அக்டோபர் 16. பாளையத்துச் சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம். அவர் பயன்படுத்திய நாணயங்கள், அணிகலன்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை சென்னை அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், அவரை தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட தூக்குக் கயிறு காணாமல் போய்விட்டதாக சர்ச்சை கிளப்புகிறார்கள்!
வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாளையக்காரர்களை அணி திரட்டினார் வீரபாண்டிய கட்டபொம்மன். அதற்காக அவரை கைது செய்த ஆங்கிலேய அரசு, தூத்துக்குடி மாவட்டம் (பழைய திருநெல்வேலி ஜில்லா) கயத்தாறில் 1799-ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி புளியமரத்தில் தூக்கிலிட்டது. ஆங்கிலேய தளபதி பானர்மேன் கட்டளைப்படி, தண்டனை நிறைவேற்றப்பட்ட இடம்தான் கயத்தாறு. இதற்கான தீர்ப்பை எழுதிய இடம் மதுரை மாவட்டம் திருமங்கலம்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் திருமங்கலம் முக்கிய கேந்திரமாக விளங்கியது. வைகை ஆற்றைக் கடந்து மதுரைக்கு வரவேண்டிய கஷ்டம் இருந்ததால், தங்களது முக்கிய அலுவலகங்களை திருமங்கலத்திலேயே வைத்திருந்தார்கள். துரைமார்களுக்கான பங்களா (இப்போது டி.எஸ்.பி. அலுவலகம்), வெளிநாட்டு விருந்தினர்களுக்கான காட்டு பங்களா, ஆயுதங்களை சேமித்து வைக்கும் கொட்டடி, நீதிமன்றம் இத்தனையும் அப்போது திருமங்கலத்தில் இருந்தது. காவிரிக்கு தெற்கே நடந்த கலவரங்கள் உள்ளிட்ட அத்தனை வழக்குகளும் திருமங்கலம் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டதாக சொல்கிறார்கள்.
கட்டபொம்மனுக்கும் இங்குதான் தீர்ப்பு எழுதப்பட்டது என்பது வரலாற்று ஆய்வர்களின் கூற்று.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது உயிரைக் குடித்த அந்தப் பாசக்கயிற்றை பிரிட்டிஷ் அரசாங்கம் பத்திரப்படுத்தி வைத்தது. தீர்ப்பு எழுதப்பட்ட திருமங்கலத்தில் உள்ள அரசு ஆவண காப்பகத்தில் அந்த கயிற்றை பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். தற்போது அந்தக் கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. டார்க் ரூம் என்று சொல்லப்படும் இந்த ஆவணக் காப்பகத்தில் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள் கேட்பாரின்றி கிடக்கின்றன. இவற்றோடுதான் கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த ஆவணக் காப்பகத்தை பராமரித்து(!) வந்த அலுவலக உதவியாளர் ஒருவர் கட்டபொம்மன் கயிறு காணாமல்போன விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியில் சொல்லி இருக்கிறார். “தபால் பையில் கட்டி பத்திரமா வைச்சிருந்த கயிறு காணாமப் போச்சு” என்று அவர் சொன்னபோது, ‘குடிச்சுட்டு உளறுகிறான்’ என்று சொல்லி அந்த விஷயத்தை அமுக்கிவிட்டார்கள். அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்று சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில், கயிறு காணாமல் போன சர்ச்சை இப்போது மீண்டும் கச்சை கட்டுகிறது.
வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான சாகித்ய அகாதமி சு.வெங்கடேசன் திருமங்கலம் பகுதியில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை தொகுத்து தன் படைப்புகளில் தகவல்களாக தந்திருக்கிறார். கட்டபொம்மன் கயிறு குறித்து அவரிடம் பேசினோம். “கட்டபொம்மனை தூக்கில் போடுவதற்கு தீர்ப்பு எழுதப்பட்ட இடம் திருமங்கலம்தான். அதில் சந்தேகம் இல்லை.
தண்டனையை நிறைவேற்ற திருமங்கலம் நீதிமன்றத்தின் நடமாடும் பிரிவு ஒன்று கயத்தாறில் செயல்பட்டது. இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. ஆனால், கட்டபொம்மனை தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட கயிறு திருமங்கலம் ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டது என்பது புதிய செய்தியாக இருக்கிறது.
பெருங்காமநல்லூர் கலவரம் தொடர்பான தகவல்களை திரட்ட அந்த ஆவணக் காப்பகத்துக்குப் போயிருந்தேன். 200 வருடங்களுக்கு முந்தைய ஆவணங்கள் அங்கே கவனிப்பாரற்றுக் கிடந்ததையும் பார்த்தேன். முக்கிய வழக்குகள் சம்பந்தப்பட்ட அந்த ஆவணங்களை எல்லாம் இன்னமும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்காமல் வைத்திருக்கிறார்கள். அப்படி ஒருவேளை, கட்டபொம்மனை தூக்கிலிடப் பயன்படுத்திய கயிற்றையும் கவனிக்காமல் வைத்திருந்து காணாமல் போய்விட்டதோ என்னவோ!’’ என்றார்.
திருமங்கலம் தாசில்தார் பாஸ்கரன் சமீபத்தில்தான் மாற்றலாகி வந்தவர் என்பதால், துணை தாசில்தார் சரவணனை சந்தித்தோம். பொறுமையாக தகவலை கேட்டுக் கொண்டவர், ஆவணங்கள் பராமரிக்கும் பெண் ஊழியரை அழைத்து, “கட்டபொம்மனை தூக்குல போட்ட கயிறு நம்ம கஸ்டடியிலயாம்மா இருக்கு?” என்றார். “அது எதுக்காம் இப்ப..?” என்று எதிர்க் கேள்வி கேட்டாரே தவிர, அந்த பெண்ணுக்கு விவரம் எதுவும் தெரியவில்லை.
பின்னர், ரெக்கார்டு செக்ஷன்ல வேலை பார்த்து ரிட்டையரான பெரியவர் முருகேசனை சிறிது நேரத்தில் கையோடு அழைத்து வந்தார். “போன வருஷம் டி.டி கேட்டாங்க.. அதுக்கு முந்துன வருஷமும் கேட்டாங்க.. அப்படி ஏதும் நம்மகிட்ட இருக்கறதா தெரியலையே சார்.. 2000 வரைக்கும், காந்திராமன்கிறவரு தான் ரெக்கார்டு செக்ஷன்ல இருந்தாரு. அவருக்கு தெரிஞ்சிருக்கலாம்.
ஆனா, ரெண்டு வருஷம் முந்தி அவரு இறந்துட்டாரு” என்றார். இத்தனை விசாரணைகளையும் போட்டு விட்டு, மீண்டும் நம்மிடம் திரும்பிய சரவணன், ‘’இங்க ஏதும் இருக்க மாதிரி தெரியல சார். அப்படியே எங்க பொறுப்புல குடுத்துருந்தாலும், இதுமாதிரியான பொருட்களை முப்பது வருஷத்துக்கு மேல நாங்க வைச்சிருக்க மாட்டோம். தொல்லியல் துறையில ஒப்படைச்சிருவோம். எதுக்கும், தொல்லியல் துறையில விசாரிச்சுப் பாருங்க’’ என்று விடை கொடுத்தார்.
மதுரை தொல்லியல் துறை இணை இயக்குநர் கணேசனை தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னபோது, “தவறான தகவல் சொல்லி இருக்காங்க. கட்டபொம்மனை தூக்கிலிடப் பயன்படுத்திய கயிற்றை எங்களிடம் யாரும் இதுவரை ஒப்படைக்கவில்லை’’ என்றார்.
ஆங்கிலேயரால் கட்டபொம்மனை, அவரது வீரத்தை இழந்தோம். அவரது வீரத்தின் நினைவாக மதிக்க வேண்டிய கயிற்றை அலட்சியத்தால் இழந்திருக்கிறோம்!
1 comments:
raveendranaath தாகூர் நோபல் பரிசு காணவில்லை செய்தி.கிடைத்தது பற்றி செய்தி இல்லை. மகாகவி பாரதி,காந்தி பெயரில் ரேசன் கார்டு. அதில் விந்தை காந்தின் ப்தந்தை பெயர் கோட்சே நாதுராம்.இருக்கும் அமைச்சருக்கு இறந்த மரணச்சான்று.இந்த செய்திகள் உண்மை தேசபக்தர்களுக்கு வேதனை; இதை ரசிப்போரும் ஆதரிப்போரும் உண்டு. என்னே தேச பக்தி.நான் பார்த்த அருங்காட்சிப் பொருள் பல காணவில்லை.திருமளினாயக்க மகாலில் குப்பை குவியல்.என்ன.நொந்து கொள்ளவேண்டியது. தேவ சன்னதியில் ஐ லவ் யு கருப்பு கோட்டில்.௬௭ ஆண்டு சுதந்திரம்.