வருடம் முழுவதும் எத்தனையோ விஷேச நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். அந்த வகையில், மற்ற சிறப்பு தினங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆசிரியர் தினமானது மாறுபட்டு நிற்கிறது.
ஆசிரியர் தின வரலாறு
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கவுரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது.
இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியப் பணியின் மதிப்பு
ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.
மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். எனவே, அந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை.
அனைவருமே சிறந்த ஆசிரியர்களா?
ஆனால் இன்றைய இந்திய சூழலில், ஆசிரியப் பணி என்பது சலுகைகள் மற்றும் சம்பளம் அதிகம் கிடைப்பதால், துளியளவுக்குக்கூட அப்பணிக்கு பொருத்தமற்ற பலர், அத்துறையில் வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள். பலர் வேலை வாய்ப்புக்கு காத்துக்கொண்டுள்ளார்கள். பலர் அதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஆசிரியப் பணியில் இருப்பவர்களில் கணிசமான சதவீதத்தினர், தகுதியும், திறமையும் இல்லாமல், அதைப்பற்றி கவலையும் படாமல், சம்பளத்தோடு, டியூஷன் மற்றும் சொந்த தொழில்களை நடத்திக் கொண்டு வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
இவர்களே போற்றத்தக்கவர்கள்!
எது எப்படியிருந்தாலும், சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.
இவர்களைப் போன்றவர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம். இந்த தினத்தில், ஆசிரியர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டியதை மாணவர்கள் சிறப்பாக செய்தலே நன்று!
0 comments: