.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 13 November 2013

கடலில் திடீரென முளைத்த தீவு!

அண்மையில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக பலுச்சிஸ்தானின் கரை ஓரமாக ஒரு தீவு முளைத்தது. இது சிறிய தீவுதான். இத்தீவின் தோற்றம் குறித்து நிபுணர்கள் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


கடலில் தீவு முளைப்பது அதிசயமல்ல. குறிப்பாக,  பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலிலிருந்து முளைத்தவையே. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் எரிமலைகள் உண்டு. அவை படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கடலுக்கு மேலே வந்து தீவுகளாகி விடும்.

கடலடி எரிமலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவை எப்போது கடலுக்கு மேலே தலை காட்டும் என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு விடலாம். கடலடி எரிமலைகளால் தோன்றும் தீவுகள் பொதுவில் நிரந்தரமாக நீடிப்பவை. ஆனால் பூகம்பத்தால் ஏற்படுகின்ற தீவு  எதிர்பாராத வகையில் திடீரென்று தோன்றுவதாகும். பலுச்சிஸ்தான் மாகாணத்தில்  செப்டம்பர் 24 ஆம் தேதியன்று அவாரன் என்னுமிடத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் ஏற்பட்ட அரை மணி நேரத்தில் புதிய தீவு முளைத்தது.

பலுச்சிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.7 ஆகும். இந்த  பூகம்பத்தின் விளைவாக சுமார் 400 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் இப்பகுதி பூகம்ப ஆபத்துப் பிராந்தியமாகும். அதாவது அவ்வப்போது பூகம்பம் நிகழும் பகுதியாகும். 1935 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் குவெட்டா நகரம் கிட்டத்தட்ட அழிந்தது. சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களும் இந்தியத் துணைக் கண்டமும் இந்தியச் சில்லு  எனப்படும்  பெரும் பாறைப் பாளம் மீது அமைந்துள்ளது. இது வடக்கு நோக்கி மெல்ல நகர்ந்து மத்திய ஆசியா, ரஷ்யா ஆகியவை அமைந்துள்ள யுரேசிய சில்லுவை நெருக்குகிறது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக் காவின் கிழக்கு கரை ஓரமாக இருந்த இந்திய சில்லு மெதுவாக நகர்ந்து வந்து யுரேசிய சில்லு மீது மோதி அதைத் தள்ள முற்பட்டதால் தான் அங்கு நிலம் புடைத்துக் கொண்டு இமயமலை தோன்றியது. பூமியின் பல கண்டங்களை யும், கடல்களை யும் தாங்கி நிற் கும் பல்வேறு சில்லுகள் வெவ் வேறு திசைகளில் இன்னமும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன. சில்லுகள் என்பவை பூமியில் மிக ஆழத்தில் அமைந்துள்ளன.  சில்லுகள் இவ்விதம் நகருவதால் தான் அவற்றின் சந்திப்புகளில் பூகம்பங்கள் நிகழ்கின்றன. சில்லுகளின் நகர்வு  எனப்படும். யுரேசிய சில்லுவை இந்திய சில்லு முட்டித் தள்ளுகிற அதே நேரத்தில் மேற்கே இந்திய சில்லுவை ஒட்டி அமைந்துள்ள அராபிய சில்லுவும்  நகருகிறது.

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டதற்கு சில்லுப் பெயர்ச்சி தான் காரணம். சில்லுப் பெயர்ச்சியின் போது நிலத்துக்கு அடியில் உள்ள பிரும்மாண்ட பாறைப் பாளங்கள் இடம் பெயரும்.

கடலடிப் பாறைகளுக்கு அடியில் மணல், உறைந்த நிலையிலான மீதேன் வாயு முதலியவை இருக்கலாம். சில்லுப் பெயர்ச்சியின் விளைவாகப் பாறைகள் நகரும் போது வெப்பம் தோன்றும். அப்போது உறைந்த நிலையிலான மீதேன் கட்டிகள்  வாயுவாக மாற வாய்ப்புள்ளது. வாயு எப்போதும் நிறைய இடத்தை அடைத்துக் கொள்ள முற்படும். அந்த நிலையில் வாயு, மணல, கடலடிப் படிவுகள் என எல்லாம் மேல் நோக்கித் தள்ளப்படும்.  மேற்படி தீவு இவ்விதமாகத் தோன்றி யிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கரை ஓரமாக அமைந்த குவாடார் நகருக்குத் தெற்கே கடலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அத் தீவு தோன் றியது. அதைக் கண்டு கரையோரமாக வாழும் மக்கள் அதிசயித்துப் போனார்கள்.

பலரும் பின்னர் படகுகள் மூலம் அத்தீவுக்குச் சென்றனர். அத்தீவில் சில இடங்கள் மணற்பாங்காக இருந்தன. ஒரு சில இடங்களில் சேறு இருந்தது. வேறு சில இடங்களில் பாறைகள் இருந்தன.  ஆங்காங்கு த்ரையில் வெடிப்புகள் இருந்தன. அவற்றின் வழியே புஸ் என்ற சத்தத்துடன் மீதேன் வாயு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தீக்குச்சியைப் பற்ற வைத்த போது அந்த வாயு எரிய ஆரம்பித்தது. தீயை எளிதில் அணைக்க முடியவில்லை.

குவாடாருக்குத் தெற்கே தீவு தோன்றிய அதே நேரத்தில் கிழக்கே மிகவும் தள்ளி ஓர்மாரா என்னும் இடத்துக்கு அருகே இரு சிறிய தீவுகள் தோன்றின. ஆனால் இவை சேறு எரிமலை வகையைச் சேர்ந்தவை. இந்தத் தீவுகள்அதிக நாட்கள் நீடித்து இராது என்றும் நாளாவட்டத்தில் கடலில் மூழ்கி மறைந்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சேறு எரிமலையின் பெயர் தான் எரிமலையே தவிர, அதிலிருந்து  நெருப்பு வெளிப்படாது. சாதாரண எரிமலையின் வாயில் நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருக்கும் என்றால் சேறு எரிமலையின் வாய்க்குள் சேறு காணப்படும். சேற்றில் மீதேன் வாயுக் கொப்புளங்கள் காணப்படும். பாகிஸ்தானின் தென் பகுதியில் கடலையொட்டிய நிலப் பகுதியில் பல சேற்று எரிமலைகள் உள்ளன.

சேற்று எரிமலைகள் வேறு வகையிலும் வித்தியாச மானவை. ஒரு சில சேற்று எரிமலைகளே குன்று போல உயர்ந்து காணப்படும். சேற்று எரிமலைகளில் பெரும்பாலானவை சேறு தேங்கிய குட்டை போன்று இருக்கும். சேற்று எரிமலைகள் அனைத்திலும் உள்ள சேறு பூமிக்குள் மிக ஆழத்திலிருந்து வருவதாகும். அபூர்வமாக சில சேற்று எரிமலைகளில் தான் தொடர்ந்து பூமிக்குள்ளிருந்து சேறு வந்து கொண்டிருக்கும். மற்ற சேற்று எரி மலைகளில் எப்போதாவது தான் உள்ளிருந்து சேறு வெளிப்படும்.

பலுசிஸ்தான் மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் தீவுகள் தோன்றுவது புதிது அல்ல. 1945 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இப்போதைய தீவு நான்காவதாகும். முந்தைய தீவுகள் எப்போதோ மறைந்து விட்டன. பூமியில் அவ்விதம் காந்த துருவங்கள் மாறினால் பூமியில் உயிரினத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கதை கிளப்புபவர்கள் உண்டு. ஆனால் காந்த துருவ மாற்றத்தால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பூமியின் மய்யத்தில்  இரும்பு- நிக்கல் உலோகக் குழம்பு உள்ளது. இதில் சுழல்கள் உண்டு. இதுவே பூமிக்குக் காந்தப்புலத்தை அளிப்பதாகக் கருதப் படுகிறது. பூமியைச் சுற்றி அமைந்த காந்தப்புலமானது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் தரைக்கு வந்து சேராமல் தடுக்கின்றன.இதன் பலனாக பூமியில் உயிரினம் காக்கப்படுகிறது

கணிணி கிராஷ் என்ன காரணம்!

பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் :

Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start Settings Control Panel System Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக் கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.

3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளே யின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start Settings Control Panel Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக் கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.

7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர் பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரி யைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப் பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப் பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப் பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.

அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:

ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்
ஜாதிபத்திரி - Mace - மெக்
இஞ்சி - Ginger - ஜின்ஜர்
சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்
பூண்டு - Garlic - கார்லிக்
வெங்காயம் - Onion - ஆனியன்
புளி - Tamarind - டாமரிண்ட்
மிளகாய் - Chillies - சில்லிஸ்
மிளகு - Pepper - பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies
பச்சை மிளகாய் - Green chillies
குடை மிளகாய் - Capsicum
கல் உப்பு - Salt - ஸால்ட்
தூள் உப்பு - Table salt
வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ
சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்
கற்கண்டு - Sugar Candy
ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
கிஸ்மிஸ் - Dry Grapes
லவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்
கசகசா - Poppy - பாப்பி
உளுந்து - Black Gram - பிளாக் கிராம்
கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு - Moong Dal
கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்
உழுத்தம் பருப்பு - Urid Dhal
துவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு - Millet - மில்லட்
கேழ்வரகு - Ragi - ராகி
கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்
கோதுமை - Wheat - வீட்
கோதுமை ரவை - Cracked Wheat
சோளம் - Corn
சோளப்பொறி - Popcorn
எள்ளு - Sesame seeds / Gingelly seeds
நெல் - Paddy - பாடி
அரிசி - Rice - ரய்ஸ்
அவல் - Rice flakes
பச்சை அரிசி - Raw Rice
புளுங்கல் அரிசி - Par boiled rice
கடலை மா - Gram Flour
மக்காச்சோளம் - Maize - மெய்ஸ்
வாற்கோதுமை - Barley - பார்லி
பச்சை பட்டாணி - Green peas
சேமியா - Vermicelli
சவ்வரிசி - Sago
ரவை - Semolina
கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
கடுகு - Mustard - முஸ்டார்ட்
சீரகம் - Cumin - குமின்
வெந்தயம் - Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds
பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா
மஞ்சள் - Turmeric - டர்மரிக்
ஓமம் - Ajwain / Ajowan
தனியா - Coriander - கோரியண்டர்
கொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை - Curry Leaves
கஸ்தூரி - Musk - மஸ்க்
குங்குமப்பூ - Saffron - சஃப்ரான்
பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்
கற்பூரம் - Camphor - கேம்ஃபர்
மருதாணி - Henna - ஹென்னா
துளசி - Tulsi
எலுமிச்சை துளசி - Basil
எண்ணெய் - Oil - ஆயில்
கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்
பாமாயில் - Palm Oil
ஆலிவ் ஆயில் - Olive Oil
பால் - Milk - மில்க்
பால்கட்டி - Cheese - ச்சீஸ்
நெய் - Ghee - கீ
வெண்ணெய் - Butter - பட்டர்
தயிர் - Curd/Yoghurt - க்கார்ட்
மோர் - Butter Milk - பட்டர் மில்க்
கீரை - Spinach - ஸ்பீனச்
அவரை - Beans - பீன்ஸ்
கர்பூரவள்ளி - Oregano
நார்த்தங்காய் - Citron - சிட்ரான்
திருநீர்பச்சை - Ocimum-basilicum
சீத்தாப்பழம் - Custard-apple
மாதுளை - Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் - Pumpkin
கருங்காலி மரம் - Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் - Bermuda Grass
வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
புதினா இலை - Mint leaves
வெற்றிலை - Betel leaves
நொச்சி இலை - Vitexnegundo (Chaste Tree)
அத்தி - Fig
கீழாநெல்லி - Phyllanthus nururi
தாழை மரம் - Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை - Purple-fruited pea eggplant
துத்திக்கீரை - Abutilon indicum
பிரமத்தண்டு - Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் - Coccinia grandis
முடக்கத்தான் கீரை - Cardiospermum halicacabum
குப்பைமேனி - Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி - Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை - Aloe Vera
நாவல் பழம் - Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி - Heliotropium
நிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica
நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) - Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் - Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia
அகத்திக்கீரை - Sesbania grandiflora
செண்பகப் பூ - Sonchafa (champa)
சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி - Hibiscus(Shoe Flower)
கரும்பு - Sugar cane
நீர்முள்ளி - Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ - Star Anise
பூவரசு - Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை - Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry
கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் - Guava
மரவள்ளிக் கிழங்கு - Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு - Yam
விளாம் பழம் - Wood apple
முள்ளங்கி - Radish / parsnip
புடலங்காய் - Snake gourd
பாகற்காய் - Bitter gourd
வெண்டைக்காய் - Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை - Peanut
வாழைக்காய் - Ash Plantain
வாழைப்பழம் - Banana
ஊறுகாய் - Pickle
உருளைக் கிழங்கு - Potato
தேங்காய் - Coconut
இளந்தேங்காய் - Tender Coconut
இளநீர் - Tender Coconut water
பதநீர்/பயினி - Neera /Palmyra juice
கள்ளு - Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு - Lime
ஆப்பச் சோடா - Baking Soda
தீப்பெட்டி - Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick

க்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்!

‘க்ரிஷ் 3... தீபாவளிக்கு வெளியான ஒரே பாலிவுட் படம். தமிழகத்திலும் கணிசமான திரையரங்கு களில் வெளியாகியிருக்கிறது. பொதுவாக ஷாருக்கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களின் படங்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றாலும் மூன்று முன்னணி நாயகர்களின் தமிழ்ப் படங்கள் வெளியாகும் நேரத்தில் ஒரு இந்திப் படத்துக்கு இத்தனை திரையரங்குகள் கிடைத்திருப்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. படம் வெளியான ஏழாவது நாளில் (நவ.7) இந்தியாவில் மட்டும் 200 கோடியை வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்டது.

                             

இதற்கு முன் இந்தியாவில் மட்டும் 200 கோடி வசூல் செய்த பாலிவுட் படங்கள் இரண்டுதான். ஒன்று ஷாருக் கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மற்றொன்று ஆமிர் கானின் ‘3 இடியட்ஸ்’. ஆனால் ‘க்ரிஷ் 3’ இவ்விரு படங்களைவிட மிகக் குறைந்த நாட்களில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறது.

முதல் இரண்டு பாகங்களைப் பார்க்காமல் ‘க்ரிஷ் 3’ பார்த்தால் புரியுமா என்று அச்சப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு இந்தி தெரியுமென்றால் போதும். ‘க்ரிஷ் 3’ தொடங்கும் முன் க்ரிஷ்ஷின் முன்கதை ஒரு காட்சித் தொகுப்பாக விரிய, ’இதுவரை’ என்ன என்பதை அமிதாப் பச்சன் சொல்லிவிடுகிறார். (இந்தி புரியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது விக்கிபீடியா).

ரோஹித் மெஹ்ரா (ஹ்ரிதிக் ரோஷன்) தான் கண்டுபிடித்த கருவியில் சூரிய ஒளியைக் கடத்தி அதன் மூலம் இறந்துவிட்ட உயிரினங்களை உயிர்த்தெழச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவரது மகன் க்ருஷ்ணா (ஹ்ரித்திக் ரோஷன்) அடிக்கடி க்ரிஷ்ஷாக மாறி ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றச் சென்றுவிடுவதால் அவனுக்கு நிலையான வேலை இல்லை, க்ருஷ்ணாவின் காதல் மனைவி ப்ரியா (ப்ரியங்கா சோப்ரா) ஆஜ் தக் சேனலில் செய்தி வாசிப்பாளர்.

மறுபுறம் கால் (விவேக் ஓபராய்) தன் அறிவியல் திறனை அமானுஷ்ய சக்திகளையும் அழிவு நோக்கத்துடன் பயன்படுத்துகிறான். தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்த கயாவும் (கங்கனா ரணவத்) அவனுக்குத் துணையாக இருக்கிறாள். மனிதர்களைத் தாக்கும் விஷக்கிருமியை மும்பையில் பரப்புகிறான் கால். இதன் மூலம் அவனுக்குப் பல கோடி லாபம் கிடைக்கும். இந்தக் கிருமியால் மும்பையில் நூற்றுக்கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். கால் பரப்பும் விஷக் கிருமி தன் குடும்பத்தை மட்டும் தாக்காததைக் கண்டு அதற்கான முறிமருந்து க்ருஷ்ணாவின் ரத்தத்தில் இருப்பதை அறிந்துகொள்கிறார் ரோஹித். தன்னிடம் கிடைக்கும் முறிமருந்தை வைத்து மும்பை நகரைக் காப்பாற்றுகிறான் க்ரிஷ்.

ப்ரியாவைக் கடத்தி காலிடம் ஒப்படைத்துவிட்டு அவளது இடத்தில் கயா வருகிறாள். அதுவரை மனிதத்தன்மை, அன்பு ஆகியவற்றை அறிந்திராதவள் க்ருஷ்ணாவிடம் காதல்வயப் படுகிறாள். தன் விஷக்கிருமியை முறியடித்த ரோஹித்தையும் கடத்துகிறான் கால். ஆனால் க்ரிஷ் கயாவின் உதவியோடு கால் இருக்கும் இடத்தை அடைகிறான் (க்ரிஷ்ஷாகத்தான்). தன் மனைவியை மீட்பவன் தந்தையை மீட்பதற்குள் கால் அவனைக் கொன்றுவிட்டு மும்பை சென்றுவிடுகிறான்.

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சியை ரோஹித் மேற்கொள்கிறார். ஆனால் க்ருஷ்ணாவுக்கு உயிர்கொடுத்து அவர் இறந்துவிடுகிறார். மும்பைக்குப் பறந்து சென்று நெடிய சண்டை போட்டு காலை அழித்து மும்பையை மீண்டும் காப்பாற்றுகிறான் க்ரிஷ் என்கிற க்ருஷ்ணா

எவ்வளவுதான் காதில் பூக்கடையையே கவிழ்த்தாலும் தீமையை நன்மை வெல்லும் கதைக்கு இந்தியர்களிடம் எப்போதுமே மவுசு உண்டு. க்ரிஷ் 3-ன் வெற்றி மூலம் அது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஃபாண்டஸி வகைப் படங்களில் தர்க்க ரீதியாக எதையும் அலச வேண்டியதில்லைதான். ஆனால் தர்க்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களையும் ஈர்க்கும் வகையில் மிகையதார்த்தக் காட்சிகளை உருவாக்க முடியும். என்ன அதற்குக் கொஞ்சம் மெனக்கெடல் தேவை. க்ரிஷ் 3க்கு இருக்கும் மற்ற சாதகங்களை வைத்து இதுபோன்ற மெனக்கெடல்கள் தேவையில்லை என்று படக் குழுவினர் முடிவெடுத்துவிட்டார்களோ?

சரி, இவற்றையெல்லாம் மறந்துவிட்டு இதை ஒரு சூப்பர் ஹீரோ படமாக மட்டும் ரசிக்கலாம் என்றால் அதுவும் ஓரளவுக்குத்தான் முடிகிறது. சூப்பர் ஹீரோ ஒரு சாதாரண மனிதராகவும் இருப்பதால் சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளுக்கும் தீனி போட நினைத்திருக்கிறார்கள். மனைவி கர்ப்பம் தரித்த சந்தோஷத்தில் ஆடிப்பாடுவது, பேரன் பிறக்கப்போவதை அறிந்த தாத்தா ஆனந்தக் கண்ணீர் வடிப்பது, க்ரிஷ் யாரென்றே தெரியாத மக்கள் அவனுக்கு சிலை வைத்து ஆடிப்பாடுவது, குடியைக் கெடுக்க வந்த பெண் காதல் வயப்படுவது, பாலைவனம் ஒன்றில் அரைகுறை ஆடையுடன் ஆடும் பாடல் என 1970களிலிருந்து பார்த்துப் பார்த்துச் சலித்த பாலிவுட் க்ளீஷேக்கள் திரையை நிறைக்கின்றன.

தொப்பையுடன் கண்ணாடி போட்டுக்கொண்டு வரும் அப்பாவி அப்பா ரோஹித் பாத்திரத்தில்தான் ஹ்ரித்திக் ரோஷனுக்கு நடிக்க வாய்ப்பு இருக்கிறது. நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு ஆணழகனாகத் தோன்றும் க்ருஷ்ணாவாகவும் க்ரிஷ் உடையிலும் ஹ்ரித்திக்கின் அழகை ரசிக்க முடிகிறது. நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

வில்லனிடம் சிக்கிக்கொண்டு நாயகனால் காப்பாற்றப்பட ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்காக ப்ரியங்கா சோப்ரா இந்தப் படத்தில் இருக்கிறார். கங்கனா ரணவத் நடிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். விவேக் ஓபராய் கொடிய வில்லனாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவரது முகத்தை என்னவெல்லாமோ செய்திருக்கிறார்கள். படத்தில் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரது அசலான குழந்தை முகம் நினைவில் வந்து உறுத்துகிறது. சலீம் சுலைமானின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றது.


உலகத் தரமான படமாக்கல், தொழிநுட்பம், கவலையை மறந்து ரசிக்க வைக்கும் சாகசக் காட்சிகள், இவையெல்லாம் தரும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மட்டும்தான் எதிர்பார்க்க வேண்டும் என்றால் க்ரிஷ் 3-ன் இமாலய வசூலை தாராளமாகக் கொண்டாடலாம். பெருமை கொள்ளலாம்.

ஆனால் இந்தக் கதைக்களம், பட்ஜெட், தொழில்நுட்ப சாத்தியங்கள், கலைஞர்களின் திறமை மற்றும் உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு இன்னும் பன்மடங்கு சிறப்பாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதற்கான ஒரு சிறு முயற்சிகூட லாபத்தை பாதிக்கும் என்ற சிந்தனையே க்ரிஷ் 3 குழுவினரிடம் மேலோங்கி இருந்திருப்பதாகத் தெரிகிறது. அதுவே இந்தப் படத்தின் வெற்றியை உறுத்தலுடன் கடந்துசெல்ல வைக்கிறது..

மீண்டும் விஜய்யுடன் - ஏ.ஆர்.முருகதாஸ்!

 

மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய், காஜல் அகர்வால், வித்யூத் ஜாம்வால், சத்யன் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் 'துப்பாக்கி'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, தாணு தயாரித்திருந்தார்.

நவம்பர் 13, 2012ல் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. விஜய்யின் வித்தியாசமான லுக், பரபரப்பான திரைக்கதை, பாடல்கள் என அனைத்து விதத்திலும் மக்களை கவர்ந்தது.

'துப்பாக்கி' படம் வெளியான ஒரு வருடம் ஆனதையொட்டி, ட்விட்டர் தளத்தில் இந்தியளவில் #ThuppakkiDay, #VijayFansThankARMurugadossForThuppakki என்ற 2 ஹாஷ்டேக்குகள் டிரெண்ட்டாகி வருகிறது.

'துப்பாக்கி' வெளியாகி ஒருவருடம் ஆகியிருக்கும் இந்நாளில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “ இந்த சந்தோஷமான தருணத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைய இருப்பது குறித்து செய்திகள் வெளிவந்தாலும், அதிகாரப்பூர்வமாக எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. ஏ.ஆர்.முருகதாஸின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்யுடன் சமந்தா, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்க இருக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top