.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday 15 November 2013

சிகரட்" பற்றி ஒரு "சீக்ரெட்"

 

சிகரட்" பற்றி ஒரு "சீக்ரெட்"..!! கவனமா கேளுங்க

உலக நாடுகளே ஒழிக்க நினைக்கும் ஒரு பொருள்..!

வருடாவருடம் நிதிநிலை அறிக்கையில் வரி உயர்த்தப்படும் ஒரு பொருள்..!! 


பள்ளிப் பருவத்திலேயே பலரின் விருப்பமான ஒரு பொருள்..!!! 

ஆயிசு முடிந்து இறப்பவர்களைவிடவும்,இதன் ஆவிபிடித்து இறப்பவர்கள் தான் அதிகமாம்..? 

இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அனிகிறோம். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அனிகிறோம்,எதற்கு...


 நம் உயிரைப் பாதுகாக்கத் தானே...!

பகைவனைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஏன் இந்த பாதுகாப்பு..?

என்னமோ நடக்குது... மர்மமா

இருக்குதே .


இவ்வாறு உயிரைக்குடிக்கும் ஒன்றை  சித்தரித்தால்..


சிகரட்கவி


கொடி இடையாள்,

குணத்தில் கொடூரமுடையாள்,

மணத்தில் நெடியுடையாள்..!,

இவளுக்கு பல பெயர்கள்..?

இவள் வசம் பலபேர்கள்..!

நெருப்பால் தன்னை எரித்து - நம்,

நெஞ்சயே எரித்து விடுகிறாள்..!!

தன்னைத் தொட்டவனை - இவள்

சும்மா விட்டதில்லை.!,

தொட்டவனுக்கு - இவள்,

இதயப்புகை வென்மையாக,

இருப்பினும் நம்பாதீர்கள்..?

நம் இதயம் கருத்துவிடும்..!,

கடையில் அது வாங்கினால்,

இது இலவசம் என்பதுபோல்,

இவளைத் தொட்டால்..?

ஆஸ்துமா முதல்...!

ஆண்மைக்குறைவு வரை இலவசம்..!

ஆண்டாண்டு காலமாய் - நம்மை,

ஆட்டிவைக்கும் - இவள் ஒரு,

நவீன விபச்சாரி..!!. ".

Monday 11 November 2013

கல்லா மனிதன் மனம்?


கல்லா மனிதன் மனம்?

ஏதோ நினைவுடன்

தனியே நடக்கையில்

 ஒரு கல்லில் கண்டேன்,

ஒற்றை இதழுடன் மஞசள் மலர்

குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்

யார் ஒப்பிட்டது

மனிதர் மனத்தைக் கல்லோடு………
 

**********

Friday 8 November 2013

சுற்றினால் .........கவிதை!


புவி சுற்றினால்
காலத்தின் ஓட்டம்!
-
சூரியன் சுற்றினால்
பகலிரவு மாற்றம்!
-
காற்று சுற்றினால்
சூறாவளித் தோற்றம்!
-
தலை சுற்றினால்
மனிதருக்கு மயக்கம்!
-
பூக்களைச் சுற்றினால்
மணத்தின் ஈர்ப்பு!
-
பேட்டையைச் சுற்றினால்
பயங்கரப் பேர்வழி!
-
நாட்டைசு சுற்றினால்
நாளைய தலைவன்!
-
எண்களைச் சுற்றினால்
பேசலாம் தொலைபேசி!
-
வீணாகச் சுற்றினால்
உயர்வேது நீ யோசி!

Saturday 2 November 2013

வாழ்க்கையில் விளையாடும் மது!

வேலைக்குப்பின் என்று தொடங்கி
 வேலைக்குமுன் என்றாகும்
 மது !
-
————————-
 -
திறமையை அழித்து
 தீமையைத் தரும்
 மது !
-
———————–
-
விளையாட்டாக ஆரம்பித்து
 வாழ்க்கையில் விளையாடும்
 மது !
-
—————————
-
இலவசம் என்று குடித்தால்
 தன் வசம் ஆக்கிவிடும்
 மது !
-
———————
-
ஊடகங்களில்
 கற்பிக்கப்படும் தீங்கு
 மது !
-
————————
-
நல்லவர்கள் தொடுவதில்லை
 தொட்டவர்களை விடுவதில்லை
 மது !
-
————————
-
இன்பம் என்று தொடங்கி
 பெருந்துன்பத்தில் முடியும்
 மது !
-
——————–
-
துஷ்டனைக் கண்டால்
 தூர விலகு
 மது ! .

Wednesday 30 October 2013

இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..!


உறவுகள் மட்டுமல்ல
 ஊரும் மரணத்திற்கு அழுதால்
 வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் !
-
—————–
-
இறப்பு இல்லை
 இறந்தும் வாழ்கிறார்கள்
 பொதுநலவாதிகள் !
-
——————
-
வராது நோய்
 பசித்த பின்
 புசித்தால் !
-
———————
-
உச்சரிக்க வேண்டாம்
 முன்னேற்றத்தின் எதிரிகள்
 முடியாது தெரியாது நடக்காது !
-
———————-
 -
நாளை என்று
 நாளைத் தள்ளிட
 நாள் உன்னைத் தள்ளும் !
-
——————
-
உடலை உருக்கும்
 உருவமில்லா நோய்
 கவலை !
-
——————–
-பெறுவதை விட
 கொடுப்பதே இன்பம்
 பொதுநலம் !
பெறுவதை விட
 கொடுப்பதே இன்பம்
 பொதுநலம் !
-

Monday 21 October 2013

கவிதை............




நெஞ்சில் வீரம் உண்டு

கண்ணில் கருணையும் உண்டு

சொல்லில் அற்புதம் உண்டு

பிறர் மனம் குளிர வாழ்ந்தால்

வாழ்வில் என்றும் வெற்றி உண்டு!

கவிதை.... கவிதை...



அனைத்தும் இருப்பவனிடம்

உதவிட எண்ணம் இல்லை

உதவிட நினைப்பவனிடம்

அனைத்தும் இருப்பதில்லை!

Saturday 24 August 2013

'' அம்மா என்றால் அன்பு ''


மாதங்கள் பத்து சுமந்து
உன் கற்பனைகளால்
என்னை செதுக்கிய சிற்பியானாய்...

கருவில் என் பசி தீர்க்க

திகட்டும் பொழுதும்
உணவை உண்டு
என் உயிர் காத்தாய்...

பிறந்தவுடன்

மொழியில்லா என் ஆசைகளை
சிறு அசைவுதனில் புரிந்துகொண்டு
நிறைவேற்றி வைத்தாய்...

விரைவில் நான்

நடை பழக
உன் ஐவிரல் கொண்டு
என் ஒரு விரல் கோர்த்து
பல மைல்கள்
நீயும் நடந்திருப்பாய்...

தலை முடியில்
விரல் வருடி
வலக்கை நீட்டி
என் தலையணை ஆக்கி
வலிகள் தாங்கி
நான் தூங்க விழித்திருப்பாய்...

எனக்கு பசிக்கும் முன்னே

நீ அறிவதால்
பசியை நானோ அறிந்ததில்லை...

குளநீரை கல்லெறிந்து

கலைப்பது போல்
என் தோல்விகளில்
உன் குரல் எறிந்து
என் சோகங்கள்
கலைத்து நிற்ப்பாய்...

எடைதட்டில் உனை அமர்த்தி

உனக்கு சமம் பார்க்க
இவ்வுலகில் ஏதுமில்லை...

இங்கு

உன்னைப்போல்
எந்த தெய்வமும் இல்லை....

~*~கவிதைகள்~*~

~*~கவிதைகள்~*~

ஈகை

 
உண்ணாமல் ஒளித்து வைத்து  
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை  

என்றைக்கும் இனிதே ஈவாய்!!!


கனியும் காலம்

 
சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை
கண்கவரும் சிலையாய் நிற்கும்!
பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான்

நகையாகிப் பொன்னாய் மின்னும்! 
பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில்
பொறுமையெனும் பெற்றி தன்னை!
கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட 

நீராகி கனியும் காலம்...

ஹைக்கூக்கள்

                                  நட்சத்திரம்

                             யார்சூட மலர்ந்திருக்கின்றன
                            விண்வெளித் தோட்டத்தில்
                             நட்சத்திரப் பூக்கள்

படைப்பு!

மேகக் கவிஞன்
மழையெனும் மையால்
எழுதிய கவிதைக்கு
இயற்கை இட்ட பெயர்....
பசுமை!'

அடடே!

தொகுதி
மறு சீரமைப்பு...
மருமகளுக்கு
மணி மகுடம்!
மாமியாருக்கு
முதியோர் இல்லம்.

இந்தியாவின் ஏழ்மை

சிக்னல்களில் நிற்கும்
வெளிநாட்டுக் கார்களின்
கண்ணாடிக் கதவு தட்டி
இந்திய ஏழைகள் விற்கிறார்கள்
காகித தேசியக் கொடி

நிலநடுக்கம்

விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்குமாடி வீடுகள்!
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு!

பட்டுப்புழு

பட்டுப்புடவையில்
வண்ணத்துப்பூச்சி
ஓவியமாக அழுதபடி...

அழையா விருந்தாளி

கையசைத்து
கூப்பிட
மரங்கள் இல்லாததால்
வராமல் போனது
மழை!

சூரியன்

அழகாய் பிறக்கிறான் அமைதியாக மடிகிறான்
நடுவில் அப்படியொரு ஆர்ப்பாட்டமா?
சூரியன்.

கலங்கரை விளக்கு

விடிய விடிய விழித்திருந்து
நிலவுலகிற்கு வழிகாட்டும் மௌனம்
கலங்கரை விளக்கம்

தென்றல்

உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்

அக அழகு

தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்

 நன்றி கடன்

அடுத்த பிறவியில்  
எனக்கு மகளாக 
என் தாய்...

வானவில்

                               பறவைகளைத்
                               தீண்டுவதில்லை
                               வான"வில்"
                               ஆயுதம்...

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

குறள் :

1:நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி
தாக்காதே தகவல் தரும்.
 

பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.

2:
காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும்
நாணாதே மெல்ல நகும்.

பொருளுரை: எங்கோ தொலத்து விட்டுவிட்டக் கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.

3:
இனிதே மொழி இயம்பினும் நெடண்மை
மெலிதே கொல்லும் செவி.

இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை
மெலிதே கொல்லும் செவி.

பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?

4:
அன்புசால் மொழியே ஆயினு மோட்டலில்
இன்மை யதுகைபேசி உரை.

அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில்
இன்மை அது கைபேசி உரை.

பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை; அனைவருக்கும் இன்மையைத் தான், கேட்டைத் தான் விளைவிக்கும்.

5:
தெவிட்டு மொலி தீதே; கைபேசியுரை
செவிட்டுக் குவழி செயின்.

தெவிட்டும் ஒலி தீதே கைபேசி உரை
செவிட்டுக்கு வழி செயின்.

பொருளுரை: கைபேசியால் வரும் அதீத ஒலி காதைச் செவிடாக்கும் வகையில்; தெவிட்டும் அளவில் கொள்ளுதல் காதுக்குச் செவிட்டை மாத்திரம் அல்ல உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். அளவிற்கு மீறிய அமிர்தமும் நஞ்சுதானே.

6:
வாட்டும் வருத்தம் வகையறியான்; நலந்தருமோ
காட்டும் கைபேசிச் சினம்?

வாட்டும் வருத்தம் வகை அறியான்; நலம் தருமோ
காட்டும் கைபேசிச் சினம்?

பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை, காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினம்தான் நலம் தருமோ? கைபேசியும், அவன் பாலுள்ள நலமும் தான் கெடும்.

7:
இறையில்லத் துவிசை நிறுத்தாக் கைபேசி
நிறையல்ல; வசைமிகுக்குங் குறை.

இறை இல்லத்து விசை நிறுத்தாக் கைபேசி
நிறை அல்ல; வசை மிகுக்கும் குறை.

பொருளுரை: இறை இல்லமாகிய தேவால
த்தில்; கோயிலில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து கொடுக்கும் மிகக் குறைபாடான செயல் ஆகும்.

8:
சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
மிகையல்ல மேன்மைக் கிழுக்கு.

சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு.

பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்திரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைஞ்சலாக அமைந்துவிடும்.

9:
சங்கத்தே சமனித்துச் சாற்றாதே கைபேசியுள்
பங்கமிட்டே இரைவதா பண்பு?

சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள்
பங்கமிட்டே இரைவதா பண்பு?

பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு. இரைந்து கத்துதல் அல்ல என்பதை உணர்வீர்களாக. அவ்வாறு காட்டுக் கத்தாய் கத்திப் பேசுவதா நாகரீகம்?

10:
சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
நிந்தையை நல்குமல்ல பிற.

சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
நிந்தையை நல்கும் அல்ல பிற.

பொருளுரை: சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியால் அனைவருக்கும் கூப்பிட்டுப் பரப்புதல் அவர்களின் நிந்தையையே நல்கும்; வேறல்ல. பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை.

கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!

கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!

பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக மரங்கள்
வருத்தப்படுவதில்லை.


தென்றல் நின்று போகும்
என்பதற்காக மலர்கள்
வருத்தப்படுவதில்லை.


நிலவு தேய்ந்து விடும்
என்பதற்காக வானம்
வருத்தப்படுவதில்லை.


பிறகு ஏன் மனிதா!
நீ மட்டும் தோல்வி கண்டு
துவண்டு போகிறாய்?

காலம் இருக்கு கனிவது நிச்சயம்
நேரம் இருக்கு நடப்பது நிச்சயம்
உழைப்பு இருக்கையில் வெற்றி நிச்சயம்!!!

Friday 23 August 2013

""சிந்தனை விருந்து"



  •  யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்.
  •  மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
  •  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!
  • மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது. ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது!
  • முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி மௌனமாக இருப்பதுதான்!
  • அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன!
  • நன்றாகப் பேசுவது நல்லதுதான். ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
  • மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்.
  • தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!

சிறப்பான சிந்தனைகள் பத்து!

சிறப்பான சிந்தனைகள் பத்து!

  1. படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
  2. மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
  3. உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
  4. வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
  5. பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
  6. ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
  7. எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
  8. மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
  9. கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
  10. அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

பழமொழிகள் சில...

பழமொழிகள் சில...

அகல உழுகிறதை விட ஆழ உழு. 
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 
போதுமென்ற மனமே பொன் செய் மருந்து.  
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. 
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.  
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பசியுள்ளவன் ருசி அறியான். 
மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது.
பதறாத காரியம் சிதறாது. 
எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். 
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.  
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.  
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு


 பூக்கள்.
அரளிச் செடியிலும்.


இருண்ட பௌர்ணமி.
அட...
சந்திர கிரகணம்.


வறுத்த மீன்.
மடித்த காகிதத்தில்
"உயிர்களைக் கொல்லாதீர்" வாசகம்.


சுமக்க விரும்பியதென்னவோ
புத்தகப் பையை.
தீப்பெட்டிச் சிறுமி.


ரேசன் கடையில்
அரிசி கிடைத்தது.
எறும்புகளுக்கு மட்டும்.


உலகெங்கும்
ஒரே மொழியில் பேசும்
மழை.


பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.


சாத்தான் வேதம் ஓதியது.
சிகரெட் பெட்டியில்
எச்சரிக்கை.


கொட்டும் மழை.
எரியும் மனது
விற்றுவிட்ட நிலம்.


வானத்துக்குள் பிரவேசித்த
இன்ப வெள்ளத்தில்...
ஊஞ்சல் சிறுமி



பூங்காவில் ஒரு
நேர்காணல்...
மலர்களோடு!


தரையைத் தொடும்வரை
ஊஞ்சலாக்கி மகிழ்விக்கிறதே
ஆலம் விழுதுகள்!

மூன்று என்ற சொல்லினிலே...


மூன்று என்ற சொல்லினிலே...

மிகக் கடினமானவை மூன்றுண்டு:
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.


நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல். 

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

 
இழப்பு மூன்று வகையிலுண்டு:
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

 
உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

ரசித்த உரை மொழிகள் சில!

ரசித்த உரை மொழிகள் சில>>>

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்...

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

‎3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.அதற்கு என் நிழலே போதும்.

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்.

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்.

 ‎8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

‎9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


பழமொழிகளின் பழம்பொருண்மைகள்!

பழமொழிகளின் பழம்பொருண்மைகள்

 முன்னுரை
நாட்டுப்புறவியலின் சிறப்புக் கூறுகளுள் பழமொழிகளும் அடங்கும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் உணர்வின் வெளிப்பாடுகளாக விளங்கும். பழமொழிகள் சிலவற்றின் பொருண்மைகள் இன்று மாற்றமடைந்துள்ளன. பழமொழிகளுக்கு வழங்கும் தற்காலப் பொருண்மைகளின் தகுதிப்பாட்டையும், முற்காலப் பொருண்மைகளின் உறுதிப்பாட்டையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

பழமொழிகளின் தற்கால, முற்காலப் பொருண்மைகள்


1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமட்டான்
இப்பழமொழியைச் சொல்லிக்கொண்டே தவறு செய்யும் தம் குழந்தைகளை அடித்து நொறுக்கும் அம்மாக்களைப் பல இடங்களிலும் காணலாம். இப்பழமொழியைத் தவறாக உணர்ந்து கொண்டதன் விளைவு. உண்மையில் இங்கு "அடி" என்பது இறைவனுடைய திருவடியைக் குறிக்கிறது. இறையடி, திருவடி அருள் உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார் எனும் பொருண்மை இதன் முற்கால பொருண்மை எனலாம். அல்லது பெரியவர்களின் வாழ்த்தை வேண்டி அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்குவதை இது குறிக்கிறது எனலாம்.

2. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
ஆற்றைக் கடக்க வேண்டியவன் மண் குதிரையிலா கடப்பான்? மனிதனுக்கு அறிவில்லையா? அதுவும் பண்டைத் தமிழருக்கு அறிவில்லை எனல் பொருந்துமா? அறிவில்லாமலா சொல்லி வைத்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதில் வரும் குதிர் - மண்மேட்டைக் குறிக்கிறது ஆற்றில் மண்/மணல் மேடுகள் இருக்கும். ஆற்றைக் கடப்பவன் அதில் நின்று தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஆற்று வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்விடும். குதிரில் கால் வைத்தால் திடீரென்று கால் உள்ளே போய்விடும். எனவே ஆற்றைக் கடக்க நினைப்பவன் மண் குதிர் - ஐ நம்பக்கூடாது. எனவே இப்பழமொழியின் மூலவடிவம் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று இருந்திருக்க வேண்டும்.

3. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
நல்ல மனிதர்களை உருவாக்குவது ஆசிரியர் பணி. நல்ல மனிதர்களைக் காக்கத் தீயவர்களைச் சிறைபடுத்துதல் "போலீஸ்" என்கிற காவலர்களின் கடமை. நிலைமை இவ்வாறிருக்க, அவர்களை வக்கற்றவர் போக்கற்றவர் என எவ்வாறு கூறல் இயலும்?
"வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை:
போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை"
வாக்குக் கற்றல் - அறிந்து கொண்ட செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் திறம் போக்குக் கற்றல் - திருடன் தன்னைத் தேடி வந்த காவலர் போய் விட்டார் என நினைத்து வெளியில் வரும்போது, அவனைப் பிடிப்பதற்கு ஏதுவாக போய் விட்டது போல் போக்கு காட்டி, சிறிது தூரம் சென்று மீண்டும் வந்து திருடனைப் பிடிப்பார் என்று சொல்லிப் பார்த்தாலே பழமொழியின் பழம்பொருள் விளங்குகிறது. நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவு புலனாகிறது.

4. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
கேட்பதற்கே வேடிக்கையாய் இருக்கிறது. கல்லையும் புல்லையும் மணம் செய்து கொண்டு பெண்கள் என்ன செய்யமுடியும்?
"கல்லான் ஆனாலும் கணவன்
புல்லான் ஆனாலும் புருஷன்"
கல்வி அறிவு அற்ற படிக்காதவராக இருந்தாலும் புல்லாதவராக அன்பற்றவராக இருந்தாலும் கணவன் என்று ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் எனும் வாழ்க்கையறிவை விளக்குகிறது இப்பழமொழி.

5. களவும் கற்று மற.
திருடக் கற்றுக்கொள்; பிறகு மறந்து விடு என்ற பொருளில் இன்று இப்பழமொழி வழங்கப்படுகிறது.
"களவும் அகற்று; மற"
சொல்லிப் பார்த்தால் பண்டை மக்களின் பழம்பெருமை விளங்கும்; தமிழர்கள் திருடச் சொல்லிப் பழமொழி கூறியிருக்க வாய்ப்பில்லை.

6. "சேலை கட்டிய மாதரை நம்பாதே"
இப்பழமொழி மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சேலை கட்டிய மாதரை நம்பக்கூடாது. சுடிதார், ஜீன்ஸ், பாவாடை, தாவணி போட்டிருக்கும் பெண்களை நம்பலாம் என்பது போல் தோன்றும்; உண்மை அதுவன்று.
சேல் அகட்டிய மாதரை நம்பாதே சேல் போன்ற கண்களை அகட்டி, அகட்டி ஆடவரைத் தேடும் இழிகுணம் உடைய பெண்களை நம்பாதே என்பதுதான் இதன் உண்மைப்பொருள்.

7. "சிவபூசையில் கரடி நுழைந்தாற் போல்"
சிவபூசை வீட்டிலோ, கோயிலிலோ நடைபெறும். அப்பொழுது எப்படி கரடி நுழைய வாய்ப்பிருக்கும்? சிவபூசை பொருத்தமான இன்னிசை அருள் பாடல்களோடு இன்னியம் முழங்க நடைபெறுவது; அப்போது ஒலிச்சீர்மை அற்ற ஓசை சத்தம் கேட்டால் பூசையில் ஈடுபாடு வருமா? கரடியை எனும் ஒலிக்கும் கருவி அதைத்தான் செய்யும்.
சிவபூசையில் கரடிகை ஒலித்தாற் போல என்ற பழமொழியே சிவபூசையில் கரடி  நுழைந்தாற்போல என மாறி வழங்குகிறது.

8. "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்."
இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது. பண்டைத் தமிழர் ஆயிரமாயிரம் மூலிகை, அதன் வேர்கள் பற்றி அறிந்தவர்கள். மூலிகை மருந்துகள் தயாரித்தளித்து நோய்களை நீக்கினர் மருத்துவர்கள் அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன்
அரை வைத்தியவன்"
என்று பழமொழியின் பொருளைப் புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.

9. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
இது கூட தெரியாதவர்களா தமிழர்கள்? இது தெரியாமலா இப்படிச் சொல்லி வைத்திருப்பார்கள்?
ஓட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
சதைப்பகுதி, ஓடு எனப் பிரித்தறியக்கூடிய முற்றிய சுரைக்காய் ஓட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவர்கள் சொல்லி வைத்த உண்மை. ஓட்டுச் சுரைக்காய் குடுவைக்கு ஆகும்; கறிக்கு அகாது.

10. கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கன்னத்தில் கை வைக்காமல் வேறு எங்க வைப்பது? பழமொழி எதைக் கூறுகிறது?
கன்னம் - கன்னம் வைத்துத் திருடுதல்; சுவரில் ஓட்டையிட்டு உள்ளே புகுந்து திருடுதல் கப்பம் கவிழ்ந்தாலும் திருடக்கூடாது என்பது அதன் பொருள்.

11. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்
எப்படி வளரும்? ஊர்ப்பிள்ளைத் தானே வளரும்? இதன் பொருளை இப்படிப் பாருங்கள் ஊரான் பிள்ளை மனைவி; தன் பிள்ளை - மனைவியின் வயிற்றில் வளரும் தன் குழந்தை. தன் பிள்ளை வளர - தானே வளர- ஊரான் பிள்ளையாகிய மனைவியை ஊட்டி வளருங்கள்.

12. கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்
கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்? மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!
"கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்." இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.

13. மார்கழி பீடை மாதம்
இப்படி சொல்லியிருப்பார்களா? இப்படி இருக்க முடியுமா? மாதங்களில் கண்ணன் மார்கழியாக இருப்பதாக பெருமையாக இம்மாதம் பேசப்படுகிறது. இறை அன்பர்களுக்கு இம்மாதம் உயர்ந்த மாதம்! கோயில்கள் எங்கும் இறையின்பத் திருவிளையாடல்கள் பெருமைக்குரிய மாதமாக இம்மாதம் திகழ்வதால், பெருமை எனப்பொருள்தரும் வகையில் மார்கழி பீடுடை மாதம் என்று பழமொழி அமைத்திருப்பர் நம் முன்னோர் என்பது பொருந்தும்.

14. தை பிறந்தால் வழி பிறக்கும்
இறை நிலையில் பீடுடை மாதமாக மார்கழி விளங்கினாலும் வேளாண் அடிப்படையிலான பொருளாதாரம் விளங்கும் நம் நாட்டில் தை மாதம் நெற்பயிர் அறுவடைக்கு வரும். அதன் காரணமாக வறுமை நீங்கி, வளமை உண்டாகும். வாடிய மக்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள தை மாதப்பிறப்பு வழி வகுக்கும். இவ்வெண்ணத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்வதாக நம் மக்கள் கூறும் "மார்கழிப் பஞ்சம் மக்களை விற்கும்" என்னும் பழமொழி அமைந்துள்ளது. இவ்விரண்டையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் பழமொழிகளின் பொருள் நன்கு விளங்கும்.

முடிவுரை
 பழமொழிகள் பாமரர்களின் பல்கலைக்கழகமாக விளங்குபவை. பழமொழிகளை ஆராய்ந்து பொருள் கொள்ளும்போது பொதுவாக அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றை அறிவுத் தெளிவு பெற்ற நம் ஆன்றோர்கள் பழமொழியாகக் கூறி இருக்க மாட்டார்கள். நுட்பமான அறிவுடைய அவர்கள் ஆழமான கருத்துகளைக் கூறவே பழமொழிகளை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என அறியலாம்.

கவிதைகள்!

கவிதைகள்

வாழ்க்கை

இன்று
தவறிவிடும்
லட்சியக்குறி
நாளை
காத்திருக்கும்
கேள்விக்குறியாம்!
 

புன்னகை
பொதி சுமக்கும்
கழுதை
சிரித்தது...
முதுகில்
சுமையோடு
பள்ளிக்கு போகும்
குழந்தை!
 
கடவுள்
யார் சொன்னது
கடவுள் இல்லையென்று?
பார்த்தோம்...
சிரித்தோம்...
மகிழ்ந்தோம்...
ஒரே வீட்டிலும்
வாழ்ந்தோம்
பெற்றோரை
கடவுளுக்கு மேலாக நினைத்து...

தேசிய கீதம்
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்

நிலநடுக்கம்
விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்குமாடி வீடுகள்!
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு!
  
ஒற்றுமை
அருகருகே இருந்தாலும்
முட்டிமோதாது சுழலும் சமாதானம்
மின்விசிறி!
 
வெளிநாட்டு வேலை
உறவுகள் தொலைத்து
கனவுகள் சுமந்து
காற்றினில் கலந்து
எல்லைகள் கடந்து
வந்தேன் இங்கு...
கிடைத்தது என்னவோ
இலவச காற்று மட்டும்தான்

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top