.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 5 November 2013

வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்த்து வாங்க... பக்குவமாகப் பராமரிக்க...

வரவேற்பறையில் ஒரு மூங்கில் சோஃபா செட், பெட்ரூமில் நேர்த்தியான படுக்கை விரிப்புடன் இருக்கும் கட்டில், சமையலறையில் வரிசையில் அமர்ந்திருக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள், பாத்ரூமில் பேஸ்ட், பிரஷ்களை சுமக்கும் 'மிக்கி' வடிவ குட்டி பிளாஸ்டிக் கூடை..!


ஆம்... இப்படி நம் வீட்டுப் பொருட்கள்தான் நம் பொருளாதார நிலைமை, ஒழுங்கு, ரசனை, விருப்பங்களை நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு தெரிவிக்கிற கண்ணாடி! அத்தகைய வீட்டு உபயோகப் பொருட்களை தேர்ந்தெடுக்க... பராமரிக்க... டிப்ஸ்களை அடுக்கியுள்ளோம் இங்கே! உங்கள் வீட்டுப் பொருட்களின் அழகும் ஆயுளும் அதிகரிக்கட்டும்!


'ஹவுஸ் கீப்பிங்'-ல் குட் வாங்க..! வீட்டில் உள்ள பொருட்களின் இடைவிடாத பரமாரிப்புதான் நம் சுத்தத்தையும், அழகியலையும் சொல்லாமல் சொல்லும். அதற்கு...



1. வீட்டை அலங்கரிக்கும் 'ஷோ கேஸ்' பொம்மைகள் அல்லது பொருட்களை அடிக்கடி துடைத்துச் சுத்தப்படுத்தினால், அவை எப்போதும் கண்கவர் அழகில் இருக்கும்.



2. ஃப்ளவர்வாஸ் பூக்களை மாதம் ஒருமுறை கொஞ்சம் சோப்புத் தூள் கலந்த தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து நன்கு அலசினால், புதுப்பொலிவுடன் இருக்கும்.



3. திரைச்சீலைகள், குஷன் கவர், சோஃபா கவர், பெட் ஸ்ப்ரெட்... இவற்றை மாதம் இருமுறையாவது மாற்றுவது வீட்டுக்கு அழகை மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.



4. வீடு துடைக்கும் 'மாப்'பை பயன்படுத்திய பிறகு, நன்கு அலசி வெயிலில் காய வைத்தால் ஈரவாடை வராது; நீண்ட நாள் உழைக்கும். 'மாப்' தேய்ந்துவிட்டால், அதை மட்டும் மாற்றிக் கொள்ளலாம், ஸ்டிக் மாற்றத் தேவையில்லை.



5. துடைப்பத்தை படுக்க வைக்காமல், அடிப்பாகம் தரையிலும் நுனிப்பகுதி மேல்நோக்கியும் இருக்குமாறு வைத்தால், அது வளையாமல் எப்போதும் நேராக இருந்து சரியாக சுத்தப்படுத்தும். பாத்ரூம்களில் பயன்படுத்தும் தென்னை துடைப்பத்தை பாத்ரூமிலேயே வைக்காமல் அவ்வப்போது வெயிலில் வைத்தால், ஈரத்தினால் பூஞ்சான் தாக்காது; வாடையும் வராது.


 சமையலறை பொருட்கள் பராமரிப்பு...



6. ஒவ்வொரு முறை மளிகைப் பொருட்கள் தீரும்போது, அது இருந்த டப்பாக்களில் உடனே மீண்டும் பொருட்களை நிரப்பாமல், அவற்றையெல்லாம் கழுவிச் சுத்தப்படுத்தி காய வைத்து, பின் கொட்டி வைப்பது நலம். எண்ணெய் கன்டெய்னர்களை மாதம் இருமுறை தேய்த்தால், எண்ணெய்ப் பிசுக்கு சேராது.



7. பாத்திரம் கவிழ்த்து வைக்க எவர்சில்வர் கூடையைப் பயன்படுத்துபவர்கள், கூடையின் அடியில் ஒரு துணியை விரித்து, பின்பு பாத்திரத்தைக் கவிழ்த்தால், கூடை துருப்பிடிக்காமல் நீண்ட நாள் வரும். அவ்வப்போது துணியை மாற்றினால் போதும்.



8. அரிவாள்மனை இப்போதெல்லாம் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மெட்டீரியலில்தான் அதிகம் வருகிறது. இதனை வாங்கும்போது, முனையில் தேங்காய்த் துருவி இல்லாமல் வாங்குவது, நீண்டநாள் உழைக்க உதவும். காரணம்... தேங்காய் துருவும்போது, அந்த ஆட்டத்தால் ஸ்டாண்ட் உறுதி குலைந்துவிடும் என்பதுதான். தேங்காய் துருவியைத் தனியாகக்கூட வாங்கிக் கொள்ளலாம்.
 

சீப்பு, கண்ணாடியைப் பராமரிக்க...




9. அகலமான பற்கள் கொண்ட சீப்பு, நார்மலான சீப்பு, சிக்கெடுக்க, வகிடெடுக்க ஏதுவான 'டெயில் கோம்ப்' எனப்படும் பின்பக்கம் குச்சிபோல் நீண்ட சீப்பு, பேன் சீப்பு, ஆண்களுக்கான வட்ட சீப்பு, குழந்தைகளுக்கான 'சாஃப்ட் பிரஷ்' சீப்பு என்று அனைத்து ரகத்திலும் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம்.



10. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனித்தனி சீப்பைப் பயன்படுத்தினால் தலைமுடி ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். விருந்தினர்களுக்கு என்று ஒரு சீப்பை ஒதுக்கிவிடுவது இன்னும் நலம், நாகரிகம்.



11. சீப்புகளை வாரம் ஒருமுறை சோப் நீரில் ஊறவைத்து, அதற்கென உள்ள பிரஷ்ஷில் சுத்தம் செய்துவிட்டால், எப்போதும் சீப்பும் தலையும் சுத்தமாக இருக்கும்.



12. வார்ட்ரோப் கண்ணாடி, பீரோ கண்ணாடி, நிலைக் கண்ணாடி என்று எதுவாக இருந்தாலும், அதன்மேல் டால்கம் பவுடரைத் தூவி, ஈரமில்லாத துணியால் துடைக்க, கிரிஸ்டல் கிளியராகும்.

 
'டாய்லெட் செட்'கள் பராமரிப்பு...



13. குளிக்கும் சோப்பை வைக்கும் டப்பா, சோப்பைவிட கொஞ்சம் அளவில் பெரியதாக இருந்தால்தான், எடுக்கவும் வைக்கவும் எளிதாக இருக்கும். சோப் வைக்கும் டப்பாக்களில் ஓட்டைகள் இருப்பதுடன், சற்று உயரமாகவும் இருந்தால்தான் நீர் வடிவது எளிதாக இருக்கும்.



14. துவைக்கும் சோப்பை அதற்கான வலைபோன்ற பையான 'மெஷ்'ஷில் போட்டுப் பயன்படுத்தலாம். இதனால் அது கைகளில் அலர்ஜியை உண்டாக்குவது தவிர்க்கப்படுவதுடன், சோப்பும் அதிகமாக கரையாது.



15. பல் துலுக்கும் பிரஷ்ஷை 3 மாதத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். முழுக்கமுழுக்க தேய்ந்தபின்புதான் மாற்றுவேன் என அடம் பிடித்தால், விரைவில் பல்லையும் மாற்ற வேண்டி வரலாம். அதேபோல, பிரஷ், பேஸ்ட் வைக்கும் ஸ்டாண்ட்டையும் அவ்வப்போது வெந்நீரில் கழுவி வைக்கலாம்.



16. வீட்டில் குழந்தைகளுக்கு பிரஷ் வாங்கும்போது வெவ்வெறு நிறங்களில் வாங்கி விட்டால் குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிக்கத் திணற மாட்டார்கள். 'என் பிரஷ்ஷை அவ எடுத்துட்டா' என காலையிலேயே வீட்டில் கச்சேரி ஆரம்பமாவதையும் தடுக்கலாம். குழந்தைகளுக்கான பிரத்யேக 'பேபி பேஸ்ட்', அதிக மின்ட், காரம் இல்லாதது. குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.



17. பேஸ்ட்டை உபயோகிக்கும்போது, அடியிலிருந்து அழுத்திக் கொண்டு வந்தால் காற்றுப் புகுந்து அதன் தரம் குறையாது.



18. பித்த வெடிப்புக்கான 'ஃபுட் ஸ்க்ராப்', 'ப்ஃயூமிக் ஸ்டோன்', உடல் தேய்ப்பதற்கான 'பாடி மெஷ்'... இவற்றையெல்லாம் தேவையைப் பொறுத்து பாத்ரூமில் வாங்கி வைக்கலாம்.


பாத்திரங்கள் பத்திரம்!



மண்பாண்டங்களைப் புழங்கினார்கள் நம் பாட்டன், பூட்டன்கள். செம்பு, பித்தளை, அலுமினியம், எவர்சில்வர், காப்பர் கோட்டட் என்று பரிணமித்து, இப்போது பிளாக் மெட்டல் பாத்திரங்கள் வரை வந்துவிட்டோம் நாம். அந்தப் பாத்திரங்களை வாங்குவதற்கும் பராமரிப்பதற்குமான பக்குவங்கள் இங்கே...



19. எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கும்போது தக்கைபோல் இல்லாமல், நல்ல கனமான பாத்திரங்களாக பார்த்து வாங்க வேண்டும். இல்லையெனில் சீக்கிரமே நெளிந்துவிடும். பாத்திரத்தின்மேல் போடப்பட்டிருக்கும் பாலீஷ், முழுமையாக எல்லா இடங்களிலும் சரியாக போடப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கினால், வீட்டுக்கு வந்தபின், 'அடக் கடவுளே... என்ன இது? இந்தப் பக்கம் கறுப்பா, மங்கலா இருக்கே' என்று புலம்ப வேண்டியிருக்காது.



20. எவர்சில்வர் பாத்திரங்களை சிலசமயம் பால் காய்ச்ச, உணவை சூடுபடுத்த என்று அவசரத்துக்காக அடுப்பில் வைக்கும்போது, உள்ளே கறை படிந்து கறுப்பாகலாம். அதனைப் போக்க, எலுமிச்சை சாறு கலந்த தண்ணீருடன் பாத்திரத்தை சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து, பின் தேய்த்தால் கறைகள் நீங்கும்.



21. செம்பு, பித்தளைப் பாத்திரங்களில் அதன் அடிப்பகுதி கனமாக இருக்கிறதா, வார்ப்பு, ஃபினிஷிங் சரியாக உள்ளதா என்றெல்லாம் பார்த்து வாங்குவது புத்திசாலித்தனம். இல்லை- யெனில், இடையில் வார்ப்பு விட்டுப்போய், கையைப் பதம் பார்க்கலாம்.



22. பித்தளைப் பாத்திரங்கள் தண்ணீர், காற்று அதிகம்பட்டுக் கறுத்துப் போய்விடும். அதனைப் போக்க எலுமிச்சை, புளி, புளிச்சக் கீரைத் தண்ணீர் போன்ற புளிப்புத்தன்மை கொண்ட பொருட்களால் துலக்கினால் பளபளக்கும். பித்தளைப் பாத்திரங்களை துலக்குவதற்கென சில பிரத்யேக பவுடர் வகைகளும் மார்கெட்டில் கிடைக்கின்றன.



23. இப்போதெல்லாம் 'பிளாக் மெட்டல் பாத்திரங்கள்' என்று கறுப்பு நிறத்தில் அழகழகான சமையல் பாத்திரங்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவையும், அலுமினியம்தான். ஆனால், வழக்கமான பாணியில் அல்லாமல் வேறு வகையில் அலுமினியத்தை உருக்கித் தயாரிக்கப்படும் பாத்திரங்கள். அழகான கிச்சன் லுக் விரும்பவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பராமரிப்பும் எளிதுதான்.



24. நான்-ஸ்டிக் பாத்திரங்கள் அடிப்பிடிக்காது என்பதுதான் அதன் ப்ளஸ்! இப்போது இதில் 'டிரிபிள் கோட்டட்' பாத்திரங்கள் வரை வந்துள்ளன. நீண்ட நாள் உழைப்புக்கு இவற்றை நம்பலாம்.



25. நான்-ஸ்டிக் பாத்திரங்களை... உப்பு, எண்ணெய், முட்டைப் பசை போன்றவற்றை தாங்குமா என்பதை உறுதிசெய்து வாங்கலாம். ஸ்க்ராட்ச் ப்ரூஃப் டெஸ்ட், சால்ட் டெஸ்ட், ஆயில் டெஸ்ட், எக் டெஸ்ட் போன்றவற்றின் முடிவுகளையும் சில நிறுவனங்கள் விளக்கக் கையேட்டில் கொடுத்திருப்பார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



26. நான்-ஸ்டிக் பாத்திரங்களில் தவா, கடாய், ஆப்பச் சட்டி, பேன், ஃப்ரைபேன் என இவற்றில் அதிக வகைகள் உள்ளன. இவற்றின் விலை அதிகம். எனவே, இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் வாங்கி அடுக்காமல், தேவையானதை மட்டும் வாங்குங்கள்.



27. நான்-ஸ்டிக் பாத்திரங்களை கரகரப்பான மெட்டல் மற்றும் பிளாஸ்டிக் ஸ்க்ரப் கொண்டு துலக்கினால், அதன் ஒரிஜினாலிட்டி போய்விடும். எனவே, ஸ்பான்ச் ஸ்க்ரப்களால் துலக்குவது நலம். கூடவே நான்-ஸ்டிக் பாத்திரங்களில் எவர்சில்வர் கரண்டிகளைவிட, மரக் கரண்டிகளை பயன்படுத்துவதே பரிந்துரைக்கத்தக்கது என்பது, நாம் அறிந்ததுதானே?!



28. சாதாரணப் பாத்திரங்களைவிட, காப்பர் பாட்டம் பொருத்தப்பட்டவை, நம்முடைய சமையலை விரைவுபடுத்தும். சீக்கிரமாகவே சூடு ஏறுவதுதான் காரணம். அடுப்பிலும் இருக்கட்டும் அக்கறை!



மண்ணெண்ணெய் அடுப்போ, கேஸ் ஸ்டவ்வோ... அதை ஒழுங்காக இயங்க வைப்பதற்கான 'எரிபொருள் டிப்ஸ்'கள் இங்கு...



29. மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் அடியில் அழுக்குப் படிந்து, ஸ்டவ் ஓட்டையாகலாம். அதைத் தவிர்க்க, மண்ணெண்ணெயை ஸ்டவ்வில் ஊற்றும் முன், அதை வடிகட்டி ஊற்றினால் நோ பிராப்ளம்.



30. ஸ்டவ்வை பற்ற வைப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் குச்சியால் மட்டும் அதை பற்ற வைப்பது, ஸ்டவ்வின் ஆயுள் காலத்தை அதிகரிக்கும். மாறாக, தீக்குச்சிகளைப் கொளுத்திப் போட்டு பற்றவைத்தால், அவை உள்ளே அடைத்துக்கொள்ளும்.



31. கண்டிப்பாக செய்யக்கூடாத விஷயம், ஸ்டவ்வை தண்ணீர் விட்டு அணைப்பது. அது திரியையும், ஸ்டவ்வின் மேற்பகுதியையும் சீக்கிரம் கெடுத்துவிடும். பதிலாக, அணைப்பதற்காகவே கொடுக்கப்பட்டுள்ள மூடியைப் பயன்படுத்துங்கள். அதுதான் ஸ்டவ்வுக்கு பாதுகாப்பு.



32. கேஸ் ஸ்டவ்களில் இப்போது இரண்டு மேடைகள், நான்கு பர்னர்கள் உள்ள அடுப்புகள் வரை கிடைக்கின்றன. குடும்பத்தின் தேவையைப் பொறுத்து வாங்கிக் கொள்ளலாம்.



33. பெரும்பாலும் உள்நாட்டுத் தயாரிப்பு ஸ்டவ்களை பயன்படுத்துவது நலம். இம்ப்போர்டட் ஸ்டவ்களில் நாம் உபயோகிப்பதுபோல டியூப் இணைப்பு பக்கவாட்டில் இல்லாமல், நாம் பார்க்கவே முடியாதபடி கீழே இருக்கும். இதற்குப் பழக்கபடாத நாம், அதைக் கையாள்வதில் திணறும்போது எரிவாயு கசியும் ஆபத்து அதிகம்.



34. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு கேஸை கடத்தும் டியூப், உறுதியான ரப்பர் டியூப்பாக இருந்தால் எலிக்கடி, லீக்கேஜ் பிரச்னைகள் இருக்காது. தரமான பலவகை டியூப்களும் தற்போது கிடைக்கின்றன.



35. வீட்டுக்கு வெளியே சிலிண்டரை வைத்து, அடுப்புக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் சிலர். 'கசிந்தாலும் வீட்டுக்குள் எந்தப் பிரச்னையும் இருக்காது' என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், சிலிண்டர் மாற்றும்போது ஒயர் இழுக்கப்படுவதால் வீட்டின் உள்ளே ஸ்டவ்வில் பொருத்தப்பட்டிருக்கும் ஒயரின் முனை லூஸாகி, வீட்டுக்குள்ளும் கேஸ் லீக்காகலாம். உஷார்!



36. கேஸ் ஸ்டவ்வை சுத்தப்படுத்துவதற்கு தினமும் அதை சோப் தண்ணீரால் அலச வேண்டிய அவசியம் இல்லை. தினமும் அதை ஈரத் துணியால் அழுந்தத் துடைத்தாலே போதுமானது. சமையலின்போது அதன்மேல் பாலோ, வடிநீரோ பட்டுவிட்டால் உடனே துடைத்து விட, ஈரம் தங்காது. இதனால் பர்னர், ஸ்டாண்ட் துரு பிடிக்காது.



37. ஸ்டவ் ஸ்டாண்டுகளை அவ்வப்போது தேங்காய் எண்ணெய் வைத்துத் துடைத்தால், துரு தூர நிற்கும்.



38. 'இண்டக்ஷன் ஸ்டவ்' எனப்படும் மின்சார ஸ்டவ் தற்போது பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மின்சாரம் அதிக அளவு செலவாவது இல்லை. சாதாரண எவர்சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம் காப்பர் பாட்டம் பாத்திரங்களைத் தவிர்ப்பது நல்லது.


அத்தியாவசியம்... இவை அத்தியாவசியம்! 'இதெல்லாம்கூட இல்லாமலா இத்தன வருஷம் சம்சாரம் பண்ற..?' - இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளாமல் இருக்க, ஆடம்பரப் பொருட்கள் இல்லாவிட்டாலும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்கள்... உங்கள் வீட்டிலும்.


39. பிரம்மச்சாரி என்றாலும், பெருங்குடும்பம் என்றாலும் அந்தக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு இட்லி பாத்திரம், ஒரு தோசைக்கல், ஒரு சப்பாத்திக்கல் ஆகியவை இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள். சிலர் தோசைக்கல்லிலேயே சப்பாத்தியும் சுடுவார்கள். இதனால் அடுத்து அதில் தோசை சுடும்போது, மாவு திரண்டு திரண்டு நின்று படுத்தி எடுக்கும். எனவே, சப்பாத்திக்கு என்று ஒரு தனி கல் வாங்கித்தான் வையுங்களேன்.



40. மிக்ஸியில் பருப்பு கடைந்தாலும், கீரை மசித்தாலும் அதன் ஒரிஜினல் சுவை கெட்டு விடும். சில நுண்சத்துக்களும் அழிந்துவிடும். எனவே, பருப்பு மத்து ஒன்று எப்போதும் இருக்கட்டும்.



41. என்னதான் மளிகைப் பொருட்களை கடைகளில் சுத்தப்படுத்தி, பாலித்தீன் பைகளில் அடைத்து விற்றாலும் தூசு, தும்பு இருந்தால் புடைக்க ஒரு முறம் வேண்டாமா..? வேண்டும்!



42. 'கரன்ட் கட்' - இன்று தமிழக மக்களைப் படுத்தும் வார்த்தை. அவசரத்துக்கு ரசத்துக்கு பூண்டு நசுக்கக்கூட மிக்ஸியை எதிர்பார்த்திருந்தால், வேலைக்கு ஆகாது. எனவே, பெரிய அம்மிக் கல் வாங்கி வைக்க முடியாவிட்டாலும், சின்ன உரல் கல் ரொம்ப ரொம்ப அவசியம்.



43. எமர்ஜென்ஸி லைட் சேவை இந்தக் கோடை 'கரன்ட் கட்' காலத்தின் அவசியத் தேவை. கூடவே, எப்போதும் அதில் போதுமான சார்ஜ் ஏற்றி வைப்பதும் முக்கியம்.

 

எலெக்ட்ரானிக் பொருட்களின் அதிக ஆயுளுக்கு! இன்று வீட்டு உபயோகப் பொருட்களில் பதிக்குப்பாதி மின்சாரத்தை நம்பித்தான் இருக்கின்றன. அவற்றை வாங்கும்போதும், பராமரிக்கும் போதும் சில விஷயங்களில் கவனமாக இருந்துவிட்டால், காலத்துக்கும் குடைச்சல், எரிச்சல், துன்பம் இல்லை. அதற்காக...


44. மின்சாதனப் பொருட்களை வாங்கினால் நல்ல பிராண்டில், வாரண்டி மற்றும் எளிய சர்வீஸ் வசதிகளுடன் வாங்கவும். 'மின்சாரம் சேமிக்கப்படும்' என்ற உத்திரவாதம் இருந்தால் மிகவும் நல்லது.



45. அனைத்து மின்சாரப் பொருட்களுக்குமான மிகமுக்கியப் பாதுகாப்பு, மின் இணைப்பில் 'எர்த்' கனெக்ஷனைக் கட்டாயம் பயன்படுத்துவதும், சரியான ஸ்டெபிலைஸரை உபயோகப்- படுத்துவதுமே.



46. வீடு முழுவதும் நெருப்புப்பொறி வராத தரமான சுவிட்சுகளையே பயன்படுத்தலாம். அவை விலை அதிகமென்பதால் குறைந்தபட்சம் கிச்சனில் மட்டுமாவது பயன்படுத்தலாம்.


மிக்ஸி:



47. அதிகம் சத்தம் போடாத மிக்ஸிகளே நல்லது, 'சிறந்த விமானம் என்பது குறைந்த ஒலியுடன் வேகமாக பறக்கும்' என்ற அறிவியல் விதி, மிக்ஸிக்கும் பொருந்தும்.



48. அதிகமாக வைப்ரேட்டாகும் மிக்ஸிகள் நல்லவை அல்ல; அந்த வைப்ரேஷனே மிக்ஸியின் ஆயுளைக் குறைத்து விடும்.



49. முன்பெல்லாம் மிக்ஸியின் நடுவே மோட்டாரைப் பொருத்தி இருப்பார்கள். இப்போது அடித்தளத்திலேயே மோட்டார் பொருத்தப்பட்ட வலுவான மிக்ஸிகளும் வந்துவிட்டன. ஆயினும், அந்த மிக்ஸியியை சரியாகப் பயன்படுத்துவதும், பராமரிப்பதும்தான் அதன் ஆயுளை அதிக்கப்படுத்தும்.



50. மிக்ஸியைக் கழுவினால், மோட்டாருக்குள் தண்ணீர் புகுந்து பழுதாகும். எனவே, ஈரத் துணியால் அழுந்தத் துடைத்தாலே போதும். அதேபோல, சரியான பிளேடுகளைப் பயன்படுத்துவதும் முக்கியம்.


கிரைண்டர்:




51. கிரைண்டர் வாங்கும்போது, குடும்பம் பெரியதாக இருந்து அதிக மாவு அரைக்க வேண்டும் என்றால் மட்டும், பழைய ஒற்றைக்கல் கிரண்டரை வாங்கவும். 'டேபிள் டாப்' கிரைண்டர்களே இப்போதைய குறுகலான சமையல் கட்டுகளுக்கு நல்லது, அதனைக் கழுவிப் பராமரிப்பதும் எளிது.



52. கிரைண்டர் வாங்கும்போது அதன் ஆயுளையும் அதிக வேலைத்திறனையும் தீர்மானிக்கும் R.P.M. எனப்படும் அதன் சுற்றும் திறன் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பொதுவாக 960 R.P.M-ல் ஆரம்பித்து 1,350 R.M.P. வரையுள்ள கிரைண்டர்கள் மார்கெட்டில் உள்ளன.



53. கல்லின் இயக்கம் கியர் டைப்பா, பெல்ட் டைப்பா என்பதும் முக்கியம். பெல்ட் டைப்பைவிட, கியர் டைப் சிறந்தது. காரணம், பெல்ட் டைப்பில் அரிசியைப் போட்டுவிட்டு ஆன் செய்தால், கல் நகராது. ஓடும்போதுதான் போட வேண்டும். கியர் டைப்... லோ வோல்டேஜிலும் நன்றாக உழைக்கும்.



54. பழைய மாடல்களில் கிரைண்டரின் கீழே வடியும் நீர், நேராக மோட்டாருக்கு சென்று மோட்டார் பழுதாவது நடக்கும். இப்போது மோட்டாருக்கு போகாமல் கீழே வடியும்படி 'டிரைனேஜ்' எனப்படும் வடிகால் அமைப்புகளுடன் கிரைண்டர்கள் வருகின்றன. பார்த்து வாங்கவும்.



55. மாவு அரைத்த உடனேயே கிரைண்டரை கழுவிவைப்பதும், மோட்டாரின் திறனுக்கேற்ற அளவில் மாவு அரைப்பதும், கல்லைப் பொருத்தும்போதும் கவனமாக இருப்பதும் கிரைண்டரின் வாழ்நாளை அதிகரிக்கும்.



எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள்:




56. 'குக்கர் வெடிப்பு' போன்ற பிரச்னைகளை இது தவிர்க்கும். ஆட்டோமேடிக்காக இயங்கும் இதில் அரிசியைப் போடுவது மட்டுமே உங்கள் வேலையாக இருக்கும். வெந்தபின் அதுவே ஆஃப் ஆகிக்கொள்ளும். சில வகைகளில் டைமர்கூட உண்டு. தேவைக்கு ஏற்ப செட் செய்து கொள்ளலாம். கியாரண்டி, சர்வீஸ் போன்றவற்றுடன் 'தரச்சான்று' இருக்கிறதா என்பதையும் கவனித்து வாங்கவும்.

 

ஃபேன்கள்(Fan):



57. இப்போது 'டேபிள் ஃபேன்'கள் குறைந்துவிட்டன. இடுப்புயர ஃபேன்களையும், சீலிங் ஃபேன்களையும்தான் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். சுற்றிலும் காற்று இருந்து, அதனை ஒரே இடத்தில் குவிக்க வேண்டுமென்றால் இடுப்புயர ஃபேன்கள் பலன் தரும். ஆனால், காற்றை வெளியே இருந்து இழுத்து தர சீலிங் ஃபேன்களே சிறந்தவை.



58. சீலிங் ஃபேன்களை பொதுவான அளவில் வாங்காமல், அறையின் அளவுக்கு ஏற்ற ஃபேனை வாங்கினால்தான் நல்ல காற்றோட்டம் தரும்.



59. சிறிய அறையாக இருந்தாலும், பெரிய பிளேடுகளுடன் கூடிய சீலிங் ஃபேன் இருந்தால் நிறைய காற்று வரும் என்று சிலர் நினைப்பார்கள். இது தவறு. சிறிய அறையில் பெரிய பிளேடுகளுடன் கூடிய ஃபேன்கள், சுற்றுவதற்கே சிரமப்படும். எனவே, சிறிய பிளேடுகள்தான் பொருத்தமாக இருக்கும்.



60. சீலிங் ஃபேன்களை சரியாகப் பொருத்தவும். சுற்ற ஆரம்பித்த உடனேயே 'படக் படக்' என்று சத்தம் வந்தால், சரியாக மாட்டப்படவில்லை என்று அர்த்தம். சரியாக மாட்டப்படாத ஃபேன்கள் பழுதாகும் வாய்ப்புகள் அதிகம்.



61. ஃபேனின் விசிறிகளை அடிக்கடி நன்றாகத் துடைக்கவும். தண்ணீர் தொட்டு துடைத்தால் பெயின்ட் பூத்துப் போய்விடும் என்பதால் எண்ணெய் தொட்டுத் துடைக்கவும்.

 

CFC (Compact Fluorescent Lamp) பல்புகள்:




62. சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு தராத... மின்சார சிக்கனத்துக்கு மிகவும் ஏற்ற பல்புகள் இவை. நல்ல ஒளியையும் தருகின்றன. மின்சார சிக்கனத்தின் பலனை உணர வீட்டில் ஒரு பல்பை மட்டும் CFC பல்பாக மாற்றினால் முடியாது. எல்லாவற்றையும் மாற்றினால்தான் பலன் தெரியும். சுற்றுச்சூழலின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடாக ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு பல்பையாவது இப்படி மாற்றலாம்.



63. CFC பல்புகளின் ஒளி, குண்டு பல்புகளைப்போல எரிச்சலை உண்டாக்குவதில்லை. எனவே, வெயில் காலங்களில் குண்டு பல்புகளைப் பயன்படுத்தாமல் இவற்றைப் பயன் படுத்தும்போது சூழலின் வெப்பம் பெரிதும் குறையும்.



அயர்ன் பாக்ஸ்:



64. மின்சார சேமிப்பும், அதிக வெப்பத்தில் ஆட்டோமேட்டிக்காக நிற்கும் அமைப்பும் உள்ள சராசரி அயர்ன் பாக்ஸ்கள் வீட்டு உபயோகத்துக்குப் போதுமானவை.



65. அயர்ன் பாக்ஸின் ஒயர் அடிக்கடி பிரிந்து பிரச்னை கொடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்கும் வகையில் அயர்ன்பாக்ஸுடன் ஒயர் இணையும் இடத்தில், பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டவையும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்குவதே சிறப்பு... பாதுகாப்பும்கூட!



66. அயர்ன் பண்ணும்போது தண்ணீரை பயன்படுத்தினால், போர் தண்ணீரை தவிர்ப்பது நலம். நீரில் உப்புத்தன்மை இருந்தால், அயன்பாக்ஸில் துரு ஏறி, கொஞ்சம் கொஞ்சமாக பாக்ஸை பதம் பார்த்துவிடும்.



டி.வி:



67. சேனல் புரோகிராம்ஸ், டி.வி.டி., சி.டி., என்று எந்தப் பயன்பாட்டுக்காக டி.வி. வாங்கப் போகிறோம் என்பதை தெளிவுபடுத்திக்கொண்டு டி.வி. செலக்ஷன் செய்வதே சரியாக இருக்கும்.



68. சேனல் புரொகிராம்ஸ் பார்க்கத்தான் டி.வி. தேவை என்றால், சாதாரண கலர் டி.வி-க்களே போதும்.



69. எப்போதாவது டி.வி.டி-யில் படமும் பார்ப்போம் என்றால், சாதாரண கலர் டி.வி. மற்றும் எல்.சி.டி. டி.வி வாங்கலாம்.



70. நல்ல பிரின்ட்டில் உள்ள டி.வி.டி-களையே பார்க்க விரும்புபவர்கள், L.C.D., ஹெச்.டி. (HD-High Definition) ரக டி.வி-க்களை வாங்குவது பயனுள்ளதாக இருக்கும்.



71. அட்வான்ஸான டி.வி-களை வாங்க நினைப்போருக்கு L.C.D. டி.வி-க்கள் சரியான தேர்வு. இவை ஹெச்.டி. டி.வி-க்களைவிட விலை குறைவு.



72. எல்.சி.டி. டி.வி-களில் மானிடர் திரைமீது கவனமாக இருங்கள். பழைய கலர் டிவி-க்களை போல இவற்றின் மானிடர்களுக்கு நீண்ட கியாரண்டி கிடையாது. பழுதானால் சரிசெய்து ஆயுளை நீட்டிப்பதும் கடினம். அப்படியே மாற்ற வேண்டியதுதான்.



73. இப்போது நேரடியாகவே USB Stick, Data Cable போன்றவற்றை உபயோகிக்கக் கூடிய டி.வி-க்களும் வந்துவிட்டன. விரும்பினால் வாங்கிக் கொள்ளலாம். இவற்றில் டி.வி.டி. பிளேயர் இல்லாமலேயே எம்பி-3 பாடல்களைக் கேட்கலாம்.



74. டி.வி. விற்பனையில் இன்னும் பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. எதுவாக இருந்தாலும் தேவையில்லாமல், அதன் பயன்பாடு தெரியாமல் வாங்கும்போது பணம்தான் வீணாகும்! எனவே, பயன்பாட்டை முடிவு செய்துவிட்டு, டி.வி-யை தேடுவதே சிறந்தது.


 
வாக்குவம் கிளீனர்:



75. சோஃபா வாங்குபவர்கள் கூடவே வாக்குவம் கிளீனரையும் வாங்குவது நலம். ஏனென்றால் சோபாவின் அழுக்குகளை முழுமையாக நீக்க, வாக்குவம் கிளீனரால் மட்டுமே முடியும்.



76. வாக்குவம் கிளீனர்கள் விளையாடத் தூண்டும் அமைப்பு உடையவை என்பதால், உபயோகத்துக்குப் பின்பு குழந்தைகளிடமிருந்து மறைத்து வைப்பது நலம்.



77. வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்த உடனேயே வாக்குவம் கிளீனரையும் சுத்தம் செய்யவும். வீட்டுக்கு வெளியே இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

 

வாஷிங்மெஷின்:



78. பொதுவாக 'எக்ஸ்டென்டட் வாரண்டி' உள்ள வாஷிங்மெஷினை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான முடிவு.



79. உப்பு நீர் பகுதியில் உள்ளவர்கள் 'இன்பில்ட் ஃபில்டர்' உள்ள வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுக்கவும்.



80. ஏற்கெனவே வாஷிங்மெஷின் வைத்துள்ளவர்கள், உப்புநீர் உள்ள பகுதிகளுக்கு வீடு மாறினால் ஃபில்டரைப் பொருத்தவும். அளவான துணி, சரியான வாஷிங்பவுடர்... இவையே வாஷிங்மெஷினின் ஆயுளை அதிகரிக்கும்.


ஃப்ரிட்ஜ்:



81. தேவைக்கு சரியான அளவில் ஃப்ரிட்ஜ் வாங்கவும். தரமான பிராண்டும் சர்வீஸும் முக்கியம். மின்சேமிப்பு உத்தரவாதம் இருந்தால் இன்னும் நல்லது.



82. ஃப்ரிட்ஜில் 'இன்ஸ்டன்ட் கூலிங்' போன்ற பல நவீன வசதிகள் இப்போது வந்துள்ளன. ஆனாலும் தேவையில்லாமல் அவற்றை உபயோகித்து மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வேண்டாம்.



83. நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் கதவைத் திறந்தே வைக்கக்கூடாது. திறக்கும் முன்பே எதை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவுசெய்து, உடனே திறந்து மூடுவது நலம். குட்டீஸ் இருக்கும் வீடுகளில் ஃப்ரிட்ஜை லாக் செய்துவிடுவது நலம்.



84. ஃப்ரிட்ஜை கட்டாயம் சமையல் அறையில் வைக்கக் கூடாது! எரிவாயு கசிந்தால், ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் வாயுடன் சேர்ந்து வேதிவினை புரிந்து நெருப்புப் பொறிகள் கிளம்பும். இது ஆபத்தை வரவழைக்கும்.



85. ஃப்ரீஸரில் ஐஸ் சேர்ந்தால் அதை வெளியேற்ற, 'டீ-ஃப்ராஸ்ட்' பட்டனை உபயோகிப்பதே சரியான வழி. டீ-ஃப்ராஸ்ட் பட்டன் வேலை செய்யவில்லை என்றால், அதை சர்வீஸ் செய்ய வேண்டுமே தவிர, குச்சி, கரண்டியை வைத்து ஃப்ரீஸரில் குத்தினால் அதற்குள் செல்லும் கனெக்ஷன் பைப்புகள் வெடித்து, ஆபத்தை விளைவுக்கும் ஜாக்கிரதை.




ஃபர்னிச்சர் செலக்ஷன் மற்றும் புரொடெக்ஷன்! வீட்டுக்கு ஆசை ஆசையாக ஃபர்னிச்சர்களை வாங்கிப் போடும்போது, இந்த டிப்ஸ்கள் நினைவில் இருக்கட்டும்!



சோஃபாக்கள்:



86. லெதர் சோஃபாக்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் தன்மையுடைவை என்பதால், ஏ.சி. ஹால்களில் இதைப் பயன்படுத்தலாம்.



87. லெதர் சோஃபாக்களில் படுத்துத் தூங்குவது நல்லதல்ல. சூடு நம் உடம்புக்கு ஏறி, வியர்த்து சோஃபா நனைவது மட்டுமல்லாமல், உபயமாக இடுப்பு வலியும் கிடைக்கும்.



88. அழகுக்காக ஆசைப்பட்டு, தரையோடு ஒட்டியுள்ள சோஃபாக்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம். காரணம்... அதன் அடியில் சுத்தம் செய்வது கடினம்.



89. அறைக்கு ஏற்ற அளவில் சோஃபாக்களைத் தேர்ந்தெடுத்தால்... அது அலங்காரம். இல்லையென்றால் அது அவஸ்தை. நம் சின்ன ஹாலுக்கு, பிரமாண்ட சோஃபாக்கள் பொருந்தாது தானே! கூடவே, மூன்று பேருக்கான மர சோஃபா அடைக்கும் இடத்தைவிட, ஒன்றரை மடங்கு அதிக இடத்தை அதே கொள்ளளவுள்ள லெதர் சோஃபா அடைத்துக் கொள்ளும் என்பதையும் அதை வாங்கும் முன் ஒருமுறை யோசியுங்கள்.



கட்டில், மெத்தை:



90. சொந்த வீடுகளில் உள்ளவர்கள், நிரந்தரமாக பொருத்தக்கூடிய வலிமையான கட்டில்களை வாங்கலாம். வாடகை வீடுகளில் உள்ளவர்கள், பாகம் பாகமாக கழற்றி மாட்டவல்ல கட்டிலை வாங்கலாம்.



91. 'சோஃபா கம் பெட்' போன்றவற்றை வாங்குவதைவிட, தனி சோஃபா, தனி கட்டிலே சிறப்பானது. 'மல்டி யூஸ்' எனும்போது அவை பழுதாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதோடு மெத்தையைப் போல உடலோடு உறவாட சோஃபாக்களின் பஞ்சுகளால் முடியாது.



92. குழந்தைகள் உள்ள வீடுகளில் உயரம் குறைவான கட்டில்களையே வாங்குங்கள். ஏறவும் எளிது, விழுந்தால் அடிபடுவது பற்றிய பயமும் குறைவு. குழந்தைகளுக்காக தடுப்பு வரம்புகள் அமைக்கப்பட்ட கட்டில்களும் உள்ளன. இவை பாதுகாப்பானவை. ஆனால், விலை அதிகம்.



 93. கட்டிலுக்கு அதிக செலவு செய்துவிட்டு, மெத்தையில் கோட்டை விட்டு விடாதீர்கள். தவறான மெத்தையில் படுப்பதைவிட தரையில் படுப்பதே மேல்! உங்களின் உடல் அமைப்புக்கும், உடல் வெப்ப நிலைக்கும் ஏற்ற மெத்தைகளையே வாங்குங்கள். அதன் உள்ளே உள்ள பஞ்சு, நார், ஃபோம், துணி... இவற்றில் உங்களுக்குச் சரியானது எது என்பதை அறிந்தபின்பே முடிவெடுங்கள். இடுப்பு வலி உள்ளவர்கள் இன்னும் அதிக கவனத்தோடு தேர்வுசெய்ய வேண்டும்.

குழந்தைச்செல்வம் என்பது வரம் தான்... என்பதற்கான காரணங்கள்!!!

தற்போது குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு குழந்தை செல்வத்தின் மகிமையைப் பற்றி பல பெற்றோர்கள் உணராமல் இருப்பதே காரணம்.

வேலைக்காகவும், பிஸியான சமுதாயத்திற்காகவும், இப்படி பலவித காரணங்களுக்காகவும் குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவை பெற்றோர்கள் எடுத்து வருகின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கை தரத்தை குறைக்கின்றது என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் வாழ்க்கை நிலையை உயர்த்தக் கூடியவர்கள். அதற்கான பல காரணங்களை நம்மால் கொடுக்க முடியும். அப்படிபட்ட முக்கியமானதாகவும், கவனிக்கக்கூடிய சில காரணங்களையும் பார்போமா!!!

பொறுப்புணர்ச்சி

குழந்தைக்கு தாயாகும் முன் நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஆனால் தாயான பின் பொறுப்புகள் மிக அதிகம். பொறுப்பான அம்மாவாக இருக்கும் பட்சத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வதை விட, வேறு எந்த வேலையும் முக்கியமில்லை. குழந்தையை கையில் ஏந்தும் தருணத்திலிருந்து பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வரை பொறுப்புகள் குறைவதில்லை. இந்த அக்கறை என்னும் பண்பு சிறந்த தாயாக உருவெடுக்க செய்கின்றது.

மகிழ்தல்

குழந்தை தூங்குவதை கண்டு மகிழ்வதென்பது, இது நாள் வரை பார்த்த விஷயங்களிலேயே சிறந்தது என்று கூறுவர். மேலும் அது நம்மை பரவச படுத்தும் காட்சி என்றும் சொல்வார்கள். அத்தகைய குழந்தையை தொடும் பொழுதும், நெஞ்சோடு அணைத்து கொள்ளும் போது ஒருவித அதிர்வை உணர நேரிடும். அதுவே தாங்க முடியாத மகிழ்ச்சி.

குழந்தைப்பருவம்

குழந்தை வளர வளர நாமும் குழந்தையாய் ஆகின்றோம். முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் விஷயம் என்று எதை நினைக்கின்றீர்களோ, அதை குழந்தையுடன் மகிழ்ச்சியாக செய்வோம். குறிப்பாக தலையணை சண்டை, சிறு பிள்ளை விளையாட்டு போன்றவை.

புதிய பந்தம்

குழந்தைக்கும், தாய்க்குமான உறவை போல வேறு எந்த உறவையும் காண முடியாது. இதில் எல்லா வகையான உணர்ச்சிகளை உணர முடியும். குழந்தை வேண்டாம் என்று நினைத்தால், இவை அனைத்தையும் இழக்க நேரிடும்.

 வாழ்க்கையின் புதிய கோணம்

குழந்தையின் சூழ்நிலையை அனுகும் திறனை கொண்டு, இக்கட்டான சூழ்நிலையை கையாளும் திறனை கற்றுக்கொள்ளலாம். அதிலும் இந்த உலகத்தில் எது தேவை, எது தேவையற்றது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

மன அழுத்தம்

குழந்தைகள் இருந்தால் தேவையில்லாத டென்ஷன் என்று நம்பும் பெண்கள், தயவு செய்து உங்கள் அம்மாவிடம் கேளுங்கள், குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியை கொண்டு வரும் என்பதை உணர்வீர்கள். நாள் முழுவதும் வேளையில் அவதிப்பட்டு வீடு திரும்பும் தாய்மார்கள், வீட்டில் குழந்தைகளால் எவ்வளவு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி அடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் எவ்வளவு டென்ஷன், விரக்தி இருந்தாலும் குழந்தையின் அரவணைப்பில், அனைத்தும் மறந்து போகும் என்பதை உணர முடியும்.

உறவு

குழந்தை செல்வம் கணவருடனான உறவை பலப்படுத்தும். திருமண வாழ்க்கையில் குழந்தை பல அற்புதத்தை நிகழ்த்துகின்றது. குழந்தை பிறந்த உடன் தம்பதியினருடனான அன்பு பலப்படுத்தப்படுகின்றது. மேலும் இடையில் தொலைந்து போன அன்பை திருப்பி தருவது குழந்தை செல்வமே.

முதுமையில் பலம்


வயதானவுடன் உடல் சோர்வடையும் போது, உடல் அளவிலும், மனதளவிலும் ஊன்றுகோளாய் இருப்பது குழந்தைகளே. கவலைகளை கேட்பதற்கும், தோள் சாய்வதற்கும் நம் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள்.

நம்பிக்கை


வாழ்க்கையில் பலவித பாதைகளை கடக்கின்றோம். சில வேலைகளையும், சில விஷயங்களையும் நாம் சுமந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் எழுகின்றது. சில வேளைகளில் விழுவதும் உண்டு. ஆகவே குழந்தைகள் இருந்தால் வாழ்க்கையில் முன்னோக்கி செல்லும் ஆற்றல் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பது சத்தியம்.

Monday, 4 November 2013

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்!


இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட வசதிகளைக் கொண்டும் தனிப்பட்ட இயங்குதளத்திலும் (Operating System) வெளிவருகின்றன.


தற்போது Android, Apple iOS, Windows Phone 8, Blackberry போன்ற இயங்குதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. மேலும் அதிகமான செயல்திறன் கொண்ட Processor, Camera, Network போன்ற பல வகையான சிறப்பம்சங்கள் கொண்ட கருவிகளில் சிறப்பான ஒன்றை வாங்குவது என்பது புதியவர்களுக்கு சிரமமான காரியமே. இதற்காக நமக்கு உதவும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.

 1.GeekaPhone.com


Compare Smartphone Specifications Online

எளிமையான தோற்றத்தை உடைய இத்தளத்தில் காட்டபடும் போன்களை தேர்வு செய்து ஒப்பிடலாம். இதில் மொபைல்களின் அனைத்து விவரங்களான display, processor, camera, video, battery, music போன்றவற்றை ஒரே பக்கத்தில் ஒப்பிடலாம். ஒரே நேரத்தில் 5 மொபைல்களை ஒப்பீடு செய்ய முடியும். மேலும் Popular Comparison களும் இருக்கின்றன.

2.PhoneRocket.com



Compare Smartphone Specifications Online

இந்த தளத்தில் அனைத்து Specifications களுடன் Difference, Benchmarks, Reviews போன்றவையும் அவற்றிற்கான மதிப்பெண்களும் இடம்பெறுகின்றன. மேலும் ஒவ்வொரு வசதியிலும் சிறப்பான மொபைல்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உதாரணமாக Most Processing Power, Fastest Web Browser, Fastest 3D and 2D Graphics, Longest Battery Life போன்றவற்றில் சிறப்பான மொபைல்களை தனித்தனியாக பார்க்கலாம்.

இத்தளம் தான் எனக்கு சிறப்பாகத் தோன்றுகிறது. மேலும் அடுத்து வரும் தளங்கள் அனைத்தும் இவர்களின் நெட்வொர்க் தான். கண்டிப்பாக ஒரு முறை பார்த்து விடுங்கள்.

3. TabletRocket.com

Compare Tablet Specifications Online

இந்த தளத்தில் அனைத்து வகையான டேப்ளட்களை ஒப்பீட முடியும். மேற்கண்ட மொபைல் ஒப்பிடும் தளம் போல இடைமுகம், வசதிகள் தான் இதிலும். ஆனால் இதில் இயங்குதளங்கள் வாயிலாகவும் குறிப்பிட்ட விலைக்குள் இருக்கும் டேப்ளட்களை Sort செய்து பார்க்கவும் முடியும். ஒவ்வொரு வசதியிலும் Best Tablet களும் பட்டியலிடப்பட்டுள்ளன. நேரடியாக அமேசானில் வாங்கவும் இணைப்பு உள்ளது.

4. CameraRocket.com


Compare Cameras Specifications Online
இதில் எல்லாவகையான புதிய கேமராக்களையும் ஒப்பீட்டுப் பார்க்கலாம். இத்தளத்தில் Best image quality in low light, Highest resolution, Cheapest full frame cameras, Fastest focusing போன்றவற்றில் சிறந்த கேமராக்களை அறிந்து கொள்ள முடியும்.

 5.ReaderRocket.com 


Compare E-readers Specifications Online

புத்தகங்கள் படிக்க, ஆன்லைன் வசதிக்கு உதவும் Amazon Kindle போன்ற பலவகையான Reader Device களை ஒப்பிட இத்தளம் உதவுகின்றது. மேலும் இதில்  The best E-Ink readers,Fastest web browser,The best 5" e-readers, The best 6" e-readers போன்ற சிறந்த ரீடர்களை தெரிந்து கொள்ள முடியும்.

'ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!

ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு எஸ்ஏ இன்ஜி. கல்லூரி மாணவர்கள் சாதனை


பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது எச்சரிக்கை மணி அடிக்கிறது.


 tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


இத்தகைய செயல்பாடுகள் மூலம் காரின் சொந்தக்காரரை எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்து,  ஜிபிஎஸ் மூலம் கார் இருக்கும் இடத்தை கண்டறிய உதவுகிறது. அசதி அளவை கணிக்க வேறு புற காரணிகளான வண்டியின் நிலை, வானிலை, தகவல்களை கணிக்கலாம். எதிர்காலத்தில் நபருக்கு நபர் உடல்நலக்குறைவு மற்றும் சிக்னல் வேறுபாடுகளும் ஆய்வு செய்யப்படும். இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரி தலைவர் டி.துரைசாமி, செயலாளர் டி.தசரதன், இயக்குனர் பா. வெங்கடேஷ்ராஜா, முதல்வர் சுயம்பழகன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம!

தனது மக்களுக்குத் தேவையான அளவு உணவை வழங்காத நாடு எனப் பெயர் பெற்றது இந்தியா. எஃப்.ஏ.ஓ. எனப்படும் உணவு மற்றும் விவசாய இயக்கம் தனது 2006-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இந்தியாவில் 21 கோடியே 20 லட்சம் மக்கள் தரமான உணவை பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் பல வருடங்களாக பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் நடைமுறை இருந்தபோதிலும், அந்த திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால், பல முறைகேடுகள் நடந்தேறியதால், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடும் மக்கள் தரமான உணவைப் பெற முடியவில்லை.


nov 4 - edit food_security_

கிராமப்புறங்களில் சரிபாதிக்கும் மேலான குழந்தைகளும் சிறுவர்களும் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள முடியாமல் பசி பட்டினியில் வாடுகிறார்கள். ஆனால், இதே காலகட்டத்தில் நமது விவசாய உற்பத்தி அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது எனும் புள்ளிவிவரமும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சகாய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கான செலவினம் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி அளவில் செய்யப்படும் தகவலும் வெளியாகியுள்ளது. ஆக, விநியோகத் திட்டத்தை நிர்வகிப்பதில்தான் குளறுபடி என்பது நிரூபணமாகிறது.


“”மக்கள் பசியில் வாடும் நிலைமைக்குக் காரணம், அவர்களுக்குத் தேவையான உணவு இல்லை என்பதை விடவும், தேவையான உணவு மக்களிடம் போய்ச் சேரும்படி நிர்வாகம் நடக்கவில்லை என்பதே உண்மை” என நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், “”இந்தியாவின் ஏழ்மையும் பசியும்” என்ற பொருள் பற்றி பேசும்போது குறிப்பிடுகிறார்.
அதுபோலவே இன்றைய நிலையில் மத்திய அரசின் மிகப்பெரிய பசி நீக்கும் திட்டமான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஏழை மக்களின் பசியைப் போக்கும் திட்டமாக வெற்றியடைய முடியுமா என்பது நம் நாட்டில் பொது விநியோகத் திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதில்தான் இருக்கிறது.


நமது பொது விநியோகத் திட்டம் என்பது ஒரு சல்லடையில் நீரை ஊற்றி பின் நீர் ஒழுகிறதே என நாம் குறை சொல்வது போன்ற கட்டமைப்பில் இருக்கிறது என்பது உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தெரியும். “மானிய விலையில் நம் நாட்டில் விநியோகிக்கப்படும் 59 சதவீத கோதுமையும் 39 சதவீத அரிசியும் பயனாளிகளைச் சென்றடைவதில்லை’ என சமீபத்திய புள்ளி விவரம் கூறுகிறது.


2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் மிகவும் வெளிப்படையாக “மிக அதிக அளவில் ரேஷன் கடைகளுக்கான உணவுப் பொருள்கள் கடத்தப்பட்டு வெளிமார்க்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது’ என ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி விநியோகத்திற்காக கிடங்குகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கெட்டு அழிந்து போகின்றன. 2008-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிடங்குகளில் 36,000 டன் உணவுப் பொருள்கள் சீரழிந்து போய்விட்டன. உணவுப் பொருள்கள் கெட்டுப் போவதும், திருடப்படுவதும், கள்ளக்கணக்கினால் காணாமல் போவதும் இதனுள் அடங்கும்.


உலக சுகாதார இயக்கத்தின் அளவுகோள்படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 250 கிராம் உணவு என்ற கணக்கின்படி இந்த அளவு உணவுப் பொருள்களை 14 கோடி மக்களுக்கு வழங்கியிருக்க முடியும்.


உணவுப் பொருள்கள் மட்டுமின்றி நீல நிறமாக்கப்பட்ட மண்ணெண்ணெயும் மானிய விலையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகிறது. 2004-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 39 சதவீத மண்ணெண்ணெய் கள்ளத்தனமாக வெளிமார்க்கெட்டில் விற்கப்படுகிறது.


ஆக இதுபோன்ற ஓட்டை ஒழுகலுடன் நடக்கும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஏழை, எளிய, கிராமப்புற மக்களின் பசிப்பிணியை நிவர்த்தி செய்து விடுவோம் என இன்றைய மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல.


பொது விநியோகத் திட்டம் இந்தியாவில் முதன்முறையாக 1939-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் அன்றைய பம்பாய் நகரில் உணவுப் பொருள்களைச் சரியான விலைக்கு குறிப்பிட்ட மளிகைக் கடைகள் மூலமாக விற்பனை செய்தபோது தொடங்கப்பட்ட ஒரு நடவடிக்கை.


அன்றைய நிலைமையில் உணவுப் பொருள்கள் மார்க்கெட்டில் விலையேற்றத்தைச் சந்தித்தபோது, அரசின் கட்டுப்பாட்டில் விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டது இந்தத் திட்டம். பின் 1943-ஆம் ஆண்டில் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது கொல்கத்தா நகரில் முதன்முறையாக ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டு உணவுப் பொருள்களை அரசாங்கம் விநியோகம் செய்தது.


பிற்காலங்களில் இந்த ரேஷன் கடைகள் பல வகையிலும் சீர்செய்யப்பட்டு, சுதந்திர இந்தியாவின் மாநிலங்களில் ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருள்களை வழங்கும் இடமாக 1992-ஆம் ஆண்டு உருவாகின. இன்றைய நிலைமையில் நாடெங்கிலும் சுமார் 4 லட்சத்து 62 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 18 கோடி ஏழைக்குடும்பங்கள் தரமான உணவுப் பொருள்களை மானிய விலையில் பெறுகின்றன. இதுபோன்ற பெரிய அளவிலான உணவு விநியோகம் உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.


ஆனால், சரியாக நிர்வகிக்கப்படாததால், ஊழலும், பொருள்கள் சேதமும் பெரிய அளவில் நடைபெற்று, உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடும் இதுதான் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 2005-ஆம் ஆண்டில் மத்திய திட்டக் கமிஷன் நம் நாட்டின் பொது விநியோக முறையின் நிலைமையை ஆராய ஒரு கமிட்டியை நிறுவியது. அந்தக் கமிட்டியின் அறிக்கை அகில இந்தியாவிலும் மானிய விலையில் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய உணவு தானியங்களில் 58 சதவீதம் வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களைச் சென்றடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.
இதற்கான காரணம், ஏழைக் குடும்பங்களைக் கணக்கிடுவதில் ஏற்படும் தவறு, ஊழல் மற்றும் திட்டமிட்ட திருட்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய் உணவு தானியம் கிடைக்க அரசு 3.65 ரூபாய் செலவிட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி அரசின் பணம் ஒரு ரூபாயில் 27 பைசாதான் ஏழை மக்களைச் சென்றடைந்தது எனலாம்.


பிகார், பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் மிக அதிக அளவில் (75 சதவீதம் வரை) உணவு தானியங்கள் திருடப்பட்டன. ஹரியாணா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 50 சதவீத பொருள்கள் கொள்ளை போயின. அசாம், குஜராத், ஹிமாசல பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 25 சதவீதம் உணவு தானியங்கள் ஏழை மக்களைச் சென்றடையவில்லை எனவும் கமிட்டி சுட்டிக் காட்டியது. ஆந்திரம், கேரளம், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் 25 சதவீதத்திற்கும் கீழ் உணவுப் பொருள்கள் களவாடப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்பட்டனவாம்.


இதுபோன்று வேறு சில கமிட்டிகளும் 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டு பொது விநியோகத் திட்டத்தை ஆராய்ந்து அறிக்கைகள் அளித்தன. அவ்வறிக்கைகளின்படி இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று, ஏழைக் குடும்பங்களைப் பட்டியலிடுவதில் உள்ள குளறுபடி. வசதி படைத்தவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவதும், ஏழைகள் விடுபடுவதும்தான் இந்தக் குளறுபடிக்குக் காரணம். இரண்டாவதாக, சரியான கணக்கீடு இல்லாமையால் ஒரே நபர் பல ஊர்களின் பட்டியல்களில் இடம்பெறுவதும், சிலர் எந்தப் பட்டியலிலுமே சேர்க்கப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது. மூன்றாவதாக, பொய்யான நபர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உரிய தானியங்களை ரேஷன் கடைகளில் வேலை செய்பவர்களும் கீழ்நிலை அரசு ஊழியர்களும் கடத்தி வெளிச்சந்தையில் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.


“மிகவும் தவறான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பகல் கனவே’ எனக் கூறுவோரும், “அரசு ஊழியர்களை உபயோகிக்காமல் கணினிமயமாக்கிய நடைமுறையில் உணவு விநியோகத்தைச் சரிசெய்யலாம்’ எனக் கூறுவோரும் உள்ளனர்.


“கணினியை இயக்குபவர்களும் தவறு செய்யலாமே’ என சந்தேகிப்பவர்களும் உண்டு.


“சரி நமது நாட்டில் எல்லா நடவடிக்கைகளிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடுவதால் அரசு பணம் 1 ரூபாயை செலவு செய்து, அதில் 27 பைசாக்களாவது ஏழைகளைச் சென்றடைகிறதே’ என்று திருப்தியடைபவர்களும் உண்டு.


ஆனால் மிகுந்த சிரத்தையுடன் நமது தலைவர்களும் உயர் அதிகாரிகளும் பொது விநியோகத் திட்டநிர்வாகத்தின் ஊழல்களையும் சீர்கேடுகளையும் களைந்து ஏழை மக்களுக்குத் தரமான உணவு கிடைக்க வழிசெய்தால் சாமுவேல் ஜான்சன் கூறியது நிறைவடைந்து நமது நாகரிகம் அவர்களைப் பாராட்டும்.

 “”ஏழைகளுக்குச் செய்யப்படும் தரமான ஒரு சேவைதான் ஒரு நாகரிகத்திற்கான உண்மையான சோதனை” என்றார் அந்த மாமேதை!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top