நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலன்னா, சினிமாவுல இந்த அமெரிக்க மாப்பிள்ளைங்க தொல்ல அதுக்கும் மேல. ஹீரோ கையில மிக்சர் சாப்பிடவே, அமெரிக்காவுல இருந்து பிசினஸ் க்ளாஸ்ல ஃப்ளைட் ஏறி வாரானுங்க இந்த பூம்பழம் ஃபேஸ்காரனுங்க. 7ஓ க்ளாக் பிளேடுல ஷேவ் பண்ணி, ஐஸ்ல வச்ச ஆப்பிள் மாதிரி இருந்தாலும், இந்த ஸ்லீவ்லெஸ் சிங்காரிஸ், அழுகுன அன்னாசி பழம் மாதிரி இருக்குற ஹீரோ மூஞ்சைத்தான் லவ் பண்ணும்னு பைக் பாஸ் போடுறவர்ல இருந்து உள்ள பாப்கார்ன் விக்கிறவர் வரை எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும், ஓவர் டைம் பார்த்து சம்பாதிச்ச டாலர்ல இவனுங்க, ஹீரோயினுக்கு டாலர் வச்ச நெக்லஸ் வாங்கிக்கொடுத்து மனச தேத்துறானுங்க. ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்ல செட் தோசை வாங்கிக் கொடுத்து உடம்பயும் தேத்தி விடுறானுங்க. கல்யாணத்துக்கு பட்டு சேலைல ஆரம்பிச்சு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போட் ஹவுஸ் வரை புக்கிங் பண்ணி வச்ச பிறகும் இவனுங்க பண்ற தியாகத்த, தியாகம் பண்றதுல டிகிரி வாங்கின ஏவிஎம் ராஜனும் முத்துராமனும் கூடப் பண்ணியிருக்க மாட்டாங்க. இதுவரை இந்த அமெரிக்க மாப்பிள்ளைகள் செய்யாதது ஒண்ணே ஒண்ணுதான். ஹீரோயினுக்கு குழந்தை பொறந்து மொட்டையடிக்கிறப்ப, மாமான்னு சொல்லி மடில உட்கார வச்சு மொட்டையடிக்காம இருக்கிறதுதான் அது.
பதினெட்டுபட்டில ஒத்த பெட்ரோமாக்ஸ் லைட்ட வச்சிருந்த மகான் கவுண்டமணி கூட அந்த பந்தா காட்டல. ஆனா, இந்த பொண்ண பெத்தவனுங்க காட்டுற பந்தா இருக்கே... அய்யய்யையோ! கல்யாண வயசுல பொண்ணுதானே வச்சிருக்கானுங்க... என்னமோ பத்துப் பதினஞ்சு பெட்ரோல் கிணறு வச்சிருக்கிற ரேஞ்சுல பில்டப் தர்றானுங்க. விவசாயம் பண்ணினா பொண்ணு தர மாட்டாங்களாம், பிரைவேட்ல வேலை செஞ்சா பொண்ணு தர மாட்டாங்களாம், பொண்ணை விட பையன் படிப்பு கம்மியா இருந்தா பொண்ணைத் தரமாட்டாங்களாம். ஏன்யா, அஞ்சாவது படிச்சவங்க அமைச்சராவே ஆகறப்ப, பத்தாவது படிச்சவன் புருஷனாகக் கூடாதா?
பொண்ணே கிடைக்க மாட்டேங்குதுன்னு அவனவன் சாப்பிடாம கிடக்கான்... இதுல மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க சில பேரு ஓவர் பத்தா காட்டுறானுங்க. டேய், வாய்க்கு ருசியா சமைக்கிற பொண்ணு வேணும்னு எல்லாம் தேடாதீங்கடா. இப்பல்லாம் பொண்ணுங்க சமைச்சு புருஷனுக்கு எங்க போடுறாங்க? சமைச்சதை போட்டோ எடுத்து பேஸ்புக்லதான் போடுறாங்க. பொண்ணு கண்ணுக்கு லட்சணமா வேணும்ன்னுலாம் வெளிய சொல்லாதீங்கய்யா... திருப்பி பொண்ணுங்களும் அதே மாதிரி ஆசைப்பட்டா நம்ம மரியாதை போயிடும். நானெல்லாம் பொண்ணு பார்க்கப் போனப்ப, பொண்ணுகிட்ட தனியா பேசச் சொன்னாங்க... வேணாம்னுட்டேன். இப்போ அதுக்கும் சேத்து தனியாத்தான் பேசிக்கிட்டு இருக்கேன்.
0 comments: