.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 18 September 2013

மனதை மயக்கும் மைசூர் - சுற்றுலாத்தலங்கள்!

மனதை மயக்கும் மைசூர்
ர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் மைசூர். இந்நகரமே பண்டைய கால மைசூர் இராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. இவ்வூரை சங்க காலத்தில் மையூர் என்றும் எருமையூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் இந்நகரை ஆண்டவன் மையூர் கிழான் என்பவன் ஆவான். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை சிறுவன் என்று எண்ணி  சேர, சோழ மன்னர்களுடன் சேர்ந்து போரிட்டு தோற்ற வேளிர் அரசர்களில் இவனும் ஒருவன் ஆவான். பின்னர் 1399இல் இந்நகர் ஒரு பேரரசாக அமைக்கப்பட்டதோடு விஜயநகர பேரரசின் வீழ்ச்சி வரை அதன் கீழ் சிற்றரசாக இருந்தது. தற்போதும் இந்நகரை சுற்றி அமைந்துள்ள மைசூர் அரண்மனை, பிருந்தாவன் தோட்டம், மைசூர் அருங்காட்சியகம், மைசூர் ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் போன்றவைகள் இந்நகரின் பெருமையை பறைசாற்றிவருகின்றன.


மைசூர் அரண்மனை:
வியக்க வைக்கும் பிரமாண்டத்துடன் வராலாற்று பின்னணியை கொண்டது மைசூர் அரண்மணை. திராவிடம், இந்தோ-சராசனிக், ஓரியண்டல், ரோமன் போன்ற அனைத்து கட்டிடக்கலை அம்சங்களுடன் அமைக்கப்ப்ட்டுள்ள அரண்மனைதான் மைசூர் அரண்மனை. மூன்று அடுக்குகளுடன், சாம்பல் நிற சலவைக்கற்களால் உருவாக்கப்பட்டு மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் மேற்கு பகுதியில் தங்கத்தாலான அலங்காரகலசங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 
கோம்பே தொட்டி என்று சொல்லப்படும் வாசல் வழியாக மட்டுமே இந்த அரண்மனையினுள் செல்ல முடியும். இங்கு 19,20ஆம் நூற்றாண்டை சேர்ந்த பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் முன்புறம் வைக்கப்பட்டுள்ள 7 பீரங்கிகள் தசரா பண்டிகை துவங்கும் போது முடியும் போது இந்த பீரங்கிகள் முழக்கப்பட்டு அவ்விழாவினை கௌரவபடுத்தப்படுகிறது. 

மேலும் இந்த அரண்மனையில் மரத்தால் செய்யப்பட்ட யானை சிலை 81 கிலோ தங்கத்தால் அலங்கரிப்பட்டுள்ளதோடு அரண்மனை சுவர்களில் சித்தலிங்க சுவாமி, ராஜா ரவி வர்மா மற்றும் கே. வெங்கடப்பா போன்ற சிறந்த ஓவியர்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனையின் உள்ளே  வெவ்வேறு கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்ட 14 கோயில்கள் உள்ளன.

பிருந்தாவன் கார்டன்:

 மைசூரிலிருந்து 20கி.மீ தூரத்தில் அமைந்த்துள்ள பிரம்மாண்டமான தோட்டம் பிருந்தாவன் கார்டன் ஆகும், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே, காஷ்மீரிலுள்ள புகழ் பெற்ற ஷாலிமார் கார்டனை பின்பற்றி இந்த பிருந்தாவன் கார்டன் 60 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பசுமையான புல்வெளிகள், மலர் படுக்கைகள், நீர் தடாகங்கள், நீர் ஊற்றுகள் என பல எழிழ் நிறைந்த அம்சங்களோடு வடக்கு பகுதியில் இசைக்கேற்ப நடனமாடும் நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பூங்காவின் மையத்தில் சிறு குளத்தில் காவேரி தெய்வத்தின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

ரீஜனல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி:

1995 ஆம் ஆண்டு சாமுண்டி மலையடிவாரத்திலுள்ள கரன் ஜி ஏரிக்கரையில் அமைக்கட்டதுதான் இந்த ரீஜினல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகம்.இங்கு இயற்கை சுற்றுச் சூழல், விலங்குகள் மற்றும் தாவரங்களிடையே உள்ள சமச்சீர் உறவு போன்ற இயற்கை சார்ந்த அறிவியல் உண்மைகளை இங்கு தெரிந்து கொள்வதோடு உயிரியல் பரிணாம வளர்ச்சி, உயிரியல் பன்முகத்தன்மை, இயற்கை பாதுகாப்பு ஆகியவற்றையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

சாமுண்டி மலை:

மைசூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள மலைதான் சாமுண்டி மலையாகும். இம்மலையில் ஸ்ரீ சாமூண்டிஸ்வரி கோயில் அமைந்துள்ளது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இப்பழமையான கோயில் 1827 ஆம் ஆண்டு மைசூர் மன்னர்களால் புதுபிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இக்கோயிலின் முக்கியமான சிறப்பம்சம் ஒரே ஒரு கருப்பு சலவைக்கல்லில் 5 மீட்டர் உயரத்தில் செதுக்கப்பட்டுள்ள நந்தி சிலையாகும். மேலும் இக்கோயிலின் எதிரில் அசுர குல மன்னனான மகிஷாசுரனின் பிரம்மாண்ட சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 


ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் பூங்கா:


1892 ஆம் ஆண்டு மஹாராஜா சாமராஜ உடையாரால் 250 ஏக்கர் பரப்பளவில்  அமைக்கப்பட்ட இந்த உயிரியல் பூங்கா இந்தியாவிலேயே புகழ் பெற்ற உயிரியல் பூங்காவாகும்.இப்பூங்கா முதலில் அரண்மனை விலங்குக்கூடம் என்றழைக்கப்பட்டது.  அழிந்து வரும் விலங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இங்கு திட்டமிட்ட இனப்பெருக்க முறைகள், பராமரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதனால் இங்கு யானைகள், மனிதக்குரங்குகள், காட்டெருமை சிறுத்தை, புலி, பார்பெரி மலை ஆடு, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, ஈமு, நீர் யானை, கங்காரு,போன்றவை பராமருக்க்கப்பட்டு  இனவிருத்தியும் செய்யப்படுகின்றன.

மேலும் அரியவகை விலங்குகளான எலி மான், நான்கு கொம்பு காட்டு மான், கேரக்கேல் எனும் அதிசய காட்டு பூனை, சிவட் எனும் உடும்பு , நீலகிரி லாங்குர் எனப்படும் கருங்குரங்கு , சிங்காரா எனும் அரிய வகை கலைமான், பின்டுராங் என்று அழைக்கப்படும் அதிசய பூனைக்கரடி, சிறுத்தை போன்றவைகளும் பராமரிக்கப்படுகின்றன.

ஜகன்மோகன் அரண்மனை:

மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861 ஆம் ஆண்டு கட்டப்பட்டதுதான் இந்த ஜகன்மோகன் அரண்மனை. இந்த அரண்மனையின் தர்பார் ஹால் என்றழைக்கப்படும் விதானத்தில் தான் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் தன் பிறந்தநாளை விழாவை சிறப்பாக கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனையின் பெரிய மரக்கதவில் தசாவதார காட்சிகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசர்களின் ஓவிங்களும், அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷன்:


1905 ஆம் ஆண்டு மஹாராஜா சாமராஜ உடையாரின் மகள் இளவரசி ஜயலட்சுமிக்காக நான்காம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் மரம், இரும்பு, செங்கல், சுண்ணாம்பு குழம்புகளை கொண்டு 300 ஜன்னல்கள், 127 அறைகள், 287 அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகளுடன் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது இந்த அரண்மனையாகும்.




செயிண்ட் பிலோமினா சர்ச்:

ரோப்பிய கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டது செயிண்ட் பிலோமினா சர்ச். செயிண்ட் ஜோசப் சர்ச் என்றும் அழைக்கப்படுகிறது. சிலுவையை ஒத்த வடிவத்தில் இத்தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தேவாலயத்தில் சிலுவையின் நெடுக்கில் செல்லும் தூணைக் குறிக்கும் பகுதி பக்தர்கள் கூடும் சபையாகவும் குறுக்காக செல்லும் சிலுவைப்பகுதியை குறிக்கும் பகுதியின் இரு பக்கத்தில் ஒன்றில் பலிபீடமும் மற்றொன்றில் ஸ்தோத்திர இசைக் கூடமும் வருமாறு இந்த தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த தேவாலயத்தில் பலிபீட த்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள நிலவறைத்தளத்தில் 3ம் நூற்றாண்டை சேர்ந்த தெய்வீக பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளில் கிறிஸ்துவி பிறப்பு, கடைசி விருந்து, சிலுவைத் தண்டனை, உயிர்த்தெழுதல் போன்ற காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top