.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 4 January 2014

ஸ்டார்களைத் துரத்தும் ஹீரோக்கள்..!




புத்தகமே வாசிக்க தெரியாத காலத்திலிருந்து, முகப்புத்தகத்தில் கைகலப்பு நடத்தி சட்டையை கிழித்துக் கொள்ளும் இந்த காலம் வரைக்கும் ரசிகர்களின் உலகம் சினிமாதான்! தமிழகத்தை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் பின்னி பிணைந்திருந்தாலும், சினிமாவிற்குள் காலகாலமாக ஒரு அரசியல் யுத்தம் நடக்கிறது. அது ஆணானப்பட்ட பாகவதர் காலத்திலிருந்தே துவங்கி, ‘அழகுராஜா’ கார்த்தி காலம் வரைக்கும் தொடர்வதுதான் ஒரு ஆக்‌ஷன் படத்தைவிடவும் விறுவிறுப்பான சமாச்சாரம்.
நாடகத்தில் கிட்டப்பாவின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு தியாகராஜ பாகவதர் வருகிறார். சினிமாவில் பாகவதரின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு சின்னப்பா வருகிறார். இவர்களை காலி பண்ண ஒரு சிவாஜியும் எம்.ஜி.ஆரும் வருகிறார்கள் என்று எப்போதும் ஒருவித ‘கரண்ட்’ பாய்ச்சலிலேயே இருந்திருக்கிறது நமது சினிமாவுலகமும் அதற்கு முந்தைய நாடக உலகமும்.

அதன் நீட்சியாக கமல், ரஜினி, அஜீத், விஜய் என்று பரபரப்பாகி இதோ- விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரைக்கும் ஒரு மவுன யுத்தம் நடந்து கொண்டேயிருக்கிறது கோடம்பாக்கத்தில். (நடுவில் வந்த விஜயகாந்த், மோகன், கார்த்திக், ராமராஜன் போன்றவர்கள் யாராலும் ரஜினி- கமல் இடத்தை பிடிக்கவே முடியவில்லை. அஜீத்-விஜய்யை தவிர. இந்த அஜீத் விஜய்யின் இடத்தை பிடிக்கத்தான் இப்போதிருக்கும் நடிகர்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். சரி, அதுபற்றி பின்னால் பார்ப்போம்) பாகவதரின் ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளிகளை கடந்து ஓடியதாக கூறுகிறது சினிமா வரலாறு. அவரைத் தங்கத்தட்டில் சாப்பிட வைக்கிற அளவுக்கு பாகவதர் காலத்தை பொற்காலமாக்கினார்கள் ரசிகர்கள். ஒருமுறை நேரு தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் போகிற இடங்களில் எல்லாம் நேருவை வரவேற்க திரண்டிருந்தது கூட்டம். பாகவதர் வீட்டை கடக்கும்போது மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குழுமியிருக்க, இங்கு மட்டும் ஏன் இத்தனை கூட்டம் என்றாராம் நேரு. அது உங்களை பார்க்க வந்த கூட்டமல்ல, பாகவதரை பார்க்க வந்த கூட்டம் என்றார்களாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அப்படியென்றால் அவரை காங்கிரசில் சேரச் சொல்லுங்களேன் என்று நேரு கொக்கி போட, காமராஜரே பாகவதரிடம் சென்று காங்கிரசில் சேர அழைத்ததாக கூறுகிறார்கள்.

ரஜினி கமலுக்கு இருந்த அதே ஜாக்கிரதை உணர்வு அப்போதே இருந்திருக்கிறது பாகவதருக்கு. அந்த அழைப்பை அவர் நாசுக்காக மறுத்தும் இருக்கிறார். இவருக்கு போட்டியாக பிற்பாடு வந்த பி.யூ.
சின்னப்பாவையும் காங்கிரஸ் விடவில்லை. கட்சியில சேருங்களேன் என்று அன்பு அழைப்பு விடுக்க, அந்த விஷயத்தில் பாகவதரையே பின்பற்றினாராம் அவரும். பாகவதருக்கும் கிட்டப்பாவுக்குமான போட்டியை இப்போது படித்தாலும் ஒரு துப்பறியும் நாவலை போல விறுவிறுப்பாக இருக்கிறது. பாகவதரின் பவளக்கொடி நாடகம் கொடி கட்டி பறந்த காலத்தில், அப்படியென்ன அந்த நாடகத்தில் இருக்கிறது என்று மாறுவேடத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் ரசித்தாராம் கிட்டப்பா. பாகவதருக்கு முன்பு தமிழ்சினிமாவை ஆண்டு அனுபவித்தவர் அல்லவா?

கிட்டப்பாவின் மனைவிதான் கே.பி.சுந்தராம்பாள். பாகவதர் மீது கிட்டப்பா எந்தளவுக்கு கோபம் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு சம்பவமே சாட்சி. அதே பவளக்கொடி நாடகத்தை கணவருக்கு தெரியாமல் பார்த்து ரசித்தார்  கே.பி.சுந்தராம்பாள். இதில் கோபமுற்ற கிட்டப்பா, மனைவி என்றும் பாராமல் அவரை  சுடுசொற்களால் ஏச, வருத்தத்தோடு கிட்டப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சுந்தராம்பாள். ‘என்னை நடத்தை கெட்டவள் என்று நீங்கள் ஏசியிருக்கிறீர்கள். உங்களுக்கு நரகம்தான் மிஞ்சும்’ என்று அவர் கிட்டத் தட்ட சாபமே கொடுத்திருக்கிறார் அந்த கடிதத்தில். (ஆதாரம்- கே.பி.சுந்தராம்பாள் கடிதங்கள்).

சிறுவயதிலேயே கிட்டப்பா இறந்தாலும், வாழ்நாள் முழுக்க வெள்ளைச் சேலை கட்டி இறந்து போனார் சுந்தராம்பாள். இத்தனைக்கும் இவர் கிட்டப்பாவின் தாலி கட்டாத மனைவி.
பாகவதரின் சிவப்பழகை ஒரு கருப்பழகு வந்து காலி பண்ணிய அதிசயமும் இங்கே நடந்தது. பாகவதர் சிவப்பு, நளினம் என்றால் அவரை காலி பண்ண வந்த பி.யூ.சின்னப்பா கருப்பு, முரடு! குட்டையாக இருந்தாலும், சற்றே தெனாவட்டானவரும் கூட! ‘இவன் ஆம்பிளைடா’ என்கிற பாடி லாங்குவேஜ் அவருக்கு. எந்நேரமும் பீடி வலிக்கும் பழக்கமும் இருந்ததாம். அஞ்சலிதேவி எழுதிய ‘எனது சினிமா காதலர்கள்’ புத்தகத்தில் இவரது பீடி நாற்றம் பற்றி வர்ணித்திருக்கிறார் அவர். அருகில் வந்தாலே அவர் மீது பீடி நாற்றம் அடிக்கும் என்று அஞ்சலிதேவியே குறிப்பிட்டிருந்தாலும், இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அளவில்லாதது.

பாகவதரின் ‘ஹரிதாஸ்’ மூன்று தீபாவளிகள் ஓடியது என்றால் இவரது உத்தமபுத்திரன் படமும் மூன்று தீபாவளிகளை பார்த்தது. அப்படத்தில் இவருக்கு டபுள் ரோல். இவரது படங்கள் வரிசையாக ஓட ஆரம்பித்தது. சொந்த ஊரான புதுக்கோட்டையில் இவர் சொத்துக் களாக வாங்கி குவித்தாராம். இனி புதுக்கோட்டையில் இவருக்கு நிலம் விற்கக் கூடாது என்று அரசே உத்தரவு போடுகிற அளவுக்கு வாங்கி குவித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதற்கப்புறம் எம்.ஜி.ஆர் வந்த காலம் வசன காலம்.

பார்ப்பதற்கு பாகவதர் போல அழகாக இருப்பதால் மட்டுமல்ல, தோற்றத்திலும் அவரைப்போலவே ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  சின்னப்பாவை போலவே அடிப்படையில் சண்டைப்பயிற்சிகள் அத்தனையும் எம்.ஜி.ஆருக்கு அத்துப்படி. பாகவதரை மறந்த ரசிகர்கள், சின்னப்பாவை போலவே வீரமான எம்.ஜி.ஆரை ரசிக்க ஆரம்பித்தார்கள். இவர் நடித்த மலைக்கள்ளன் படத்திற்கு முதன் முறையாக ஜனாதிபதி விருது கிடைத்தது. அந்த படத்தை ஐந்து மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். மலைக்கள்ளன், மதுரை வீரன் என்று மன்னர் கால படங்களில் எம்.ஜி.ஆரின் அழகும், அவரது வாள்வீச்சும், திரண்ட தோள்களும், தித்திக்கும் சிரிப்பும் ரசிகர்களை கொள்ளை கொண்டது. அப்போதுதான் அதுவரை அரச சபையை முன்னிறுத்தி வந்த படங்களில் இருந்து மாறுபட்டு வந்தது பராசக்தி. தமிழ்சினிமாவை புரட்டிப் போட்ட முதல் சமூகப்படம்.

ஒருமுறை சிவாஜி, இனி வாள் சண்டைக்கு வேலையிருக்காது. எம்ஜிஆர் என்ன செய்வாரோ என்று பேசியதாகவும் கூறுகிறார்கள் பழங்கால நிருபர்கள். எம்.ஜி.ஆர் சும்மாயிருப்பாரா? திருடாதே என்கிற முதல் சமூகப்படம் எம்.ஜி.ஆரையும் வாரி அணைத் துக் கொள்ள இருவரும் சமமாக டிராவல் செய்ய ஆரம்பித்தார்கள். பின்னர் காங்கிரசில் சேருகிறார் சிவாஜி. அதற்கப்புறம் இவர்களின் படங்களை கட்சி முத்திரையோடு பார்க்க தயாராகிறார்கள் ரசிகர்கள். எம்.ஜி.ஆரை தி.மு.க தொண்டர்களும், சிவாஜியை காங்சிரஸ் தொண்டர்களும் ஆராதனை செய்ய, அவர்கள் படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் இருவரது  கட்சிக் கொடிகளும் பட்டொளி வீசி பறக்க ஆரம்பிக்கின்றன.

நடுவில் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் இருவரும் சேர்ந்தே ஒரு படத்தில் நடிக்கிறார்கள். அதுதான் கூண்டுக்கிளி. இப்பவும் இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியாது. காரணம், இந்த படத்தை எங்கும் திரையிட வேண்டாம் என்று    சேர்ந்தே முடிவெடுத்தார்களாம் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். ஏன்? அதுதான் பயங்கரம். இந்த படம் மதுரையில் ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது. வெறிபிடித்த சிவாஜி ரசிகர் ஒருவரை எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் குத்தி கொலையே செய்துவிட்டார். அப்போது எடுத்த முடிவுதான் இது.  சிவாஜிக்கு பார்த்த பெண்ணை, அவர்தானென்று தெரியாமல் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொள்வார். அவள் நினைவிலேயே சுற்றி திரியும் சிவாஜி பல காலம் கழித்து எம்ஜிஆர் வீட்டுக்கு வரும்போது அவளை பார்த்துவிடுவார். அவள் எம்ஜிஆரின் மனைவி என்றே தெரியாமல் கையை பிடித்து இழுக்க, அது போதாதா ரசிகர்களுக்கு? படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அடிதடி. ஆனால் ஒன்று. எம்ஜிஆருக்கும்  சிவாஜிக்குமான தனிப்பட்ட செல்வாக்கை உலகத்திற்கு அறிவித்த படம் கூண்டுக்கிளிதான்.

இருவரது ரசிகர்களும் வெட்டு குத்து என்று வெறிபிடித்து திரிந்தாலும், எம்ஜிஆரும் சிவாஜியும் உற்ற நண்பர்களாக இருந்தார்கள். அதற்கு ஆயிரம் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். சிவாஜி நடித்த சாந்தி என்ற படத்தின் கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்த தணிக்கை குழு, அப்படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் தரவில்லையாம். இது குறித்து அப்போதைய முதல்வர் காமராஜரிடமும், தணிக்கை குழுவிடமும் சாந்தியை வெளியிட உதவும்படி கேட்டுக் கொண்டது யார் என்று நினைக்கிறீர்கள்? சிவாஜிக்கு தொழில் போட்டியாளராக இருந்த எம்.ஜிஆர்தான். அப்படியிருந்தது அவர்களின் சினிமாவை தாண்டிய நட்பு.

இவர்களின் சினிமா சகாப்தம் மெல்ல மெல்ல சரியும் நேரத்தில் உள்ளே வந்தவர்கள்தான் கமலும் ரஜினியும். எம்.ஜி.ஆர்- சிவாஜி போல அரசியல் பின்புலத்தை கொண்டிருக்கவில்லை இவர்கள். ரஜினியை போலவே ஒருத்தர் வந்துருக்கார். நடிப்பும் சூட்டிகை என்று பாராட்டப்பட்ட விஜயகாந்த், கடைசிவரைக்கும் போராடியது ரஜினியின் இடத்தை பிடிக்கதான். நடிக்கிற எல்லா படங்களும் ஹிட். கமல் மாதிரியே இருக்கார்ப்பா... என்று கொண்டாடப்பட்ட மைக் மோகன் பிடிக்க நினைத்தது கமலின் இடத்தை. ஆனால் காலம் ஒருவருக்கு செய்த நாற்காலியை இன்னொருவருக்கு கொடுப்பதில்லை.

ஆனாலும் ரஜினியும் கமலும் எப்படி? கமல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது வில்லனாக உள்ளே நுழைந்தவர் ரஜினி. பதினாறு வயதினிலே படத்தில் நடிக்க கமலை தேடிப் போகிறார் பாரதிராஜா. அதில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று பாரதிராஜாவை தேடி வருகிறார் ரஜினி. ‘அப்பல்லாம் ரஜினி எங்க தங்குவாருன்னு கூட எனக்கு தெரியாது. எனக்கு மட்டும் ஒரு ரூம் கொடுத்திருந்தாங்க’ என்கிறார் கமல். ‘நானும் ரஜினியும் நினைத்தாலே இனிக்கும் ஷுட்டிங் நேரத்தில் ஒருவர் முதுகில் மற்றவர் சாய்ந்து கொண்டு உறங்குவோம்’ என்று கமல் சொல்கிற போது, இருவருக்குமான நட்பு எந்தளவுக்கு பரிசுத்தமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவர்களையும் தொழில் போட்டி போட்டு தாக்கியதை எப்படி இல்லையென்று மறைக்க முடியும்?

நாம சேர்ந்து நடிச்சா ஒரு 100 ரூபாய் நோட்டை ரெண்டா கிழிச்சு கொடுப்பாங்க. அதே தனித்தனியா நடிச்சா, அந்த நோட்டு ரெண்டு பேருக்குமே முழுசா கிடைக்குமே என்று ரஜினிக்கு வியாபார வித்தைசொல்லிக் கொடுத்தார் கமல். காலத்தை தாண்டி சிந்திக்கிற கலைஞனாச்சே ? அவர் நினைத்ததுதான் நடந்தது. அதற்கப்புறம் இருவரும் தனித்தனியாக நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றன. இருவரும் நண்பர்களாக இருந்தாலும், ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டது வியாபாரிகள்தான்.

ஒரு படத்தில் ரஜினியை போலவே தோற்றம் கொண்ட நளினிகாந்த் என்பவரை கமல் நையப் புடைப்பதைப் போல காட்சிகள் வைக்கப்பட்டன. இந்த சதிக்கு ரஜினியும் துணை போனார். இவர் படங்களிலும் கமல் சீண்டப்பட்டார். ஒரு கால கட்டத்தில் கமல் பாணியில் எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் ரஜினியை நடிக்க வைத்தார்கள். அந்த நேரத்தில்தான் தற்போது அமரர் ஆகிவிட்ட அனந்துவின் அட்வைஸ் கை கொடுத் தது ரஜினிக்கு. கமல் பாணியில் ரஜினி நடித்தாலோ, ரஜினி பாணியில் கமல் நடித்தாலோ வெகு விரைவில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். இருவரும் தனித்தனி பாதையை தீர்மானித்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று அவர் அறிவுறுத்த ரஜினியின் பாணி அதற்கப்புறம் முற்றிலும் வேறானது.

எழுபது எண்பதுகளில் வெளிவந்த அமிதாப்பச்சன் படங்களின் ரீமேக்குகள் ரஜினிக்கு கைகொடுத்தன. கதை விஷயத்தில் ரஜினி உள்ளே வருவதேயில்லை. அண்ணாமலை ஹிட்டுக்கு பிறகுதான் அவர் கதைக்குள் நுழைத்து கருத்து சொல்ல ஆரம்பித்ததாக கூறுகிறார்கள். கமல் அப்படியல்ல. படத்தில் எறும்பு ஊர்ந்து போனாலும் அது கமலுக்கு முன்பே தெரிந்தாக வேண்டும். இது இருவருக்குமான வித்தியாசம் என்றாலும், கமலின் படங்களை ரஜினி உன்னிப்பாக கவனிப்பதும், ரஜினியின் படங்களை கமல் உன்னிப்பாக கவனிப்பதும் இன்றளவும் நடந்து வருகிறது.

ஒருமுறை ஒரு மிக்சிங் தியேட்டருக்கு வந்தாராம் கமல். அங்கு ரஜினி நடித்த வேறொரு படத்தின் புகைப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்ததாம். அதை நின்று கவனித்த கமல், ‘முன் பக்கம் இன் பண்ணியிருக்கார். பின் பக்கம் ஷர்ட்டை வெளியில் விட்டிருக்கார். இந்த படம் ஹிட்’ என்று கூறிவிட்டு சிரித்தபடியே நகர்ந்தாராம். 

ரஜினி கமல் காலத்தில் அவர்களுக்கு இருந்த சவால்களை விட பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது அஜீத்துக்கும் விஜய்க்கும்.

வேடிக்கை என்னவென்றால் பந்தயத்தில் இப்போதும் பலமான குதிரையாக இருக்கிறார்கள் ரஜினியும் கமலும். சைடில் ஓடி வரும் குட்டி குதிரைகளும் அவ்வப்போது குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் அதையும் சமாளிக்க வேண்டிய நிலைமை இவர்களுக்கு. விஜய்க்கு அவரது அப்பா எஸ்.ஏ.சி. என்கிற படகு எல்லா மழைக்காலங்களிலும் கை கொடுக்கிறது. ஆனால் அஜீத்திற்கு அப்படியல்ல. படகில்லாத நேரத்தில் நீச்சல். கை ஓயும் நேரத்தில் கர்ணம் என்று சுயமான ஓட்டம்தான். இவர்கள் இருவரின் கவனமுமே ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலி மீதுதான். அதற்கான வித்தையை அவரிடமே கேட்டுத் தெளிகிற அளவுக்கு இருக்கிறார்கள் இவர்கள்.

இமயத்தில் என் கொடி பறந்தால் உனக்கென்ன? என்று அஜீத் விஜய்யை நோக்கி சவால் விட்டதும், ஒரு படத்தில் அஜீத்தின் தொப்பையை விஜய் கிண்டலடித்ததும் இறந்த காலமாகிவிட்டது. காலம் தந்த பக்குவமா, அல்லது திடீர் போட்டியாளர்களின் சலசலப்பா, தெரியவில்லை. இருவரும் ஒன்றாகிவிட்டார்கள். நேரம் கிடைக்கும்போது குடும்பத்தோடு செலவிடுகிறார்கள். ஆனால் இவர்களின் ரசிகர்கள்தான் இப்போதும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் சட்டையை கிழித்துக் கொள்கிறார்கள்.

ரஜினியின் இடத்திற்காக அஜீத்தும் விஜய்யும் போராடிக் கொண்டிருக்க, இவர்களின் இடத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு பின் வந்த நடிகர்கள். சூர்யாவாகட்டும், விக்ரமாகட்டும், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என்று ஒரு கூட்டமே அஜீத் விஜய்யின் மார்க்கெட்டை தாண்டிவிடுகிற வேகத்தில் ஓட நினைத்தாலும், இந்த பந்தயத்திலிருந்து அஜீத்தும் விஜய்யும் விலகினாலொழிய அது நடக்காது போலிருக்கிறது. ஏனென்றால் ஹீரோ என்பது வேறு. ஸ்டார் என்பது வேறு.

ரஜினி, கமல், அஜீத், விஜய் இவர்கள் மட்டும்தான் ஸ்டார்கள்! துரத்துகிற மீதி அத்தனை பேரும் இந்த நேரம் வரைக்கும் ஹீரோக்கள் மட்டுமே!

சரவணன் சம்பளம் நான்கு கோடி..?



எங்கேயும் எப்போதும், இவன்வேறமாதிரி ஆகிய படங்களை இயக்கிய சரவணனை நோக்கி நிறையப் படநிறுவனங்கள் வருகின்றனவாம்.


அவர்களில் முந்திக்கொண்டு வந்திருப்பது ஏஆர்.முருகதாஸ் என்கிறார்கள். அவரடம் உதவிஇயக்குநராக வேலை பார்த்தவர் என்பதால் எல்லோரையும் விட எனக்கே முன்னுரிமை கொடுத்து எங்கள் நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம் முருகதாஸ்.


அவர் நிறுவனத்துக்குப் படமெடுத்தால் அதிகச் சம்பளம் கேட்கமுடியாதே என்று யோசித்த சரவணன், பதில் சொல்லாமல் நாட்களைக் கடத்தியிருக்கிறார்.


இதுதான் காரணம் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட முருகதாஸ், அடுத்த படத்தை எங்களுக்கு எடுத்தால் உனக்குச் சம்பளம் நான்குகோடி என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதைச் சற்றும் எதிர்பாராத சரவணன், அடுத்தபடம் முருகதாஸ் நிறுவனத்துக்குத்தான் என்று ஒப்புக்கொண்டாராம்.


தன்னிடம் பணியாற்றியவரை இவ்வளவு சம்பளம் கொடுத்து ஒப்புக்கொள்ள வைக்க முருகதாஸ் நினைத்ததற்கும் பின்னணி இருக்கிறதென்று சொல்கிறார்கள்.


அவர் இயக்குநரையும் அவருடைய கதைக்கேற்ப சந்தைமதிப்புள்ள ஒரு கதாநாயகனையும் ஒப்பந்தம் செய்துவிடுவார். அதன்பின் அந்தப்படத்தை வேறு ஏதாவது ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கப்போவதாக அறிவிப்பார். உண்மையில் அந்தப்படத்தைத் தயாரிப்பது அவர் கூட்டுச்சேருகிற நிறுவனமாகத்தான் இருக்கும்.


ஆனால் இவருடைய நிறுவனத்தின் பெயரும் படத்தில் இருக்கும். இவருக்கு அதனால் என்ன கிடைக்கும்? அந்தப்படக்குழுவை ஒப்பந்தம் செய்து கொடுத்ததற்காக அவர் சில கோடிகளைப் பெற்றுக்கொள்வார். சாதாரணமாக தயாரிப்புமேலாளர்கள் இந்த வேலையைச் செய்வார்கள்.


அந்தப்படத்தில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய முறையான சம்பளம் கூடக் கிடைக்காமல் போகும். ஆனால் அதே வேலையை முருகதாஸ், உட்கார்ந்தி இடத்திலிருந்து செய்துவிட்டு சில கோடிகளைப் பெற்றுக்கொள்கிறார் என்கிறார்கள்.


அதுவும் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிப்பது உங்களுக்குக் கிடைத்திருக்கிற அரியவாய்ப்பு என்றே சொல்வாராம் முருகதாஸ். பணம் போடுகிறவர்களும் அதையே பெருமையாக எண்ணிக்கொண்டு அவர் சொல்கிற படியெல்லாம் செய்வார்களாம். முருகதாஸ் எனும் பெயருக்குக் கிடைக்கும் இலாபம் இது.

இரட்டைவேடங்களில் சூர்யா..!



              லிங்குசாமி இயக்கத்தில் தற்போது நடித்து வருகிற படத்தை அடுத்து வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூர்யா. பொதுவாக மையக்கதையை மட்டும் சொல்லிப் படத்தைத் தொடங்கிவிடுவார் வெங்கட்பிரபு. ஆனால் இப்போது சூர்யா படத்துக்கான முழுமையான திரைக்கதையை எழுதிவிட்டுத்தான் படப்பிடிப்பு தொடங்கப்போகிறார் என்று சொல்கிறார்கள்.

              அதெல்லாம் அப்படித்தான் சொல்வார், ஆனால் படப்பிடிப்புத்தளத்தில்தான் அவருக்குப் புதுப்புது யோசனைகள் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ? வெங்கட்பிரபு படத்தில் சூர்யாவுக்கு இரட்டைவேடங்கள் என்பது மட்டும் உறுதியாம். அந்தப்படத்துக்குத் தற்போது வைக்கப்பட்டிருக்கும் பெயர், கல்யாணராமன். இரட்டைவேடம் என்று சொல்லிவிட்டு கல்யாணராமன் என்று பெயரும் வைத்தால் கமலஹாசனின் கல்யாணராமன் மற்றும் ஜப்பானில்கல்யாணராமன் ஆகிய படங்களின் நினைவு வரும். அதுபோன்ற ஒரு படத்தையே மக்கள் எதிர்பார்ப்பார்கள் அல்லவா? இந்தப்படமும் நகைச்சுவை பெருமளவில் கலந்த சண்டைப்படம் தானாம்.

               பிதாமகன் படத்துக்குப் பிறகு சூர்யா, நகைச்சுவை கலந்த வேடங்களில் நடிக்கவில்லை என்பதால் அந்தப்பாணியில் ஒரு கதையைத் தயார் செய்தால், அண்மைக்காலமாக பார்த்துக்கொண்டிருக்கும் சூர்யாவை வேறுபடுத்திக்காட்டலாம் என்கிற வெங்கட்பிரபுவின் எண்ணம் செயலாக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் பலருடைய எதிர்ப்பை¬யும் மீறி வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டதற்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. லிங்குசாமியின் படம் முடிவதற்கு முன்பே இந்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்று முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். இப்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள்.

இப்படியும் பெண்கள்...!



கணவரின் சிகிச்சைக்கு பரிசுப்பணத்தை சேகரிப்பதற்காக 3 கி.மீ. ஓட்டப்போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்ற 61 வயது பெண் ...?

மூன்று கிலோமீற்றர் வீதியோட்டப் போட்டியில் 61 வயதான பெண்ணொருவர் முதலிடம் பெற்ற சம்பவம் இந்தியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சேலை அணிந்த நிலையில் வெறுங்காலுடன் இப்பெண் ஓடி முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தின், பராமத்தி நகரில் நடைபெற்ற பராமத்தி மரதன் எனும் போட்டியில் இப்பெண் முதலிடம் பெற்றுள்ளார்.

தனது கணவரின் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பரிசோதனைக்கு பணம் தேவைப்பட்ட நிலையில,; இந்த மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 5000 இந்திய ரூபா பரிசு வழங்கப்படும் எனக் கேள்விப்பட்டவுடன் இப்போட்டியில் பங்குபற்ற லதா பக்வான் கரே எனும் இப்பெண் தீர்மானித்தாராம்.

இவருடன் போட்டியில் பங்குபற்றிய ஏனையோர் பயிற்சிப் பெற்ற ஓட்டப் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலையொன்றை அணிந்துகொண்டு வெறுங்காலுடன் ஓட்டக்களத்தில் வந்து நின்ற தன்னைப் பலரும் வித்தியாசமாகப் பார்த்ததாக லதா பக்வான் கரே கூறுகிறார். ஆனால், போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ஒவ்வொருவராக முந்தத் தொடங்கினார்.

இறுதியில் முதலிடத்தைப் பெற்று பராமத்தி மரதன் ஓட்டப்போட்டியின் அதிவேகமான நபர் என்ற பெயரையும் தட்டிக்கொண்டார் அவர். லதா பக்வான் ஓட ஆரம்பித்ததையே வித்தியாசமாக பார்த்தவர்கள் அவர் முதலிடம் பெற்றதை அறிந்து பெரும் வியப்படைந்தனர்.

பண்ணையொன்றில் தொழிலாளியாக பணியாற்றுபவர் லதா பக்வான். இது குறித்து லதா பக்வான் கரே கூறுகையில், 'இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்காக நாம் 15,000 - : 20,000 ரூபாவை திரட்ட வேண்டும்.

எனது அயலவர் ஒருவர்தான் இந்த மரதன் போட்டி குறித்த தகவலை எனக்குத் தெரிவித்தார். இதில் கிடைக்கும் பரிசுப்பணம் மூலம் எனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என மற்றொரு அயலவர் தெரிவித்தார். அதனால் நான் இப்போட்டியில் பங்குபற்றத் தீர்மானித்தேன்.

எனது மகனிடம் இவ்விருப்பத்தை தெரிவித்தபோது, எனது வயதை கருத்திற்கொண்டு அவர் ஆச்சரியமாகப் பார்த்தார். இது சாத்தியமில்லாத செயல் என அவர் எண்ணினார். ஆனால் நான் உறுதியாக இருந்ததால் இறுதியில் அவர் சம்மதித்தார். போட்டியில் ஓடும்போது நான் வெற்றி பெற வேண்டும் என எனக்கு நானே கூறிக்கொண்டேன்' என்றார்.

புல்தனா எனும் இடத்திலிருந்து 3 வருடங்களுக்குமுன் தொழில் தேடி பிம்பிலி எனும் கிராமத்துக்கு இவரின் குடும்பம் இடம்பெயர்ந்தது. ஆனால் அங்கும் நல்ல தொழில் எதுவும் கிடைக்கவில்லை. பண்ணையொன்றில் பணியாற்றி 80 - 100 ரூபாவை சம்பாதித்தார் இவர்.

இந்த ஓட்டப்போட்டிக்குமுன் தினமும் காலையில் காலையில் தனது கிராமத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்வாராம் லதா பக்வான். ஆனால் ஒருபோதும் ஓடியதில்லை. 'நான் ஓடினால்' மற்றவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். சங்கடமான கேள்விகளைக் கேட்பார்கள்' என என்கிறார் அவர்.

போட்டி ஏற்பாட்டாளரான சச்சின் சதாவ் கூறுகையில், 'பராமத்தி பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் தடவை என்பதால் நாம் சிறிய அளவில் 4 பிரிவாக இப்போட்டியை நடத்தினோம். லதா பக்வான் சிரேஷ்ட போட்டியாளர்களுக்கான பிரிவில் பங்குபற்றினார். இது 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட போட்டி. ஏனைய போட்டியாளர்கள் முழுமையான தயார் நிலையில் ஓடினார். ஆனால் லதா கரே முதல் தடவையாக ஓட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிய நிலையிலும் முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாமிடம் பெற்றவர் அவரைவிட 2:3 நிமிடங்கள் பின்னால் இருந்தார். முறையான ஆடையோ பயிற்சியோ இன்றி லதா பக்வான் வெற்றிபெற்று ஆச்சரியமளித்துள்ளார்' என்றார்.

லதா பக்வானின் மகன் சுனில் கருத்துத் தெரிவிக்கையில், 'எனது தாயார் உடற்திடமானாவர் என்பது தெரியும். நானும் அவருக்குத் துணையாக ஓட நினைத்தேன். ஆனால் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக என்னால் பங்குபற்ற முடியவில்லை.

ஆனால், போட்டிக்கு முதல்நாள் இரவு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் இந்த போட்டியில் பங்குபற்றும் திட்டத்தை மறந்துவிடுமாறு கூறினேன். ஆனால் அவர் காலையில் குளிசையொன்றை அருந்திவிட்டு என்னிடமும் கூறாமல் சென்றுவிட்டார். அவர் வெற்றிபெற்றதை பின்னர்தான் அறிந்தேன்' என்றார்.

'எனது கணவரின் சிகிச்சைக்காகவும் குடும்பத்துக்காகவும்தான் நான் ஓடினேன். சமூகத்திடமிருந்து சில உதவிகளை நான் எதிர்பார்க்கிறேன். எனது மகனுக்கு ஒரு வேலை வேண்டும். அப்போது எமது குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும்' என லதா பக்வான் தெரிவித்துள்ளார்.

ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!




ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!

ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.


வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.


தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.


அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

 
இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top