.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 30 September 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சிறப்பு டிஇடி தேர்வு : ஜெயலலிதா


பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.”என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.




sep 30 jayalalitha
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஏதுவாக, மாற்றுத் திறனாளிகளுக்கென தனி இயக்ககம் ஒன்றை 1993 ஆம் ஆண்டு துவக்கியதோடு, மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையையும் வெளியிடச் செய்தேன்.


2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இதனைத் தொடர்ந்து, மன வளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக உடல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான மாதாந்திர உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது; அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது;



ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை இரட்டிப்பாக்கப்பட்டது; பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கான உதவித் தொகை 100 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தப்பட்டது என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு சலுகைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.



அண்மையில், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் சலுகையை மாற்றுத் திறனாளிகளின் துணைவியாருக்கு விரிவுபடுத்துதல்; மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கான 14.5 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரியினை முற்றிலும் நீக்குதல்; 10,000 ரூபாய் மதிப்புள்ள அதிக திறன் வாய்ந்த காதொலிக் கருவிகளை வழங்குதல்; பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியினை புதுப்பித்தல்; எழுத்துக்களை பெரிதாக்கி பார்க்கக் கூடிய கண்ணாடியை வழங்குதல்; 6 வயதுக்குட்பட்ட பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆரம்ப பயிற்சி நிலையங்கள் அமைத்தல்; பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்தல்; மாற்றுத் திறனாளிகளுக்கென மத்திய கூட்டுறவு வங்கிகளிலிருந்து வழங்கப்படும் கடனுக்கான வட்டியை அரசே செலுத்துதல் என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளேன்.



பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆணையிட்டிருந்தேன். அவர்களும் இது குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார்கள்.


இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.



இதன்படி, பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.



இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.
முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.


தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top