாம் அறிய விரும்பும் விஷயங்களை சமீபத்திய மாற்றங்கள் உட்படத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மனிதனின் அறிவுதாகத்திற்கு இண்டர்நெட் ஒரு ஜீவ நதி என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டுமல்லாமல் விரல்நுனியில் உலகத்தை இண்டர்நெட் கொண்டு வந்து தருகிறது. பயணித்து செய்து முடிக்கிற பல காரியங்களை இருந்த இடத்திலேயே முடித்துக் கொள்ளும் மிகப்பெரும் வசதியை மனிதனுக்கு இண்டர்நெட் செய்து தந்திருக்கிறது.


அதே போல் தகவல் தொடர்பு என்பது ஒரு காலத்தில் சுலபமானதாக இருக்கவில்லை. ஒருவர் இறந்து போனால் வெளியூர்களில் இருக்கும் அவருடைய உற்றாரும் உறவினரும் அறிந்து கொள்ள பல மணி நேரங்கள் அல்லது நாட்கள் ஆகி விடும். தந்தி மூலம் தகவல் போய் சேர்ந்து அவர்கள் வருவதற்கு முன் இறந்தவரின் அந்திமக் கிரியைகள் முடிந்து விட்டிருப்பதும் உண்டு. அதே போல் பயணம் போன ஆட்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது. தபாலில் தகவல் வந்தால் தான் உண்டு. அப்படி வருவதும் பழைய தகவலாக இருக்கும். இல்லா விட்டால் பயணம் போன நபரே வந்து சொன்னால் தான் உண்டு.


இன்று செல்போன் தயவால் யாரையும் எப்போதும் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் சௌகரியம் இருக்கிறது. ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரங்களும் ஒருவரை நாம் உடனே தொடர்பு கொள்ள முடியும். தகவல் தெரிவிப்பதும், பெற்றுக் கொள்வதும் மிக மிக எளிதான விஷயங்களாக மாறி விட்டன. இதனால் எத்தனை டென்ஷன் குறைகிறது, எத்தனை வேகமாகவும், சுலபமாகவும் பல வேலைகள் நடக்கின்றன என்பதைப் பார்க்கும் போது செல்போனும் இன்றைய விஞ்ஞானம் தந்த மிகப் பெரிய வரப் பிரசாதமே.


ஆனால் இத்தனை அருமையான வரப்பிரசாதங்கள் சாபங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. இண்டர்நெட்டை தகவல் அறியும் சாதனமாய், அறிவூட்டும் நண்பனாய், தங்கள் வேலைகளை சுலபமாக்கிக் கொள்ளும் ஒரு நல்ல ஊடகமாக மட்டும் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? எத்தனை பேர் அதனைத் தங்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்?


நல்ல விஷயங்களை விட அதிகமாய் கலாச்சாரச் சீரழிவுக்கான விஷயங்களே இண்டர்நெட் மூலம் அதிகம் பார்க்கப்படுவதாகவும், இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இண்டர்நெட் உபயோகத்திற்கு அடிமையாகிக் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. இன்றைய இளைஞர்களிடம் கண் முன் உள்ள யதார்த்த உலகத்தில் பங்கு கொள்வது குறைந்து கொண்டு வருகிறது என்பதையும், இண்டர்நெட் மூலமாக மட்டும் உலகைக் காண ஆரம்பிக்கும் போக்கு வளர ஆரம்பித்துள்ளது என்பதையும் பார்க்கும் போது கவலை எழுகிறது.


இது ஒரு நோயாகவே மாறி விட்டிருக்கிறது என்று கூறும் அமெரிக்க உளவியல் கழகம் (American Psychiatric Association) அந்த நோயிற்கு இண்டர்நெட் உபயோக சீர்குலைவு (Internet Use Disorder or IUD) என்று பெயரிட்டிருக்கிறது. இண்டர்நெட் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது, இண்டர்நெட் இணைப்பு இல்லாத நேரங்களில் எதையோ இழந்தது போலத் தோன்றுவது, இண்டர்நெட் தடைப்படும் போது மற்றவர்களிடம் கோபித்துக் கொள்வது, ஒழுங்காக மற்ற வேலைகளைப் பார்க்க முடியாமல் அந்த வேலை நேரத்தையும் இண்டர்நெட்டிலேயே செலவழிப்பது, நிஜ மனிதர்களிடம் பழகும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் கூடப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு இண்டர்நெட்டில் அரட்டை(chatting), விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவது போன்றவை எல்லாம் அந்த நோய் உள்ளவர்களின் தன்மைகள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.


அதே போல் செல்போன் தகவல் தெரிவிக்கும் சாதனமாய் பயன்படுவது சிலருக்கு மட்டுமே. இன்றைய இளைஞர்களில் மிக அதிகமானோர் வெட்டிப் பேச்சுக்குத் தான் அதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்தும் டீக்கடையில் அமர்ந்தும் வெட்டிப் பேச்சு பேசிப் பொழுதைக் கழிக்கும் ’பெரிசு’களைப் பலரும் கிண்டல் செய்வதுண்டு. ஆனால் இன்று செல்போனில் அதையே இன்றைய இளைய தலைமுறையினரில் கணிசமான பகுதியினர் செய்வது அவர்களுடைய எதிர்காலம் மட்டுமல்லாமல் அவர்களால் உருவாக்கப் போகும் சமூக எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.


எந்த அளவில் செல்போன் இளைஞர்களை ஆபத்தில் உள்ளாக்கும் நிலைக்குத் தள்ளி இருக்கிறது என்பதை சமீபத்தில் நேரிலேயே பார்க்கும் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஒரு கல்லூரி மாணவி செல்போனில் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறார். இடையே ஒரு சாலையை அவர் கடக்க வேண்டி இருந்த போதும் கூட அவர் சாலையின் இருபக்கமும் பார்க்கும் சிரமத்தைக் கூட மேற்கொள்ளவில்லை. வேகமாய் வந்த ஒரு கால் டாக்ஸிக்காரர் அந்தப் பெண்ணை இடிக்கிற அளவு வந்து வண்டியை நிறுத்தி வசை பாடினார். அதைக் கூட அந்தப் பெண் கவனிக்கவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தார்.


ஒருவேளை அவர் டாக்ஸி அந்தப் பெண்ணை இடித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? யோசித்துப் பாருங்கள். கைகால் முறியவோ, உயிருக்கே ஆபத்தாகவோ கூட வாய்ப்பிருக்கும் ஒரு நிலைக்கு ஆளாகி, அதிலிருந்து தப்பித்து இருக்கிறோம் என்ற அறிவும் கூட இல்லாமல் செல்போனில் பேச்சை நிறுத்த முடியாமல் போய்க் கொண்டே இருந்த அந்த இளம் பெண் போல எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வாகனத்தை ஓட்டும் போது கூட பலரால் செல்போனில் பேசாமல் இருக்க முடிவதில்லை.


எத்தனையோ விபத்துகள் இதன் காரணமாக தினந்தோறும் நடந்து எத்தனையோ அப்பாவிகள் அநியாயமாக அதில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தும் அலட்சியமாய் நடந்து கொள்வது சிறுமையே அல்லவா?
அறிய வேண்டியவையும் செய்ய வேண்டியவையும் எத்தனையோ இருக்க சதாசர்வ காலம் செல்போனில் பேசிக் கொண்டும், SMS அனுப்பிக்கொண்டும் தங்கள் பொன்னான நேரத்தை இளைய சமுதாயம் இழந்து கொண்டிருப்பது முட்டாள்தனத்தில் முதலிடம் பெறும் தன்மை அல்லவா? நேரடி வெட்டிப் பேச்சுகளில் கூட அந்தப் பேச்சு ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் முடிவடைவது உண்டு. அவரவர் வீட்டுக்கு சாப்பிடவோ, உறங்கவோ போகும் நேரம் உண்டு. ஆனால் செல்போனில் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பேசும் வசதி இருப்பதால் இது முடிவிற்கு வருவதும் இல்லை.


இளைஞர்களே இளமைக்காலம் இனிமையானது. இது பொன்னான காலமும் கூட. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் விதைக்கும் காலமும் அது தான். இந்தக்காலத்தை திருடிக் கொண்டு வீணடிக்க எதையுமே, யாரையுமே நீங்கள் அனுமதிக்காதீர்கள். இண்டர்நெட், செல்போன் வசதிகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்துங்கள். ஆனால் அதன் பயன்பாட்டில் உங்கள் கட்டுப்பாடு இருக்கட்டும். தேவைப்படும் போது வேண்டியதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய கருவிகளாக அவற்றை வைத்திருங்கள். மாறாக அவற்றின் கருவிகளாக மாறி, அடிமைப்பட்டு அழிந்து போகாதீர்கள்!

அம்மா-பாசத்தின் தெய்வம் - அவசியம் படிக்கவும்!


இந்த கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

கள்ளிப்பட்டு என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது.

பெண்-ஒற்றைக் கண்ணுடன்ஆசிரியர் திரும்பிப் பார்த்தார். வகுப்பறையின் வாசற்படிக்கு அருகே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. ஏனெனில் அவளுக்கு ஒரு கண் இல்லை. அவளைப் பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் பயந்துவிட்டனர். வகுப்பு ஆசிரியர் கூட பயந்தவராய் அவளைப் பார்த்து,

“யாரும்மா நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.


“ஐயா, என் மகன் ராமு மதிய சாப்பாட்டை மறந்து விட்டு வந்து விட்டான். அவனிடம் கொடுக்கத்தான் இந்த சாப்பாடுக் கூடையை எடுத்து வந்துள்ளேன். இதை அவனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன்.” என்றாள்.
“ராமு! உங்க அம்மாகிட்ட போய் அந்த கூடையை வாங்கிட்டு வா.”

ராமு எழுந்து சென்று வாங்கி வந்து ஆசிரியரிடம் நன்றி கூறி அமர்ந்தான். அவனது அம்மாவும் சென்றுவிட்டாள். ஆனால் வகுப்பறையில் உள்ள மாணவர்கள்தான் ராமுவை ஓட்டித்தள்ளிவிட்டனர்.

“ஏய்....... ஒத்த கண்ணு அம்மா!”

“டேய்! அதுதான் உங்க அம்மாவா? பேய் மாதிரி இருக்காங்க...”

“ராமு அம்மா, ஒத்த கண்ணு அம்மா”

என்றெல்லாம் அவனை ஏளனம் செய்தனர். ராமுவிற்கு அழுகையே வந்துவிட்டது. ஆசிரியர் மாணவர்களை அதட்டி அமைதிபடுத்தினார்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற ராமு, தனது புத்தகப்பையை வீட்டினுள் ஒரு மூலையில் தூக்கி எறிந்தான். அவன் அவ்வளவு கடுப்பாக இருப்பதைப் பார்த்த அவன் அம்மா வள்ளி “என்னப்பா ஆச்சு? ஏன் இவ்வளவு கடுப்பா இருக்கே?” என்று கேட்டாள்.

“எல்லாம் உன்னாலதான். நான் எத்தனை முறை சொல்றது, என்ன பார்க்க பள்ளிக்கூடம் வராதேனு? நீ இன்னைக்கு வந்ததால எல்லாரும் என்ன ‘ராமு அம்மாவுக்கு ஒத்த கண்ணு’ அப்படினு எவ்வளவு கேலி கிண்டல் பண்ணினாங்க தெரியுமா? நான் அழுதே விட்டேன்.”

“நீ சாப்பாட்டை மறந்து விட்டு போயிட்டே. சாப்படலனா உடம்பு கெட்டுடும். அதனாலதான் எடுத்துக்கிட்டு வந்தேன்.”

“நான் சாப்பிடாம செத்தா உனக்கு என்ன? என்னையை அசிங்கப்படுதுவதே உனக்கு வேலையாப்போச்சி. நீ இனிமே பள்ளிக்கூடம் வந்த, நான் பள்ளிக்கு போகவே மாட்டேன்.”.

“சரிப்பா, என்ன மன்னிச்சிடு. இனிமே உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன்.” என்று கூறியவள் சாமியறைக்குள் சென்று குமுறிக் குமுறி அழுதாள். தன் மகனே தன்னை கேவலமாக பார்க்கிறானே என்று சாமியிடம் முறையிட்டாள்.

ராமுவின் அப்பா அவன் பிறந்த ஒரு மாதத்திலேயே இறந்துவிட்டார். அவனுடைய ராசிதான் அவரை கொன்றுவிட்டது என்று அனைவரும் கூறினர். ஆனால் அவனது அம்மா வள்ளி, “என் புருஷன் குடிகாரன். குடிச்சி, குடிச்சியே செத்து போய்ட்டான். அதுக்கு என் புள்ள ராசியை தப்பா சொல்லாதீங்க” என்று அவனை மெச்சிக்கொள்வாள். புருஷன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல், கூலி வேலை செய்து அவனை காப்பாற்றி வருகிறாள்.

ராமு தன் உயர் கல்விக்கு சென்னை செல்லவேண்டிய சூழ்நிலை. அதனால் தன் தாயிடம் விடைபெற்று சென்று அங்கு விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் படிக்கும் காலக்கட்டத்தில் விடுமுறைக்கு கூட அவன் அம்மாவை பார்பதற்கென்று வந்தது கிடையாது. இதை நினைத்து வள்ளி வருந்தாத நாளே இல்லை. பெத்த மனம் தன் பிள்ளையை பார்க்க ஏங்கியது. அதனால் அவள் ஒருநாள் ராமுவின் கல்லூரிக்கே சென்றுவிட்டாள். இப்போதும் ராமு தனது அம்மாவை மிகவும் அசிங்கப்படுத்தி அனுப்பினான். அதனால் நொந்துபோய் வீட்டிற்கு சென்ற அவள் ராமுவை பார்க்கச்செல்லாமல் அவனுக்குத் தேவையான பணம் மட்டும் அனுப்பி வந்தாள். ராமுவிடமிருந்து கடிதம் வரும். ஆனால், வள்ளி எப்படி இருக்கிறாள் என்று கேட்டிருக்கமாட்டான். “எனக்கு ஐயிந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும்” என்று மொட்டையாக இருக்கும். அவளும் தன் மகன் இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருக்கிறானே என்று அழுதுகொண்டே பணத்தை அனுப்புவாள்.

ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அவனிடமிருந்து வரும் கடிதம் கூட வருவதில்லை. தன் மகனுக்கு என்ன ஆயிற்றோ என்று அவன் தன்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லையென்று அவனது கல்லூரிக்குச் சென்று விசாரித்ததில், அவனது படிப்பு முடிந்து வேலை கிடைத்துச் சென்றுவிட்டதாக தெரியவந்தது. அவளும் தன்னை தன் மகன் அடியோடு மறந்துவிட்டானே என்று தினமும் அழுதுகொண்டே இருப்பாள். அதனால் அவளது உடல்நிலை மோசமானது. சில வருடங்கள் கழிந்தன. ராமு நல்ல வேலையில் உள்ளதாகவும், அவனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தான் அவனைப் பார்த்ததாகவும் ஒருவர் வந்து வள்ளியிடம் கூறினார். இந்த செய்தி அவளுக்குப் புத்துயிர் அளித்தது.

அவர் மூலம் அவன் விலாசத்தை அறிந்து அவனை பார்க்கச் சென்றாள். சென்னையில் அவனது இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் அவன் வீட்டைக் கண்டுபிடித்தாள். அங்கு ராமுவின் பிள்ளைகள் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் தவறவிட்ட பந்து வள்ளிக்கு அருகில் வந்தது. அதை எடுத்துக்கொண்டு தன் பேரப்பிள்ளைகளை கொஞ்ச அவள் சென்றபோது அவளது ஒற்றைக்கண்ணைப் பார்த்து பயந்துபோய் பிள்ளைகள் அழ ஆரம்பித்தன.

குழந்தைகளின் அழுகை சத்தத்தை கேட்டு ராமு வெளியில் வந்தான். அம்மாவை பார்த்த ராமு ஏதோ பிச்சைக்காரியைப்போல் போல் “நீ எதுக்கு இங்க வந்த, நாங்க நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலயா? உன் மூஞ்சிலேயே படக்கூடாதுன்னுதான நான் எங்க இருக்கிறேன்னு சொல்லவேயில்ல, இப்ப என் பிள்ளைகல பயம்புறுத்த வந்துட்டியா? முதல வெளிய போ”, என்றான் ராமு.

“இத்தனை வருடங்கள் கழித்து நான் அவனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால் இவன் நம்மை அம்மா என்று கடுகளவு கூட பாராமல் இப்படி சொல்லிவிட்டானே! இனிமேல் இவனிடம் பாசத்தை எதிபார்ப்பது தவறு” என்று எண்ணிய வள்ளி அங்கிருந்து வந்துவிட்டாள்.

சில நாட்கள் கழித்து ராமுவிற்கு ஒரு கடிதம் வந்தது. அது அவன் அம்மாவின் அண்டை வீட்டுக்காரர் எழுதியது. அதில் “ராமு உங்க அம்மா இறந்துவிட்டார். அவங்க உன்னிடம் தருமாறு கொடுத்தக் கடிதத்தை இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். தயவு செய்து படிக்காமல் விட்டுவிடாதே. இருக்குபோதுதான் அவர்களை மதிக்கவில்லை. இறந்தபிறகாவது இந்த கடிதத்தை படித்து அவருடைய ஆத்துமாவை சாந்தியடைய வை!” என்று இருந்தது. ராமு தன் அம்மா இறந்துவிட்டாளே என்று சிறு கவலைகூட இல்லாமல் இன்னொரு கடிதத்தை எடுத்துப் படித்தான்.

“ராமு! என் மகனே! உன்னைப் பெற்றெடுக்க மறு பிறவி எடுத்தேன். என் ரத்தத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுத்தேன். என் உடலையே உருக்கி கூலி வேலை செய்து உன்னைப் படிக்கவைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் நீ கொடுத்த கைமாறு எந்தவொரு தாய்க்கும் கிடைக்கக்கூடாது. சரி, ஏன் என்னை நீ வெறுக்கிறாய்? நான் ஒற்றைக் கண் கொண்டவள் என்பதால்தானே? நீ குழந்தையாய் இருந்தபோது ஒரு விபத்தில் உன்னோட ஒரு கண்ணை இழந்துவிட்டாய். உன்னை ஒரு கண்ணோடு பார்ப்பதற்கு என் இருதயமே நின்றுவிடும் போலிருந்தது. அதனால் என் ஒரு கண்ணை கொடுத்து உன் கண்ணைக் காப்பாற்றினேன், என் அழகை இழந்தேன். ஆனால் எனக்கு அப்போது அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை உனக்கு கூறி வளர்த்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், நீ ஒருவித மன உறுத்தலுடன் வாழ்ந்துவந்திருப்பாய்.” இதைப் படித்தவுடன் ராமுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மேலும் படித்தான்.

“அழாதே மகனே, எனக்காக அழாதே. உன் பிள்ளைகளுக்காக அழு. அவர்களை வளர்க்கும்போதே நீ படும் கஷ்டங்களை சொல்லி வள. இல்லையென்றால் என் கதிதான் உனக்கும்.”

இதை படித்ததும் ராமு தன் தவறை உணர்ந்தான். அவனது கண்ணில் தாரை தரையாய் நீர் வழிந்தது. தரையில் புரண்டு புரண்டு அழுதான்.

வாழும்போதே தன் தாயின் தியாகத்தை உணராமல், அவள் இறந்தபிறகு அழுது என்ன பிரயோஜனம்?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top