.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 15 December 2013

குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்கும் சில வழிகள்!



பல குழந்தைகள் இருட்டில் ஏதோ ஒரு உருவம் ஒளிந்து கொண்டு தன்னை விழுங்கப்போவதாக நம்பிக்கை கொண்டிருப்பர். இந்த பயம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது, பெற்றோர்கள் அவர்களின் பயத்தை எப்படி போக்குவது என்பதை இங்கு பார்க்கலாம். பயம் என்பது நம் அனைவரது வாழ்விலும், குறிப்பாக குழந்தைகளிடம் காணப்படும் ஒரு சாதாரண விஷயம். இருட்டைக்கண்டு பயப்படுவது குழந்தைகளின் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நாம் புதியதாக ஒன்றை முயற்சிக்கும் போது, இதற்கு முன் அனுபவிக்காத ஒன்றை அனுபவிக்கும் போது நமக்கு பயம் ஏற்படுகிறது.


குறிப்பாக குழந்தைகளிடம் இது போன்ற பயம் தினம் தினம் ஏற்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் பல உள்ளன. தொலைக்காட்சியில் காட்டப்படும் பயப்படும்படியான செய்திகள், அடிக்கடி பேய் கதைகளை பெற்றோர் குழந்தைகளிடம் கூறுவது போன்றவை கூட குழந்தைகளின் பயத்தை அதிகரிக்கும். தேவையில்லாத புத்தகங்கள் கூட குழந்தைகளிடம் பயத்தை உருவாக்குவதில் குற்றமுடையதாகுகிறது. இரவில் இருட்டைக்கண்டு பயப்படும் குழந்தைக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், அவர்களோடு பொறுமையுடன் பேச வேண்டும்.

அவர்கள் கூறுவதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய பயத்தை கேலிக்குரியதாக்காமல், அவர்களை அமைதிப்படுத்தி, அவர்களின் பயத்தை போக்கி, அவர்களை வேறு நல்ல விஷயங்களில் திசை திருப்ப வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மேலும் பயப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் உங்களின் கேலிக்குரிய பேச்சால் குற்றவுணர்வுடன், வெட்கப்பட்டு உங்களிடம் எதையும் கூறாமல் மறைக்க ஆரம்பிப்பர். அதனால் பிரச்சனைகள் பெரிதாகுமே தவிர, தீர்வு ஏற்படாது. அதற்கு பதில் அவர்களுக்கு பாதுகாப்புணர்வை எற்படுத்துங்கள். அதனால் தங்கள் அச்சத்தை எளிதில் கையாளும் பக்குவம் அவர்களுக்கு ஏற்படும். குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்குவதற்கான சில வழிமுறைகளை கீழே காணலாம்.


1. உங்கள் குழந்தைகளின் படுக்கையறையில் மெலிதான வெளிச்சம் பரவும்படி மின்விளக்கை பொருத்தவும். இதனால் உங்கள் குழந்தைகள் ஓரளவு நிம்மதியுடன் உறங்குவர்.

2. இருளில் உங்கள் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் அல்லது உணர்கிறார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். அவர்களது அச்சத்தை போக்குவதற்கு உத்திரவாதம் அளியுங்கள்.

3. இருட்டாக இருக்கும் போதும், வெளிச்சமாக இருக்கும் போதும், அவர்களது அறை ஒரே மாதிரி இருப்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அதனால் அவர்களது பயம் படிப்படியாக குறையும்.

4. ஒரு மங்கலான ஒளியைத் தரும் மின் விளக்கை பொருத்தி, பின் படிப்படியாக அவ்வெளிச்சம் குறையும்படி செய்தால், குழந்தைகளின் பயம் குறைந்து, நம்பிக்கையுடன், அவர்களே விளக்கை அணைத்துவிட்டு உறங்கும் நிலைமை ஏற்படும்.

5. ஹாலில் உள்ள விளக்கை அணைக்காது வைத்து, உங்கள் குழந்தை உறங்கியவுடன் அணைத்து விடுங்கள்.

6. விளக்கை அணைத்து விட்டு உங்கள் குழந்தையுடன் இருங்கள். அவர்களை இருட்டில் இருக்கச் செய்யுங்கள். அவர்கள் அந்த இருட்டிற்கு பழகி அருகிலுள்ள பொருட்களை பார்க்க முடியும் என்றும் அவர்கள் பயப்படத் தேவையில்லை என்றும் உணர வையுங்கள். குறிப்புகள்: ஒருவேளை குழந்தைகள் எதையாவது நினைத்து பயந்து விழித்தால், உங்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ள அவர்களது அறையில் தொலைபேசி ஒன்றை வைக்கவும்.

இரவில் நடமாடும் விலங்குகளான பூனை, வவ்வால் மற்றும் பறவையினமான ஆந்தை போன்றவற்றின் பொம்மைகளை அவர்கள் அறையில் வைத்தால், அவர்கள் இரவில் கண்விழித்து பார்க்கும் போது, இருட்டில் பார்க்கக்கூடிய நண்பர்கள், தன்னை பார்ப்பதாக நினைத்து, தங்கள் பயத்தை போக்கிக்கொள்வர். விளக்குகளை அணைத்து அவர்கள் பயப்பட எதுவும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்கள் சோர்வாக உணரும் வரை புத்தகங்கள் படிக்க அவர்களை அனுமதியுங்கள். அவர்களே விளக்குகளை போடவும், அணைக்கும்படியும் செய்ய பழக்கப்படுத்துங்கள். நல்ல இனிமையான இசையை கேட்கும்படி செய்யுங்கள். அவர்கள் உறங்கப்போகும் முன் நல்ல விஷயங்களை மட்டுமே எப்பொழுதும் அவர்களிடம் பேசுங்கள்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top