.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 6 January 2014

பிரசவத்தின் பின்னும் இளமையாக இருக்கனுமா..?



சத்தான உணவுகள் உட்கொள்வதன் மூலமும், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினாலும் உடல் குண்டாவது இயல்பு. முகம் மட்டுமல்லாது, வயிறு, இடுப்பு, உள்ளிட்ட பல இடங்களில் உடல் அமைப்பே மாறிவிடும். பிரசவத்திற்குப் பின்னர் ஒரு சிலருக்குத்தான் உடம்பு இயல்பு நிலைக்கு திரும்பும். பெரும்பாலோனோர் குண்டம்மாக்களாகவே காட்சித்தருவார்கள். இதனால் பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. எனவே புது அம்மாக்கள் தங்களின் பழைய உடம்பைப் பெற செய்யவேண்டிய ஏழு வழிமுறைகளை கூறியுள்ளனர் மகப்பேறு நிபுணர்கள் படியுங்களேன்.

தாய்பால் கண்டிப்பாக கொடுக்கணும்


பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். சிலர் கட்டுடல் குலைந்து விடும் என்று தாய்ப்பாலை சில மாதங்களில் நிறுத்திவிடுவார்கள். இதுதான் உடல் இளைக்காமல் போவதற்கு காரணமாகிறது. எனவே பெண்கள் கண்டிப்பாக ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதனால் உடல் கண்டிப்பாக இளைக்கும்.

ஜும்பா டான்ஸ் ஆடுங்க


நடனமாடுவது ஒருவகை உடற்பயிற்சிதான். லத்தின் நடனமான ஜும்பா நடனத்தை ஒருமணி நேரம் ஆடுவதன் மூலம் உடலில் 500 கலோரிகள் வரை குறைகிறதாம். இதனால் உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

சாப்பாடு சரியா இருக்கணும்


கர்ப்பகாலத்தில் எந்த அளவிற்கு உணவில் கவனம் செலுத்தினோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். ஃபாஸ்ட் புட், எண்ணெயில்பொறித்த உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். காய்கறிகள், மீன் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

குட்டீஸ் உடன் வாக்கிங்

வீட்டுக்கு அருகாமையில் பார்க் அல்லது பீச் இருந்தால் குழந்தையை அழைத்துக் கொண்டு வாக்கிங் போகலாம். அந்த வசதி இல்லாதவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நன்றாக ரவுண்ட் அடிக்கலாம். இதனால் உடல் மெலியும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீச்சல் அடிங்களேன்

கிராமங்களில் இருப்பவர்களுக்கு ஆறு, குளம் என நன்றாக நீந்திக்குளிக்க இடம் இருக்கும். ஆனால் நகரங்களில் இருப்பவர்களுக்கு அந்த வசதி குறைவுதான். எனவே கண்டிப்பாக நீச்சல் குளத்திற்குச் சென்று நன்றாக நீந்தி பயிற்சி செய்யுங்கள். இது உடல் அமைப்பை பழைய நிலைக்கு மாற்றும்.

தூக்கம் அவசியமானது…

பிறந்த குழந்தையை வைத்திருப்பவர்கள் சில மாதங்கள் வரை தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் 6 மாதங்களுக்குப் பின்னர் தாய்மார்கள் கண்டிப்பாக நன்றாக தூங்கவேண்டியது அவசியம். இதனால் செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு தேவையற்ற இடங்களில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்புகள் கரையும். உடலும் பழைய நிலைக்குத் திரும்பும்.

ரிலாக்ஸ்சா இருங்களேன்

பிரசவத்திற்குப் பின்னர் பெண்களுக்கு ஒருவித மனஅழுத்தம் ஏற்படுவது இயல்புதான். உடல் இளைக்காமல் போவதற்கு இந்த மனஅழுத்தமும் ஒருவகையில் காரணமாகிவிடும். எனவே தியானம், மெடிடேசன் செய்து மனஅழுத்தத்தை போக்குங்கள். ரிலாக்ஸ் ஆக இருந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பும் என்கின்றனர் நிபுணர்கள்

இதோ வருகிறது கோச்சடையான் கீதம்...

இதோ வருகிறது கோச்சடையான் கீதம்...


கோச்சடையான் படத்தின் இசை பிப்ரவரி 15ம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கோச்சடையான்' திரைப்படத்தின் ஓடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.

குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் டிசம்பர் 12 ம் திகதி வெளியாகவிருந்த ஓடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கோச்சடையான் படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம், பிப்ரவரி 15ம் திகதி இசை வெளியிடப்படும் என்று தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறது.

தற்போது பிப்ரவரியில் இசை வெளியீடு முடிந்து, படத்தை ஏப்ரலில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

நாட்டில் முதன்முறையாக 3டி அனிமேசன் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை கே. எஸ். ரவிக்குமார் ஏற்றுள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

வெற்றிக்கான சுருக்கு வழி.





வெற்றிக்கான சுருக்கு வழி.



1.என்னுடைய உறுப்புகள் விலங்குகளின் வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன,மாறாக என்னுடைய எண்ணங்கள் கடவுளின்  படைப்பாற்றல்  வழியாக  .என்னுடைய உறுப்புகளின் வழியாக விலங்குகளின்  குணங்களும் என்னுடைய சிந்தனைகள்  வழியாகக் கடவுளின் படைப்பாற்றலும்.இவை இரண்டின் செயல்களும்  இயற்கையாகவே கடவுளின்  படைப்பாற்றல் வழியில்.உறுப்புக்களின் செயலில்  கடவுளின்  எண்ணத்தைச் செயல் படுத்தும் போது அது கடவுளின் படைப்பாற்றலாகவும் உறுப்புக்களைத் தன்னிச்சையாக விடும் போது  அவை விலங்குப் பண்பையும்  வெளிக்  காட்டுகின்றது.

2.நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு .நாம்  ஒவ்வொருவரும்  வரலாற்றை உருவாக்கும்  நபர்களாக இருப்போம்.நம்முடைய  வாழ்க்கை  ஒரு முடிந்து போன வரலாறாக இல்லாமல்.உலகத்தில் உள்ள எல்லா நற்பண்பாளர்களையும்தனியாக ஒரு தீவில் வைத்து  அங்கு கூட்டம் ஒன்றை நடத்துவோம்,அவர்கள் அங்கு ஒரு குறிப்பிட்ட நாட்கள் தங்கும்படியாகச்  செய்வோம்.அவர்கள் உலக மக்களிடையே உண்மை நிலவ வேண்டும் என்றும் நம்பிக்கை ,அன்பு ,எண்ணத் தூய்மை ஆகியவை நிலவ வேண்டும் என்று பாடுபட்டவர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்கள் .ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் 100 பேரில் 5 பேருக்கு மட்டுமே தேவையான உணவு மட்டும் கிடைக்கும் படிச் செய்வோம் .

3.அவர்களிடையே ஒரு பெரிய உணவுப் போராட்டத்தை தோற்றுவிப்போம் என்ன நிகழும் அவர்கள் போதித்த கொள்கைகள் அணைத்தையும் அவர்களே மீறும் படியாக ஆகிவிடும்.அப்படி என்றால் எல்லா நல்லவைகளும் போதனைகளும் ஒழுக்கங்களும் எந்த ஒரு தனி  மனிதனுக்கும்பிறப்பின் வழியாகவோ சிந்தனையின் வழியாகவோ  சொந்தமல்ல.யாரும் இயற்கையாக இப்படிப்பட்ட குணங்களோடு இருப்பதில்லை.அவர்கள்  இது நாள் வரை வெளிப்படுத்தியவைகள் எல்லாம்   அவர்களைச் சுற்றியிருந்த சூழ்நிலைகளில்  இருந்து அவர்களுக்குத் தேவையானதை  கிரகித்து  வெளிப்படுத்தியது  தான்.ஆகவே  நாம்  நமக்கு எப்போதெல்லாம்  எதுவெல்லாம்  வேண்டுமோ அப்போதெல்லாம் நமது  தேவைகள்  கொட்டிக்கிடக்கும் சூழ்நிலைகளின் ஊடே செல்வோம் அல்லது அப்படிப்பட்ட சூழ்நிலைகளைப் படைப்போம்  அவற்றைக் கிரகிப்போம் .

4.சூழ்நிலைகளில் நல்லதும் கெட்டதும் இணைந்தும் பிணைந்தும்   நமது  கிரகிப்பிற்காக
அண்டம் முழுவதும்  கொட்டிக்  கிடக்கின்றது.அதனை  எப்படி கிரகிப்பது  என்பது நமது இயற்கை பற்றிய புரிதல்களைப்  பொறுத்தது .உலகின் அந்த நற்பண்பாளர்கள் அந்தத் தீவிற்கு  வருவதற்கு  முன்பாக தாங்கள் கிரகித்து  இருந்த நற்பண்பாளர்கள் என்னும்   சூழ்நிலையைப் போலவும், பின்பு  உணவுக்காகப் போராடும் போது அவர்களால்  கிரகிக்கப்பட  நற்பண்புகள் என்னும் சூழல் அறவே இல்லாதது போலவும்.ஆகையால் சூழ்நிலைகளைப் பார்ப்போம் நாம் கிரகிக்க என்ன இருக்கின்றது என்று நமது அடையாளத்திற்காக.

5.நமது அன்றாட வாழ்க்கையில் மின்சாரத்தால் இயங்கும் மின்விசிறி  ,மின் மோட்டார் ஆகியவற்றைப் பயன் படுத்துகின்றோம் அதில் மின்சாரத்தைச் செலுத்தினால் மின் சக்தி இயங்கு சக்தியாக மாற்றப்படும் அதே போல் மேலே சொன்ன மின் மோட்டாரை நாம் வேறு ஏதாவது ஒரு சக்தியைக் கொண்டு இயக்கினால் அங்கு  இயங்கு சக்தி மின்சக்தியாக மாற்றப்படும் .இது போலத்தான் நமது வாழ்க்கைச் சூழ்நிலைகளும் ரிவர்சு பொசிசனில், எதிர் இயங்கு நிலையில் வைத்துப் பார்க்க வேன்டும்.

6.மனிதன் தனக்கு வேண்டிய வெற்றிகளைக் கிரகிக்க அந்த வெற்றி அடங்கிய சூழ்நிலைகள் வேண்டும்.அல்லது தனது அதே கிரகித்தலை எதிர் நிலையில் வைத்து  வெற்றிக்கான  சூழ்நிலைகளை தனது  மனதில் உருவாக்கி  அதனை  புற உலகிற்கு அனுப்பி   வெற்றியை அடைவதற்கான சூழ்நிலைகளைப் படைக்கலாம்.இந்த  வெளித்தள்ளல் என்னும் சக்தி மூலமாக சூழ்நிலைகளை  வெளித்தள்ளும்  போது  அதன் வெற்றிக்காக எல்லாப்  பொருட்களும் ,மனிதர்களும்  மாறுவார்கள் .

7.வெற்றிகளுக்கான சுருக்க வழி  எதுவும் இல்லை என்றே நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம்.ஒரு மனிதனின் வெற்றியைத் தொடரும் இன்னொரு மனிதனின் பயணம் தொடர்பவனைப் பொறுத்து ஒரு சுருக்கு வழி தான்.ஏற்கனவே பயணம் செய்தவனின் அலைச்சல்களைப் பின் வருபவன் தொடரத் தேவையில்லை.அதே போல் மனித இனத்தைப் பற்றிய மனிதனின் புரிதல்கள் அவன் பெற இருக்கும் வெற்றிக்கான களங்களையும் ,வழிகளின் நீளத்தையும் சுருங்க வைக்கத்  தான் செய்யும்.மனிதனின் வெற்றிகள்  எதுவும் மனிதன் தொடர்புடையவைகளில் மட்டுமே.

8.படைத்தலும் பயன்படுத்தலும் நம்மிடம் தான் வெற்றியும் வெற்றிக்கான சூழ்நிலைகளும் நாம் தான் என்று  அதனைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்துக் கையாளும் போது எதுவும் எளிதாகின்றது.வெற்றிக்கான சுருக்க வழி ஆகின்றது.இந்த பதிவின் மூலமான புரிதல்களை உணர சுருக்க வழி இதனைப் படித்துப் புரிந்து கொள்வது மட்டுமே.சுருக்க வழிக்குக்கூட ஏதாவது சுருக்க வழிகள் இருக்க வாய்ப்பில்லாமல் இல்லை.

ஜனவரி 6: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு

 ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு


ஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்.

அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.

எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம். கணினி பொறியியல் படிக்க வேண்டும் என்பது இளமைக்கால ஆசை. பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால்… லண்டன் இசைக்கல்லூரியான டிரினிட்டி கல்லூரியின் ஸ்காலர்ஷிப் பெற்றார்.

ஆரம்ப காலங்களில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத காலங்களில் கார் ஒட்டவும் கற்றுக்கொண்டார். ஒருவேலை இசை கைகொடுக்காவிட்டால் டிரைவர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் தான் காரணம்.

“பன்னிரெண்டு வயதில் முதுமையடைந்து விட்டேன் நான் ; இப்பொழுது தான் இளைஞனாகிக் கொண்டிருக்கிறேன் !” என்று பொறுப்புகள் அழுத்திய இளமைக்காலத்தை பற்றி குறிப்பிட்டார்


ஒரு லட்சம் பேர் கொல்கத்தாவில் இவரின் இசை நிகழ்வை காணக்கூடினார்கள். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை.

இளம் வயதில் ‘சினிமா பாரடைஸோ’ படத்தைப் பார்த்து, அந்தப் படத்தின் இசையைப் போல ஒரே ஒரு படத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பி.எம்.டபிள்யு கார்களில் விருப்பம் உண்டு. இசையமைப்பதை தாண்டி வீடியோ கேம்ஸ்களில் ஆர்வம் அதிகம்.

தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். அப்போதுதான், இயக்குனர் மணிரத்னம் மூலம் ‘ரோஜா’ பட வாய்ப்பு வந்தது. அதற்காகக் கிடைத்த சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அந்த பணத்தை சில மணிநேரங்களில் விளம்பரங்களில் ரஹ்மானால் சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.

சின்ன சின்ன ஆசை பாடலை இசையமைத்து அன்னையிடம் போட்டு காண்பித்தார். அவர் கண்ணீர் விட்டு அழுதார் ,”பிடிக்கலையா அம்மா ?” என்று கேட்டார் ரஹ்மான். பிடிக்கலையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !”என்று சொன்னார் அவரின் அம்மா“காதல் ரோஜாவே பாட்டை அதிகாலை மூன்று மணிக்கு கேட்டுவிட்டு சவுண்ட் இன்ஜினியர் கண்ணீர் விட்டு அழுதது மறக்கவே முடியாத அனுபவம் ” என்றும் பதிவு செய்திருக்கிறார்.



ரோஜா’ படத்துக்கு இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை மத்திய அரசு வழங்கியது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றாண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வைகளில் ஒன்றாக ‘ரோஜா’வை அறிவித்தது. ‘மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.

‘பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்திற்கும் இல்லை.

1997-ல் இந்தியாவின் விடுதலைப் பொன் விழாவுக்காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம், ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. அப்படி உருவானதுதான் ‘வந்தே மாதரம்’ இசை ஆல்பம்.

ரஹ்மானுக்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது.எவ்வளவோ முன்னேறினாலும் தான் முதலில் உபயோகித்த கீபோர்டை இன்னமும் வைத்து இருக்கிறார் .இன்னமும் தன் பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கிற பழக்கம் உண்டு.

இளம் வயதில் வறுமையில் வாடிய நினைவுகளின் அடையாளமாக இன்னமும் தானாக நகைகளை அணிய மாட்டார்

ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு முன் எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபொழுது “எனக்கொரு அன்னை இருக்கின்றாள்” என்றார்.அதாவது நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்

‘அடுத்து ஆஸ்கர்தான்’ என 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் சுபாஷ் காய் சொன்னார். பிறகு, உலக அளவில் பம்பாய் ட்ரீம்ஸ் எனும் இசை நிகழ்ச்சி, மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து, ‘மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’, சீன மற்றும் பிரிட்டிஷ் படங்களுக்கு இசை எனப் பல வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்றினார். அப்படி வந்ததுதான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. ஒரே ஒரு மின் அஞ்சலில் ரஹ்மானை புக் செய்தார், இயக்குனர் டோனி பாயல். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர்கள் குவிய, ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனப் பணிவோடு ஆஸ்கர் மேடையில் அன்னைத் தமிழில் பேசினார்.

அமைதி மற்றும் தனிமை விரும்பி. அமைதி ஆழ்மனதின் குரலை இன்னும் தெளிவாக கேட்க வைக்கிறது ; எரிச்சல்படுத்தும் சத்தம் உண்டு செய்யும் பலர் இருக்கும் உலகில் அமைதி தான் ஒரே இன்பம் என்பது ரஹ்மானின் எண்ணம்
‘வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்து எடுத்தேன்’ என்பார். எல்லோரையும் அன்பு செய்யுங்கள் எனும் சூஃபி தத்துவத்தில் ஈடுபாடுகொண்டவர். உலக அமைதிக்காக ‘வி ஆர் தி வேர்ல்டு’ எனும் இசைப் பாடலை மைக்கேல் ஜாக்சன் இசை அமைக்கச் சொன்னார். அந்தப் பாடலைக் கேட்பதற்குள், அவர் மரணமடைந்தது சோகமான நிகழ்வு.

ரஹ்மான் நன்றாக மிமிக்ரி செய்வார், வைரமுத்து போல மிமிக்ரி செய்வதில் விருப்பம் அதிகம். பெரும்பாலும் இரவு நேரங்களில் இசை அமைப்பார். வீட்டில் பிள்ளைகள் தூங்கும் வரை அவர்களோடு இருந்துவிட்டு, பிறகு இசை அமைக்கப்போகிற ஸ்வீட் அப்பா. குழந்தைகள் மீது பெரிய அன்பு. ஒரு சுவாரசியமான செய்தி. இவருக்கும் மகன் அமீனுக்கும் ஒரே தேதியில்தான்
பிறந்த நாள்.

ரஹ்மான் லதா மங்கேஷ்கரின் பெரிய விசிறி. “லதாஜி என்னுடைய இசையமைப்பில் பாடினால் கேட்டுக்கொண்டே இருப்பேன் அது என்னுடைய இசை என்பதற்காக இல்லை ! அவர் பாடியிருக்கிறார் என்பதால் அதில் மூழ்கிப்போவேன்” என்று சொன்னார் இசையை… ஏழை மற்றும் திறமைசாலி மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ”இந்தப் பள்ளியில்தான் என் கனவுகள் உள்ளன. இங்கே இருந்து சிறந்த பல இளைஞர்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை” என்பார்.

வெற்றியை தலைக்கு போகவிடமாட்டார். கொஞ்சம் புகழுடைய சாதாரண ,மனிதன் நான் என்பார். ஈகோ என்பதை ‘edging god out !’ என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.வெற்றி மட்டுமே படைப்புத்திறனுக்கு காரணமில்லை. இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை செலுத்துகிறது. இறைவனின் எல்லையற்ற கருணையும் நான் இயங்க முக்கிய காரணம் !” என்பது ரஹ்மானின் வாக்குமூலம்...

Sunday, 5 January 2014

''இந்தியாவின் பெருமை’' ஜாதவ் பயேங் !



உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது…எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்…!!
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை ‘முலாய்’ என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன.

மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்…ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் ‘சமூககாடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை…!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி – எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்…ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து ‘சிவப்பு எறும்பு’களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார்.

இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்…வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்…இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். “இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் ” என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன…!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த ‘முலாய் காடுகள்’ !!

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது…இரு ஆண்டுகளுக்கு முன் மிக ‘பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்’ இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். ‘ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்’ என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்…ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை…

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்…சிறிது முயன்றுதான் பாருங்களேன்…!!

இயற்கையை நேசிப்போம்…!! எங்கும் பசுமை செழிக்கட்டும்…!!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top