.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 26 December 2013

குழந்தைகளுக்கு ஏற்படும் காதுவலி பற்றிய தகவல்கள்:-




ஜலதோஷம் (சளி), காய்ச்சலுக்கு அடுத்து குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது காது வலி, பொதுவாக, பிறந்து ஆறு முதல் இருபது வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்தக் காது வலி அதிக அளவில் வருகிறது.

இந்தக் காது வலியை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் மீண்டும் வலி ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். மேலும், காதில் சீழ் வடிதல், காது கேளாமல் போதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால், குழந்தைகளின் பேச்சுத் திறன் கூட பாதிக்கப்படும். சில சமயங்களில், காது வலி தானாகவே சரியாகிவிடும்.

காரணங்கள்


 குழந்தைகளுக்கு ஜலதோஷம் (சளி) பிடிக்கும்போது, தொண்டை முழுவதும் புண்ணாகி வீங்கிவிடும். அதனால், தொண்டையில் இருந்து காது வரை செல்லும் யூஸ்டேஷியன் குழாயின் ஒரு முனையானது (தொண்டையில் இருக்கும் குழாய்) அடைபட்டுவிடும். மேலும், காற்று உறிஞ்சப்பட்டு, காதுப்படலமானது உள்நோக்கி நகருவதால், வலி ஏற்படுகிறது.
பாதிக்கப்படுபவர்கள்

* வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஒருமறையாவது காது வலி வந்துவிடும். இரண்டு வயதுக்குப் பிறகு இந்த வலி வருவது குறைந்துவிடும்.
 * பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தான் காது வலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

 * பெற்றோர்கள் காது வலியால் அவதிப்பட்டால், அவர்களுடைய குழந்தைகளுக்கும் காது வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 * சத்துணவு சாப்பிடாத குழந்தைகள், உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காத குழந்தைகள், சிறிய வீட்டில் நிறைய பேருடன் வசிக்கும் குழந்தைகள், சுற்றுப்புறச் சூழல் மிகவும் மோசமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குக் காது வலி அடிக்கடி ஏற்படும்.

 * பிளவுபட்ட அன்னம், மரபியல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு யூஸ்டேஷியன் குழாய் சரியாக வேலை செய்யாதால் காது வலி வருகிறது.

 * அடிக்கடி ஜலதோஷத்தால் (சளி) பாதிக்கப்படும் குழந்தைகளுக்குக் காது வலி ஏற்படும்.

அறிகுறிகள்


 காது வலிக்கான அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். காது வலியால் குழந்தைகள் எரிச்சலுடனும், ரியாகத் தூங்க முடியாமலும் அவதிப்படும். குழந்தைகள் சரியாகச் சாப்பிடமாட்டார்கள். அடிக்கடி காதுகளை பிடித்து தேய்த்துக் கொண்டோ, காதுகளை இழுத்துக் கொண்டோ இருப்பார்கள். ஒரு சில குழந்தைகளுக்குக் காயச்சல் இருக்கும். காதில் இருந்து சீழ் வடியலாம். இருமல், சளித் தொல்லை போன்றவை இருக்கும். காது சரியாகக் கேட்காமல் இருக்கும்.

சிகிச்சை

 பிறந்து ஒரு மாதம்கூட நிறைவடையதாக குழந்தைகளுக்குக் காது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தையாக இருந்தாலும் டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

தவிர்க்கும் முறைகள்

* குழந்தைகளைக் காது வலி தொல்லையில் இருந்து காப்பாற்ற தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

 * வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வீட்டுக்குள்ளேயே சிகரெட், பீடி பிடிக்கக்கூடாது.

 * குழந்தைகளுக்குச் சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும்.

 * ஜலதோஷம்(சளி), இருமல் இருந்தால் உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

 * வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

 * குழந்தைகளை விரல் சூப்ப விடக்கூடாது.

 * நிமோக்கஸ் , இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்கள் வராமல் இருக்க தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top