.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 24 December 2013

நல்ல தூக்கம் இயற்கையின் மாமருந்து...?




ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில்தான் கழிக்கின்றான். இப்படி மனித வாழ்க்கையை விழுங்கும் தூக்கமே வேண்டாம் என்று நாம் நினைத்தால் அது முற்றிலும் தவறு.

இந்தத் தூக்கம்தான் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கிறது. ஒரு மனிதன் தினமும் தன்னைத்தானே புதுமைப்படுத்தி புத்துணர்வு பெறச் செய்வதற்கு தூக்கம் மிகவும் அவசியம்.

ஆனால் அந்த தூக்கத்தின் அளவு அதிகரித்தாலோ அல்லது துக்கமின்றி இருந்தாலோ உடலில் பாதிப்புகள் உண்டாகும்.

சரியான தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு நோய்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். இந்த தூக்கமின்மை எதனால் ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் பாதிப்புகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

சராசரியாக ஒரு மனிதன் தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை தூங்குவது அவசியம். குறைந்தது 5 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் இன்றைய பொருளாதார போராட்டத்தில் 2 மணி நேரம் தூக்கம் கிடைப்பதே அரிதாகிவிட்டது.

சிலர் சரியானதூக்கம் இல்லாமல் புலம்புவார்கள். தினமும் படுக்கைக்குச் செல்கிறேன், தூங்கும் முன்பு பால் அருந்துகிறேன். தூங்கவேண்டும் என்று நினைத்து கண்களை மூடினாலும் தூக்கம் மட்டும் வருவதே இல்லை என்பார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பவர்கள் அதிகாலையில் கண்ணயர்வார்கள். ஆனால் சிறிது நேரத்திலே விழிப்பு வந்துவிடும்.

இப்படிப்பட்டவர்கள் எப்போதும் டென்ஷனாகவே காணப்படுவார்கள். இந்த தொல்லை தொடர்ந்துகொண்டே இருப்பதால் சிலர் தூக்க மாத்திரைகளை உபயோகிப்பார்கள். நாளடைவில் தூக்க மருந்து சாப்பிட்டால் தான் தூக்கம் என்ற நிலைக்கு வந்து அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.

இன்னும் சிலரோ மது, போதை பொருட்களை உபயோகப்படுத்துகின்றனர். இவை ஆரம்பத்தில் தூக்கத்தைத் தருவதுபோல் தோன்றும். பின்பு இதன் அளவு அதிகரிக்குமே ஒழிய முழுமையான நித்திரையை தராது.

எனக்கு இருக்கும்பிரச்சனைக்கு மது அருந்தினால்தான் தூக்கம் வரும் என்று சிலரும், மேலும் சிலர் தூக்க மாத்திரை அருந்தினால்தான் தூக்கம் வரும் என்பர். சிலர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், பாடல் கேட்டுக்கொண்டும் படித்துக்கொண்டும் தூங்க முயற்சிப்பார்கள். இவர்கள் சரியான தூக்கத்தைப் பெறமுடியாமல் தவிப்பார்கள்.

தூக்கமின்மை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. மன உளைச்சல், பயம், குரோதம், தெளிவான சிந்தனையின்மை, இயலாமை, டென்ஷன் உள்ளவர்களே அதிக தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர்.

சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமை, நேரத்திற்கு தூங்க செல்லாமல் இருத்தல், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பது, போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் தூக்கமின்மை உருவாகிறது.

தினமும் 4 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும் 16 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குபவர்களும் ஆயுளைக் குறைத்துக்கொள்பவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக நேரம் தூங்குபவர்களுக்குத்தான் தற்கொலை எண்ணம் தோன்றும் என்றும் கூறியுள்ளனர்.

சிலர் தூக்த்தில் எழுந்து நடப்பார்கள். துணி துவைப்பார்கள் அல்லது சில வீட்டு வேலைகளை செய்வார்கள். பின் வந்து படுத்துக்கொள்வார்கள். காலையில் எழுந்தவுடன் கேட்டால் தாம் தூங்கும்போது என்ன செய்தோம் என்பது தெரியாமல் இருப்பார்கள். இதுவும் தூக்கமின்மையால் ஏற்படும் ஒரு விதமான நோயாகும்.சிலர் பய உணர்வு கொண்டு தூங்கும்போது அலறுவார்கள்.

சிலர் அதிக நேரம் தூங்கிக்கொண்டேயிருப்பார்கள். இது நடுத்தர வயதினரை மட்டுமே பாதிப்படையச் செய்யும் இவர்களுக்கு நீரழிவு, உடல்பருமன், அசீரணக் கோளாறு, உடல்வலி உண்டாகும்.

இவ்வாறு தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் கீழ்காணும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

 * இரவு உணவு சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லக் கூடாது. சிறிது தூரம் குறுநடை போடுவது நல்லது. குறைந்தது 1 மணி நேரம் கழித்துதான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

 * இரவு உணவில் எளிதில் சீரணமாகாத உணவுகளான அசைவ உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், வாயுக்களை உண்டாக்கும் உணவுகள், கீரைகள், அதிக குளிர்ந்த பானங்கள், டீ, காபி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

 * இனிப்புப் பொருட்கள், உப்பு சேர்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது.

 * கொசுக்களின் தொல்லையால் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் அறையின் கதவுகளை படுக்கைக்கு செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் மூடி கொசுவத்தி அல்லது கொசுவை அழிக்கும் மருந்து சாதனத்தை உபயோகப்படுத்துங்கள். பின் அரை மணி நேரம் கழித்து கதவை திறந்துவிட்டு மூடவும். இப்படி செய்தால் கொசு அழிக்கும் மருந்தின் வாசனை நம் தூக்கத்தைக் கெடுக்காது.

 * அழுக்கு உடையுடன் தூக்கம் கூடாது. இரவு படுக்கைக்கு செல்லும்முன் இளம்சூடான நீரில் கை, கால், முகம் கழுவிவிட்டு தூங்கச் செல்லலாம். மன இறுக்கம், கவலைகளை மனதில் சுழலவிடக்கூடாது. தூங்கும் போது உடலை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது.

 * படுக்கைக்குச் செல்லும் முன் சிறுநீர், மலம் கழித்துவிட்டு தூங்கச் செல்லலாம். சில சமயங்களில் அதுவே தூக்கத்தைக் கெடுக்கும்.

 * எக்காரணம் கொண்டும் மது, போதை மருந்து, தூக்க மாத்திரைகளை உபயோகிக்கக் கூடாது. நாளடைவில் அதற்கு நாம் அடிமையாக நேரிடும்.

அப்படியும் தூக்கம் வரவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மூளைக்கு மட்டும் வேலை கொடுக்காமல் உடலுக்கும் வேலை கொடுக்க வேண்டும்.

உடலுக்கு உழைப்பு கொடுக்க முடியாதவர்கள் உடற்பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும்.

நல்ல தூக்கம் இயற்கையின் மாமருந்து...!

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top