.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 20 March 2018

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!




ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!

தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.

நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன.

நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன, ADVERTISEMENT கம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என்பது குறித்து எண்ணி இருக்கலாம். இவற்றிற்கான பதில்களைச் சுருக்கமாக இங்கு காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்பது, பல நிலைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு வட்டத்தில் ஒரு முக்கிய பகுதி ஆகும். நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்து மிக அதிகமாகத் தெரிந்தவராக இருந்தாலும், அதனை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என அறிந்தவராக இருந்தாலும், தற்போது பிரவுசர்களில் காணப்படும், வைரஸ் புரோகிராம்கள் எளிதாகத் தாக்கக் கூடிய தவறான குறியீடுகள், ப்ளக் இன் புரோகிராம்கள், ஏன் vulnerabilities என்று சொல்லக் கூடிய வழுக்கள் பல உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய அனைத்தும், செம்மையாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை உங்களின் அவசியத் தேவையாக மாற்றுகிறது.

நம் கம்ப்யூட்டர் இயங்கும்போது, பின்புலத்தில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் திறக்கப்படும் ஒவ்வொரு பைலையும் அது சோதனை செய்திடும். இதனை, உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் தன்மைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அவை - onaccess scanning, background scanning, resident scanning, realtime protection. நீங்கள் ஒரு EXE பைலை இயக்க, அதனை இருமுறை கிளிக் செய்திடுகையில், அது உடனே இயக்கப்படுகிறது என்றுதானே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இல்லை. உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் முதலில் அந்த பைலை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் சோதனை செய்கிறது.

ஏற்கனவே அந்த புரோகிராமிற்குத் தெரிந்த வைரஸ் புரோகிராம்கள் மற்றும் பிற வகையான மால்வேர் புரோகிராம்கள் அதில் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்திடும். இவற்றுடன் தானாக வைரஸை அறிந்து கொள்ளும் சோதனையையும் மேற்கொள்கிறது. இதனை "heuristic" checking என அழைக்கின்றனர். இந்த வகையில், திறக்கப்படும் புரோகிராம் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு எதனையும் மேற்கொள்கிறதா என, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை மேற்கொள்கிறது. இதன் மூலம் அதுவரை அறியப்படாத வைரஸ் இருப்பதனை அறிந்து கொள்கிறது.

இயக்க (EXE) பைல்கள் மட்டுமின்றி, மற்ற வகை பைல்களையும் இது சோதனை செய்கிறது. எடுத்துக்காட்டாக, சுருக்கப்பட்ட .zip archive பைலில், வைரஸ் புரோகிராமும் சேர்ந்தே சுருக்கப்பட்டு இருக்கலாம். அல்லது வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் கெடுதல் விளைவிக்கும் மேக்ரோ ஒன்று பதிந்திருக்கலாம். எனவே, எப்போதெல்லாம் பைல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆண்ட்டி வைரஸ் சோதனை நடத்தப்படும். எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு EXE பைலை டவுண்லோட் செய்தாலோ, அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றிலிருந்து மாற்றினாலோ, அதனை நீங்கள் இயக்குவதற்குத் திறக்கும் முன்னரே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனை சோதனை செய்திடும். இது போன்ற, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றின், எப்போதும் சோதனை செய்திடும் தன்மையை நாம் நிறுத்தி வைக்கலாம். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டால், அதனை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!- கொஞ்சம் அலசல்




முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப் படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.அதிலும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. எனவே, அதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை செய்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?


பொதுவாக பெரியவர்களுக்கு மட்டுமே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள், குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பதை நிரூபிக்கின்றன. எனவே, 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ரத்த அழுத்த சோதனை நடத்த வேண்டியது அவசியமாகிறது.

குழந்தைகள் மத்தியில் எந்தளவிற்கு உயர் ரத்த அழுத்த சிக்கல்கள் உள்ளன?

இப்பிரச்சினை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, 3 – 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடம், 3.6% அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது. அதேசமயம், சீனாவைப் பொறுத்தவரை, 8 முதல் 17 வயது வரையிலான பள்ளி குழந்தைகளிடம் 17.4% அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது.

குழந்தைகளிடம் ரத்த அழுத்த சோதனை நடத்தவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?

உயர் ரத்த அழுத்த பிரச்சினைக் கொண்ட 75% குழந்தைகள், சோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே உள்ளனர். இதன்மூலம், அவர்கள் பெரியவர்கள் ஆனதும், இதயம் மற்றும் ரத்த நாளம் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகின்றனர். உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள ஒருவர், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு மற்றும் இதய நோய் ஆகியவை தாக்குவதற்கான அதிகபட்ச ஆபத்தில் இருக்கிறார்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, முறையான கவனிப்பிற்கு உட்படுத்தப்படாவிட்டால், மூளை வீக்கம், குழப்பம், கோமா, தீவிர தலைவலி மற்றும் குருட்டுத் தன்மை உள்ளிட்ட மோசமான நிலைகளுக்கு ஆட்படும் ஆபத்து உள்ளது. எனவே, ஆண்டிற்கு ஒரு முறையாகினும், குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை அதிகரிக்க காரணங்கள் என்ன?

இன்றைய சமூகத்தில், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் பல விரும்பத்தகாத அம்சங்கள் இருப்பதே அதற்கு காரணம். உதாரணமாக, அதிகமாக தொலைக்காட்சிப் பார்த்தல், கணினி முன்பாக அதிகநேரம் செலவழித்தல், வீடியோ கேம் விளையாடுதல், ஜங்க் உணவுகளை உண்ணுதல் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பானங்களைப் பருகுதல் உள்ளிட்ட பல பழக்கவழக்கங்களால், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

அதேசமயம், தேவைக்கும் குறைவான உடலியக்கம், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்யாமை, உடல் சார்ந்த விளையாட்டுக்களுக்கு வாய்ப்பில்லாமை உள்ளிட்ட அம்சங்கள் ஒரு குழந்தை குண்டாவதற்கு மட்டுமல்ல, அக்குழந்தை உயர் ரத்த அழுத்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் காரணமாகின்றன.

குழந்தைகளின் உயர் ரத்த அழுத்த சிக்கலைத் தீர்க்க கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகள், நல்ல சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும் ஜங்க் உணவு மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.

காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை தவறவிடாமல், சரியான நேரத்தில உண்ண வேண்டும். அதுபோல், அதிகநேரம் தொலைக்காட்சி முன்பாகவோ அல்லது கணினி முன்பாகவோ அமரக்கூடாது. தேவையான அளவிற்கு விளையாட வேண்டும்.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், இரவில் நெடுநேரம் கண்விழிக்காமல், தினமும் தேவையான அளவு தூங்க வேண்டும்.

குழந்தைகளுக்கான நார்மல் ரத்த அழுத்தம் என்பது என்ன?

பெரியவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் நார்மல் ரத்த அழுத்த அளவு 120/80 mm Hg) என்பதாக இருக்கும். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை, நார்மல் ரத்த அழுத்தம் என்பது, வயது, பாலினம் மற்றும் உயரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

எனவே, இதற்கென்று குறிப்பிட்ட அளவீட்டை நிர்ணயிக்க முடியாது. குழந்தையின் ரத்த அழுத்தத்தை அளவிடும் மருத்துவர், அதை reference table -க்கு பொருத்திப் பார்த்து, அது நார்மலா அல்லது அசாதாரணமானதா என்பதை நிர்ணயிக்க வேண்டும்.

இந்த ஒப்பீட்டின்போது, 95% விழுக்காட்டிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தமாக கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு 5 வயது குழந்தையின் உயரம் 95% விழுக்காட்டில் இருந்தால், 104/65 mm Hg என்பதற்கு மேலான மதிப்பு உயர் ரத்த அழுத்தமாக கருதப்படும்.

குழந்தைகளிடம் நிலவும் மாறுப்பட்ட ரத்த அழுத்த நிலைகள் யாவை?

குழந்தைகளிடம் முதல் நிலையிலான அல்லது அவசியமான உயர் ரத்த அழுத்தம் இருக்கும். இதற்கென பின்னணி உடல் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அதேசமயம், சிறுநீரக மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறியாகவும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருக்கலாம்.

முன்பு, குழந்தைகளிடம் இருக்கும் அனைத்து உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளும் இரண்டாம் நிலையிலானவை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நடைபெற்றுவரும் பல ஆராய்ச்சிகளின் விளைவாக, முதல்நிலை அல்லது அவசியமான உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகள், இதுவரை பெரியவர்களிடம் மட்டுமே இருந்தவை.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் யாவை?

உடல் பருமன், சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, தூக்கத்தின்போதான சுவாசப் பிரச்சினை உள்ளிட்டவை, குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள். ஒரு குழந்தையிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிறதென்றால், அதற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான உகந்த கரம்(hand) எது?

வலது கரம், ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான சரியான உறுப்பாகும். இடது கையில் ரத்த அழுத்தத்தை சோதனை செய்தால், இதய நோய் அறிகுறியை கண்டறிவதில் சிக்கல் ஏற்படலாம். ஏனெனில், இடது கை அழுத்தம் குறைவாக இருக்கும்.

White- Coat உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஒரு குழந்தைக்கு, மருத்துவமனை அல்லது மருத்துவரின் கிளீனிக் ஆகிய இடங்களில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, அதேசமயம், வீட்டில் அவரின் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால், அந்த நிலைக்குப் பெயர் White- Coat Hypertension.

இந்தநிலை, மாறுபடும் மனநிலை அழுத்தம் காரணமாக ஏற்படுவதாகும். இந்த White- Coat Hypertension என்பது தீங்கு தரும் ஒன்றல்ல. எனவே, ஒரு குழந்தை White- Coat Hypertension சிக்கலைக் கொண்டிருந்தால், அதை நினைத்து பெற்றோர் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், அதனால் எந்த தீங்கும் ஏற்படாது.

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்



அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.

'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.

அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.

கண்ணீரும் கதைசொல்லும்.......!




கண்ணீரும் கதைசொல்லும்!

அழுங்கள்! உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். நம்மால் நம்புவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அதுவே அறிவியல் உண்மையாகவும் இருக்கிறது. அழுவதால் உடலுக்கு நன்மைகளே அதிகம். மாறாக அழுகையை அடக்கிவைத்தல், உணர்ச்சிகளை அழுகையின் மூலம் வெளிக்காட்டாது மறைத்தல் போன்ற செயல்களால் உடலுக்கு நேரும் தீங்குகள் ஏராளம்.


துன்பங்கள் நேர்கையில் நம் கண்ணீர், கண்களிலிருந்து ஆறாக ஓடாமல் தடுக்கப்படும்போது நம் உடலானது கடுமையாக எதிர்வினையாற்றுகிறது. அது ஏராளமான நச்சு ஹோர்மோன்களைத்(மன அழுத்தத்தைத் தோற்றுவிப்பது) தோற்றுவிக்கிறது. இதனால் உடல் நோய்வாய்ப்படுதல், உடல் பருமனாதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.


கண்ணீரின் வகைகள்:


பிரதிபலிப்புக் கண்ணீர்:-

இது கண்களுக்குள் ஏதாவது விழுந்துவிட்டால் (உதாரணமாக தூசி, அழுக்கான சிறு துணிக்கைகள்) மற்றும் கண்ணில் எரிச்சலை ஏற்படுத்தும் வாயுக்கள் அல்லது அமிலங்கள் (வெங்காயம், கண்ணீர்ப் புகை) கண்களில் புகுந்துவிட்டால், தானாகவே சுரந்து கண்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறது.


உணர்வெழுச்சிக் கண்ணீர்:-

இக்கண்ணீரானது மனிதனின் உளவியல் ரீதியான தாக்கங்களின்போது(கவலை, துன்பம்,ஆனந்தம்) வெளிப்படுவது. இது உலகிலுள்ள அத்தனை மனிதருக்கும் பொதுவானது என்று கருதப்படுகிறது.


கழுவும் கண்ணீர்:-

இது பிறப்பிலிருந்து இறப்புவரை எம் கண்களை ஈரத் தன்மையுள்ளதாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இவ்வாறு ஒரு திரவம் நம் கண்ணில் சேவை புரிந்துகொண்டிருப்பது, நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அதை உணர வேண்டுமெனில் ஈரமில்லாத, சுத்தமான விரலால் கண்களில் தொட்டுப் பார்த்து(பிசுபிசுப்பை) அறிய முடியும்.

அழுகையில்:

நாம் சிரிக்கும்போது எவ்வளவு சக்தியைச் செலவு செய்கிறோமோ(நிமிடத்திற்கு 1,3 கலோரிகள்) அதேயளவு சக்தியை, அழும்போதும் செலவு செய்கிறோம். அழுவதை விட சிரிப்பது உடலுக்குச் சிறந்தது என்று யார் சொன்னது?

கண்களில் 'பீளை' உருவாகுதல், அழுததால் கண்கள் வீங்குதல், கண்கள் சிவத்தல் எல்லாமே கண்கள் தம்மைக் காத்துக்கொள்ள, தாமாகவே(automatic) எடுக்கும் முயற்சியாகும்.
அழுகை மட்டும் இல்லாது போயிருந்தால், தன் கைக்குழந்தைக்குப் பசி எடுப்பதைத் தாயால் எப்படி உணர முடியும்?


நாம் துன்ப, துயரமான சூழ்நிலைகளில் அழாமல் அடக்கி வைக்கும்போது எங்கள் உடலானது, கூடிய விரைவில் நோய்வாய்ப்படுவதற்கு வாய்ப்புள்ளது, நாம் கவலையடையும்போது எமது உடலானது அதிக அளவில் அழுத்த, நச்சுக் ஹோர்மோன்களை உற்பத்தி செய்கிறது, நாம் அழும்போது இக் ஹோர்மோன்கள் உடலிலிருந்து கண்ணீருடன் சேர்ந்து வெளியேறிவிடுகின்றது. இவ்வாறு அழாமல் தேக்கி வைக்கும் ஹோர்மோன்கள் உடலுக்கு ஆபத்தானவையாகும். இவை மன அழுத்தம், பலவித வாத, நரம்பு நோய்கள், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!




ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!

  பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

உப்பு:

இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.

ரீபைண்ட் ஆயில்:

செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே.
அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.

வெண்ணெய், நெய், வனஸ்பதி:


வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.

உலர்ந்த தானியங்கள்:

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாலிஷ் அரிசி:

அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சந்தை காய்கறி, பழங்கள்:


உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

பால்:

பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

கோலா, காபி, டீ:


இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை:

சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.

ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top