ரசிக்க வைக்கும் கடற்கரையைக் கொண்ட கோவாவில் தரிசிக்க வைக்கும் தலங்களும் நிறைய உண்டு. இவற்றில் பாரம்பரியமிக்க தேவாலயங்களும் அடக்கம். இந்த தேவாலயங்கள் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு கோவாவை மேலும் மிளிர வைத்துக்-கொண்டிருக்கின்றன. கோவாவைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் 3ம் நூற்றாண்-டிலேயே காணப்படுகின்றன. மவுரியப் பேரரசின் ஒரு பாகமாக இது இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என பல தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
போர்ச்சுகீசியர்களின் ஆளுகையின் போது பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் பழைய கோவாவில் கட்டப்பட்ட தேவாலயங்கள் முக்கியமானவை. சே கதீட்ரல், சர்ச் அண்ட் கான்வென்ட் ஆப் செயின்ட் பிரான்சிஸ் ஆப் அசிசி, சேப்பல் ஆப் செயின்ட் காதரின், பாசிலிகா ஆப் போம் ஜீசஸ், சர்ச் ஆப் லேடி ஆப் ரோசரி, சர்ச் ஆப் செயின்ட் அகஸ்டின் போன்றவை பாரம்பரியமிக்கவை. அனைத்தும் 16- 17ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இவை அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்டவை. போம் ஜீசஸ் சர்ச் அதாவது குழந்தை இயேசு தேவாலயம், ஆசிய அளவில் புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த தேவாலயங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன.
இவை தவிர கோவா மாநிலம் முழுவதும் பார்த்து ரசிக்க நிறைய இடங்கள் உள்ளன. தலைநகர் பனாஜியில் செபாஸ்டியான் சாப்பல், ஜும்மா மசூதி, மஹாலட்சுமி கோவில் போன்றவையும் பனாஜியில் இருந்து 28கி.மீ தொலைவில் உள்ள ஆன்மீக நகரமான போன்டாவில் நாகேஸ் கோவில், மஹால்ஸா நாராயணி கோவில், சாந்தா துர்கா கோவில், ஸ்ரீமங்கேஷ் கோவில், தூத்சாகர் பால்ஸ் (பாலருவி), போன்ட்லா வனவிலங்கு சரணாலயம், பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் போன்றவையும் பிரபலமானவை. மப்பூசா, வாஸ்கோடகாமா (இடத்தின் பெயர்தான்), மார்கோ போன்ற இடங்களும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஒரு முறை சென்று வந்தால் போதும். மீண்டும் வா..வா..என்றழைக்கும் கோவா.
|
0 comments: