இன்றைய உலகம் மொபைல் போன்களால், கையளவில் சுருங்கி விட்டது. இதனால்,
நாம் பல வசதிகளை அனுபவிக்க முடிகிறது. யாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில்
இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும்
என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந்துள்ளது.
அதே நேரத்தில், இதே மொபைல் போன்
பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு
நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு
உடல் ரீதியான, மன ரீதியான பிரச்னைகளை க் கண்டறிந்துள்ளனர். அவற்றை இங்கு
காணலாம்.
1.நோமோ போபியா (Nomophobia):
நோமோபியா என்பது ஸ்மார்ட்
போன்களால் பெற்றுள்ள, எங்கும் காணப்படுகிற ஒரு மன வியாதியாகும். இந்த சொல், மொபைல்
போன் பயன்படுத்தும் பலவகையான பயனாளர்களை ஆய்வு செய்த மேலை நாட்டு அமைப்பு ஒன்று
உருவாக்கியுள்ளது. இந்த சொல் "nomobile phobia” என்பதன் சுருக்கமாகும். மொபைல் போன்
பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகையில் இந்த மன வியாதிக்கு நாம் ஆளாகிறோம்.
ஒரு விமானம் தரை இறங்கியவுடன், அதில் பயணம் செய்தவர்களைப் பாருங்கள்.மிக வேகமாகத்
தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, ""அப்பாடா'' என்று பெருமூச்சு
விடுவார்கள். அதுவரை பல மணி நேரம் மொபைல் போன் மூலம் யாரையும் தொடர்புகொள்ள
முடியாததால், ஒருவகை விரக்திக்கு ஆளாகின்றனர். இதுவே நோமோ போபியா ஆகும்.
பல
தலைமை நிர்வாகிகள், மருத்துவர்களை ஆய்வு செய்த போது, தாங்கள் காலையில்
தூக்கத்திலிருந்து விழித்தவுடன், முதலில் செய்திடும் காரியம், மொபைல் போனை ஸ்விட்ச்
ஆன் செய்து, அழைப்புகள் உள்ளனவா என்று பார்ப்பதுதான். அதுவரை, மொபைல் போனைப்
பயன்படுத்தாமல் இருந்தது அவர்களிடம் இந்த போபியாவினை உண்டாக்கி
உள்ளது.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், இதே நோமோ போபியா என்ற பெயரில் ஓர் அப்ளிகேஷன்
உருவாக்கப்படுள்ளது. இந்த அப்ளிகேஷன் நாம் எந்த வகைகளில், மொபைல் போன் ஒன்றை மிக
அதிக உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதனை
அளக்கிறது.
2. ஸ்மார்ட் போன் அடிமை:
நோமோபோபியா மன நிலை தீவிரமாக
மாறுகையில், அந்த பயனாளர், ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு அடிமையாகிறார். ஸ்மார்ட்
போனுடன் ஒருவரின் அதீத இணைப்பு, உறவுகளைக் கெடுக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும்
அலுவலகத்தில் நம் பண்பை மாற்றுகிறது. திருமணத்தின் போது கூட ஒரு மணப்பெண், தன்
ஸ்மார்ட் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததாக, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உளவியல்
நிபுணர் ஒருவர் கூறுகையில், சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூட,
மனிதர்களிடமிருந்து விலகி இருக்க, மொபைல் போனை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கி
உள்ளனர் என்று கூறியுள்ளார். எந்த அளவுக்கு ஒரு மொபைல் போன் அதி நவீன வசதி கொண்டதாக
உள்ளதோ, அந்த அளவிற்கு, அது ஒருவரை போன் பைத்தியமாக மாற்றுகிறது. தென் கொரியாவில்,
20 சதவீத மாணவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமைகளாக உள்ளனர் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது. இதிலிருந்து விடுபடக் கூடிய வழிகளும் இப்போதைக்கு உறுதியாகப்
புலப்படவில்லை.
3. தூக்கத்தில் மெசேஜ் டெக்ஸ்ட்:
அமெரிக்காவில்
ஐந்தில் நான்கு இளைஞர்கள், தாங்கள் உறங்கும்போதும், படுக்கையில் தங்களின் கைக்கு
எட்டும் தூரத்தில் அல்லது தங்கள் மார்பு மேலாக, மொபைல் போனை வைத்து உறங்குகின்றனர்.
நண்பர்களிடமிருந்து மெசேஜ் வந்தால், உடனே அதனைப் பார்த்து பதில் அளிக்க இந்த
ஏற்பாடு. இதனால், அவர்களின் உறக்கம், பாதி விழித்த நிலையிலேயே (“junk sleep”
syndrome) நிலை கொள்ளாமல் தொடர்கிறது. இப்போது பலர், தங்கள் ஸ்மார்ட் போனில்,
தூங்கி வழிந்தவாறே, டெக்ஸ்ட் அமைக்கின்றனர். டெக்ஸ்ட் அமைப்பதில் பல எளிய வழிகள்
இந்த ஸ்மார்ட் போனில் இருப்பதால் இந்த பழக்கம் தொற்றிக் கொள்கிறது.
4.
ஸ்கிரீன் தரும் தூக்கமின்மை:
மேற் சொன்ன இரு வித பிரச்னைகளுக்குத் (“junk sleep
syndrome” and sleep texting) தொடர்பானது இந்த ஸ்கிரீன் தூக்கமின்மை நோய் ஆகும்.
பொதுவாக, பளிச் என்ற வெளிச்சம் இருந்தால், அது பகல் போலத் தோற்றமளித்து நமக்கு
தூக்கத்தினைத் தராது. டேப்ளட் பி.சி. அல்லது ஸ்மார்ட் போனை உங்கள் கண்களுக்கு
முன்னால் பிடித்து, திரையில் உள்ளதைப் படிக்க முயற்சி செய்கையில், திரை வெளிச்சம்
இந்த பிரச்னையை ஏற்படுத்துகிறது.
நம் உடலுக்குள் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டே
இருக்கிறது. இதனை உடல் கடிகாரம் (Body Clock) என்று அழைக்கின்றனர். இதுதான், இரவு
நெருங்குகையில், இது தூங்கும் நேரம் என, உடம்பிற்கு அல்லது மூளைக்கு எடுத்துச்
சொல்கிறது.இதற்கு உடலில் உள்ள மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் உதவுகிறது. நல்ல
வெளிச்சம் இந்த ஹார்மோன் செயல்பாட்டினை அழுத்துகிறது.
இதனால், நமக்குத் தூங்க
வேண்டும் என்ற எண்ணம் அமுங்கிப்போகிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, ஸ்கிரீனின்
ஒளி வெளிச்சத்தின் அளவை இரவில் குறைத்து வைத்து, கண்கள் அருகே இல்லாமல்,
தள்ளிவைத்து போனின் திரையைப் பார்க்க வேண்டும். படுக்கைக்குச் செல்ல இரண்டு மணி
நேரம் முன்பாகவே, இந்த போன்களைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். எந்த
சாதனத்தின் ஒளித்திரையும், (கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி) நம் கண்களைப் பாதித்து,
உறக்கத்தினைக் கெடுக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போனால் தூண்டப்படும் இந்த தூக்கமின்மை
தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அச்சிட்ட
நூல்களுக்குப் பதிலாக, நூல்களைப் படிக்க, டேப்ளட் பிசிக்கள் அதிக அளவில்
பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், டேப்ளட் பிசியினால் தூக்கமின்மை மிக அதிகமாகவே
உருவாகி வருகிறது.
5. ஆமைக் கழுத்து நோய்:
ஸ்மார்ட் போனை அல்லது எந்த
மொபைல் போனையும் ஒழுங்காகப் பிடித்து பேசுவது என்ற பழக்கம், பெரும்பாலானவர்களிடம்
இல்லை. நாம் ஏதேனும் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருப்பதால், கழுத்து
அருகே, போனை வைத்து, தலை சாய்த்துப் பிடித்து, போனைப் பயன்படுத்துவதே இப்போது
பழக்கமாகி வருகிறது. இது தொடர் கையில், ஆமைக் கழுத்து நோய் வருகிறது. ஆங்கிலத்தில்
இதனை turtleneck syndrome என அழைக்கின்றனர். தொடர்ந்து இந்த பழக்கம்
உள்ளவர்களுக்கு, கழுத்தில் தீராத வலி உண்டாகிறது. இந்த வலியால் அவதிப்படுவோர்
அதிகம் வசிக்கும் நாடு தென் கொரியாவாகும்.
6. வெட்டிப் பந்தா மேடை:
சமூக தளங்களில் அதிகம் உலா வருவோருக்கு இந்த நோய் அதிகம் இருப்பதாகக்
கண்டறியப்பட்டுள்ளது. இந்த தளங்களில் எழுதுபவர்கள், தங்களைப் பற்றி எழுதுகையில்,
மிக நல்ல விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்தி, தானே, மிக நல்ல மனிதன் என்ற ஒரு பொய்யான
தோற்றத்தை உருவாக்குகின்றனர். சமூக இணைய தளங்கள், இந்த வெட்டிப் பந்தாவிற்கு மேடை
அமைக்கின்றன. இதில் என்ன பிரச்னை என்றால், எல்லாரும் இந்த பொய்த் தோற்றத்தினை
அமைக்கையில், மற்றவர்கள், தான் அது போல இல்லையே என்ற மன வருத்தத்திற்கு
ஆளாகிறார்கள். இதனை பேஸ்புக் மனச்சுமை (Facebook Depression) எனவும்
அழைக்கின்றனர்.
7. தன் காதல் மனக் கோளாறு:
சமூக இணைய தளங்களில்,
பெரும்பாலானவர்கள், தங்களை விதம் விதமாக அவ்வப்போது போட்டோ எடுத்துப்
பதிக்கின்றனர். இது எதற்காக? நோக்கம் என்ன? ஒன்றுமில்லை. ""இதோ ! என்னைப் பார்''
என்று கூறுவதற்காகவே. இது தன்னைத்தானே காதலிக்கும் ஒரு மனச் சுமையை உருவாக்குகிறது.
மேலே கூறப்பட்ட கூற்றுகளுக்காக, ஸ்மார்ட் போன் அல்லது மற்ற மொபைல் போன்கள், பிற
டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதனை நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கில்லை. இவை
இல்லாமல், இனி இந்தப் புவியில் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு இவற்றின் பயன்பாடு
வந்துவிட்டது. இருப்பினும் மேலே தரப்பட்டுள்ள பிரச்னைகளும் நம்மிடையே தோன்றி உள்ளன.
இவற்றை உணர்ந்து திருந்தினால், நமக்கும் நாட்டுக்கும் நல்லது.