.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 20 September 2013

கமலின் 'உத்தம வில்லன்'


நடிகர் கமல்ஹாசன்


நடிகர் ரமேஷ் அரவிந்த்




’விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். 


‘விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படத்தினை யார் தயாரிக்கிறார், இயக்குநர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள்.


‘விஸ்வரூபம் 2’ படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன. 2 பாடல்களை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும். ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு ’வாகை சூட வா’ கிப்ரான் இசையமைத்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது. 


இந்நிலையில், ‘விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து கமல், லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுத ஒப்பந்தமாகி இருக்கிறார்.


‘சதிலீவாவதி’, ’பஞ்ச தந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மன்மதன் அம்பு’ போன்ற படங்களில் கமலுடன் இணைந்து நடித்த, கமலுக்கு நெருங்கிய நண்பரான ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். கன்னடத்தில் ‘சதிலீலாவதி’ படத்தின் ரீமேக்கை இவர் தான் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியானவுடன் தொடங்கவிருக்கிறது.



’உத்தம வில்லன்’ படம் சமூகத்தில் தற்போது நடைபெறும் பிரச்சினையை, காமெடி கலந்து சொல்ல இருக்கிறார்களாம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.


குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் விதிமுறை..




பிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
  
ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
0-4 மாதம்
நிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும் என்று சொல்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
4-6 மாதம்
நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.
6-8 மாதம்
இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.
8-10 மாதம்
இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10-12 மாதம்
இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.

கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!




நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் .
  
ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா ? கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுப்படலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கையாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான் . இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி.
ஒரு நதியின் நீர் பாய்ந்தா கடல் நல்ல நீராக மாறுகிறது என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் எனலாம் . ஆனால் இந்த நிகழ்வு உண்மையான ஒன்றுதான் என்று சொல்கிறது பல ஆய்வுகள் . அந்த நதிதான் அமேசான் நதி 6000 கி. மீ நீளம் விரிந்து பல அதிசயங்களையும் பல மர்மங்களையும் கொண்டு உலகத்தில் மிகப்பெரும் நதியாக ஓடிக்கொண்டிருக்கும் . இந்த நதியில் மட்டும்தான் உலகத்தில் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு நீர் ஓடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் கலந்த பின்பும் இதன் தன்மை மாறாமல் 280 கி. மீ தொலைவிற்கு மொத்த கடல் நீரையும் தூய்மையான நீராக மாற்றிக்கொண்டு இருக்கிறதாம்.
இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் 280 கி.மீ தொலைவைக் கடந்தபிறகுதான் உப்பு நீரிடம் போராடி தோற்றுப்போவதாக ஆய்வு கூறுகிறது .அமேசான் அமேஸ் என்றாலே ஆச்சர்யம் என்று அர்த்தம் . இப்பொழுதுதான் தெரிகிறது இந்த நதிக்கு அப்படி ஒரு பெயர் வைத்தது பொருத்தமான ஒன்றுதான்.

பூச்சிகளை கட்டுப்படுத்தும் இயற்கையின் கொடை வேம்பு!






               இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் ஆராய்ச்சி மையம் விளக்கம் அளித்துள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 


விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகளான தட்டான், ஊசித் தட்டான், பொறி வண்டு, தரை வண்டு, சிலந்திகள், குளவிகள், தேனீக்கள் போன்றவை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூல்நிலைகளையும் பாதிக்கிறது.


பூச்சிக் கொல்லி மருந்துகளை திரும்பத் திரும்ப தெளிப்பதனால் பூச்சிகளானது பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மையை உருவாக்கி கொள்கின்றன. 



இது மட்டுமல்லாமல், நாம் உண்ணும் உணவு தானியங்களிலும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் எஞ்சிய நஞ்சானது தேங்கி விடுகிறது. இதனால் மனிதர்களுக்கும், அவர்களைச் சார்ந்த விலங்கினங்களும், பறவைகளும் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.



உலகில் மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரங்களில் வேம்பு முதன்மையானது. இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.



வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர். வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இவை பூச்சிகள் பயிர்களை உண்பதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் பூச்சிகள் முட்டையிடுவதையும், முட்டையில் இருந்து இளம் பூச்சிகள் வெளியே வருவதையும் தடுக்கின்றன. பூச்சிகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.



இவை அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், கூன் வண்டுகள், ஈக்கள், எறும்புகள், குளவிகள் நாவாய்
பூச்சிகள், வெட்டுக் கிளிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகளின் வளர்ச்சி மாற்றத்தைப் பாதிக்கின்றன. மேலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய்களைப் பரப்பக்கூடிய ஈக்கள், உண்ணிகள், பேன்கள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் அசாடிராக்டின் பயன்படுத்தப்படுகிறது.



விவசாயப் பயிர்கள்: நெற்பயிரில் வேப்பெண்ணெய் 1 சதம் (10 மிலி-லிட்டர்) அல்லது வேப்பங் கொட்டைச் சாறு 5 சத கரைசலை தெளிக்கும்போது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறைகிறது. வேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலைத் தெளிப்பதால் புகையானின் வளர்ச்சி பருவமானது பாதிக்கப்படுகிறது. மேலும் அதன் உருவம் மற்றும் எடையிலும் மாற்றம் ஏற்படுகிறது. வேப்பெண்ணெய் (3 சதம்) நெற்பயிரை கதிர் நாவாய்ப் பூச்சிகள் தாக்குதல் இருந்து பாதுகாக்கிறது.



கொண்டைக் கடலையில் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணெய் (5 சதம்) தெளிப்பதால் காய்த் துளைப்பானின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது. அசாடிராக்டின் கலந்த மருந்தை தெளிக்கும்போது காய்த்துளைப்பானின் தாக்குதலாவது 90 சதவீதம் வரை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேப்பங்கொட்டைச்சாறு துவரையில் காய்த் துளைப்பான்களையும், தட்டைப் பயிரில் அசுவினியின் தாக்குதலையும் குறைக்கிறது. 


நிலக்கடலையில் இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு சார்ந்த மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கப்பட்ட இலைகளை தொடர்ந்து உண்பதால் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழுவானது குறைந்து விடுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன.


நன்மைகள்: வேம்பு மற்றும் வேம்பு சார்ந்த பொருட்களால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வேம்பானது பூச்சிகளை கொல்வதில்லை. மாறாக பூச்சிகளின் வளர்ச்சி பருவத்தைப் பாதிக்கின்றன. இவை நன்மை செய்யும் பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தேனீக்களை எதுவும் செய்வதில்லை. வேம்பு சார்ந்த பொருள்களுக்கு பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொல்வதில்லை. இதனை செயற்கையாகத் தயாரிக்கப்படும் மருந்துகளுடன் கலந்தும் தெளிக்கலாம்.
வேம்பானது எளிதில் கிடைக்கக் கூடியது மற்றும் வேம்பு சார்ந்த மருந்துகளின் விலையும் மிகவும் குறைவு.


எனவே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் வேம்பு மற்றும் அதனைச் சார்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி இயற்கைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளையும் பாதிக்காமல் இயற்கையுடன் ஒருங்கிணைந்து பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம் என்றார் அவர்.

வியக்கவைக்கும் பூம்புகார்..! - சுற்றுலாத்தலம்!


வியக்கவைக்கும் பூம்புகார்..!
 
வியக்கவைக்கும் பூம்புகார்..!
 
பூம்புகார் சிலப்பதிகாரத்தின் நாயகன் - நாயகி வாழ்ந்த ஊர்
சோழப்பேரரசின் தலைநகராக இருந்த இந்த ஊருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்றும் இன்னொரு பெயரும் உண்டு.
சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கருவி என்னும் இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

நம் தமிழ் மண்ணில் 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்க்கான சந்தையாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரத்தின் பெருமையை போற்றுகின்றன.

தமிழ் இலக்கியங்களில் மட்டுமன்றி, பிராகிருத மொழியில் உள்ள புத்த ஜாதகக் கதைகளும் புத்தவம்சகதாவும், தாலமியின் பூகோளநூல் போன்ற வெளிநாட்டார் நூல்களும் பூம்புகாரைக் குறிப்பிடுகின்றன.

மகதம், அவந்தி, மராட்டா நாட்டுக் கைவினைக் கலைஞர்களின் தொழிற்கூடமாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது. இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆகியவை ஆய்வு மேற்கொண்டு சங்ககாலப் படகுத்துறை, புத்தர்விகாரை, உறைகிணறுகள், அரிய மணிகள், கட்டடங்கள், காசுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துத் தந்துள்ளன.
 
 
இன்று ஒவ்வொரு தமிழரும் காண வேண்டிய அற்புதச் சுற்றுலாத் தளமாக பூம்புகார் விளங்குகிறது
சிலப்பதிகாரத்தின் நினைவாக இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களை காணும்போதுகண்ணகி வாழ்ந்த காலத்துக்கே நாம் சென்றுவிட்ட உணர்வு ஏற்படும். பூம்புகாரின் இன்னொரு முக்கியமான சிறப்பாக காவிரி நதி இங்குதான் கடலில் சங்கமிக்கிறது.

கடற்கரை நகரமான பூம்புகாரில் பிரமிப்பூட்டும் வகையில் விளக்குத்தூண், கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.
கண்ணகி கோட்டத்தில் கண்ணகி சிலை அமைந்துள்ளது.
இலஞ்சி மன்றத்தில் தான் பண்டைய கால வரலாற்றின் படி குளம் அமைந்திருந்ததாம். அதனை நினைவு கூறும் வகையில் தமிழக அரசின் மூலம் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே மூன்று கட்டிட அமைப்புகள் ஒருங்கே சிறப்புடன் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் இருமருங்கிலும் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இடதுபுறத்தில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைந்துள்ளது. அதன் வாயில் கதவுகள் சிலம்ப வடிவை ஒத்ததாய் அமைந்துள்ளன. அத்துடன் கலைக்கூட கட்டிடமும், வாயில் தோரணமும் அழகுற அமைக்கப் பட்டுள்ளது
.
3 மீட்டர் உயரமுள்ள கண்ணகி சிலை, 2.75 மீட்டர் வடிவ மாதவியின் சிலை, சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் சிலம்பு வடிவ குளம், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளின் சிலை, சோழ ஆட்சி புரிந்த கரிகால் சோழனின் சிலை மற்றும் சிலப்பதிகாரக் கதையில் வரும் 49 நிகழ்ச்சிகள் இங்கே பிரமிப்பூட்டும் வகையில் கற்சிற்பமாக வடிவமைக்கப்படுள்ளன
.
பூம்புகாரின் கடலடியில் அருங்காட்சியகம் உள்ளது. இது தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையின் அருங்காட்சியகம் ஆகும். 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் என்ற தனிச்சிறப்பு பெற்றுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் சிரட்டைச் சில்லிகள், புத்தர் தலை மற்றும் புத்தர் பாதஉருவாரம், பெருங்கல் மணிகள், ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள், மரக்கலைப் பொருட்கள், வட்டக்கிணறு, பெருங்கற்கால சேர்ப்பொருட்கள், சீன ஜாடிகள், பிரித்தானிய குளிர் ஜாடிகள், ஈயக்கட்டிகள், புத்தர் சிலை, சிலம்பு, ஐயனார் கற்சிலை, கப்பல் மாதிரி பொம்மைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் ஆய்வுகள் கூறும் அற்புத தகவல்கள்
 
ந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ”தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
 
இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, மார்ச் 7, 1991 ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் சோனோகிராப் எனப்படும் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.
இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. இந்த ஆய்வில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச், 8,9ல் ஆய்வாளர்கள் கடலுக்குள் மூழ்கி,, இரும்பு பீரங்கி, ஈயக்குண்டைக் கண்டுபிடித்தார்கள். 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரை லாடம் வடிவத்தில் கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள் . அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர்.
இதையடுத்து 2001 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டகிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு வியக்கவைக்கும் செய்திகளை வெளியிட்டார்.

பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரமாண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்பதை இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்தார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சியின் மூலம் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது போல் தற்போதைய ஈராக்கிலுள்ள ''மெசபடோமியா'' பகுதியில் சுமேரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய
நாகரீகத்தை விட இன்னும் பல நூற்றாண்டுகள் பழமையானது
பூம்புகார் நாகரீகம் என்பது தெளிவாகிறது

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்'' எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்ப வெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு கிலன்மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார். மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ”அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சென்னையிலிருந்து காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் கருவி என்னும் இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top