.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 10 November 2013

எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை!

இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன. ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு துறைகள் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சமூக காரணங்களுக்காக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன.

உதாரணமாக வீடியோ காசட் தொழிலை சொல்லலாம். ஆக இந்த மாற்றங்களின் வீச்சு அதிகரிக்கும் போது பல்வேறு வேலை இழப்பு இருந்தாலும், புதிய புதிய துறைகளின் தோற்றமும், ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட தொழில்களில் அசுர வளர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் பணி புரியும் காலம் சராசரியாக 5 ஆண்டுகளாக உள்ளது.

இது இனியும் குறைவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. தொழிலின் தன்மையே மாறும் நிலையில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்ற போதும் ஒரே துறையில் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மாற்றங்கள் எவ்வளவு வந்தாலும், சந்தைப் பொருளாதார சிக்கல்களை தாண்டி சில வேலை வாய்ப்புகளுக்கு என்றென்றும் கிராக்கி இருக்கும் என்று இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட சில வேலைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

 பினான்சியல் பிளானர்:

நம்மில் பலராலும் நமது நிதி தொடர்பான பணிகளை முழுமையாக நாமே செய்து கொள்வதில் சிரமங்கள் உள்ளன. எவ்வளவு வருவாய் உள்ளது, எவ்வளவு சொத்துக்கள் மற்றும் கடன் உள்ளது, எவ்வளவை சேமிக்க வேண்டும், எவ்வளவை வரியாக செலுத்த வேண்டும், எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பது போன்ற நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமாய் இருக்கும் நிதி குறித்த முடிவுகளை உரிய திட்டமிடலுடனும், தெளிவுடனும், சரியாகவும் செய்பவரே பினான்சியல் பிளானர் எனப்படும் நிதித் திட்டமிடுபவர் ஆவார். இது காலத்தால் அழிக்க முடியாத ஒரு வேலை என்று கூறப்படுகிறது.


எழுத்தாளர்:

எழுத்தாளர் என்பது கேட்பதற்கு எளிதாக இருப்பது போல் வாழ்வதற்கு அவ்வளவு எளிதானதல்ல. எழுதுவதற்கான விருப்பம் மட்டும் இருப்பதே ஒரு வெற்றிகரமான எழுத்தாளரை உருவாக்குவதில்லை. முழுமையான அர்ப்பணிப்பு, விருப்பு மற்றும் வேட்கை, மறுதலிப்புகளை பக்குவமாக ஏற்கும் தன்மை, விமர்சனங்களைத் தாங்குதல் போன்ற பல்வேறு குணங்களின் தொகுப்பாக இந்த பணி இருக்கிறது. எவ்வளவுதான் இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை ஏற்று எதிர் நடை போடும் எழுத்தாளர்களே சிறந்த வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். டெக்னிகல் ரைட்டர், கண்டெண்ட் ரைட்டர், ஆதர், கோஸ்ட் ரைட்டர் போன்ற பல்வேறு எழுத்தாளர் பணிகள் காலத்துக்கு ஏற்றபடி மாறினாலும் எழுத்தாளர்களுக்கான கிராக்கி எப்போதுமே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் புரொகிராமர்:

பொருளாதார மந்த நிலை, பொருளாதார வளர்ச்சி நிலை என்ற இரண்டு நிலைகளிலும் பெரிதும் தேடப்படும் பணிகளில் ஒன்றாக கம்ப்யூட்டர் புரொகிராமர் பதவி இருந்து வந்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் வணிக அரங்கின் செயல்பாடுகளில் கம்ப்யூட்டர் உள்ளவரை பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் கம்ப்யூட்டர் புரொகிராமர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்யும் என்பது இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்தாகும்.

ஆசிரியர்:

மனிதர்களுக்குத் தெரியாத விஷயங்கள் இருக்கும் வரை அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. எனவே தெளிவுபடுத்தும் பணியான ஆசிரியர் வேலைக்கு உலகம் உள்ளவரை நிச்சயமான தேவைகள் இருக்கும் என்பதே வல்லுனர்கள் கருத்தாகும். இந்தப் பணியும் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களின் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு நிரந்தர தேவைக்குரியதாக உள்ளது.

கெமிக்கல் இன்ஜினியர்:

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் அந்த துறை மட்டுமன்றி மருத்துவம், எரிதி, தொழில் நுட்பம், காஸ்மெடிக்ஸ், பானங்கள் மற்றும் உணவுப் பதார்த்தங்கள் போன்ற மாறுபட்ட துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்துறை அதிகம் விரும்பப்படாத துறையாக தற்சமயம் தெரிந்தாலும் சிறந்த ஊதிய விகிதங்கள், ஸ்திரத்தன்மை, வேலைவாய்ப்பு சாத்தியங்கள் ஆகியவற்றால் நிலையான ஒரு பதவியாக மாறும் என்று கணிக்கப்படுகிறது.

சமையற்கலை வல்லுனர்:

நல்ல உணவை உண்பதற்காக பசியோடு காத்திருப்பவர்கள் இருக்கும் வரை சமையற்கலைக்கு அழிவே இல்லை. உலகின் பெரும்பான்மையானோர் உண்பதில் காட்டும் ஆர்வத்தை அவற்றை சமைப்பதில் காட்டுவதில்லை. உணவை சமைப்பதற்கான பொறுமை மற்றும் விருப்பமும் பெரும்பான்மையானவர்களிடம் இருப்பதில்லை. எனவேதான் சமையற்கலை என்பது எக்காலத்திலும் அழிக்க முடியாத மற்றும் சிறந்த வாய்ப்புகளை உள்ளடக்கிய பணியாக கணிக்கப்படுகிறது.

கணிதவியலாளர்:

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த மனிதனுடன் சேர்ந்தே வளர்ந்து வந்ததுதான் கணிதவியல் துறையாகும். கணிதத்தின் வளர்ச்சியே மனித சமூகத்தின் வளர்ச்சியாக மாறியது என்பதும் வரலாறு காட்டும் உண்மையாகும். வெறும் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்குதல் என்பனவற்றைத் தாண்டிய விரிவான கணித வளர்ச்சிக்கு காலத்தால் அழிவில்லை.

மருந்தியலாளர்:

உடல் நிலை குறித்த ஆராய்ச்சி தேவைப்படும் போது எல்லாம் ஓய்வுடன் சில முக்கிய மருந்துகளும் மனிதனுக்கு தேவைப்படுகின்றன. ஊட்டச் சத்து, விட்டமின்கள், ஆன்டிபயாடிக், வலி மருந்து போன்ற பல்வேறு வகையிலான மருந்துப் பொருட்களை நோயுறும் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மருத்துவம் இருக்கும் வரை மருந்து பொருட்களும் இருக்கும் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை. அதே போல் மனிதன் இருக்கும் வரை நோயுறுவதும் நிச்சயம் என்பதால் காலத்தால் அழியாத மற்றுமொரு துறையாக இந்தத் துறை கணிக்கப்படுகிறது. 

Saturday, 9 November 2013

பசங்க, அம்மா பையனா இருந்தா என்ன பிரச்சனை?

இந்த உலகில் அனைவருக்கும் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் தானே இந்த அழகான உலகிற்கு கொண்டு வந்தது. அத்தகைய அம்மாவை ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி மிகவும் பிடிக்கும். இருப்பினும் ஆண்களுக்கு தான் அம்மா என்றால் உயிர். பெண்களுக்கு அப்பா தான் உயிர். வேண்டுமென்றால் அனைத்து வீடுகளிலும் பாருங்கள், பசங்க எல்லோருமே, அவர்களது அம்மாக்களிடமே மிகவும் பாசமாக நடந்து கொள்வார்கள். இவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பசங்களுக்கு திருமணம் ஆனப் பின்பு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைவது தான் காரணம். ஆகவே ஆண்கள் அம்மாவின் மீது மிகவும் பாசம் உள்ளவர்களாக இருந்தால், திருமணத்திற்குப் பிறகு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அனுபவசாலிகள் கூறுவதைப் பார்ப்போமா!!!

ஆண்கள் பெரும்பாலும் காதலில் விழுகிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயம் தங்கள் அம்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாகத் தான் இருக்க வேண்டும். இதை கண்டிப்பாக அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் எப்போது பிரச்சனை வருகிறதென்று தெரியுமா? அது அனைத்தும் ஆண்களால் தான். ஏனென்றால், ஆண்கள் இதுவரை தன் அம்மாவின் செயல்கள் அனைத்தையும் மிகவும் நேசிக்கிறார்கள், ஆகவே அவர்களுக்கு வரும் துணைவியும், தன் அம்மாவைப் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதனால் அவர்கள் துணையிடம் ஏதேனும் சொல்லப் போக, அதனால் பிரச்சனைகள் வரும்.


உதாரணமாக, மனைவி ஏதேனும் சமைத்தால், அந்த சுவை தன் அம்மாவின் கைமணத்தைப் போல இல்லையென்றால், அந்த நேரத்தில், அவர்கள் "என் அம்மா இப்படி செய்ய மாட்டாங்க. என் அம்மா சமையல் யாருக்குமே வராது." என்றெல்லாம் சொல்வார்கள். இந்த நேரத்தில் அவள் ஆசையாக சமைத்துக் கொடுத்ததைப் பற்றி பேசாமல், புகார் கூறினால் யாருக்கு தாங்க கோபம் வராது? இப்ப சொல்லுங்க, கோபம் வருவது தவறா?

தவறில்லை தான். இருந்தாலும், இந்த நேரத்தில் துணைவிகள், தன் கணவனைப் பற்றி தவறாக எண்ணக் கூடாது. அவர்களுக்கு அம்மாவைப் போல் துணையின் மீதும் அதிகப் பாசம் இருக்கும். சொல்லப் போனால் அவர்களுக்கு இருவருமே, இரண்டு கண்கள் போன்று. எதற்கு அப்படி பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு மனைவியை விட அம்மாவின் மீதே அதிக அன்பு உள்ளது என்பதை தன்னை அறியாமல் வெளிப்படுத்திவிடுகின்றனர். என்ன வேண்டுமென்றால், செல்லமாக ஒரு குட்டி சண்டை போட்டு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அந்நேரத்தில் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

  
முக்கியமாக திருமணத்திற்குப் பின் அனைத்து பெண்களும் தங்கள் கணவரிடம் "உங்களுக்கு யார் முக்கியம், அம்மாவா இல்லை நானா?" என்று கேட்கின்றனர். அனைத்து மனைவியும் முதலில் இந்த மாதிரியான கேள்வியை கேட்பதை விட வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு அவர்கள் அம்மா தான் முக்கியம், அதற்காக உங்கள் மீது பாசம் இல்லை என்று நினைக்க வேண்டாம்.


 அதிலும் எப்போதெல்லாம், மாமியாருடன் சண்டை வந்தாலும், அப்போது அதனை ஆண்களிடம் சொன்னால், அவர்களால் அந்த நேரத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில் இருவருமே அவர்களுக்கு முக்கியம் தான். ஆகவே அவர்கள் எதுவுமே சொல்லாமல் சென்று விடுவர். ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் மனைவியிடம் சொல்ல நினைப்பது, "என் அம்மாவிற்கு வயதாகிவிட்டது, அவர்கள் ஏதோ ஒரு டென்சனில் அப்படி நடக்கிறார்கள். நீ என் உயிர், நீ இதை புரிந்து கொண்டு நடந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்" என்பது தான். ஆகவே இவை அனைத்தையும் புரிந்து கொண்டு மனைவி நடந்தால், பிரச்சனையில்லை.

அனைத்து ஆண்களும் ஒரு உணர்ச்சிவயப்பட்டவர்கள். அதிலும் அம்மா பையன் என்றால் சொல்லவே வேண்டாம். இதை அனைத்து அம்மா மற்றும் மனைவிகள் புரிந்து நடந்தால், வாழ்க்கை இனிமையாக செல்லும். ஆனால் ஆண்கள் திருமணத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி தன் அம்மாவின் மீது மிகுந்த அன்பை கொண்டிருப்பார்கள்.

இதனை அனைத்து பெண்களான மனைவிகளும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அதில் முக்கியமாக ஆண்கள் அவர்களது அம்மாவை எவ்வளவு நேசிக்கிறார்களோ, அதே அளவு தங்கள் மனைவியையும் நேசிக்கிறார்கள். இதை அனைத்து மனைவிகளும் மனதில் கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து நடந்தால், வாழ்க்கை நன்கு சந்தோஷமாக இருக்கும்.

ஆகவே எப்படி ஆண்களுக்கு இந்த உலகில் தன் அம்மாவை விட உயர்ந்தது எதுவும் இல்லை என்று நினைக்கிறார்களோ, அதேப்போல் தான் தன் மனைவியையும் நினைக்கிறார்கள் என்பதை அனைத்து பெண்களின் மனதிலும் இருக்க வேண்டும்.

முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா!

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் இப்போட்டியில், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.

மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில், இன்று நடைபெற்ற முதல் சுற்று டிரா ஆனது. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சுற்றில் இரண்டு வீரர்களும் தலா 16 நகர்த்தல்களுக்குப் பிறகு போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற போட்டியுடன், விஸ்வநாதன் ஆனந்தும் கார்ல்செனும் 29 முறை மோதியுள்ளனர். இதில் வெற்றி கணக்கில் 6-3 என ஆனந்த் முன்னிலையில் இருக்கிறார். 20 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.

முத்தான முப்பது விஷயங்கள்!

* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம் என்கிறார்கள். இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.

* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர். அக்கால இலக்கியங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும் முத்துமாலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* பழங்காலத் தமிழ் மகளிர் முத்து மாலை அணிந்துள்ளனர். முத்துக்கள் நிரப்பப்பட்ட சிலம்புகளையும் அணிந்துள்ளனர்.

* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. முத்து உருவாகுதலை முத்து விளைகிறது என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

* மெல்லுடலிகள் என்ற பிரிவின் கீழ் வரும் கடல்வாழ் உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய க்வாட்ருலா, யூனியோ, மார்கரிட்டேனே என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.

* கடலில் எல்லா இடங்களிலும் முத்து கிடைப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே முத்து கிடைக்கிறது.

* முத்துக்கள் என்பது அரகோனனட் என்றும் ஒரு வகையான சுண்ணாம்புப் (கால்சியம் கார்பனேட்) படிகங்களால் ஆனவையாகும்.

* கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு, சுமார் இருபது மீட்டர் வரை உள்ள ஆழங்களில் சிப்பிகள் படுகைகளாகக் காணப்படுகிறது. மூச்சடக்கிக் கொண்டு கடலுக்குள் மூழ்கி இச்சிப்பிகளை சேகரித்து வருதலே முத்துக் குளித்தல் எனப்படுகிறது.

* தற்போது நவீன முறையில் சிப்பிகள் அள்ளப்படுகின்றன. எல்லா சிப்பிகளிலும் முத்து காணப்படுவதில்லை.

* முத்துக்கள் பல வகைப்படும். ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும்.

* பத்து நிறங்களில் முத்து கிடைக்கிறது. எனினும் பொதுவாக கிரீம் நிறமாகவோ அல்லது பிங்க் நிறமாகவோதான் இருக்கும்.

* வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன் நிறங்களிலும் முத்து காணப்படுகிறது. அந்தமான் தீவுகளில் கருப்புநிற முத்துக்கள் கிடைக்கின்றன.

* பொதுவாகவே முத்துக்கள் உருண்டையாக இருக்கும். ஆனாலும் நீர்த்துளியின் வடிவத்திலோ சற்று ஒழுங்கற்ற உருண்டை வடிவத்திலேயோ முத்து காணப்படலாம்.

* முத்துச் சிப்பிகளின் ஆயுட்காலம் ஐந்தரை ஆண்டுகளாகும். முத்துக்களின் வாழ்நாள் 100 முதல் 300 ஆண்டுகளாகும். சில முத்துக்கள் 500 ஆண்டுகள் வரை இருக்கும், அதன்பின் முத்துக்களின் பளபளப்பு குறைந்து நிறம் மங்குவதுடன் முத்துக்கள் மேல் வெடிப்பு ஏற்படும்.

* முத்துக்களை யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல்சூடு நீங்குமென மருத்துவர்கள் குறிப்பிடுகின்றன.

* உலக அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஜப்பான் - இந்திய அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஐதராபாத் நகரம். தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் முத்து அதிகம் கிடைக்கின்றது.

* சீனா, ஜப்பான், ஹாங்காய், இலங்கை நாடுகளிலிருந்து முத்துக்கள் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மும்பையில் பெருமளவில் விற்பனையாகிறது.

* சந்தைகளில் விற்கப்படும் முத்துக்கள் மீன் வாசனையோடு இருக்கும்.

* சில வகையான ரசாயனக் கரைசலில் முத்துக்களை மூழ்க வைத்து உலர வைக்கும் போதுதான் முத்துக்கள் வெண்மையான நிறத்தைப் பெறுகின்றன.

* உலக அளவில் மன்னர் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சிறப்பான முத்துக்கள் கிடைக்கின்றன.

* இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலப் பெண்கள்தான் அதிக அளவில் முத்து மாலைகளைச் செய்து அணிந்து கொள்கின்றனர்.

* தற்போது செயற்கையில் சிப்பிகளினுள் திரவத்தைச் செலுத்தி செயற்கை முத்து தயாரிக்கிறார்கள்.

* 12ம் நூற்றாண்டிலேயே சீனர்கள் வளர் முத்துக்களை உருவாக்கியுள்ளனர். செயற்கை முத்துக்களின் தந்தை எனப்படுபவர் மிகிமாட்மோ என்ற ஜப்பானியர் ஆவார். 1893ல் முதல் முறையாக செயற்கை முறையில் முத்தை உருவாக்கினார்.

* முத்துக்களை ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும். தங்க நகைகளோடோ அல்லது இதர ஆபரணங்களோடோ முத்து நகைகளை வைக்க வேண்டாம்.

* காற்றுப்புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டும். ஸ்பிரே மற்றும் வாசனைப் பொருட்களுடன் முத்து மாலைகள் வைக்க வேண்டாம்.

* முத்து மாலையைப் போடுவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தித் துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.

* காகிதம், சாயம் போகும் துணியில் முத்தை வைக்க வேண்டாம். இவற்றால் முத்தை துடைக்கக் கூடாது.

* அமிலங்கள், இரசாயனப் பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.

* முத்து சிறந்த மருத்துவப் பொருளாகும். பல்வேறு நோய்களை முத்து தீர்க்கிறது. முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகள் கலந்து பல்வேறு மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.

* முத்து இளமையைக் காக்கும். அழகு சாதனங்கள் தயாரிக்க முத்து பயன்படுகிறது.

* நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்த முத்து பயன்படுகிறது.


காமன்வெல்த் மாநாடு : சல்மான் குர்ஷித் பங்கேற்பு


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்றும், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போவதாகவும் வெளியுறவுத் துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபட்சவை காப்பாற்றுவதற்காக இலங்கையில் நடத்தப்படும் இந்தக் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், யாழ்ப்பாணத்துக்கு இந்தியக் குழுவை வழி நடத்திச் செல்வது குறித்தும் அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

முன்னதாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழகத்தில் எழுந்துள்ள உணர்ச்சிபூர்வ போராட்டங்களை எடுத்துச் சொல்லி, இதனைத் தவிர்க்குமாறு தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் வற்புறுத்தினர். தேர்தல் வருவதை ஒட்டி, தமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் எந்தவித பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறினர். 
 
ஆனால், வெளியுறவு அமைச்சகம், இந்தியா, இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றால், அது, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இன்னும் அதிக இடம் அளித்ததாகிவிடும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கக் காரணம் ஆகிவிடும், எனவே அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top