.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 5 January 2014

அதிகரிக்கும் இணையதள அடிமைகள் – அதிர்ச்சி தகவல்..!




இன்றைய காலத்தில் இணையத்தை பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த இணையமானது வேகமாக பெயர் பெற்று வருகிறது.

இந்த இணையத்தின் மூலம் நமக்கு பல நன்மைகளும் உள்ளன கெட்டவைகளும் உள்ளன அதை நாம் முதலில் புரிந்து கொண்டு பின்பு இணையத்தை நல்ல வழிகளுக்கு பயன்படுத்த வேண்டும் இந்தியாவில் சராசரியாக ஒருவரால் நாளொன்றுக்கு 8 மணி நேரம் இணையப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்கள், அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் பாதிக்கு மேலான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர். இது வாரத்திற்கு 58 மணி நேரமாக உள்ளது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதிப்பேருக்கு, இணைய தொடர்பு அற்ற நிலையில் முதல் மூன்று மணி நேரம் ஒருவகை மனப்பாதிப்பில் இருந்தவர்களாகவே உள்ளனர்.

இன்னொரு ஆய்வில், இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், ஒரு வாரத்தில், இணைய உலாவில் 12.9 மணி நேரமும், சமுதாயத் தளங்களில் 11 மணி நேரமும், மின்னஞ்சல் பயன்படுத்துவதில் 3.3 மணி நேரமும் செலவழிக்கின்றனர். இந்த ஆய்வு, இணையம் பயன்படுத்தும் 500 பேர்களைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது. இவர்கள் வயது 18 லிருந்து 64 வரை உள்ளவர்கள்.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 86% பேர், தாங்கள் இணைய இணைப்பில் இல்லாமல் 24 மணி நேரத்திற்கு மேல் இருக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்தனர்.

இணையத் தொடர்பு இல்லாமல் போனால், தங்கள் அத்தியாவசிய வேலை அதிகம் பாதிக்கப்படும் எனவும் கூறினர். அடுத்ததாக, இவர்கள் முக்கியத்துவம் அளித்தது சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துவதுதான். மூன்றாவதாகத் தான், இணையவழி வர்த்தகம் மேற்கொள்வது மற்றும் பணம் செலுத்துவதனைக் கூறினர்.

ஒவ்வொருவரும் வீட்டில், குறைந்தது இரண்டு சாதனங்களையாவது இன்டர்நெட்டில் இணைத்து பயன்படுத்துகின்றனர் இன்றைய தலைமுறையினர்.

இன்னொரு வியக்கத்தக்க தகவலும் வெளியானது. தங்களுடைய தனிப்பட்ட தேவைக்கென வைத்துள்ள கம்ப்யூட்டரில், அடுத்தவர்களை அனுமதிப்பதை வெறுத்தனர். ரூ. ஒரு லட்சம் இழப்பு கூட இதைக் காட்டிலும் பெரியதாகத் தெரியவில்லை அவர்களுக்கு.

இவர்களில் 60% பேர் மட்டுமே தங்கள் கம்ப்யூட்டர்களில் அடிப்படைப் பாதுகாப்பினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் புதிய மால்வேர் புரோகிராம்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லை என நார்டன் ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.

இணைய இணைப்பு பெறுவதில் 92% அளவில் கம்ப்யூட்டர்களும், 83% அளவில் மொபைல் போன்களும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ்...


சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழையையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியை கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும்.

உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது.

ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிடலாம். புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான். வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும்.

அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த பானங்களைப் பருகுவோம். குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது.

துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும் கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம். கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம்.

சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றிலிருந்து தப்பிக்கலாம். குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல்வதும் அவசியம்.

எண்ணெய் மற்றும் மசாலா ஐட்டங்கள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.

குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயத்தம் பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம். தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து. சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும்.

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும். வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

உதடுகளை பாதுகாப்பது எப்படி..?

சோற்றுக் கற்றாழை சாரையோ அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காமல் இருக்கும். பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை. உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் உதடுகள் வெடிக்கும். அதனால் குளிர் காலங்களில் தாகம் எடுக்கவில்லையென்றாலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும் உதட்டில் தோல்உரிந்து, வெடித்துப் புண்ணாகும். அதனால் சத்துள்ள பழங்கள்,காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சமூக சேவை செய்பவர்களுக்காக பேஸ்புக் வழங்கும் புதிய வசதி...




சமூக வலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் தளமானது பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

 இதன் அடிப்படையில் தற்போது “Share” மற்றும் “Like” பொத்தான்களைப் போன்று “Donate Now” எனும் பொத்தானை தற்போது அறிமுகப்படுத்துகின்றது. எதிர்காலத்தில் நண்பர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ நன்கொடைகள் வழங்க விரும்புபவர்கள் இவ்வசதியினை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் 2: கமல் ஒப்பன் டாக்!



விஸ்வரூபம் 2 முதல் பாகத்தை மிஞ்சும் என்று கூறியுள்ளார் உலகநாயகன்.

கமலின் விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல்.

இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பேஸ்புக் நண்பர்களுக்காக தான் பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்.

அதில், புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதுடன் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் முதல் பாகத்தைவிட மிக அற்புதமாக வந்திருக்கிறது. மேலும் திகதி இன்னதென்று குறிப்பிட முடியவில்லையே தவிர விரைவில் ‘விஸ்வரூபம்-2’ வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒன்றரை நிமிட காணொளியில் கமல் பேச்சுடன் விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

கடவுள் வேடத்தை விக்ரம் ஏற்பாரா?





டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஏற்க விக்ரமிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் சோலோ ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருந்தார் வெங்கடேஷ். மகேஷ்பாபு, ராம் சரண் தேஜா போன்ற இளம் ஹீரோக்களின் மவுசால் அவருக்கு வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே சிட்டு என்ற படத்தில் மகேஷ்பாபுவுக்கு அண்ணனாக நடித்தார். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடித்தார். ஆனால் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்துவிட்டனர். கடைசியில் அங்காடி தெரு அஞ்சலி ஜோடியாக நடித்தார். இப்படம் ஹிட்டானது.

இதைத் தொடர்ந்து மீண்டும் சோலோ ஹீரோவாக ஷேடோ, மசாலா என 2 படங்களில் வெங்கடேஷ் நடித்தார். அப்படங்கள் தோல்வி அடைந்தது. தற்போது இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஓ மை காட் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார் வெங்கடேஷ். இப்படத்தில் தனது நெருங்கிய நண்பரான விக்ரமை நடிக்க கேட்டிருக்கிறார் வெங¢கடேஷ். பாலிவுட்டில் ஹிட்டான ஓ மை காட் படத்தில் அக்ஷய் குமார் கிருஷ்ணர் வேடம் ஏற்று நடித்திருந்தார். அதேபோல் கடவுள் வேடத்தில் விக்ரமை நடிக்க கேட்டிருக்கிறார்.

அவர் கால்ஷீட் தந்தால் இப்படத்தை தமிழ், தெலுங்கு இருமொழியிலும் தயாரிக்க உள்ளார். இந்தியில் பரேஷ் ராவல் நடித்த வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். இதே படத்தைதான் தமிழில் ரஜினி நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்க இருந்தார். ரஜினி மறுத்ததால் ஐஸ்வர்யா இப்படத்தை கைவிட்டார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top