.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 7 October 2013

கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்!


திருமங்கலம் தாலுகா அலுவலகம். உள்படம்: வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன் (படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி)
திருமங்கலம் தாலுகா அலுவலகம். உள்படம்: வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன்
 
 

அக்டோபர் 16. பாளையத்துச் சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம். அவர் பயன்படுத்திய நாணயங்கள், அணிகலன்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை சென்னை அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், அவரை தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட தூக்குக் கயிறு காணாமல் போய்விட்டதாக சர்ச்சை கிளப்புகிறார்கள்!


வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாளையக்காரர்களை அணி திரட்டினார் வீரபாண்டிய கட்டபொம்மன். அதற்காக அவரை கைது செய்த ஆங்கிலேய அரசு, தூத்துக்குடி மாவட்டம் (பழைய திருநெல்வேலி ஜில்லா) கயத்தாறில் 1799-ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி புளியமரத்தில் தூக்கிலிட்டது. ஆங்கிலேய தளபதி பானர்மேன் கட்டளைப்படி, தண்டனை நிறைவேற்றப்பட்ட இடம்தான் கயத்தாறு. இதற்கான தீர்ப்பை எழுதிய இடம் மதுரை மாவட்டம் திருமங்கலம்.


ஆங்கிலேயர்கள் காலத்தில் திருமங்கலம் முக்கிய கேந்திரமாக விளங்கியது. வைகை ஆற்றைக் கடந்து மதுரைக்கு வரவேண்டிய கஷ்டம் இருந்ததால், தங்களது முக்கிய அலுவலகங்களை திருமங்கலத்திலேயே வைத்திருந்தார்கள். துரைமார்களுக்கான பங்களா (இப்போது டி.எஸ்.பி. அலுவலகம்), வெளிநாட்டு விருந்தினர்களுக்கான காட்டு பங்களா, ஆயுதங்களை சேமித்து வைக்கும் கொட்டடி, நீதிமன்றம் இத்தனையும் அப்போது திருமங்கலத்தில் இருந்தது. காவிரிக்கு தெற்கே நடந்த கலவரங்கள் உள்ளிட்ட அத்தனை வழக்குகளும் திருமங்கலம் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டதாக சொல்கிறார்கள்.



 கட்டபொம்மனுக்கும் இங்குதான் தீர்ப்பு எழுதப்பட்டது என்பது வரலாற்று ஆய்வர்களின் கூற்று.


கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது உயிரைக் குடித்த அந்தப் பாசக்கயிற்றை பிரிட்டிஷ் அரசாங்கம் பத்திரப்படுத்தி வைத்தது. தீர்ப்பு எழுதப்பட்ட திருமங்கலத்தில் உள்ள அரசு ஆவண காப்பகத்தில் அந்த கயிற்றை பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். தற்போது அந்தக் கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. டார்க் ரூம் என்று சொல்லப்படும் இந்த ஆவணக் காப்பகத்தில் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள் கேட்பாரின்றி கிடக்கின்றன. இவற்றோடுதான் கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்ததாக சொல்லப்படுகிறது.



இந்த ஆவணக் காப்பகத்தை பராமரித்து(!) வந்த அலுவலக உதவியாளர் ஒருவர் கட்டபொம்மன் கயிறு காணாமல்போன விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியில் சொல்லி இருக்கிறார். “தபால் பையில் கட்டி பத்திரமா வைச்சிருந்த கயிறு காணாமப் போச்சு” என்று அவர் சொன்னபோது, ‘குடிச்சுட்டு உளறுகிறான்’ என்று சொல்லி அந்த விஷயத்தை அமுக்கிவிட்டார்கள். அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்று சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில், கயிறு காணாமல் போன சர்ச்சை இப்போது மீண்டும் கச்சை கட்டுகிறது.


வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான சாகித்ய அகாதமி சு.வெங்கடேசன் திருமங்கலம் பகுதியில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை தொகுத்து தன் படைப்புகளில் தகவல்களாக தந்திருக்கிறார். கட்டபொம்மன் கயிறு குறித்து அவரிடம் பேசினோம். “கட்டபொம்மனை தூக்கில் போடுவதற்கு தீர்ப்பு எழுதப்பட்ட இடம் திருமங்கலம்தான். அதில் சந்தேகம் இல்லை. 


தண்டனையை நிறைவேற்ற திருமங்கலம் நீதிமன்றத்தின் நடமாடும் பிரிவு ஒன்று கயத்தாறில் செயல்பட்டது. இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. ஆனால், கட்டபொம்மனை தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட கயிறு திருமங்கலம் ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டது என்பது புதிய செய்தியாக இருக்கிறது.


பெருங்காமநல்லூர் கலவரம் தொடர்பான தகவல்களை திரட்ட அந்த ஆவணக் காப்பகத்துக்குப் போயிருந்தேன். 200 வருடங்களுக்கு முந்தைய ஆவணங்கள் அங்கே கவனிப்பாரற்றுக் கிடந்ததையும் பார்த்தேன். முக்கிய வழக்குகள் சம்பந்தப்பட்ட அந்த ஆவணங்களை எல்லாம் இன்னமும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்காமல் வைத்திருக்கிறார்கள். அப்படி ஒருவேளை, கட்டபொம்மனை தூக்கிலிடப் பயன்படுத்திய கயிற்றையும் கவனிக்காமல் வைத்திருந்து காணாமல் போய்விட்டதோ என்னவோ!’’ என்றார்.


திருமங்கலம் தாசில்தார் பாஸ்கரன் சமீபத்தில்தான் மாற்றலாகி வந்தவர் என்பதால், துணை தாசில்தார் சரவணனை சந்தித்தோம். பொறுமையாக தகவலை கேட்டுக் கொண்டவர், ஆவணங்கள் பராமரிக்கும் பெண் ஊழியரை அழைத்து, “கட்டபொம்மனை தூக்குல போட்ட கயிறு நம்ம கஸ்டடியிலயாம்மா இருக்கு?” என்றார். “அது எதுக்காம் இப்ப..?” என்று எதிர்க் கேள்வி கேட்டாரே தவிர, அந்த பெண்ணுக்கு விவரம் எதுவும் தெரியவில்லை. 


பின்னர், ரெக்கார்டு செக்‌ஷன்ல வேலை பார்த்து ரிட்டையரான பெரியவர் முருகேசனை சிறிது நேரத்தில் கையோடு அழைத்து வந்தார். “போன வருஷம் டி.டி கேட்டாங்க.. அதுக்கு முந்துன வருஷமும் கேட்டாங்க.. அப்படி ஏதும் நம்மகிட்ட இருக்கறதா தெரியலையே சார்.. 2000 வரைக்கும், காந்திராமன்கிறவரு தான் ரெக்கார்டு செக்‌ஷன்ல இருந்தாரு. அவருக்கு தெரிஞ்சிருக்கலாம். 


ஆனா, ரெண்டு வருஷம் முந்தி அவரு இறந்துட்டாரு” என்றார். இத்தனை விசாரணைகளையும் போட்டு விட்டு, மீண்டும் நம்மிடம் திரும்பிய சரவணன், ‘’இங்க ஏதும் இருக்க மாதிரி தெரியல சார். அப்படியே எங்க பொறுப்புல குடுத்துருந்தாலும், இதுமாதிரியான பொருட்களை முப்பது வருஷத்துக்கு மேல நாங்க வைச்சிருக்க மாட்டோம். தொல்லியல் துறையில ஒப்படைச்சிருவோம். எதுக்கும், தொல்லியல் துறையில விசாரிச்சுப் பாருங்க’’ என்று விடை கொடுத்தார்.



மதுரை தொல்லியல் துறை இணை இயக்குநர் கணேசனை தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னபோது, “தவறான தகவல் சொல்லி இருக்காங்க. கட்டபொம்மனை தூக்கிலிடப் பயன்படுத்திய கயிற்றை எங்களிடம் யாரும் இதுவரை ஒப்படைக்கவில்லை’’ என்றார்.


ஆங்கிலேயரால் கட்டபொம்மனை, அவரது வீரத்தை இழந்தோம். அவரது வீரத்தின் நினைவாக மதிக்க வேண்டிய கயிற்றை அலட்சியத்தால் இழந்திருக்கிறோம்!

ஆயுள்காப்பீட்டில் சிறந்த பாலிசி எது?


 
 
 
ஆயுள் காப்பீடு என்பது சில துரதிர்ஷ்டசாலிகளை அதிர்ஷ்டசாலிகள் பலர் பாதுகாப்பதாகும். இதன் மூலம் நாம் முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்கிறோம். இதுவும் ஒரு வகையான சேவை போன்றதுதான்.


இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள். காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.


இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.
மேலும் இன்சூரன்ஸ் ஒரு நீண்ட கால கமிட்மெண்ட். நாம் இடையில் வெளியேற முடியாது. உதாரணமாக இது 20 முதல் 25 வருட பிளான். நமக்கு கிடைப்பதோ 5.5% முதல் 6% வரை தான். இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. முன்பே சொன்ன மாதிரி இன்ஷூரன்ஸ் என்பது நம்முடைய ரிஸ்க்கினை மற்றவருக்கு மாற்றுவதே.


பொதுவாக மக்களுக்கு ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற எண்ணமும், மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. அது மிகவும் தவறானது ஏனென்றால் எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை.


நிறைய பேருக்கு நம்மிடம் தான் போதுமான பணம் உள்ளதே எதற்கு நமக்கு இன்சூரன்ஸ் என்ற கேள்வி உள்ளது. அதற்கான பதில் இது தான்.
ஒரு வேளை நாம் இறந்தால், நம்முடைய குடும்பம் தற்போழுது உள்ள நிலையிலே இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நிதிச் சிக்கலில் இருந்து விடுபட நம் எல்லாருக்கும் தேவையான ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.


இன்று பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறார்கள் ஆனால் தேவையான இன்சூரன்ஸ் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. மேலும் பலருக்கு எவ்வளவு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. சிலர் 5 பாலிசிகள் கூட வைத்திருப்பார்கள், ஆனால் போதுமான தொகைக்கு எடுத்திருக்க மாட்டார்கள். இன்ஷூரன்ஸில் பல வகை உள்ளது. மிகவும் பிரபலமானது என்றால் அது எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் மணிபேக் பாலிசி. இது நீண்ட கால பிளான் 20 முதல் 25 வருடம் வரை. ஆனால் வட்டி குறைவு மேலும் சரண்டர் செய்தால் நாம் நிறைய பணம் இழக்க வேண்டி வரும்.


உதாரணமாக நம்முடைய காலில் சிறிய கட்டி வந்தவுடன் அதை அப்புறப்படுத்தாமல் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்றால் காலையே எடுக்கவேண்டி வரும். முதலிலே இந்த மாதிரி எண்டோவ்மென்ட் பாலிசியை புரிந்து கொண்டால் சரண்டர் செய்வது நல்லது. தெரிந்தும் 20 வருடம் கட்டுவது காலை இழப்பதற்குச் சமமாகும்.


பணத்தை இழக்க விரும்பாமல் 20 வருடம் கட்டிய பின்பு வரும் தொகை மிகக் குறைவு. எனவே இந்த மாதிரி பாலிசியைத் (traditional) தவிர்ப்பது நல்லது.
அடுத்ததாக ULIP பாலிசி இது. இது பங்குச் சந்தையின் போக்கிற்கேற்ப நம்முதலீடு இறங்குவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாலிசியில் ப்ரீமியம் அதிகம் ஆனால் லைப் இன்ஷுரன்ஸ் கவரேஜ் குறைவு. இதையும் தவிர்ப்பது நல்லது.


பின்பு எதுதான் நல்ல பாலிசி என்கிறீர்களா? டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி தான்.
உதாரணமாக ஒருவருக்கு 30 வயது என்று எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு 60 வயது வரை கவர் செய்யக்குடிய டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்பட்சத்தில், பிரீமியமாக 18,000 ருபாய் செலுத்தினால் போதும்.


தற்போழுது ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் வந்து விட்டது. இதற்கு முகவர்கள் உதவ மாட்டார்கள். நாமே எல்லாவிதமான கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்ல வேண்டும். இது பெரும்பாலும் விஷயம் தெரிந்தவர்களுக்கு பயன்படும். பொதுவாக ஒருவருடைய வருட சம்பளத்தில் 12 முதல் 15 மடங்கு அளவுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. ஒருவர் வருடம் 5 லட்சம் சம்பாதித்தால் அவர் 60 முதல் 75 லட்சம் வரை டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது.


பிரீமியம் குறைவு என்றவுடன் எல்லோரும் ஒ.கே. என்று சொல்லுவீர்கள், பின்பு நீங்கள் உயிரோடு இருந்தால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது என்று சொன்னால் எனக்கு இந்த பாலிசி வேண்டாம் என உடனே சொல்லிவிடுவார்கள். இது தவறு. சரியான பாலிசியை தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்வது நல்லது. 


ஜனவரியில் விண்வெளிக்கு திகில் பயணம்!


ஒயிட்நைட் விமானம். அதன் நடுவில் இருப்பது ஸ்பேஸ்ஷிப் டூ.

அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் அனேகமாக ஜனவரியில் விண்வெளி சுற்றுலாவை ஜாம்ஜாம் என்று நடத்திவிடும் என்று தெரிகிறது. 600-க்கும் அதிகமானவர்கள் 150 லட்சம் ரூபாய் கட்டிவிட்டு ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். 


இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன். உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவர். இவருக்கு சொந்தமான வர்ஜின் குழுமம் பல பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் விமான சேவைகள் நடத்தி வருகிறது. “ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு விமானம் இயக்குவதில் என்ன பெருமை இருக்கிறது? விண்வெளிக்கு விமானம் இயக்கலாம் வாருங்கள்” என்ற அறிவிப்புடன் கடந்த 2004ம் ஆண்டில் புதிதாக வர்ஜின் கேலக்டிக் என்ற நிறுவனத்தைத் தொடங்கியது வர்ஜின் குழுமம். துவங்கியதிலிருந்தே, விண்வெளிச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்தன. பல்வேறு கட்டமாக சோதனை ஓட்டங்களும் நடந்து வருகின்றன. 



கிறிஸ்துமஸில் கிளம்பிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். அதை சற்று ஒத்திவைத்திருக்கின்றனர். அனேகமாக 2014 ஜனவரியில் கிளம்பிவிடுவார்கள் போலத் தெரிகிறது. 2011ம் ஆண்டு நிலவரப்படி 400 பேர் வரை முன்பதிவு செய்திருந்தார்கள். நாள் நெருங்க நெருங்க.. வரிசை 600ஐத் தாண்டியிருக்கிறது. டிக்கெட் கட்டணம் இரண்டரை லட்சம் டாலர். அதாவது, 150 லட்சம் ரூபாய். முதல் ஆயிரம் பேருக்குதான் இந்த கட்டணம். அடுத்த பேட்ச்சுக்கு இன்னும் அதிகமாகிவிடுமாம். 



வர்ஜின் கேலக்ட்டிக் திட்டப்படி, இந்த விண்வெளி சுற்றுலா என்பது இரண்டுகட்டப் பயணம். இரண்டு பேர் கைகோர்த்து நிற்பதுபோலக் காணப்படும் விமானம் ‘ஒயிட் நைட் டூ’ எனப்படுகிறது. விண்வெளியில் பறப்பது இது அல்ல. அது ‘ஸ்பேஸ்ஷிப் டூ’ எனப்படும் இன்னொரு குட்டி விமானம். அப்பா-அம்மாவின் தோள் பிடித்துத் தொங்கும் குழந்தைபோல, ஒயிட் நைட்டின் கீழ்ப் பகுதியில் ஸ்பேஸ்ஷிப் டூ பொருத்தப்பட்டிருக்கும். 


விண்வெளி சுற்றுலா போகும் பயணிகள், ஸ்பேஸ்ஷிப்பில்தான் இருப்பார்கள். பயணிகளோடு ஸ்பேஸ்ஷிப்பையும் சுமந்துகொண்டு, ஒயிட்நைட் பறக்கத் தொடங்கும். சுமார் 52 ஆயிரம் அடி உயரத்துக்குப் போனதும், ஒயிட்நைட் நிதானமாக பறந்துகொண்டிருக்க.. அதுவரை அப்பா-அம்மாவின் தோளில் தொங்கும் குழந்தையாக சமத்தாக வந்த ஸ்பேஸ்ஷிப் டூ தனது இன்ஜினை இயக்க ஆரம்பித்து, கணப்பொழுதில் ஒயிட்நைட்டில் இருந்து விடுபட்டு அசுர வேகத்தில் பறக்கத் தொடங்கும். 


பூமியிலிருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள பகுதியைத்தான் விண்வெளி (ஸ்பேஸ்) என்கிறார்கள். (சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றுவது சுமார் 150 கி.மீ. உயரத்தில்) அந்த உயரம் வரை சென்று விண்வெளியை சுற்றிக்காட்டிவிட்டு, ஸ்பேஸ்ஷிப் பூமிக்கு திரும்பிவிடும். உயரே கிளம்புவதற்கு மட்டுமே ஒயிட்நைட்டின் உதவி தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 


எல்லாம் சேர்த்து மொத்தம் இரண்டரை மணி நேரப் பயணம். அதில் விண்வெளியைத் தொடும் திக் திக் திகில் நேரம் 6 நிமிடங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எடையில்லாத் தன்மையை பயணிகள் அப்போது மட்டும் உணர்வார்கள். இருக்கையில் இருந்து ஜிவ்வென்று எழும்பி, கேபினுக்குள்ளேயே மிதப்பார்கள். 


ஸ்பேஸ்ஷிப் டூ குட்டி விமானம் என்பதால் அதில் 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும். 


அமெரிக்காவைச் சேர்ந்த என்பிசி டிவி ‘ஸ்பேஸ் ரேஸ்’ என்ற பெயரில் ரியாலிட்டி ஷோ நடத்த இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் பைசா செலவில்லாமல் விண்வெளி சுற்றுலா போய்வரலாம். 


இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங், அமெரிக்கப் பாடகி கேதி பெரி, பிராட் பிட் - ஏஞ்சலினா ஜூலி என்று பல பிரபலங்களும் விண்வெளி பயணத்துக்கு முன்பதிவு செய்துவைத்திருக்கிறார்கள். 

சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைப்பாரா ரஜினி?


நடிகர் ரஜினிகாந்த் 
 

இந்திய சர்வதேச திரைப்பட விழா Logo



கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினைத் துவக்கிவைக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


2004 முதல் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் துவக்க விழாவில் முன்னணி நடிகர் ஒருவர் கலந்துகொண்டு துவக்கிவைப்பார். 


கடந்தாண்டு இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் துவக்கிவைத்தார். இந்தாண்டு இவ்விழாவினைத் துவக்கி வைக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள், இந்தாண்டு நவம்பர் 20ம் தேதி இவ்விழா துவங்கவிருக்கிறது. 


“இந்தாண்டு விழாவினை துவக்கி வைக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். ரஜினி இவ்விழாவில் பங்கேற்றால் கெளரவமாக கருதுகிறோம்” என்று விஷ்ணு வாக் கூறியுள்ளார். 


அக்டோபர் மாத இறுதிவரை ரஜினியின் பதிலுக்காக காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.


தமிழனின் தற்காப்பு கலை - வர்மம் ஒரு பார்வை!





                                                                  "வர்மம்”  

         ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிஇல்  பரவி இருந்தது,  இக்கலை சிதமருதுவதை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
 
 

 
 
 

           இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.
 
 


 
அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில் 
 "அகஸ்தியர் வர்ம திறவுகோல்"
"அகஸ்தியர் வர்ம கண்டி"
"அகஸ்தியர் ஊசி முறை வர்மம்"
"அகஸ்தியர் வசி வர்மம்"
"அகஸ்தியர் வர்ம கண்ணாடி"
"அகஸ்தியர் வர்ம வரிசை"
"அகஸ்தியர் மெய் தீண்டா கலை" 
ஆகியவை குறிப்பிடத்தக்கவை     
 
  
             " ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர்.
 
 
           பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.
 

         காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.
 

 
 

           இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன.
 
 
 


              உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

       
                             நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

  
வர்மமும் கிரேக்கமும்!
 

                 கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.
 
 
              “வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.


தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!


           இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்). 
 

             தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.


             சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:
 


தொடு வர்மம்:

            இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும் .


தட்டு வர்மம்:
 

       இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்.


நோக்கு வர்மம்:
 

         பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும்  இல்லை என குறிப்பிடுகிறார் 


படு வர்மம் :
 

        நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.
 

         ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.  

        
 உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:
 

        
 
         தலை பகுதியில் முக்கியமான 37  வர்ம புள்ளிகளும்
         நெஞ்சு பகுதியில்  13  வர்ம புள்ளிகளும்
         உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும் 
         முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
         கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
        கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
        கால்களின் முன் பகுதியில்  19  வர்ம புள்ளிகளும்
        கால்களின் பின் பகுதியில்  13  வர்ம புள்ளிகளும்
       கீழ் முதுகு பகுதியில்  8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்...



வர்மத்தின் அதிசயங்கள் !!

              வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
 

             ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

            வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
 

            ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
          ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
 

          நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.
 
 

          மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.


                 மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top