.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 5 January 2014

23 முறை கேட்ட கேள்வி - (சிறுகதை)




23 முறை கேட்ட கேள்வி:-

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

ஆக்ஸிஜன் பயன்பாடு…



ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு மனிதன் சில நிமிடங்கள்
மட்டுமே உயிர் வாழ முடியும். காரணம், ஆக்ஸிஜன்
இல்லாமல் மனித மூளையால் செயல்பட முடியாது.

 நாம் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் ஆக்ஸிஜனில்,
சுமார் 20 சதவீதம் ஆக்ஸிஜனை நமது மூளையே
பயன்படுத்துகிறது.

 சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்ஸிஜன்
கிடைக்காமல் போனாலும், மனிதன் உணர்வற்ற
நிலைக்குத் தள்ளப் படுவான். அடுத்த சில நொடிகளில்
மூளையின் செல்கள் இறந்து, மனிதன் மரண நிலைக்குத்
தள்ளப்படுகிறான்.

 இருப்பினும் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மனித
மூளைக்கு மிகக் குறைந்த ஆக்ஸிஜன் போதுமானது.
காரணம், மிகக் குறைந்த வெப்பநிலையில்
மூளையானது மிகக் குறைந்த ஆக்ஸிஜனையே
உபயோகிக்கிறது.

 எனவே, நீண்ட நேரம் நடைபெறும் அறுவை சிகிச்சைகள்
மிகக் குறைந்த வெப்பநிலையில் செய்யப்படுகிறது.
காரணம், மிகக் குறைந்த ஆக்ஸிஜன் பயன்பாட்டில்
அறுவை சிகிச்சையைச் செய்து முடித்துவிட இயலும்.

 மனித மூளையைத் தவிர மற்ற உறுப்புகள் ஆக்ஸிஜன்
இல்லாமலும் சில மணி நேரம் செயல்படுகின்றன.
எனவேதான், இறந்த மனிதனது மூளையைத் தவிர,
மற்ற சில உறுப்புகள் உறுப்பு மாற்று சிகிச்சைக்குப்
பயன்படுத்தப்படுகின்றன.

ஹலால்(Halal) என்றால் என்ன ??




பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) - நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!


சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கபடுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதி படி அறுபது என்பது பொருள்


ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்:-


A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.


கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.


B. மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.


C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.


இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?



அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.


D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே !

கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.


E. . ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்
.


ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.


F. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.


இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.


இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறையில் அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினங்களை விட ஹலால் கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலியை உணர்வதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது

உகந்த நேரத்தில் உணவின் அவசியம்...

 உகந்த நேரத்தில் உணவின் அவசியம்:-

உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பதை அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


காலை

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்


மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.
காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு


இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!



சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும்.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும் போதாது, அவற்றை எந்த வித பூச்சிகளும் பாழ்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்வது? பெருமளவில் பணம் செலவு செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது அவை பூச்சிகளுக்கு மட்டுமின்றி நமக்கும் அதே அளவு கேடு விளைவிப்பதாக இருக்கின்றன. அப்படி என்றால் நாம் எப்படி இயற்கை முறையில் இத்தகைய பூச்சுகளை தவிர்க்க முடியும் என்று காண்போம்.


சோள மாவு

சோளத்திலிருந்து செய்யப்பட்ட இவை அதிக அளவு உணவு தயாரிப்பில் பயன்படுகின்றது. கிரேவி வகைகள், பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை தயாரிக்க மற்றும் பலவற்றில் இவை பயன்படுகின்றது. ஆனால் இவை எறும்புகளை கொள்ளுவதற்கும் உதவும் என்றும் பலருக்கு தெரியாது. இந்த மாவிற்கு ஒரு இனிப்பு தன்மை உண்டு. சோள மாவு விஷம் கிடையாது. ஆனால் அவைகள் செரிக்க சிறிது காலமாகும். எறும்புகள் இவற்றை உண்டால் அவைகளால் இந்த உணவை செரிக்க முடியாமல் போய்விடும். ஆகையால் சோள மாவு சாப்பிட்ட எறும்பு இறந்து விடும். எறும்பு தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடன் இருக்கும் சக எறும்புகளுக்கும் இதை கொடுப்பதால் அவையும் உண்டு இறந்துவிடும், சமையல் அறையில் மற்றும் எறும்பு இருக்கும் பகுதியில் இந்த மாவை சிறிதளவு தெளித்து வைத்தால் போதும். உங்கள் நோக்கம் நிறைவேறும்.
   
   
பூண்டு


பூண்டின் வாசனையும் அதை உண்டால் நமக்கு கிடைக்கும் சுகாதார பலன்களும் வியப்பூட்டுபவை. இவை எறும்புகளையும் கரப்பான்களையும் இந்த அறைக்குள் வரவிடாமல் தடுக்கும் என்ற விஷயம் நமக்கு தெரியாது. புதிதாக வாங்கிய பூண்டு பற்களை சமையல் அறையை சுற்றிலும் வைத்தால் போதும். இந்த வாசனை தாங்காமல் அவை தங்களுடைய உயிரை காக்க ஓடி விடும். பூண்டு பற்கள் கொஞ்சம் காயும் நிலையில் இருந்தால் வேறு புதிய பற்கள் மாற்றுவது நல்லது. இவை பூச்சிகளை மிரண்டு ஓட வைக்கும். பூண்டை அறைத்து அதில் தண்ணீர், தாது எண்ணைய் மற்றும் சோப் ஆகிய கலவையை தெளிக்கவும் செய்யலாம். இந்த வகை பாதுகாப்பு முறை மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த பூண்டு ஸ்பிரே உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவும், சமையலறை தோட்டத்தின் செடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.


லகிரி தைலம்


யூகலிப்டஸ் மரத்திலிருந்த எடுக்கப்படும் எண்ணையானது மிகுந்த நறுமணம் கொண்ட வாசனை பொருளாகும். இவை பூச்சிகளை கட்டுபடுத்துவதில் சிறந்த பலனளிக்கின்றன. இந்த எண்ணையை சிறிது தண்ணீரில் கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அதை அடுப்பறைக்குள் வரும் கரப்பான்கள், சிலந்திகள் மற்றும் சிறிய பூச்சிகள் மீது தெளித்தால் அவை உடனே இறந்து விடும்.


போரிக் அமிலம்

பூச்சிகளை கொல்லும் மற்றொரு வழி போரிக் அமிலமாகும். இதை மாவுடன் சேர்த்து உள்ளே வரும் பூச்சிகள் மேல் தெளித்தால் உடனடியாக அவை இறந்து விடும். இந்த அமிலத்தை அருகில் உள்ள மருந்து கடைகளில் வாங்க முடியும். இது இல்லை என்றால் போரக்ஸ் டிடர்ஜென்ட்டை பயன்படுத்தலாம். இதை நாம் சர்கரை மற்றும் தண்ணீரில் கூட கலந்து பயன்படுத்துவது மிகுந்த பலனளிக்கும். இவை பொதுவாக மக்கள் பயன்படுத்தும் மருந்தாக அமைகின்றது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top