காவிரிப்பூம்பட்டினம்
தமிழகத்தில் 99 % ஊர்களின் பெயர் காரனப்பெயராகவே அமைந்துள்ளது அதன் படியே சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் 'புகார்' என்றும், 'பூம்புகார்' என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும் கடற்கரை நகரத்தைப் பட்டினமென அழைப்பது பழந்தமிழ் வழக்கு. காவிரியின் கழிமுகத்தில் உருவான நகரமென்பதால் 'காவிரிப்பூம்பட்டினமென்றும்' அழைக்கப்பட்டது.
சோழர்களின் ஒரு தலைநகரமாகவும், இதையும் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் சோழர்கள் ஆண்டார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.
சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதையில்' ஆசிரியர் இளங்கோ புகார் நகர், 'மருவூர்ப் பாக்கம்', 'பட்டினப்பாக்கம்', 'நாளங்காடி' என மூன்று முக்கிய பகுதிகளாக விளங்கியதையும், அப்பகுதியில் காணப்பட்ட மக்களின் தொழில்கள, வீதிப்பெயர்கள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைப்பார்.
மருவூர்பாக்கம்:
இது கடலோரம் அமைந்த அழகிய நகர் இங்கு மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது. இங்கு கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பானை, தானியங்கள், தங்க வைர வியாபாரிகள் பலர் வாழ்ந்துள்ளனர்.
பட்டினப்பாக்கம்:
இது கடற்கரைக்கு மேற்கே அமைந்த நகரமாகும், இங்கு அரச குடும்பம், உயர் அதிகாரிகள், வியாபாரிகள், நடன, கட்டிட கலைர்கள், மருத்துவர் வாழ்ந்துள்ளனர்.
கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் வணிகர்கள் உரோமாபுரியிலிருந்தும் (யவனர்கள்), சாவகத்திலிருந்தும் ( இன்றைய இந்தோனேசியா), வட இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். சோழ வணிகர்கள் இங்கிருந்து சாவகம், காழகம் (இன்றைய பர்மா), ஈழம் போன்ற நாடுகளுக்கு இத்துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வாணிகம் செய்தார்கள்.
வேற்று நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் புலபெயர்ந்து வந்து இப்புகார் நகரில் வாழ்ந்ததை சிலம்பின் 'கடல் ஆடும் காதையில்' வரும் 'கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்' என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
இளங்கோவின் 'சிலப்பதிகாரத்திலும்' , மேலும் பல புறநானூற்றுச் செய்யுள்களிலும் புகார் பட்டினம் பற்றிய செய்திகள் கிடக்கின்றன. உதாரணமாக சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதை', 'கடல் ஆடு காதை' போன்ற பகுதிகளில் புகார் பற்றியும், அந்நகர அமைப்பு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் தகவல்கள் காணப்படுகின்றன. இத்துறைமுகத்திற்கு வந்து குவிந்த பொருட்கள் பற்றிப் பட்டினப்பாலை பின்வருமாறு கூறும்:
"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்துங் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் .... ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்" (பட்டினப்பாலை 185-193).
மேற்படி செய்யுள் வரிகளில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. குதிரைகள் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டன ('நீரின் வந்த நிமிர்பரிப் புரவி). 'காலின் வந்த' என்பது காற்றின் உதவியினால் வந்த எனப் பொருள்படும். 'காலின் வந்த கருங்குறி மூடை' என்பது பருவக் காற்றின் உதவியினால் வந்த கப்பல்களில் கரிய மிளகு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கும்.
'வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்' என்னும் வரிகள் இமயமலைப் புறத்தில் கிடைத்த பொன்னும் மணியும் கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடல்மூலம் வந்ததையும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கத்திலிருந்து சந்தனமும் ('குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்') , அகிலும், தென்னாடான பாண்டிநாட்டுக் கடல்களிலிருந்து முத்துக்களும் ('தென்கடல் முத்து'), கிழக்குக் கடல் வழியாக சாவகத்திலிருந்து பவழமும் ('குணகடல் துகிர்'), கங்கைக்கரை ஊர்களிலிருந்து உள்ளூரிலிருந்து மற்றும் வெளியூர்களான ஈழம் , காழகம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பொருட்களும் ('கங்கை வாரியும் காவிரிப் பயனும் .... ஈழத் துணவும் காழகத் தாக்கமும்') இவ்விதம் உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகம் சிறந்து விளங்கும் நகராகப் புகார் விளங்கியதை அறிய முடிகிறது.
உறையூர் முதுகண்ணனின் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடும் புறநானூற்றுச் செய்யுளில் வரும் 'கூம்பொடு மீப்பாய் கலையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்' வரிகள் ஆழமாகவும் கலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கேற்ற வகையில் அமைந்திருந்த புகார் பற்றிக் கூறும்.
மேலும் மருவூர்ப்பாக்கத்தின் சுற்றுப்புறங்களிலும், பட்டினப்பாக்கத்தின் அயலிலும் வீரம் மிக்க மறவர்கள் படைக்கலங்களுடன் விளங்கியதை "மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் " ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 76-77).
இது தவிர நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுப் பொருட்டு ஐவகையான மன்றங்களும்
1.வெள்ளிடை மன்றம்,
2.இலஞ்சி மன்றம்,
3.பூத சதுக்கம்,
4.நெடுங்கல் நின்ற மன்றம்
5.பாவை மன்றம், பட்டினப்பாக்கத்தில் இருந்ததையும் சிலம்பு விவரிக்கிறது .
மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில்
1.மலர்வனம்,
2.உய்யாவனம்,
3.சம்பாதி வனம்,
4.சுவேர வனம் மற்றும்
5.உவ வனம் ஆகிய ஐவகை வனங்களும் இருந்ததாக மணிமேகலை இல் உள்ளது . அத்துடன் நகரில்
சிவன், திருமால், பலராமன், இந்திரன், முருகன், சூரியன், சந்திரன்,அருக தேவன் ஆகியோருக்குக் கோட்டங்கள் (கோயில்கள்) அமைந்திருந்ததை சிலம்பு பின்வருமாறு கூறும்:
"அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் " (கனாத்திரம் உரைத்த காதை; 9-13).
இதுதவிர நகரில் ஏழு புத்த விகாரங்களுமிருந்ததை மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியன கூறும் (சிலம்பு, 'நாடு காண் காதை'; 14: 'இந்திர விகாரம் ஏழுடன் போகி'; மணிமேகலை; 'இந்திர விகாரம் என எழில் பெற்று').
ஸ்தபதி வை.கணபதியின் 'நகரமைப்புக் கலை' ஆய்வுக் கட்டுரையினை ஆதாரமாக வைத்து நா.பார்த்தசாரதி தனது 'பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுவார்: "மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20இல் ஒரு பாகம் 'குடும்ப பூமி' என்ற பெயரில் குடியிருப்புக்களுக்கும், பிற பகுதிகள் தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய வாணிக நகரான பூம்புகார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயல் காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில் மூழ்கி விட்டதை மணிமேகலை குறிப்பிடுகிறது.
மணிமேகலையில் இந்த நகரின் அழிவு இவ்வாறு குறிப்பிடபடுகிறது. அதாவது வருடாவருடம் இந்திர விழா கொண்டாடும் சோழ மன்னன் அந்த ஆண்டு கொண்டாடததால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி நகர் அழிந்ததாக குறிப்பிடுகிறது.
அங்கு கிடைக்கபெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு அங்கு "சிலபதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரம் இன்னும் பிரதிபலித்து கொண்டுள்ளது. இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளபட்டால் இன்னும் பல வெளிவராத நம் பெருமைகள் வெளிவர வாய்ப்புள்ளது. தமிழர்கள் அனைவரும் அங்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்... தமிழர்கள் பற்றிய தேடல் மேலும் தொடரும்...