என்னை எல்லோரும் 'சிறுத்தை' சிவான்னு சொல்றாங்கன்னு எனக்கே தெரியாது. நாலு மாசத்துக்கு முன்னாடிதான் தெரியும். என்னோட பெயரை மக்கள் மறக்கமால் இருந்தா போதும். எப்படிக் கூப்பிட்டா என்ன..?’ என்று அடக்கமாகப் பேசுகிறார் அஜித்தை வைத்து 'வீரம்' படத்தை இயக்கிவருறார் சிவா.
வீரம் எந்த மாதிரியான படம்?
வீரம் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்துல சின்னக் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வந்து பார்க்குற ஜாலியான படமாக இருக்கும். அதே சமயத்துல ஆக்ஷனும் இருக்கும்.
அஜித் என்ன மாதிரியான கேரக்டர் பண்ணியிருக்கார்?
அஜித் இதுக்கு முன்னாடி இந்த மாதிரிக் கேரக்டர்ல பண்ணியிருக்கார். ஆனால் முழுப்படமும் பண்ணியதில்லை. கமர்ஷியல் படத்துல முழுக்க ஆக்ஷன் ஹீரோவா பட்டையக் கிளப்பியிருக்கார். வீரம் படத்தோட ஸ்பெஷல், அஜித் படம் முழுக்கவே, பட்டையக் கிளப்பியிருக்கார், முழுக்க வேட்டி சட்டைல தான் நடிச்சிருக்கார். அஜித் இந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதைல, இதுக்கு முன்னாடி நடிக்கல. அது தான் வீரம் ஸ்பெஷல்.
கதையைக் கேட்டுட்டு அஜித் என்ன சொன்னார்?
முதல் முறையா அஜித்தை சந்திச்சு, எந்த மாதிரி கதை பண்ணலாம் அப்படின்னு பேசிட்டு இருந்தோம். அப்போ அஜித் சார், ஸ்டைலிஷான படங்கள் எல்லாம் பண்ணிட்டார். நாம் ஏதாவது புதுசா பண்ணலாம்னு கிராமத்துக் கதைய படமா பண்ணலாம்னு ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணினோம்.
மண்ணின் மனத்தோடு படம் பண்றோம் அப்படிங்கிறதுல ரெண்டு பெருமே தெளிவாக இருந்தோம். தமிழ்நாட்டில இருக்கிற சிட்டி மக்கள்ல இருந்து கிராமத்து மக்கள் வரைக்கும் ரீச்சாகிற மாதிரியான ஒரு கதை இது. அனைத்து தரப்பு மக்களையும் இந்தப் படம் கவரும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
முதல் முறையா அஜித்தை எங்க சந்திச்சீங்க?
அஜித்தை வைச்சு படம் பண்ணனும் அப்படிங்கிறது எனது நீண்ட நாள் ஆசை. சிறுத்தை முடிச்ச உடனே, உங்களோட நீண்ட நாள் ஆசை என்னன்னு கேட்டாங்க. நான் ஹாலிவுட் படம் பண்ணனும்னு சொன்னேன். ஹாலிவுட் படம் பண்ணா யாரை இங்கிருந்து ஹீரோவா வைச்சு பண்ணுவீங்கனு கேட்டாங்க. உடனே என்னோட ஒரே சாய்ஸ் அஜித்தான்னு சொன்னேன். எனக்கு மனசுல தோணுச்சு, சொன்னேன். அந்த ஆசை உடனே நிறைவேறும்னு நான் எதிர்பார்க்கல.
ஒருநாள் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா கால் பண்ணினார். அஜித் சார் உங்களோட சேர்ந்து படம் பண்ணனும்னு ஆசைப்படுறார்னு சொன்னார். என்னால நம்பவே முடியல. அவரே அஜித் நம்பரையும் கொடுத்தார். நான் போன் பண்ணி அஜித்கிட்ட பேசினேன். என்னால நம்பவே முடியல.
ஒளிப்பதிவாளர் சிவா, இயக்குநர் சிவாவாக மாறக் காரணம் என்ன?
நான் 6ஆம் வகுப்பு படிக்கிறப்போ இருந்தே இயக்குநராகணும் அப்படிங்கிறது என்னோட ஆசையா இருந்துச்சு. நான் டிகிரி படிக்கல. அதனால இயக்குநர் படிப்பு பண்ண முடியாம போச்சு. உடனே ஒளிப்பதிவாளர் படிப்பு படிச்சேன். ஒளிப்பதிவாளரா படங்கள் பண்ணினாலும், நாம இயக்குநராகணும் அப்படிங்கிறது எனக்குள்ள இருந்த விஷயம்தான்.என்னோட இயக்குநர் பாதைக்கு ஒளிப்பதிவு உதவியா இருந்துச்சு.
தெலுங்குப் படங்கள், தமிழ்ப் படங்கள் என்ன வித்தியாசம் பார்க்குறீங்க?
தென்னிந்தியப் படங்கள் எல்லாமே ஒண்ணுதான். தமிழ், தெலுங்கு அப்படினு பிரிக்க முடியாது. இரண்டு மொழி படங்கள் பார்த்தீங்கன்னா, ஒரே எமோஷன்தான் இருக்கும். எனக்கு இரண்டு மொழிகளிலுமே தெரியும். ரெண்டிலுமே கதை எழுதுவேன், ஹீரோஸ்கிட்ட கதை சொல்லும்போது ஈஸியா இருக்கும். அதனால எனக்கு பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியல.
தமன்னா எப்படி தமிழ்ப் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினாங்க? சிறுத்தை படம் முடிச்சவுடனே, நீங்க அடுத்த படம் பண்ணும் போது, ஹீரோயினா எப்போ கூப்பிட்டாலும் நான் ரெடின்னு சொன்னாங்க. வீரம் முடிவான உடனே, யார் ஹீரோயின்னு பேச்சு வந்துச்சு. அப்போ அஜித் - தமன்னா இதுவரைக்கும் ஒண்ணா படங்கள் பண்ணியதில்லை.
உடனே தமன்னாவிற்கு போன் பண்ணி, உங்க தேதிகள் வேணும், அஜித் சாருக்கு ஜோடி அப்படினு மட்டும் தான் சொன்னேன். எப்போனு கேட்டாங்க. நேரா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துட்டாங்க. இதுவரைக்கும் படத்தோட கதை என்னனு கேட்கல. என் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சுருக்காங்க.
தொடர்ச்சியாக மாஸ் மசாலா படங்கள் இயக்கிட்டு இருக்கீங்க...
மாஸ் மசாலா படங்கள் பண்றது தான் ரொம்ப கஷ்டம். பொதுவான ஆடியன்ஸுக்காக படம் எடுக்கிறோம். இதில் பணக்காரங்க, ஏழை, புத்திசாலி... இப்படி பலதரப்பட்ட மக்கள் இருப்பாங்க. இவங்க எல்லாருமே தியேட்டருக்கு வந்து படம் பார்த்து சூப்பர்னு சொல்லணும். அப்பத்தான் படம் சக்சஸ். பணம் போடுற தயாரிப்பாளர், ஹீரோ, தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், படம் பார்க்க வர்ற மக்கள் இப்படி எல்லாரையும் திருப்திப்படுத்துறது ரொம்ப கஷ்டம். எல்லாமே கரெக்டா இருந்தா, ஜாக்பாட்தான்.
வீரம் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டு படமாக்கிய காட்சின்னு ஏதாவது இருக்கா?
படம் பெரிய பட்ஜெட். மொத்தம் 28 ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க. எல்லாருமே பெரிய ஆர்டிஸ்ட். அப்போ எல்லாருக்குமே ஒரு பயம் இருக்கும். ஆனா, அந்த பயம் எல்லாத்தையும் போக்கியவர் அஜித்.’
ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர், ஒளிப்பதிவாளர், லைட் மேன் இப்படி எல்லாருக்குமே ஒரே நோக்கம் படம் நல்லா வரணும். இந்த நோக்கத்திற்கு காரணம் அஜித் மட்டுமே. ஏன்னா எங்க எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா பேசுவாரு, பழகுவாரு. படத்துல நாலு தம்பிகளுக்கு மட்டும், அண்ணனா இல்ல. எங்க மொத்த யூனிட்டுக்கே அண்ணன் அஜித்.
இடைவேளை அப்போ ஒரு ரயில்ல வைச்சு சண்டைக் காட்சி இருக்கும். அதுல ரொம்ப சிரமப்பட்டு எடுத்தோம். 100 கி.மீ. வேகத்துல போற ரயில்ல வைச்சு எட்டு நாள் ஷூட் பண்ணினோம்.
அஜித் ரசிகர்களுக்கு 'வீரம்' ஸ்பெஷல் என்ன?
இது வரைக்கும் பார்க்காத அஜித்தை பார்ப்பீங்க. எல்லாருமே சொல்றது தானே நினைப்பாங்க. முதல் முறையாக அஜித் இறங்கியடிச்சிருக்கார். நாங்க பொங்கல் வெளியீடு அப்படினு அஜித் டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு போஸ்டர் வெளியிட்டோம் பார்த்தீங்களா. அதே மாதிரி தான் படமும். சும்மா புகுந்து விளையாடிருக்கார் மனுஷன். சிவா, நான் இந்த மாதிரி டயலாக் எல்லாம் பேசி நடிச்சதில்லை. எனக்கே புதுசாயிருக்கு அப்படினு சொல்வார். அவரே புதுசாயிருக்குனு சொல்றப்போ, பாக்குற ரசிகர்களுக்கும் புதுசாதானே இருக்கும்.
0 comments: