கணவரின் சிகிச்சைக்கு பரிசுப்பணத்தை சேகரிப்பதற்காக 3 கி.மீ. ஓட்டப்போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்ற 61 வயது பெண் ...?
சேலை அணிந்த நிலையில் வெறுங்காலுடன் இப்பெண் ஓடி முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மஹாராஷ்ட்டிரா மாநிலத்தின், பராமத்தி நகரில் நடைபெற்ற பராமத்தி மரதன் எனும் போட்டியில் இப்பெண் முதலிடம் பெற்றுள்ளார்.
தனது கணவரின் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பரிசோதனைக்கு பணம் தேவைப்பட்ட நிலையில,; இந்த மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 5000 இந்திய ரூபா பரிசு வழங்கப்படும் எனக் கேள்விப்பட்டவுடன் இப்போட்டியில் பங்குபற்ற லதா பக்வான் கரே எனும் இப்பெண் தீர்மானித்தாராம்.
இவருடன் போட்டியில் பங்குபற்றிய ஏனையோர் பயிற்சிப் பெற்ற ஓட்டப் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலையொன்றை அணிந்துகொண்டு வெறுங்காலுடன் ஓட்டக்களத்தில் வந்து நின்ற தன்னைப் பலரும் வித்தியாசமாகப் பார்த்ததாக லதா பக்வான் கரே கூறுகிறார். ஆனால், போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ஒவ்வொருவராக முந்தத் தொடங்கினார்.
இறுதியில் முதலிடத்தைப் பெற்று பராமத்தி மரதன் ஓட்டப்போட்டியின் அதிவேகமான நபர் என்ற பெயரையும் தட்டிக்கொண்டார் அவர். லதா பக்வான் ஓட ஆரம்பித்ததையே வித்தியாசமாக பார்த்தவர்கள் அவர் முதலிடம் பெற்றதை அறிந்து பெரும் வியப்படைந்தனர்.
பண்ணையொன்றில் தொழிலாளியாக பணியாற்றுபவர் லதா பக்வான். இது குறித்து லதா பக்வான் கரே கூறுகையில், 'இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்காக நாம் 15,000 - : 20,000 ரூபாவை திரட்ட வேண்டும்.
எனது அயலவர் ஒருவர்தான் இந்த மரதன் போட்டி குறித்த தகவலை எனக்குத் தெரிவித்தார். இதில் கிடைக்கும் பரிசுப்பணம் மூலம் எனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என மற்றொரு அயலவர் தெரிவித்தார். அதனால் நான் இப்போட்டியில் பங்குபற்றத் தீர்மானித்தேன்.
எனது மகனிடம் இவ்விருப்பத்தை தெரிவித்தபோது, எனது வயதை கருத்திற்கொண்டு அவர் ஆச்சரியமாகப் பார்த்தார். இது சாத்தியமில்லாத செயல் என அவர் எண்ணினார். ஆனால் நான் உறுதியாக இருந்ததால் இறுதியில் அவர் சம்மதித்தார். போட்டியில் ஓடும்போது நான் வெற்றி பெற வேண்டும் என எனக்கு நானே கூறிக்கொண்டேன்' என்றார்.
புல்தனா எனும் இடத்திலிருந்து 3 வருடங்களுக்குமுன் தொழில் தேடி பிம்பிலி எனும் கிராமத்துக்கு இவரின் குடும்பம் இடம்பெயர்ந்தது. ஆனால் அங்கும் நல்ல தொழில் எதுவும் கிடைக்கவில்லை. பண்ணையொன்றில் பணியாற்றி 80 - 100 ரூபாவை சம்பாதித்தார் இவர்.
இந்த ஓட்டப்போட்டிக்குமுன் தினமும் காலையில் காலையில் தனது கிராமத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்வாராம் லதா பக்வான். ஆனால் ஒருபோதும் ஓடியதில்லை. 'நான் ஓடினால்' மற்றவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். சங்கடமான கேள்விகளைக் கேட்பார்கள்' என என்கிறார் அவர்.
போட்டி ஏற்பாட்டாளரான சச்சின் சதாவ் கூறுகையில், 'பராமத்தி பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் தடவை என்பதால் நாம் சிறிய அளவில் 4 பிரிவாக இப்போட்டியை நடத்தினோம். லதா பக்வான் சிரேஷ்ட போட்டியாளர்களுக்கான பிரிவில் பங்குபற்றினார். இது 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட போட்டி. ஏனைய போட்டியாளர்கள் முழுமையான தயார் நிலையில் ஓடினார். ஆனால் லதா கரே முதல் தடவையாக ஓட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிய நிலையிலும் முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாமிடம் பெற்றவர் அவரைவிட 2:3 நிமிடங்கள் பின்னால் இருந்தார். முறையான ஆடையோ பயிற்சியோ இன்றி லதா பக்வான் வெற்றிபெற்று ஆச்சரியமளித்துள்ளார்' என்றார்.
லதா பக்வானின் மகன் சுனில் கருத்துத் தெரிவிக்கையில், 'எனது தாயார் உடற்திடமானாவர் என்பது தெரியும். நானும் அவருக்குத் துணையாக ஓட நினைத்தேன். ஆனால் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக என்னால் பங்குபற்ற முடியவில்லை.
ஆனால், போட்டிக்கு முதல்நாள் இரவு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் இந்த போட்டியில் பங்குபற்றும் திட்டத்தை மறந்துவிடுமாறு கூறினேன். ஆனால் அவர் காலையில் குளிசையொன்றை அருந்திவிட்டு என்னிடமும் கூறாமல் சென்றுவிட்டார். அவர் வெற்றிபெற்றதை பின்னர்தான் அறிந்தேன்' என்றார்.
'எனது கணவரின் சிகிச்சைக்காகவும் குடும்பத்துக்காகவும்தான் நான் ஓடினேன். சமூகத்திடமிருந்து சில உதவிகளை நான் எதிர்பார்க்கிறேன். எனது மகனுக்கு ஒரு வேலை வேண்டும். அப்போது எமது குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும்' என லதா பக்வான் தெரிவித்துள்ளார்.