.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 21 November 2013

காணாமல் போன விளையாட்டுகள்!

village games
அழிந்து போன கிராமத்து விளையாட்டுகளைத் தேடி ‘குங்குமம் தோழி’ மேற்கொண்ட பயணத்தில் கிடைத்த பொக்கிஷத்தை சென்ற இதழில்  பகிர்ந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில அருமையான விளையாட்டுகள் இங்கே... ஆடுவோமே!

உப்புக்கோடு


உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று  கைநீட்டி தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள். தொடங்கும் அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார்.  மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில் நிற்பார்கள். எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து வெளியில் செல்ல வேண்டும்.  முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில் ஓடி எதிராளியை அவுட் செய்யவும் அதிகாரம் உண்டு. இவரது கவனத்தைத் திருப்ப, மற்றொரு  கட்டத்தில் நிற்பவர், நடுக்கோட்டில் கால்வைத்து தண்ணி தண்ணி என்று அழைப்பார். இவர் அவரைத் தொட ஓடவேண்டும். யாராவது ஒருவரைத்  தொட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். முதலில் கோடுகளைக் கடந்து வெளியேறும் ஒருவர் கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு என்று  சத்தமிட்டபடி ஒவ்வொரு கட்டத்திலும் நிற்கும் தம் அணியினரைத் தொட்டு திரும்பவும் கோட்டைக் கடந்து முகப்புக்கு வரவேண்டும். பரபரப்பான  விளையாட்டு!

மெல்ல வந்து கிள்ளிப்போ!

2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர்,  பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை  இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு... ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து
கிள்ளிப்போ...’). ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்துவிடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க  என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன்பிறகு கண்களை திறந்து
விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!

கள்ளன் வாரான்...  களவாணி வாரான்!

மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே  வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார்.  மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

‘காயே கடுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊறவச்ச நெல்லிக்கா
கல்லன் வாரான் காரைக்குடி
கல்லை நீயும் கண்டுபிடி’

என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார்.  வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை  எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்!

பூப்பறிக்க வருகிறோம்!


2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள்.  இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் வருகிறீர் டிசம்பர் மாதம்  வருகிறோம் வருகிறோம் யாரைத் தேடி வருகிறீர் பூவைத் தேடி வருகிறோம் எந்தப் பூவை தேடுவீர் மல்லிகையை தேடுவோம்’ இப்படி பாடியதும்  ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே  களேபரம்தான்!

கழங்கு

பெண்கள் வட்டமாக அமர்ந்து ஆடும் விளையாட்டு. வட்ட வடிவிலான 7 கூழாங்கற்கள். மேலே தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றையும் சேர்த்து அள்ள  வேண்டும். ஒன்றான், இரண்டான், மூன்றான் என அள்ள வேண்டிய கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்லாவற்றையும் சரியாக  விளையாடியவர்கள் இறுதியில் பழம் வைப்பார்கள். ஒவ்வொரு காய் ஆடும்போதும் ஒவ்வொரு பாட்டு உண்டு!

ஒன்றான்: அலசல் அலசல் பாட்டிமா
தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்
தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்
அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்
அம்மியிடுக்குல படுத்திட்டேன்
படுத்த பாயில சுருட்டிட்டேன்
ரெண்டான்: ஈரெண்டு எடுக்கவும்
இளந்தம் பழுக்கவும்
பழுத்து தின்னவும்
மூன்றான்: முக்குட்டு சிக்குட்டு
மூன்றாம் படிக்கட்டு
நான்காம்: நாக்கொத்தி செங்கொத்தி
நாகம் பழங்கொத்தி
அஞ்சான்: ஐப்பால் அரங்கு
பம்பாய் சிலுக்கு
ஆறாம்: ஆக்கூர் முறுக்கு
அள்ளிப்போட்டு நொறுக்கு
ஏழாம்: ஏழதாள எங்க நீ போற
எட்டாம் நம்பர் சேல

இப்படி, கொண்டாட்டமும் நட்புணர்வும் நம்பிக்கையும் தவழும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் நம் கிராமங்களில் உண்டு. பல்லாங்குழி, தாயம்,  நாடு பிடித்தல், ஆடுபுலியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, டிக் டிக், கண்ணாமூச்சி, நாலுமூலை, ஊதுகாய், கிட்டிப்புள், பளிங்கி, நொண்டியாட்டம்,
ஐஸ்பால், பச்சகுதிரை, குளம்கரை, சின்னப்பானை-பெரியபானை, பரமபதம், கரகரவண்டி, கவன், ராஜா ராணி, பம்பரம் விடுதல், செதுக்கு சில்லு, கல்லா  மண்ணா, நூத்துக்குச்சி, பூப்பந்து எறிதல் என மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டுகள் நிறைந்திருந்தன. இன்றுள்ள  பிள்ளைகளுக்கு இந்த விளையாட்டு அனுபவங்கள்
கிட்டுவதேயில்லை!

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top