1965ம் ஆண்டு சோமாலியாவில் உள்ள ஒரு பாலைவன கிராமத்தில் பிறந்தவர் வாரிஸ் டைரி. கொளுத்தும் வெயிலில் ஆடுகளை மேய்ப்பது, உணவு தயாரிப்பது, வீட்டைப் பராமரிப்பது என்று ஓர் ஆப்பிரிக்க பெண்ணின் கடின உழைப்பு வாரிஸிடமும் இருந்தது.
துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் பறந்து திரிந்த பட்டாம் பூச்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைச் சந்தித்த போது வயது 5.ஆரம்பத்தில் நல்ல உணவு கொடுக்கப்பட்டு, அன்பாகப் பேசி அழைத்துச் செல்லப்பட்டார் வாரிஸ்.
அதிகாலை மருத்துவச்சியின் பிளேடால் அவரது பிறப்புறுப்பு வெட்டி எடுக்கப்பட்டு, முள்களால் தைக்கப்பட்டது. உடல் முழுவதும் ரத்தம்… வலியின் உச்சம்… அந்தச் சின்னஞ்சிறிய பாலைவன மலர் வதங்கிப் போனது.
மதத்தின் பெயரால் ஆப்பிரிக்கப் பெண்களின் கற்பைக் காப்பதற்காக, இந்தக் கொடிய செயல் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா உள்பட உலகின் 28 நாடுகளில் பெண்களுக்கு இந்தக் கொடூரம் இன்னும் நடக்கிறது. பெருகும் குருதி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நான்கில் இரு பெண்கள் மரணத்தைச் சந்தித்துவிடுவார்கள்.
தைக்கப்பட்ட பிறப்புறுப்பு திருமணத்தின் போது வெட்டிவிடப்படும் (இப்படிச் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் தாம்பத்ய இன்பம் கிடைக்காது என்பது இன்னொரு கொடூரம்). அதுவரையிலும், தைக்கப்பட்ட பிறப்புறுப்பின் மிகச்சிறு துளை வழியே சிறுநீர் கழிப்பதும் மாதவிடாய் ரத்தம் வெளியேறுவதும் கொடுமையாக இருக்கும். அம்மாவின் அரவணைப்பில் தைரியம் மிக்க வாரிஸ் தேறினார்.
வழக்கமான வேலைகளைச் செய்து வந்தார். 13 வயதில் திடீரென ஒருநாள் வாரிஸின் அப்பா, தன்னை விட வயதில் பெரிய முதியவரை அழைத்து வந்து, ‘வாரிஸின் கணவன்’ என்றார். ‘திருமணம் வேண்டாம்’ என்று வாரிஸ் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.
ஒரு நாள் இரவு உணவு, தண்ணீர், செருப்பு எதுவுமின்றி, அம்மாவின் சம்மதத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார் வாரிஸ். பகல் முழுவதும் கொடுமையான பாலைவன வெயில். இரவு கொடுங்குளிர். வெற்றுக்காலில் ஓடிக்கொண்டே இருந்தார் வாரிஸ். கொஞ்சம் தாமதித்தாலும் அப்பாவால் பிடித்துச் செல்லப்படுவோம் என்ற உணர்வு, ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தது.
களைப்பில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது, மூச்சு விடும் சத்தம் கேட்டு விழித்தார் வாரிஸ். அருகில் ஒரு சிங்கம். இனி பிழைக்க வழியில்லை. சிங்கத்துக்கு இரையாகத் தயாரானார் வாரிஸ். அருகில் வந்த சிங்கம், அவரை முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டது.
மீண்டும் ஓட்டம்… பல நாள்கள் பயணம் செய்து, ஏறக்குறைய 480 கிலோமீட்டர் கடந்து வந்திருந்தார் வாரிஸ். அது அவருடைய அக்கா மற்றும் சில உறவினர்கள் வசிக்கும் மொஹதீஸு என்ற இடம். அக்கா வீட்டில் வீட்டு வேலைகள் முழுவதையும் செய்தார். குழந்தையைப் பார்த்துக்கொண்டார். அக்காவோ வாரிஸை தங்கையாக நினைக்காமல் வேலைக்காரியாகவே நடத்தினார். அங்கிருந்து வெளியேறி, சித்தப்பா வீட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கும் வீட்டு வேலைகளைச் செய்தார்.
அப்போது லண்டனில் உள்ள சோமாலியா தூதரகத்தில் வேலை செய்த சித்தப்பா, வீட்டுவேலை செய்ய ஆள் தேடி வந்தார். தானே வருவதாக விருப்பத்துடன் கூறினார் வாரிஸ். உடனே பாஸ்போர்ட் பெறப்பட்டு, லண்டன் வந்து சேர்ந்தார். அங்கும் சமையல் வேலை, வீட்டுவேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.
அந்த வீட்டுக் குழந்தையைப் பள்ளியில் விடும்போது, அங்கு ஒரு குழந்தையின் அப்பா, வாரிஸைப் பார்த்து அடிக்கடி புன்னகை செய்வார். ஒருநாள் தன்னுடைய பிசினஸ் கார்டை கொடுத்தார். ஆங்கிலம் அறியாத வாரிஸ் அதை வாங்கி வைத்துக்கொண்டார்.
சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் வெடிக்க, சித்தப்பாவை சோமாலி யாவுக்கு வரச் சொல்லிவிட்டனர். மீண்டும் சோமாலியா செல்வதில் வாரிஸுக்கு விருப்பம் இல்லை. தன் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் சித்தப்பா குடும்பம் மட்டும் கிளம்பிச் சென்றது.
வாரிஸின் தோழி ஒருவர் அடைக்கலம் கொடுத்தார். அவர் மூலம் பிசினஸ் கார்ட் கொடுத்தவரிடம் தொடர்புகொண்டார். அவர் டெரன்ஸ் டொனொவன். புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர். வாரிஸை புகைப்படம் எடுக்க விரும்பினார். தனக்கும் வாழ பணம் வேண்டும்… அம்மாவுக்கும் பணம் அனுப்ப வேண்டும் என்று நினைத்த வாரிஸ் மாடலிங் செய்ய சம்மதம் தெரிவித்தார்.
அவருடைய அழகான புகைப்படங்கள் பலரின் பாராட்டுகளைப் பெற்றன. பணம் சேர்ந்தது. மருத்துவரிடம் சென்று, தைக்கப்பட்ட பிறப்புறுப்பை பிரித்தார். பல ஆண்டுகள் அனுபவித்து வந்த சித்திரவதையில் இருந்து மீண்டார். விரைவில் பைரலி காலண்டரின் முகப்பை வாரிஸின் படம் அலங்கரித்தது. குறுகிய காலத்திலேயே பிரபல மாடலாக வலம் வந்தார்.
உலகின் மிக முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டுக்கொண்டு அவரை பிராண்ட் அம்பாசிடராக கொண்டாடின. அதைத் தொடர்ந்து ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் (The Living Daylights) நடித்தார். இவரது வாழ்க்கையே 2009ல் ‘Desert Flower’ என்ற பெயரில் ஜெர்மன் திரைப்படமாக வெளியானது.
உலகப் புகழ்பெற்றவராக ஆகிவிட்டாலும் வாரிஸின் மனம் அமைதியடையவில்லை. தான் அடைந்த சித்திரவதையை இனி எந்தப் பெண்ணும் அனுபவிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ அமைப்பை உருவாக்கினார். பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதை எதிர்ப்பதும் தடுப்பதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். அதோடு, சோமாலியா நாட்டின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் போன்றவற்றையும் அளித்து வருகிறது இந்த அமைப்பு.
1997ல் மாடலிங் செய்வதை நிறுத்திவிட்டு, முழு நேரத்தையும் சமூக சேவையில் செலவிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டார் வாரிஸ். 2003ம் ஆண்டு வரை இந்தப் பணியைத் திறமையாகச் செய்து முடித்தார்.
1998ல் வாரிஸ் தன் வாழ்க்கையை ‘டெசர்ட் ஃப்ளவர்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணின் வலி மிகுந்த வாழ்க்கையையும் ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணின் வெற்றியையும் வெளிப்படுத்திய இந்தப் புத்தகம், உலகம் முழுவதும் 1 கோடியே 10 லட்சம் பிரதிகளை விற்று சாதனை படைத்திருக்கிறது.
‘டெசர்ட் சில்ட்ரன்’, ‘லெட்டர் டூ மை மதர்’ உள்பட இன்னும் 4 முக்கிய நூல்களையும் எழுதியிருக்கிறார். ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி உள்பட பல நாடுகளும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளும் வாரிஸுக்கு விருதுகளை வழங்கியிருக்கின்றன. மாடல், நடிகை, பெண்ணுரிமைப் போராளி என்று தானும் உயர்ந்து, சமூகத்தையும் உயர்த்திய இந்த வாரிஸ் டைரி பாலைவன மலர் அல்ல… பாலைவனச் சோலை!