இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா?
இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் மூலம் கொஞ்சம் இணைய வரலாற்றை தெரிந்து கொள்வோம்.
இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடியதாக சொல்லப்படும் அந்த அமெரிக்க தலைவர் முன்னாள் துணை அதிபர் அல்கோர். யாருமே கண்டுபிடித்திராத இண்டெர்நெட்டை நான் தான் கண்டுபிடித்தேன் என்று சொன்னால் கைகொட்டி சிரிக்க மாட்டார்களா? அதனால் தான் அல்கோர் இப்படி கூறியது தொடர்பாக இணையத்தில் நிறைய நகைச்சுவை துணுக்குகள் உண்டு.
ஆனால் அல்கோர் அப்படி ஒருபோதும் கூறியது இல்லை . இண்டெர்நெட் உருவாக்கத்தில் தனது பங்களிப்பு பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களே இப்படி தவறுதலாக மேற்கோள் காட்டப்பட்டு மீண்டும் மீண்டும் தவறாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த தகவலை ஆண்ட்ரூ பிலம் தான் எழுதியுள்ள , புதிய புத்தகமான Tubes: A Journey to the Center of the Internet -ல் தெளிவு படுத்தியுள்ளார்.
அல்கோரை இண்டெர்நெட்டை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், தற்போது நான் பயன்படுத்தும் வகையில் இண்டெர்நெட் உருவானதில் அவருக்கு முக்கிய பங்குண்டு. 1991ல், அதாவது வைய விரிவு வலை உருவாக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , இண்டெர்நெட்டை அதன் கல்வி நிறுவன வேர்களில் இருந்து விடுவித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான முக்கிய சட்ட மசோதாவை செனட் உறுப்பினராக இருந்த அல்கோர் கொண்டு வந்தார். இந்த மசோதா கோர் பில் என்றே குறிப்பிடப்பட்டது. இந்த மசோதா பற்றி அல்கோர் கூறிய கருத்துக்கள் தான் தவறான மேற்கோளின் விளைவாக , இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக கூறப்பட்டு விட்டது.
இதை தான் ஆண்ட்ரு பிலம் தனது புத்தகத்தில் தெளிவாக்கியுள்ளார்.
ஆனால் உண்மையிலேயே அல்கோருக்கு இணையம் உருவாகிய விதத்தில் முக்கிய பங்குண்டு என்பதை வின்செண்ட் பெர்பே அங்கீகரித்துள்ளார். செர்ப் வேறு யாருமல்ல இண்டெர்நெட்டின் தந்தை என்று போற்றப்படுபவர். இண்டெர்நெட்டின் அடைப்படை கட்டுமானத்தை உருவாக்கியதற்காக இப்படி பாராட்டப்படுபவர் செர்ப்.” இண்டெர்நெட்டின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு அதன் வளர்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவிய முதல் அரசியல் தலைவர்” என்று அல்கோரை செர்ப பாராட்டியுள்ளார். எங்களுக்கு தெரிந்த வரை வேறு எந்த அரசியல் தலைவரும் இணைய்த்தின் வளர்ச்சிக்கு இந்த அளவு பங்காற்றியதில்லை என்றும் அல்கோர் பற்றி அவர் கூறியுள்ளார்.
இண்டெர்நெட் வளர்ச்சிக்கும் ஆதரவு தெரிவித்ததோடு அது அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வழி வகுத்ததாகவும் அல்கோர் பர்றி அவர் கூறியுள்ளார். செர்ப் பாராட்டுரையை இங்கே விரிவாக படிக்கலாம்.;
நிற்க ஸ்னோப்ஸ்.காம் என்று ஒரு இணையதளம் இருக்கிறது. இணையத்தில் உலாவுhttp://web.eecs.umich.edu/~fessler/misc/funny/gore,net.txtம் கட்டுகதைகளுக்கு பின்னே உள்ள உண்மைய விளக்கும் தளம் இது. பரவலாக உண்மை என்று கருதப்படும் இணைய பொய்கள் எப்படி உருவானது என தெளிவுபடுத்தி அதன் பின்னே உள்ள உண்மையையும் விளக்கும் தளம் இது. அல்கோர் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தாக சொல்லப்படும் தகவல் குறித்தும் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. அது இங்கே:http://www.snopes.com/quotes/internet.asp
ஆக, அல்கோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற தலைவராக மறக்கப்பட்டாலும், இணைய வரலாற்றில் அவருக்கு முக்கிய இடம் உண்டு. பார்க்க அல்கோரும் இண்ட்நெர்நெட்டும்: (http://en.wikipedia.org/wiki/Al_Gore_and_information_technology) . அல்கோர் பற்றி மற்றொரு தகவல், இணையத்தின் ஆற்றலை குறிக்கும் தகவல் நெடுஞ்சாலை பதத்தை உருவாக்கியவர் அவர் தான்.