.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 9 September 2013

தமிழில் வருகிறது தி கான்ஜுரிங்!


 

சமீபத்தில் வெளியாகி உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் படம் தி கான்ஜுரிங். நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் பயங்கரமான திகில் படம். அதிக ரத்தம், கொலை இல்லாமல் வெறும் காட்சி அமைப்புகள், பின்னணி இசை மூலமே மிரட்டியிருக்கிறார்களாம். வழக்கமான பேய்பட கதைதான். ஒரு பழைய வீட்டுக்கு புதிதாக குடிபோகிறது ஒரு குடும்பம். அந்த வீட்டுக்குள் இருக்கும் தீயசக்தி அவர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது. அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்கிற கதை. ஜேம்ஸ் வான் டைரக்ட் செய்திருக்கிறார். வேரா பார்மிங்கா, பேட்ரிக் வில்சன் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை பார்துவிட்டு ரஜினி மகள் ஐஸ்வர்யா நான் இரண்டு நாள் இரவில் வீட்டைவிட்டே வெளியில் வர பயந்தேன். இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று டூவிட்டரில் எழுத ஏகத்துக்கு படம் எகிறிவிட்டது. சென்னை மால் தியேட்டர்களில ஒரு வாரத்துக்கு ஹவுஸ்புல்லாகி இருக்கிறது.


ஆரம்பத்தில் சாதாரண திகில் படம்தானே என்று ரிலீஸ் பண்ணியவர்கள், இப்போது படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு தமிழில் வேகவேகமாக டப் செய்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் தமிழில் ரிலீசாக இருக்கிறது. எல்லோரும் பயப்பட தயாராக இருங்கள்.

ரஜினியின் கோச்சடையான் டீசர் வெளியானது!!

 

ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் டீசர் வெளியானது. எந்திரன் படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். அவரது இளைய மகள் சவுந்தர்யா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்துள்ளார். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர் தவிர சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெரப், நாசர், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மீடியா ஒன் குளாபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

அனிமேஷன் படமாக அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் மோசன் கேப்ட்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் இந்திய 3டி திரைப்படம் இதுவாகும். இப்படத்தின் முதல் டிரைலரை சமீபத்தில் நடந்த கேனன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக வெளியிட இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை. இந்நிலையில் கடந்தவாரம், கோச்சடையான் படத்தின் முதல் டீசர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என செளந்தர்யா கூறியிருந்தார். அதன்படி இன்று(செப்.,9ம் தேதி) முதல் டீசரை ‌இணையளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி டீசரில், நிறைய ஹீரோக்கள் இருக்கலாம், நிறைய சூப்பர் ஹீரோக்கள் இருக்கலாம், ஆனால் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும் தான் என்ற அடைமொழியுடன் ஒரு பெரிய கோட்டை சுவரின் கதவை உடைத்து கொண்டு வருகிறார் ரஜினி. ரசிகர்கள், இதுவரை பார்த்திராத ரஜினியாக முற்றிலும் வித்தியாசமாக வருகிறார் இந்த கோச்சடையான்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு கோச்சடையான் படத்தின் முதல் டீசரை வெளியிட்டு இருக்கிறோம் என்று படத்தின் இயக்குநர் செளந்தர்யா தனது டுவிட்டரில் கூறியிருக்கிறார். மேலும் படத்தின் ஆடியோ ரிலீஸ் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டிரைலரில் கூறப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் கோச்சடையான் படம் வெளியாக இருக்கிறது. தீபாவளி அல்லது டிசம்பரில் கோச்சடையான் படம் வெளியாகும் என தெரிகிறது.

திரை விமர்சனம் » தங்கமீன்கள்!


‘‘கற்றதுதமிழ்’’ திரைப்படத்தின் இயக்குநர் ராம், கதையின் நாயகராக நடித்து, இயக்கியும் இருக்கும் திரைப்படம் தான் ‘தங்கமீன்கள்’. காசு கொடுத்தால் தான் கல்வி எனும் இன்றைய நிலையை எள்ளி நகையாடியிருக்கும் இப்படத்தில், தனியார் பள்ளி கல்வி டீச்சர்களுக்கும், மிஸ்களுக்கும், மேடம்களுக்கும் மட்டுமல்ல, தங்களது குழந்தைகளின் தரம், திறம் தெரியாமலே படி, படி என படுத்தி எடுக்கும் பெற்றோர்களுக்கும் சரியான திரைப்ப(பா)ட‌மாக அமைந்திருக்கிறது ‘தங்கமீன்கள்’ என்றால் மிகையல்ல!

கதைப்படி ரோகிணி -‘பூ’ ராமு தம்பதிகளின் வாரிசு ராம். ராமின் செல்லமகள் ‘செல்லம்மா’ எனும் சிறுமி சாதனா! ரிட்டர்யர்டு ஹெட்மாஸ்டர் அப்பாவான ‘பூ’ ராமுவின் பணத்திலும், வீட்டிலும் காலம் தள்ளும் ராம், மகள் கேட்பதை எல்லாம் வாங்கித்தர நினைப்பதுடன் விரும்புவதை எல்லாம் செய்யவும் நினைக்கிறார். மற்ற குழந்தைகளைக் காட்டிலும் சற்றே மந்தமான குழந்தையான செல்லம்மாவை மேலும், மேலும் செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச்சுவராக்கி விடப்போகிறான் மகன் ராம் எனும் பயத்தில் அடிக்கடி ‘பூ’ ராமு, ராமிடம் பேத்திக்காக பேச, அதுவே அப்பா - பிள்ளையிடம் பிரிவை உண்டாக்குகிறது. அதன் விளைவு மொத்த குடும்பத்தில் இருந்தும் ராம் பிரிந்து கேரளா - கொச்சிக்கு வேலைக்கு போகிறார். அப்பாவும், மகளும் பிரிவு தாங்காமல் அடிக்கடி போனில் புலம்பி அழ, தியேட்டரில் நாமும் சேர்ந்து அழுவது மாதிரியான உருக்கமான காட்சிகள் ஒரு பக்கம் உலுக்கி எடுக்கிறது. மற்றொரு பக்கம், இன்றைய காசு கல்வியும், அதன் கண்டிப்பும், தன் மகளின் வாழ்க்கையை பாழ் பண்ணி விடும் என நம்பும் ராம், அவளை, அவள் விரும்பும் எவிட்டா மிஸ் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விட்டு மகள் விரும்பும் கல்வியை தருகிறார். மக்களுக்கு பாடம் நடத்துகிறார்! இதுதான் ‘தங்கமீன்கள்’ படத்தின் ஜொலி ஜொலிக்கும் மொத்த கதையும்.

இதனூடே மகள் விரும்பும் உயர் ஜாதி நாய்க்காக ராம், நாயாய், பேய்யாய் நாக்கு வெளித்தள்ள ஏழுமலை, ஏழுகடல் தாண்டும் சுவாரஸ்ய காட்சிகள், தனியார் பள்ளி டீச்சரின் கண்டிப்பு, அதனால் சக மாணவர்கள் செல்லம்மா சாதனாவை ‘‘டபிள்யூ’’ என பட்டப்பெயர் வைத்து கூப்பிடும் கலாட்டா, ஆஸ்திரேலியா ரிட்டன் ராமின் தங்கை குடும்பத்தின் அலட்டல், இல்வாழ்க்கைக்குப் போன எவிட்டா மிஸ்ஸின் மாற்றம், செல்லம்மாவால் அவருக்கு கிடைக்கும் ஏற்றமும்... என ஏகப்பட்ட சுவாரஸ்யங்களை கலந்து கட்டி தங்கமீன்களை தகதகவென ஜொலிக்கவிட்டிருக்கும் ராமின் துணிச்சலுக்கு ஒரு ‘ராயல் சல்யூட்’ அடித்தே ஆக வேண்டும்!

இயக்குநராக மட்டுமல்லாமல் இக்கதையின் நாயகராகவும் ராம் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்! கடன் கேட்டுபோன இடத்தில் ஐந்தாறு முறை அலையவிட்டு அல்லல்படுத்துவதுடன், அட்வைஸூம் பண்ணும் நண்பனை ராம் எச்சரிக்கும் இடத்தில் ஆகட்டும், டபிள்யூவை சிம்பிளாக குழந்தைக்கு புரியும்படி எழுத கற்றுத்தராது, அதையே அவளது பட்டப்பெயராக காரணமாகும் டீச்சரிடமும், ஸ்கூல் பிரின்ஸ்பாலிடமும் நியாயம் கேட்டு ராம் போராடும் இடத்திலாகட்டும், மனிதர் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதேமாதிரி மகளை பிரிந்து வாடும் இடங்களில் கரையாதோர் நெஞ்சையும் கரைக்கும் இடங்களில் நம்மை உலுக்கி எடுத்து விடுகிறார். ராமுக்கு நிறைய விருதுகள் நிச்சயம்!

சிறுமி செல்லம்மாவாக சாதனா, அப்பாவி மகளாகவும், அப்பாவின் மகளாகவும் அசத்தி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கே குளத்தில் விழுந்து தங்கமீன் ஆகிவிடுவாரோ எனும் திகிலுடனேயே நம்மை படம் பார்க்கும் இவரது பாத்திரம் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் பாத்திரமென்றாலும் ‘பலே’ சொல்ல வைக்கும் பாத்திரம் என்றாலும் மிகையல்ல! அம்மணிக்கும் விருதுகள் நிச்சயம்!

இன்னிக்கு ராத்திரி பூரி சுடுறாங்க எங்க வீட்டுல... அதனால நாளைக்கு வீட்டுல கோவிச்சுகிட்டு செல்லலாமுனு இருக்கேன் எனும் பேபி நித்யஸ்ரீ சஞ்சனாவில் தொடங்கி, ஸ்டெல்லா மிஸ்ஸாக கர்ண கொடூரமாக வரும் லிஸி வாரியார், எவிட்டா மிஸ் பத்மபிரியா, ராமின் மனைவியாக, செல்லம்மாவின் தாய் வடிவாக வரும் ஷெல்லி கிஷோர், ஓய்வுபெற்ற தலைமையாசிரியராக, செல்லம்மாவின் தாத்தாவாக வரும் ‘பூ’ ராம் அவரது மனைவியாக, செல்லம்மாவின் பாட்டியாக வரும் நடிகை ரோகிணி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது ‘தங்கமீன்கள்’ படத்தின் பெரும்பலம்!

யுவன்சங்கர்ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும், அர்பிந்து சாராவின் ஓவிய ஒளிப்பதிவும், ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடை‌யேயான உணர்வுப்பூர்வமான பாசத்தையும், பணகல்வி தரும் மோசத்தையும் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல இயக்குநர் ராமிற்கு பெரிதும் ஒத்துழைத்திருக்கின்றன! வயசுக்கு வர்றதுன்ன என்னம்மா? உள்ளிட்ட ஒரு சில வசனக்கோளாறுகள், குறைபாடுகள் இருந்தாலும் ‘தங்கமீன்கள்’ ஜொலிக்கும் உணர்வுப்பூர்வமான ‘வைரமீன்கள்’!!

வறுமையில் வாடும் தன் ஆசிரியைக்கு உதவிய ரஜினி!!



சூப்பர் ஸ்டார் ரஜினி தன் பால்ய பருவத்தில் பெங்களூரில் உள்ள கவிபுரம் அரசு பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு கன்னடம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தவர் சாந்தம்மா என்ற ஆசிரியை. தற்போது 78 வயதாகும் சாந்தம்மா தனது கணவருடன் ஜலஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். வருமானம் எதுவும் இன்றி வறுமையில் சிறு குடிசையில் அந்த முதிய தம்பதிகள் வசித்து வருவது பற்றி ரஜினிக்கு தகவல் கிடைத்தது. அதனால் ரஜினி அவர்களை நேரில் சந்திக்க விரும்பினார். கோச்சடையான் படப் பணிகளில் பிசியாக இருப்பதால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

சமீபத்தில் ஆசிரியர் தினவிழா வந்தபோது திடீரென ரஜினிக்கு இது நினைவுக்கு வந்திருக்கிறது. உடனே தனது உதவியாளரை அழைத்து "சாந்தம்மாவை மீட் பண்றது மிஸ்சாகிட்டே போவுதுல்ல... அவுங்களோட பேங் அக்கவுணட் நம்பரை வாங்கி அவுங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு கேட்டு அதை அவுங்க கணக்குல டெபாசிட் பண்ணிடுங்க. நான் அடுத்த முறை பெங்களூர் வரும்போது அவுங்களை மீட் பண்றதா சொல்லிடுங்க" என்று கூறியிருக்கிறார்.
இதையொட்டி பெங்களூரில் உள்ள ரஜினி மன்ற தலைவர் ரஜினி முருகனை அழைத்து விசயத்தை சொன்னார் உதவியாளர். அவரும் சாந்தம்மா வீட்டுக்கு சென்று சந்தித்திருக்கிறார். அவர்கள் கேட்ட மூன்று லட்சம் ரூபாயை உடனே அவர்களது வங்கி கணக்கில் செலுத்தினார் ரஜினியின் உதவியாளர்.

"சிவாஜிராவுக்கு நான் 5 முதல் 7ம் வகுப்பு வரை பாடம் நடத்தினேன். அப்போ அவன் குடும்பம் ரொம்ப கஷ்டத்தில் இருந்தது. அதை வகுப்பில் காட்டிக் கொள்ளாமல் படிப்பான். படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் நிறைய சேட்டை பண்ணுவான். அவனோட கையெழுத்து நல்லா  இருக்கும். அப்பவே இவனோட தலையெழுத்தும் நல்லா இருக்கும்னு நினைப்பேன். அதுமாதிரியே அவன் யாரும் நினைச்சு பார்க்க முடியாத உசரத்துல இருக்கான். நான் எவ்வளவு கேட்டாலும் தருகிற நிலைமையில் அவன் இருந்தாலும் எனக்கு என்ன தேவையோ அதைக் கேட்டேன் கொடுத்திருக்கான். மவராசன் இன்னும் நல்லா இருக்கணும். ஆண்டவன் அவனுக்கு நீண்ட ஆயுள கொடுக்கணும்" என்ற நெகிழ்ந்திருக்கிறார் சாந்தம்மா.

சொத்து கணக்கு காட்டாத பிரதமர் உள்பட 56 மத்திய அமைச்சர்கள்!


மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விபரங்கள் மற்றும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்களின் விபரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 76 உறுப்பினர்களில் 19 பேர் மட்டுமே தங்களின் 2012-2013ம் ஆண்டு நிதிநிலை விபரங்களை அளித்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் இந்த கணக்கை தாக்கல் செய்யவில்லை.இது தவிர 56 மத்திய மந்திரிகளும் நடப்பு ஆண்டுக்கான சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

sep 9 - manmohan singh

 


இதற்கிடையில் தற்போதுஅமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. அதிலுல் சிதம்பரம், சரத்பவார், வீரப்ப மொய்லி போன்ற முக்கிய அமைச்சர்கள் தங்கள் மனைவிகளின் பெயர்களில் அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
நிதியமைச்சர் சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.11.96 கோடியில் இருந்து ரூ.12.70 கோடியாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.17.79 கோடியில் இருந்து ரூ.19.48 கோடியாக அதிகரித்துள்ளது. இதே போன்று சிதம்பரத்தின் குடும்ப சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. 

மத்திய விவசாயத்துறை மந்திரி சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.7.86 கோடியில் இருந்து ரூ.8.75 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இவரது மனைவி பிரதீபாவின் சொத்து மதிப்பு ரூ.13.46 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய மந்திரி வீரப்ப மொய்லி மனைவியின் சொத்து மதிப்பு ரூ.3.08 கோடியில் இருந்து ரூ.3.10 கோடியாக அதிகரித்துள்ளது. வீரப்ப மொய்லிக்கு ரூ.25.55 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி சொத்து மதிப்பு தாக்கல் செய்து இருக்கிறார். இதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. மத்திய மந்திரி குமாரி செல்ஜாவின் சொத்து மதிப்பு ரூ.19.54 கோடியில் இருந்து ரூ.29.56 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

கிராமப்புற வளர்ச்சி மந்திரி ஜெய்ராம் ரமேஷ் சொத்து ரூ.3.13 கோடியில் இருந்து ரூ.4.78 கோடி ஆகி இருக்கிறது. இவரது மனைவியின் சொத்து ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக குறைந்து இருக்கிறது.
உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேயின் சொத்து மதிப்பு ரூ.7.42 கோடியில் இருந்து ரூ.10.83 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இருவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.4.53 கோடியில் இருந்து ரூ.5.77 கோடியாக உயர்ந்து உள்ளது..

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top