.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 5 January 2014

நண்பர்கள் ரியாக்‌ஷனை பார்த்து ரசிக்க ஒரு செயலி..



விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்களையோ ,வீடியோக்களையோ நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாதவர்கள் யார் ? சொல்லுங்கள். ஆரம்பத்தில் இமெயில் வாயிலாக, அப்புறம் பேஸ்புக் வாயிலாக என்று , யாம் பெற்ற சிரிப்பு நண்பர்களும் பெறட்டும் என , நகைச்சுவை படங்களை அனுப்பி வைப்பது இயல்பாக தான் இருக்கிறது. இப்போது , இதற்காக என்றே ஒரு செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது.

கிகில் மெயில் எனும் அந்த செயலி சிரிக்க வைக்கும் படங்களை எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்க உதவுகிறது. இது என்ன புது விஷயமா ? புகைப்பட புகழ் செயலி ஸ்னேப்சேட் இதை தானே செய்கிறது என்று கேட்கலாம். இன்னும் கூட பல செயலிகள் செல்வழி புகைப்படங்களை பகிர வைக்கின்றனவே என்று செயலிகள் விஷயத்தில் அப்டட்டாக இருப்பவர்கள் கேட்கலாம்.

சரி தான், புகைப்பட பகிர்வுக்கு செய்லிகள் இல்லாமல் இல்லை. ஆனால் கிகிலி மெயில் செயலி , ஸ்னேப்சேட்டை விட ஒரு படி மேலே சென்று அசத்துகிறது. எப்படி தெரியுமா?  ஸ்னேப்சேட் போன்றவை புகைப்படங்களை எடுத்து அனுப்ப மட்டும் தானே செய்கின்றன ? கிகில் மெயில் இப்படி அனுப்பிய புகைப்படத்தை பார்த்ததும் நண்பர்கள் என்ன ரியாக்‌ஷன் செய்கின்றன்றோ அதை பார்த்து ரசிக்க உதவுகிறது.

சிரிப்பு புகைப்படம் அல்லது வீடியோவை பகிர்வதே, என்னைப்போல நீங்களும் சிரியுங்கள் என்று சொல்வது தானே. அப்படி இருக்க, சிரிப்பு படத்தை பார்த்த்தும் நண்பர்கள் எப்படி உணர்ந்தனர் என்று தெரிந்து கொண்டால் தான் அந்த பகிர்வு முழுமையாகும். ஆனால் எங்கோ இருக்கும் நண்பர்கள் ரியாக்‌ஷனை எப்படி தெரிந்து கொள்வது? இதை தான் கிகில் மெயில் சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் , புகைப்பட அல்லது வீடியோவை அனுப்பியதுமே , அவர்கள் போனில் புதிய  மெயிலுக்கான தகவல் போய் சேரும் . அந்த மெயிலை கிளிக் செய்து பார்த்ததுமே நண்பர்கள் ரியாக்‌ஷன் என்னவோ அது அப்படியே புகைப்படமாக கிளிக் ஆகி, பதில் மெயிலாக வந்தடையும். ஆக, நண்பர்கள் நகைச்சுவை காட்சியை பார்த்து , எப்படி ரசித்து மகிழ்கின்றனர் என்று இந்த செயலி வழியே உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் சுவாரஸ்ய்மான செயலி தான். கொஞ்சம் யோசித்து பாருங்கள், இதில் எத்தனை விதமான ரியாக்‌ஷ்ன்களை எல்லாம் பார்க்க கூடும் என்பதை . சில வீடியோக்களை பார்த்து பலரும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். சிலர் சிரித்து கொண்டே இருக்கலாம். இன்னும் சில படங்களை பார்த்து யாரேனும் , உம்மனா மூஞ்சியாக முகத்தை வைத்துக்கொள்ளலாம். சிரிப்பு படத்துக்கான இந்த ரியாகஷனே கூட சிரிக்க வைக்கலாம் தானே.

செயலி முகவரி:  http://www.gigglemail.com/#

கம்ப்யூட்டர் பராமரிப்பு..!




நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் “”தினமும் என்னைக் கவனி” என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.

4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.

5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.

6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.http://www.revouninstaller.com/என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.

7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.

8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர் களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம். என் கம்ப்யூட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்திடாமல் நன்றாக இயங்கிக் கொண்டு தான் உள்ளது.

ஆத்ம சக்தி (Will Power)...??



இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான். ஆனால் நாம்தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை எப்படி வெளிக்கொணர்ந்து இயக்குவது என தெரிந்துகொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.


இறைவன் உள்மனம் மூலமாக இயங்கி நாம் பிறந்தது முதல் இறப்புவரை நம்மைக் காப்பாற்றி நம் உடம்பை இயக்கிக் கொண்டே இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு நம்மிட முள்ள சக்திகளை எப்படி உபயோகிப்பது எனவும் தெரிந்துகொண்டால் நாம் வாழ்க்கை யில் நமது கஷ்டங்களை எல்லாம் நிவர்த்தி செய்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.


நம்மிடம் தேங்கிக் கிடக்கும் மகா சக்திகளை கண்டுபிடித்து அவைகளை நாம் உபயோகப்படுத்தி நமக்கு வேண்டிய செல்வங் கள், தொழில்கள், படிப்பு ஆகிய வசதிகளை மேம்படுத்திக்கொண்டு இன்பமாக வாழலாம்.


இதற்குத் தேவை திட நம்பிக்கையும், தைரியமுமே. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். நம்மேல் நமக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ஆத்ம சக்தியை (will power) வளர்த்துக்கொள்ள வேண்டும்.


ஆத்ம சக்தி என்பது நம்மிடம் உள்ளது தான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது. உருவம் அற்றது தான். ஆனால் அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் மட்டுமே அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.


முதலில் நமக்கு மனோ திடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு சுய நம்பிக்கை மந்திரத்தை முதலில் மனப்பாடம் செய்து மனதில் பதியவைத்துக் கொள்வோம்.


“சகல அறிவுகளுக்கும் ஊற்றாகிய
என் உள்மனமே
நான் நினைப்பதை முடிக்கும் வல்லமை
என் உள்மனதுக்கு உண்டு.
என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை.
நான் செய்வேன்; நான் செய்வேன்; என்னால்
எதுவும் செய்ய முடியும். என் சக்தி அபாரமானது
அந்த அபார சக்தியால் என்னால்
செய்து முடிக்க முடியும்; நான் செய்வேன்.”


இனி நாம் எந்த காரியத்தையும் செயல்படத் துவங்கும் முன் இந்த சுய நம்பிக்கை மந்திரத்தை ஒரு முறைசொல்லிவிட்டு மற்ற வேலைகளை ஆரம்பித்தால் எல்லாமே வெற்றிகரமாக முடியும்.


நம்மிடமுள்ள அளப்பரிய சக்தியை நமக்கு நாமே உணர்வதில் மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration) மற்றும் தன்னை அறிதல் (Know thyself) ஆகிய இரண்டு செயல்கள் முக்கியமானவை.


மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration)


மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது ஒன்றிலேயே சூழ்ந்து சிந்தனையை சிதறவிடாமல் நிறுத்துவது ஆகும். ஒன்றை அடையவேண்டும் என்ற விருப்பமானது உறுதியுடனும், திடமுடனும் யாரிடத்தில் வேரூன்றி இருக்கிறதோ அவரே அந்த விருப்பத்தில் திட சித்தத்தை செலுத்தி தான் விரும்பியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.


மனிதனால் முடியாத காரியம் எதுவும் இல்லை. நம்மால் எதையும் செய்து முடிக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். மனித சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியானாலும் காரியங்களை செய்து முடிக்க முடியாது.


இந்த சக்தியை தெரிந்து பயன்படுத்தி பலவிதமான சித்துக்களையும் காட்டி மறைந்த பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள், நாயன் மார்கள், ஆழ்வார்கள், மகான்கள் போன்றவர்கள் எல்லா மதத்திலும் தோன்றி மறைந்து இருக்கிறார்கள்.


இவைகளை தெரிந்தும், படித்தும், கேட்டும் இன்னமும் செயல்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். காரணம் நம்மை நாம் அறியாததே. நமது சக்தியின் தன்மையை நாம் தெரிந்து செயல்பட்டால் இவ்வுலகில் நாம் சுகபோக வாழ்வு வாழலாம். அதற்கு,


1 ) முதலில் நமது எண்ணங்களை நமக்கு எது தேவையோ அதிலேயே நிறுத்தி வைக்க வேண்டும். மனதில் வேறு பல எண்ணங்கள் புகவிடாமல் மனம் அலைபாயாமல் – நமது என்ன அலைகளை சிதறவிடாமல் ஒரு பிடியாக நாம் நினைத்த காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.


2 ) ஆத்ம சக்தி என்ற நமது மனோதிட சக்தியை நமது எண்ணம் எதுவோ அதிலேயே இருக்கச் செய்ய வேண்டும்.


3 ) நமது விருப்பங்களை இடைவிடாமல் ஏற்றத் தாழ்வு இல்லாமல் சமநிலையில் வைராக்கியத்துடன் எண்ணி அதிலேயே ஊன்றி கவனத்தைச் செலுத்தி வரவேண்டும்.


4 ) நாம் விரும்பும் காரியம் முடியும்வரை அதிலேயே மனதை வைத்து செயல்பட வேண்டும். வேறு சிந்தனை கூடாது. எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் இருந்து நினைத்ததை சாதிக்க வேண்டும்.


நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு எண்ணத்தை மனதில் நிறுத்தி தொடர்ந்து அமைதியாவும், அழுத்தமாகவும் அந்த எண்ணத்தை பற்றியே மனதில் தியானத்துக் கொண்டு இருப்பதே மனதை ஒரு நிலைப்படுத்தும் நிலையாகும்.


இந்த மனதை ஒரு நிலைப்படுத்தும் விதத்தைப் பயிற்சிகளினால் தான் பழக்கத்துக்குக் கொண்டுவர முடியும். மனதை ஒரு நிலைப்படுத்தி நிற்பது கடினம். காரணம் மனதில் ஆயிரக்கணக் கான எண்ணங்களை வைத்துக்கொண்டு நம் சிந்தனையை பல வழிகளிலும் சிதரவிட்டுக் கொண்டு பலவற்றையும் எண்ணிக்கொண்டே இருப்பதுதான்.


நமக்கு எது வேண்டுமோ அந்த எண்ணத்தையே அடிக்கடி மனதில் எண்ணி அதே எண்ணத்தில் விடாப்பிடியாக இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியும்.

யார் முட்டாள்..?



அமெரிக்க பாடசாலை ஒன்றில் எட்டரைவயது சிறுவனை "இவன் அடிமுட்டாள். பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் கெடுத்து விடுவான். இனி இவனுக்கு பாடசாலையில் அனுமதி இல்லை." என்று ஒர் கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டது. தாயார் கவலை கொண்டாலும் தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாய்யின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்.., பின்னாளில் ஆராட்சிகளில் ஈடுபட்டார்.

இன்றும் அக்டோபர் 21ம் திகதி மாலை 9:59க்கு வீதி பயணவிளக்குகளை தவிர மிகுதி மின்சார விளக்குகள் அனைத்தையும்அணைத்து ஓருநிமிடம்அமெரிக்காவை இருளாக்கி விட்டு மீண்டும் ஒளிரவிட்டு தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., "எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படிதான் இருளாக இருந்து இருக்கும்..!"

மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாலில் விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் அல்வா எடிசன் ஆவார். இப்போ சொல்லுங்கள்..! அந்த ஆசிரியர் கூறியது போல் எடிசன் முட்டாளா..?ஆகவே யாரும் இங்கு முட்டாள் இல்லை.. நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயபடுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொர் வைரம் இருக்கிறது. அதை பட்டை தீட்டுங்கள்.

தோல்விக்கு நன்றி சொல்!



ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு இலக்கை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறான். இவை குறுகிய கால இலக்காகவோ அல்லது நீண்ட கால இலக்காகவோ இருக்கலாம். இருந்தபோதிலும், அவற்றிற்கேற்ப அவன் சில இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனினும் அவற்றில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று உயர்ந்து நிற்க முடிகிறது. பலர் வெற்றிப்பாதையில் வரும் தடைகளை எண்ணி மனம் துவண்டு தனது குறிக்கோள்களைக் குறுக்கிக் கொள்வது அவர்களின் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது. எவ்வித தடை வருமாயினும் சிலர் குறிக்கோள்களை விடா முயற்சியுடன் அடைய முனைவதே தன்னம்பிக்கையாகும்.


வெற்றியாளர்களில் இருவகை, ஒன்று வெற்றிக்கான அடிப்படை வசதிகள், அனைத்தும் கொடுக்கப்பட்டவர்கள், மற்றொன்று வெற்றிக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கி அதில் வெற்றி காண்பவர்கள். இவற்றில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களே மேலோங்கி நிற்பவர்கள். ஏனென்றால், இவர்களுக்கு எந்த வசதியும் எந்த ஒரு நபரின் உதவியுமின்றி, தனது தன்னம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்துச் செயல்படுவார்கள்.


இதற்கு ஒரு உளவியல் காரணமும் உண்டு. பல சாதனையாளர்கள் தங்கள் கடந்த வாழ்வில் ஒரு வேளை உணவிற்குக் கூட எதுவுமில்லாமல் கஷ்டப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். உளவியல் ரீதியாகச் சொல்லப்போனால், தேவை என்ற ஒன்று உருவாகும் போது ஏதாவது ஒரு இலக்கை அடைய வேண்டுமென்ற உந்துதல் பிறக்கும், அந்த இலக்கை அடையும் வரை அந்த உந்துதல் நீடிக்கும். இலக்கை அடைந்துவிட்டால் உந்துதலின் வேகம் குறைந்து கடைசியில் நின்று விடும்.


 இது நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் முதல் வானளாவிய சாதனைகள் வரை இந்த அடிப்படையிலேயே நமது மனம் செயல்பட்டு வருகிறது. தேவை என்ற ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் தோன்றக்கூடிய ஒன்று, பிறந்தது முதல் சாகும் வரை ஏதாவது ஒரு தேவை நம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது. இதனையே Motivational Process என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.


எனவே, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். நிறைவேறும் வரை போராடிக் கொண்டிருக்கிறான். இந்த இலட்சியப் போராட்டத்தில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். பலர், இடர்வரும் தடைகளால் மனம் துவண்டு குறிக்கோளை விட்டுவிடுகிறார்கள். தன்னம்பிக்கை இழந்து, மனச்சோர்வடைந்து “எனது விதி”, “என்னால் இயலாது”, “சூழ்நிலைக்காரணம்” என்றெல்லாம் புலம்பும் குணத்தைக் காணலாம்.


இவை அனைத்திற்கும் காரணம், இலட்யத்தை அடைவதற்கான குணாதிசயங் களை வளர்த்துக் கொள்ளாமையே. அவரவருக் கேற்ப துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் தன்னுடைய முழு ஈடுபாட்டையும், உடல் உழைப்பையும், தன்னம்பிக்கையோடு உட்படுத்தினால் வெற்றி நிச்சயம்.


இவை எல்லாவற்றிற்கும் மேலாக தோல்வியைக் கண்டு துவண்டு போகாத குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு இலட்சியப் பயணத்திலும், தோல்வி யென்பது இல்லாமல் வெற்றி பெற இயலாது. இடைவரும் தடைகளால் தோல்வியும், சரிவும் வரும்போது அவற்றைக் கண்டு மனம் தளரா மலும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம். வெற்றியாளர்களைப் பட்டியலிட்டால், தோல்வியே அவர்களை உந்திய மாபெரும் சக்தியாக இருந்திருக்கும். அவர்கள், தோல்வியையும், சரிவுகளையும், வெற்றிப்படிகளாகவும், சிறந்த அனுபவங் களாகவே அனுசரித்திருக்கிறார்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top